Blog Archive

Wednesday, September 28, 2011

திருப்பதி சென்று திரும்பி வந்தால்......




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நல்ல படியாக உற்றார் ஒத்துழைப்புடன் பெரியோர் ஆசிகளுடன்  சிரஞ்சீவி வைகுந்தனின்
ஆண்டு நிறைவு நடந்தேறியது.


என் நண்பர்கள் என்று ஒரு  நூறு பேரையாவது அழைத்துச் சிறப்பாக
அமைய வேண்டும் என்ற ஆசை.


அதற்கும் ஒரு நாள் வரும் என்றே நினைக்கிறேன்.

ஆண்டு நிறைவு பூர்த்தியான குழந்தைக்கு  திருமலை சென்று முடி இறக்குதல் வழக்கம்.

ஏற்கனவே ஏற்பாடு செய்தது போல சில நண்பர்களால் வர முடியவில்லை.
அதனால் ரயிலில்  செல்லும் யோசனையைக் கைவிட்டு

டிராவல்ஸ் வண்டி ஏற்பாடு செய்து கொண்டோம்.
மதியம் 3 மணிக்குக் கிளம்பினோம்.
ஆஹா.பயணம் என்றால் சாலையில் மிதப்போம் என்று நான் நினைக்கவில்லை.
வண்டி ஓட்டி அப்பொழுதுதான்   திருப்பதியிலிருந்து
திரும்பி வந்திருந்தாராம்.

எங்களை வண்டியில் திணித்த கையோடு விமானத்தை ரன்வேயில் கிளப்புவது போல
ஒரு உறுமலோடு அந்த இன்னோவா வைக் கிளப்பினதுதான் தெரியும்.
சென்னைத்தெருக்களில் இத்தனை வேகமாக வண்டியை ஓட்டக் கூடியவரை இப்போதுதான் பார்க்கிறேன்:(

மருமகள் , பேரனை மார்போடு இறுக்கிக்  கொண்டுதான் பயணம் செய்தாள்.
பல்வலி உடம்பு வலியோடு புறப்பட்டு வந்த சிங்கத்துக்கு அது கூட மறக்கும் அளவிற்கு வேகம்.!!

நடுவில் ஒரே ஒரு இடத்தில் நிறுத்தி ஓய்வெடுத்தோம். மீண்டும் சீறியவண்டிக்கு இருட்டில் கண்
 தெரியாததால் மெதுவாகச் செல்ல வேண்டிய அவசியம் வந்தது.
இலாவிட்டால் ஆந்திரவாடுகள்  ஒரு பத்து நபர்களாவது பரலோகம் போயிருப்பார்கள்.:(
''எங்க கம்பனில நாமே பெஸ்ட் ட்ரைவரு. மூணு மணில திருப்பதி. நாலு மணில ஹைதராபாது""
என்றேல்லாம் சொல்லிவந்தார்.

அதிகாலை 3 மணிக்கு வேங்கடேச  தரிசனம் முடிந்தது.
ஜெருகண்டி இல்லை.
அமைதியான  வரிசை. அவரும் கர்ப்பக் கிரகத்திலிருந்து
பெரிய பெருமாளாகக் கண் கொள்ளாமல் காட்சி அளித்தார்.

அவர் என்னைக் கண்டிப்பாகப் பார்த்திருப்பார். அது போதும்.
இவ்வளவு கால்வலி கைவலி, பணம் செலவழித்துப் போயும் அந்த ஒரு
செகண்ட் மட்டும் பார்த்தால் போதுமா.
வேற வழியே கிடையாதா. புரியவில்லை.

தங்கும் வசதிகளுக்குக் குறைவில்லை. இயற்கை வளங்களுக்குக் குறைவில்லை.
சாப்பாட்டுப் பிரச்சினை இல்லை.
சுற்றுலாத் தலமாகி விட்டது.அவ்வளவுதான்.

மலையெல்லாம் அவர்தான். காற்றும் மரமும் அவர்தான்.
திருமலை ஏழுமலைகளும் செழித்து நான் தான் அவன். அவன்தான் நாங்கள் என்று சொல்கின்றனவோ.

''திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
உன்னைப் பார்ப்பதற்குச்
சொல்லு வழி ..  கொஞ்சம் லேசா''
 இது எங்கள் பாட்டு இப்போது.
இரண்டு நல்ல வேலைகள் நடந்தன.
பேரன் கதறலுக்கு பயப்படாமல்  ,ஒரு சிறு கீறல் கூட
விழாமல்  முடிஅகற்றிய  அந்தக் கலைஞருக்கு மனம் நிறைந்த நன்றி.

