About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, May 28, 2006

சில கனவுகள் சில நனவுகள்

Posted by Picasa தேன்நிலவு படம் வந்த போது நாங்கள்
பள்ளிப்படிப்பை முடித்திருக்கவில்லை.
காஷ்மீர் காட்சிகள், ஹவுஸ் போட்,வைஜயந்திமாலா,ஜெமினி கனேஷ்,தங்கவேலு என்று ஒரு அற்புதமான கதையுடன் பொழுதுபோக்கு சித்திரமாக இந்தப் படம் வந்த போது காஷ்மீரைக் கண்டு மயங்காதவர்கள் கிடையாது.


எல்லோருக்கும் கல்லூரியைப் பார்ப்போமா என்று தெரியாது. ஆனால் திருமணம் என்பது சீக்கிரம் நடக்கும் என்று மட்டும் தெரியும்.
அதனால் 11 ஆவது வகுப்பு தேர்வுகள் முடிந்து தோழிகளின் பட்டாளமே கூடி, அப்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த புதிய பறவை பார்த்து விட்டு வந்தோம்.
எல்லோருக்கும் சோகம். படமும் சுபமாகப் போகவில்லை.
எங்களுக்கும் நாயக நாயகி(எங்கள் இஷ்டப்படி) சேராததால் திருப்தி இல்லை.
அப்போதைக்குஎங்களுக்கு ஆதரவு சொல்லி மகிழ்ச்சியைக் கொடுத்தது 2 வருடம் முன்னால் பார்த்த "ஓஹொ எந்தன் பேபி "காட்சிகள் தான்.
அந்தக் கணத்தில் முடிவு செய்தோம். திருமணம் முடிந்ததும் தேன் நிலவு போக வேண்டும். ஏதாவது மலை பிரதேசமாக இருக்க வேண்டும். குதிரை சவாரி, போட்டிங் எல்லாம் செய்து விட்டு , முடிந்தால் டூயட் பாடிப் பிறகு தான் சமையல் அறைக்குள் நுழைவது என்று.


பதினைந்து வயதில் அவ்வளவு தான் கற்பனை.
திருமணத்தைப் பற்றி மேற்கொண்டும் ஒன்றும் தெரியாது
அதனால் தான் எங்கள் தலை முறையில் அதுவும்
தென் மாவட்டங்களில் பெற்றவர்கள் பேச்சுக்கு மறுபேச்சும் கிடையாது.


என் தோழிகளில் சிலர் திருமணம் முடிந்தே ஸ்கூலுக்கு வந்தார்கள். நிறையப் படிக்க நினைத்த நான், கல்லூரியில் ஒரு வருடத்துடன் திருமண வாழ்வில் புதுக்கோட்டை வந்தேன்.

பட்டம் முடித்த தோழி 4 வருடங்கள் கழித்து காஞ்சிபுரம் அருகெ ஒரு கடை முதலாளீயை மணம் முடித்தாள். இன்னொருவள் எங்கள் ஊருக்கும் மிஞ்சிய கிராமம் ஒன்றில் வயல்வெலி, மாடுகள் என்று குடி சென்றாள்.
15 வருட இடைவெளிக்குப் பிறகுத் தங்க மாளிகையில் ஒரு சினேகிதியை வங்கி மேலாளராகப் பார்த்து பிரமித்தேன்.

இவர்கள் ,என்னையும் சேர்த்து ஒருவருக்கும் எங்கள் திட்டமும் நினைவு இல்லை. ,தேன்நிலவுபோக வேண்டும் என்ற எண்ணமும் பொய்யாய்ப் போய் விட்டது.
பிறகு எதற்கு இந்த தலைப்பு/?


இது நாங்கள் இருவரும்(புருசனும் பொஞ்ஜாதியும்)
திருமணம் முடிந்து30 வருடம் கழித்து, சுவிட்சர்லாந்துக்குப் போகும் எதிர்பாராத பயணம் அமைந்தது, எங்கள் மகன் அங்கே வேலையாகிப் போன போது.
அப்போது அவன் வீட்டிலிருந்து எடுத்த புகைப்படம் இது.
20 வயதில் போயிருந்தால் கூட இத்தனை நிதானமாக அனுபவிக்க முடிந்திருக்காது. ஓட முடியாத, முழங்கால் கெஞ்சும் நேரம், நின்று தான் எல்லா காட்சிகளையும் கண்டோம்.

இப்போதும் கனவு காண நான் ரெடி. யோசித்து எந்த மண்டலத்துக்குப் போகலாம்னு பார்க்கிறேன்.நீங்க தான் சொல்லுங்களேன்.

2 comments:

manu said...

test

துளசி கோபால் said...

//மண்டலத்துக்குப் போகலாம்னு பார்க்கிறேன்.//

இதுலே என்ன யோசனை? பேசாம இங்கே நியூஸிக்குத்தான் வரணும். ஆமா:-))))))

அதுவும் புருசனும் பொஞ்சாதியுமா.