வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
கும்பகோணம் ரயில் நிலையத்தில் மக்கள்
கூட்டமும் விடாமல் பெய்த மழையும்
சத்தம் போட்ட வண்ணம் இருந்தன.
நீலாவின் பெற்றோர் அவர்களது உறவினர்கள் கல்யாண
தம்பதி பெண் தோழி மாப்பிள்ளைத் தோழன்
என்று கலாட்டாவுக்குப் பஞ்சம் இல்லை.
ஜானியும் முதல் நாள் காவிரி பொங்கி வந்த வேகம்
எல்லோரும் தப்பித்து வந்த கதை என்று
நண்பர்களிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசிக்
கொண்டிருந்தான்.
அவ்வப்போது நீலாவைத் தேடி கண்கள் ஓடுவதைத் தவிர்க்க முடியவில்லை.
நடுவில் கடந்த சில வருடங்கள் எப்படி ஒரு
பெண்ணை இவ்வளவு அழகாகச் செதுக்கி இருக்கிறது.?
நீலாவும் அந்தப் பார்வைகளைத் தவிர்க்க முயற்சித்து
விட்டு விட்டாள்.
என்ன இந்த உணர்ச்சி என்றே புரியாமல்
அவஸ்தையாக இருந்தது. நம்ம ஜானி தானே
வித்தியாசமாக ஏன் தோன்றுகிறது.
இதோ ரயில் வரப் போகிறது,
ஒரே வண்டியில் போனாலும் திருச்சியில் இறங்கி
விடுவான். பின் எப்பவோ. நாமோ சென்னையில் கல்லூரியில்
சேரப் போகிறோம்.
போகாத ஊருக்கு வழி தேடாதே என்று மனதைக் கடிந்தாள்.
வெள்ளம் வந்ததும் ஜானி அவளைப் பத்திரப் படுத்தியதையும் நினைக்கும் போதே
அவளுக்குக் கண்ணில் நீர் கட்டியது.
அந்த மாலை அனைவரும் சேர்ந்து
புதிதாக வந்திருந்த சிவகுமார் அம்பிகா படம் ஒன்றைப்
பார்க்கப் போனார்கள். நான் பாடும் பாடல் என்று பெயர்.
கொஞ்சம் சோகம் கொஞ்சம் மகிழ்ச்சி திருப்பம்
மைக் மோஹன் பாடுவது எல்லாமே அவர்களுக்குப்
பிடித்தது.
திரும்பி வரும்போது எல்லார் நினைவிலும் ';பாடும் வானம்பாடி வா''
பாட்டே மனதைச் சுற்றி வந்தது.
''சே இந்த எஸ்பி பி ஸாருக்குத் தான் என்ன ஒரு குரல்.!"
என்று பேசாதவர்கள் இல்லை.
இதோ மீண்டும் யார் பாடுகிறார்கள் ?என்று திரும்பினால்
ஜானி நிற்கிறான் அருகே.
நீலா!! இந்த வருஷ கல்ச்சுரல்ஸில்
ஐயா இந்தப் பாட்டாலயே ஜெயிக்கப் போகிறேன்
என்று சிரித்தபடி சொன்னான் ஜானி.
அவளும் விட்டுக் கொடுக்காமல் ''நானும்
எதிராஜ் கல்ச்சுரல்ஸில் உங்க கல்லூரியை
ஜெயிக்கிறேனா இல்லையா பாரு'' என்றாள்.
ப்ளாட்ஃபார்மில் பரபரப்பு அதிகரித்தது.
ஜானி , நீலா குடும்பத்தைக் கவனித்துப் பத்திரமாக
ஏற்றி விட்டான். அனைவரும் அவரவர் பர்த்தில் அமர்ந்ததும்
'' மாமா, நான் திருச்சியில் 10 மணிக்கு இறங்கி விடுவேன்.
அப்புறமா ஜூலை மாதம் பாட்டியைப் பார்க்க சென்னை
வருவேன். நீங்களும் அதற்குள்
மாற்ற்லாகி வந்துடுவீர்களா? '' என்று கேட்டான்.
ஆமாம் பா நீலா காலேஜ் ல சேரணும் அவள் தங்கை ப்ளஸ்1
சேரணும். வீடு பார்க்கணும். மே மாதம் சென்னை வந்து விடுவோம்.
நீ பத்திரமாகப் போய் வா" என்றார்.
வரேன் மாமி, வரேன் நீலா, மாலா.சீ யூ என்றபடி விடை பெற்றான் ஜானி.
அப்புறம் சந்தித்தார்களா என்பதை அடுத்தாற்போல்
பார்க்கலாம். தொடரும்