எத்தனையோ சிரமம் இருந்தாலும், ஒரு க்ஷணமே அவனைப் பார்த்தாலும்
அந்தக் கருணை ஒன்றே போதும் என்று நினைக்க வைக்கிறானே
அந்த ஈசன்.
அந்தப் பெருமை மறக்க முடியாது.
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா.

பி.கு
அன்பு கவிநயாவுக்காக
பாலாஜியும் ,திருமலாவும் படங்களாகப் பதிந்திருக்கிறேன்.;)

Posted by Picasa

Saturday, September 24, 2011

துளசியின் கோபாலை வாழ்த்தலாம் துளசியின் தளத்தையும் வாழ்த்தலாம் வாருங்கள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

நம்   அன்பை  முழுவதையும் ஈர்த்துத் தங்க 
வைத்திருக்கும் 
தங்க துளசி கோபால்
அவர்களின் இனிய துணைவர்  திரு வேணுகோபாலுக்கு 
இன்று  பிறந்த  நாள்.


அன்பு மிகு கணவனும் 
அவரை அன்னையெனக் காக்கும் துளசிக்கும்
என் மனமார்ந்த  வாழ்த்துகள்.

திரு கோபாலுக்கு  அறிமுகமே வேண்டாம்.
துளசி தளத்துக்கும் அவ்வாறே,.

இருவரும் ஒரே நாளில் பிறந்தது தான் அதிசயம்.
செப்டம்பர் இருபத்தினாலாம் நாள் 
பிறந்த அன்பு கோபால், 
நம் அருமை சகோதரர்,
எப்பொழுதும் இனிமையும் பொறுமையும் நிரம்பியவர்,
நம் துளசியின் அன்புத் துணை நீண்ட ஆயுளோடும் நோயற்ற வாழ்வோடும் ,
மனம் நிறைந்த ஆனந்தமாக இருக்க வேண்டும்.
அவர்களின்   இஷ்ட தெய்வம் இந்த அற்புத தம்பதியரை எந்நாளும் காக்க வேண்டும்.

உங்கள் எல்லோரிடமும். ,உங்கள் அனுமதி பெற்று
பூங்கொத்துகள்   நியூசிக்கு அனுப்புகிறேன்.

என் அன்பு துளசி, அன்பு தம்பி கோபால் நீங்கள் என்றும் சுகமாக 
இருக்க  இறைவனை வேண்டுகிறோம்.
ரேவதி  அண்ட் நரசிம்ஹன்.
 .

Tuesday, September 20, 2011

அன்பாலே வளரும் உறவுகள்




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

1966இல் ஒரு  ஆண்டு நிறைவு.
ஐப்பசி மழை  விடாமல்  கொட்டுகிறது.
இன்னும் 4  நாட்களில்  எங்கள் முதல் மகனுக்கு   முதலாம் ஆண்டு   நிறைவு
  வருகிறது.
சேலத்திலிருந்து சென்னைக்கு வரச் சொல்லி மாமியார் சொல்லிவிட்டார்.

குடும்பத்துக்கு முதல் பேரன் .அவனுக்கு ஆண்டுவிழா சாஸ்திரப் பிரகாரம் செய்ய வேண்டும். ஆடம்பரம் வேண்டாம்.

அந்தப் பெரிய வீடுகொள்ளும் அளவுக்கு மனிதர்கள் வந்தால் போதும்.
மறையுணர்ந்த முதியோர் குழந்தைக்கு வாழ்த்துச் சொல்லி மந்திரங்கள்
உரைத்தால் போதும் என்றதும்
,  சேதி தாங்கி வந்த கடிதத்திற்கு ''சரி''  சொல்லிப் பதிலும் எழுதிவிட்டேன்.

எப்பொழுதும் பெரியவன் பிறந்தநாளுக்கு முதல் நாள் தீபாவளி வரும்.
அதனால்
தீபாவளிக்கு வாங்கின  துணிமணிகள். அப்பொழுது பிரபலமாக இருந்த
ரயான் மிக்ஸ் (சின்னாளப்பட்டு இல்லை) புடவை  30 ரூபாய்க்கு வாங்கியாச்சு.
குழந்தைக்கும் குட்டி குட்டி சட்டைகளும் காலை இறுக்கப் பிடிக்கும் ட்ரௌசரும் வாங்கியாச்சு.
சிங்கத்துக்குக் கால்சராயும் வெள்ளை வர்ண டெரிகாட்டன்  சட்டை(அலுவலகத்துக்கு அதுதான் தோதுப்படும்.)

சேலம் ரயில் நிலையத்திலிருந்து வெகு பக்கத்தில் இருந்த
ஒரு இடத்தில் தான் அப்போது குடியிருந்தோம்.

எப்பவும் போல ரயில் கிளம்ப ஒரு மணி நேரம் இருக்கும் போது
வந்தவர், தான் குளித்து எங்களையும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு
போய் நிற்கவும் சென்னை செல்லும்  இரவு ரயில் வரவும்  சரியாக இருந்தது.

நீலகிரி எக்ஸ்ப்ரஸ் என்று நினைக்கிறேன்.
ஒரே பெட்டி  மூன்று பேரின் துணிமணிகள் அடங்கியாச்சு.

ஒரு பிரம்புக்கூடை. வெந்நீர்  கொட்டி வைத்த  ஃப்ளாஸ்க்.
அமுல்ஸ்ப்ரெ  டப்பா.
எதுக்கும் இருக்கட்டும் என்று இரண்டு ஃபீடிங் பாட்டில்கள்.

எப்பப் பார்த்தாலும் அப்பா தோளில் தான் சவாரி பையனுக்கு.
அம்மாவிடம் சாப்பிட மட்டும்தான்   வருவார்.

சென்னை வந்து இறங்கினதிலிருந்து மழைதான். டாக்ஸி பிடித்து மைலாப்பூர்
வந்துசேர்ந்தோம்.
வாயில் கேட்டிலிருந்து வீட்டுக்குள் போவதற்கே ஐந்து நிமிடம் பிடிக்கும்.
குடையை எடுத்துக் கொண்டுவந்த மாமனார், என்னடா உன் பிள்ளை இத்தனை ச்சோனியா இருக்கான்!

சரியாக் கவனிப்பது இல்லையா.
அடுத்தாப்பில தாத்தா, (மாமனாரின் தந்தை)குழந்தையை ஒண்ணும் சொல்லாதடா. பாவம் பாலாரிஷ்டமா இருக்கும்.
வெங்கட்ரமண வைத்திய சாலையில் எண்ணெய் வாங்கித் தேய்த்துக் குளிப்பாட்டினால்  நிகு நிகுனு  ஆகிடுவான்.

ஆஜிப்பாட்டி வந்தார். குழந்தைக்கு பால் போறாது. நம் வீட்டுப் பால் சாப்பிட்டால் ஒருமாதத்தில் தேறிவிடுவான்.
மாமியார் கமலம்மா வந்தார், என்னைத் தனியாக அழைத்தார்,'முதல்ல போய் மாடியில்
பெட்டியை வைத்துவிட்டுக் குளித்துவிட்டு வா, பிறகு குழந்தையைப் பற்றிப்
பேசலாம்'' என்று எங்களை மாடிக்கு அனுப்பினார்.

இத்தனை அமர்க்களத்தையும் பார்த்துக் கொண்டே ,பையன்  வாயில் விரலை வைத்துக் கொண்டு  சிரித்தான்.

எனக்குத் தெரியும். அவன் சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று.
நீங்க சொல்றதெல்லாம் சொல்லுங்க. நான் சாப்பிட மாட்டேன்''  என்பதுதான்:)

இப்ப  இந்த சம்பவம்  நினைவுக்கு  வருவதற்குக் காரணம்

66இல் பிறந்த  பெரியப்பாவின்  தம்பி பையனுக்குக் கடவுள் கிருபையில்
ஆண்டு நிறைவு இன்னும் இரண்டு நாட்களில் வருகிறது.
இப்பொழுதும் அதே மழை.

இந்தக் குழந்தையின் பிறந்த நாளுக்கு உங்கள் எல்லோரிடமும் ஆசி வேண்டி
நிற்கும்

பாட்டியும் தாத்தாவும்.
Posted by Picasa

Thursday, September 15, 2011

மூன்று மூன்றுகள் மீண்டும் மூன்றுகள்

 டிஸ்கி
இந்ந்தப் பதிவு  ஏற்கனவே கீதா சாம்பசிவம்   எழுத அழைப்பு விட்டாச்சு. வேலை மேல பசியைப் போட்டுச்  சிவநேன்னு இருக்கலாம்னால்   இப்போ எங்கள் ப்ளாக் அழகாஎடுத்து
 தொடர வச்சிட்டாங்க.

எழுதிதான் ஆகணும். படிக்க வைக்க வேண்டியது  உங்கள்  கடமை.:)
  







1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்.
பாட்டு,பேச்சு, நல்ல நட்பு



2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள
 பொய்,புறம் பேசுபவர்கள், புரிந்து கொள்ளாதவர்கள்


3) பயப்படும் மூன்று விஷயங்கள்.
இடி,மின்னல்
பாம்பு,தொலைந்து போவது


                    
4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்.
மற்றவரின் உள் நினைவு,

மரணம்,விபத்துகள் ஏன் என்று கேட்டுக் கொண்டே இருப்பேன்.



5
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்.
 ரேடியோ,தொலைபேசி,நோரா ராபர்ட்ஸின் புதிய புத்தகம்





6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.

என்.எஸ் கே,
தங்கவேலு,மனோரமா ஆச்சி.





7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்: 
இந்தப் பதிவை எழுதி முடிக்கணும்,
,தொலைக் காட்சியில் சிவாஜி படம்,
யூ டியூபில் கண்கள் இரண்டால் பாட்டு



8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள். 
தெற்கே சுற்றுலா போகவேண்டும்,

வடக்கே கங்கையைப் பார்க்கவேண்டும்

ஒருவருக்கும் தொல்லை தராமல் வாழ்ந்து முடிக்கவேண்டும்.




உங்களால் செய்து முடிக்க கூடிய மூன்று விஷயங்கள்.

பாட்டுக் கற்றுக்கொள்ளலாம்,
படிக்கலாம்,

இன்னும் உதவியாக இருக்கலாம்.



10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்: 

இறுதி ஊர்வல பாட்டும் கூத்தும்,வெடிச்சத்தமும்
நெருங்கினவர்களைப் பற்றிய அவதூறு
நாகரீகமற்ற அரசியல் பேச்சு.


11. பிடிச்ச மூன்று உணவு வகை?
முறுகலான தோசை,மிளகாய்ப்பொடி

பீட்சா

சோஹன் ஹல்வா





12. அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?  
தேரே  பினா ஜிந்தகி மெ கோயி(ஆந்தி படப் பாடல்)
ஹவாயியன் வெட்டிங் சாங்

பார்த்த  ஞாபகம் இல்லையோ




13) பிடித்த மூன்று படங்கள்?
மாயாபஜார்,
தூக்குதூக்கி,
ஃப்யுஜிடிவ்(ஹாரிஸ் ஃபோர்ட்,டாமி லீ ஜோன்ஸ்.



14. இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்று விஷயம்?

பாட்டு, தொலைபேசி, கணினி:)





15) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
பொறுமை,
பயங்களைத் தொலைப்பது,

பழைய கலகலப்பு




16. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
மாதங்கி

அப்பாவி தங்கமணி,

அப்பாதுரை.

இன்னும் எழுதாதவர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம்.

என்னையே அலச வாய்ப்புக் கொடுத்த ''எங்கள் ப்ளாகிற்கு நன்றி.








எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்



 

Friday, September 09, 2011

காலங்கள், பயணங்கள்,அனுபவங்கள்

துபாயின் அழகு விமான நிலையம்
துபாய் மெட்ரோ
புதிய  கடிகாரம், காலம் மாறுகிறது:)
 பயணங்களும் முடிந்து  சென்னையும் வந்தாகிவிட்டது.
அரைமணி நேரத்தில் வழக்கமான பரிசோதனைகளை முடித்து வேலை வரும்போது நம்ம சென்னை எர்போர்டா  இப்படி மாறி இருக்கிறது ஒரே ஆச்சரியம்.

கும்பலிலும் அமைதி.
கசகசப்பு இல்லை. அப்போதுதான் மழை பெய்து ஓய்ந்திருந்தது.

சங்கீதாவில் வண்டியை நிறுத்தி ஆளுக்கொரு பொட்டலம் இட்டிலியும் சட்டினியும் வாங்கும் போது  விலை அதிகரிப்பு கொஞ்ச்சம் உரைத்தது:)

தினமணியும் ஹிந்து பேப்பரும் ஆன்லைனில் படித்துக் கொண்டு வந்ததால் அவ்வளவு அதிர்ச்சி இல்லை.

விமானத்தில் சில இந்தியர்களின் நடவடிக்கைகள் தான் வருத்தம்
கொடுத்தது.

ஏறியதிலிருந்தே அவர்கள்   மற்ற நபர்களைப பற்றி  கமென்ட்  செய்வதும். கொஞ்சம் உற்சாக பானம் உள்ளே  போனதும்

கொஞ்சம் பருமனாக இருந்த
 ஒரு அம்மாவை '' ஒரு டிக்கட்டுக்கு ரெண்டு பேரு வந்து இருக்காங்கன்னு சொன்னதும்
உரத்த குரலில் சிரிப்பதும்
கொஞ்சம் அமைதியைக்    கலைப்பதாகத் தான் இருந்தது. விடுமுறையைக் கழிக்கச் செல்லும் உற்சாகம் இருக்க வேண்டியதுதான்.
ஒரு பத்து நபர்கள்   இப்படி நடந்ததால்
ஒட்டுமொத்த இந்தியர்களையும்
  யாரும்   தப்பாக நினைக்கப் போவதில்லை.

எனக்குத் தான் அவர்கள் சொன்னது போல  "பெரிசு"க்கான புத்தி வந்துவிட்டது   என்று  நினைக்கிறேன்.;))


சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டார்கள்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, September 08, 2011

ஐஃபெல் கோபுரம்

















அத்தனையும் இரும்பு
உச்சியிலிருந்து  பார்க்கக் கிடைக்கும் காட்சி






சோகம் தலைப்புக்கு ஏற்ற நாடகம் இந்தத்
தந்தைக்கும் மகனுக்கும் நடந்தது.
இரவில்  ஐஃபெல்  கோபுரம்










எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, September 01, 2011

முப்பது வருடங்களுக்கு முன்னால் எங்க வினாயகர்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

முதல் நாளே மாலைத் தோரணங்கள் வந்தாகிவிட்டது.

பாட்டிக்கு கவலை எல்லாம்

\ யார்  பிள்ளையாரை வாங்கி வருவது. என்பதுதான்.
இதோ பால்கார  அருணாச்சலம் வந்தாச்சு.
வாசலில் மருமகள் கோலம் போட்டுவிட்டால்.
குளித்துவிட்டுத்தான் போட்டு இருப்பாள் என்று சமாஷானப் படுத்திக் கொண்டு,
ஒரு பலகை, பை, பதினைந்து   ரூபாய் பணம்
எல்லாம் அருணாச்சலத்திடம் கொடுத்து,
 வாங்கி வந்துவிடு.

''சுருக்கப் போய் பிள்ளையாரையும் எருக்க மாலை விளாம்பழம், மூஞ்சூறு,அவல்பொரி எல்லாம்.
ஒரு
 வாய்  காப்பி சாப்பிட்டுக்கோ.  
அவன் சைக்கிளில் பறக்க
 இங்கே குழந்தைகள் பால் குடித்து,
வரப் போகும் பிள்ளையாரை  எதிபார்த்து வாசலிலேயே அமர்ந்திருந்தார்கள்.
அவரும் வந்தார்.
அமர்க்களமாக பட்டுத்துணி விரிக்கப் பட்ட  நாற்காலியில் அமர்ந்தார்,

அம்மா
 அலங்காரம் செய்ய.
கம்பீரமாகப் பிள்ளையார் குடையுடன் வீற்றிருந்தார்.

 அந்த

இடமே,விபூதி,
 பழம்,கொழுக்கட்டைகள், அரளிப்பூ,அக்ஷதை என்று
வாசனையாக இருந்தது.


 பாலும் பழமும் மூஷிக வாகன  ஸ்லோகம்

தினம் தினம்  கேட்டுக் கொண்டார் விநாயகர்.

 வீட்டின் பின்புறத்தில் இருக்கும் கிணற்றில் ஒருவாரம் கழித்து மனமில்லாமல் தங்கள் தோழனான பிள்ளையாரைக் குழந்தைகள்
அவர் தொப்பையில் வைத்த எட்டனாவோடு
  மெதுவாக இறக்கி விட்டார்கள்.
 ஒரே குரலில் அடுத்த வருஷமும் வந்துடுங்கோ என்று
  சொல்லிவிட்டு,கொஞ்சம் வருத்ததோடு
உள்ளே வந்தார்கள்.
திருப்பி எப்பமா வருவார்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~!!!!!!
முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த விநாயக சதுர்த்தி.