Blog Archive

Monday, January 24, 2011

காதல் என்பது காதல் மட்டுமா

நேற்று ஒரு நல்ல  படம் பார்க்க  வாய்ப்பு   கிடைத்தது.  முழுவதும் துபாயில் எடுக்கப் பட்ட படம் என்று   முன்பு    கேள்விப்பட்ட  நினைவு.  பாடல் களின் இனிமையால்  மக்களை மகிழ்வித்த ஆர்.டி. பர்மனின்   நினைவுக்குச் சம்ர்ப்பண்மாக எடுக்கப் பட்ட   படம். அவர்கள் பாடல்களை  வைத்தே  கதையை நகர்த்திச் சென்ற     அழகு   என்னை வெகுவாகக் கவர்ந்தது.
   ஒரு குத்துப்பாடல் இல்லை. ஒரு  அளவுக்கு மீறின  படுக்கை அறைக் காட்சி இல்லை.    நெளியாமல் நகராமல்  பார்க்க முடிந்தது:)

இந்தப் படம்  பார்த்ததின்  தாக்கம்   இணையத்தில்  பழைய பாடல்களைத் தேடிக் கேட்டதில்  மனதுக்கு ஒரு    நிம்மதி.
என் வயது   ஒத்தவர்கள், அநேகமாக வானொலி, ரேடியோ சிலோன்,பிற்பட்ட நாட்களில் சென்னை அலை வரிசையின்  வர்த்தக ஒலிபரப்பு கேட்டே வளர்ந்தோம்.
பாட்டின் இசை,இனிமை மட்டும் மனதில் தங்கிவிடும்.
பிறகு வந்தது தொலைக் காட்சி.
  பிடித்த தமிழ்ப் படத்தை வரிசைப் படுத்த ஆரம்பித்தால் அது   அநேகமாக  முடிவில்லாமல்   போகும்.
அதனால்  சில இந்திப்படங்கள்  அதுவும் நல்ல பாட்டுகளுக்காகவும்,கதைகளுக்காகவும்,  நடிப்புக்காகவும்  நான் தேர்வு செய்த படங்கள்.
  இது என், என்னுடைய மட்டும்  தேர்வு. அநாமிகா,ஆராதனா,ஆவாரா,சுப்கே சுப்கே,ஆந்தி மற்றும் தேவ் ஆநந்தின் சில படங்கள்,மதுபாலா,ராஜ்கபூர்,ஷம்மி கப்பூர்  இப்படி  எத்தனை தடவை கேட்டாலும் ,பார்த்தாலும் சலிக்காத  படங்களின் பாடல்கள்.
ரொம்பக் கர்நாடகமாகத் தெரியும்:)

இங்கே  இந்தப் பாடல்களை ஒரு இடுகையாக எழுதக் காரணமும்  எழுந்தது.

கொஞ்ச நாட்களுக்கு முன்   ஒரு பதிவு ,ஒரு குடிப்பழக்கத்தினால்  கடை நிலைக்கே போய்   ,மீண்ட குடும்பத்தைப்  பற்றி எழுதி இருந்தேன்.
  சிறு  குழப்பம்  அங்கே. என்னதான் பழக்கத்தை விட்டுவிட்டாலும் கண்வன் ,மனைவியரிடையே  பழைய பரிவும் காதலும் வராமல் ஏதோ அவர்களைத் தடுத்தது.
  இது போலவே சென்றால் மீண்டும் பழய நிலை வந்துவிடும் என்கிற    பயமும் ஒட்டிக் கொண்டு இருவரும் தவித்தார்கள்.

இந்த நிலையில் தான்    குடும்பத்தின்   முந்நாள் நண்பர்    தன் சொத்துகளைப் பிரித்து  உயில் எழுதும்போது, தன்    இசைத்தட்டு  கலெக்ஷன்  அத்தனையும்
ஒரு    இருநூறு பாடல்கள்    இருக்கலாம்.
பழைய நாளைய  ரிகார்டிங்   அமைப்பில்  அமைந்த  இசைத் தட்டுகள். அவைகளைக் கேட்க   70களில் வாங்கிய   ரேடியோ க்ராம்!
  நம்ப முடியாத  கண்களுடன் இந்தப் பொக்கிஷத்தை இருவரும் பார்த்ததாக  எனக்குப் பிறகு செய்தி வந்தது. 
அதற்குப் பிறகு நடந்துதான் இன்னும் திரைக்கதை போலவே இருந்தது.   பலத்த வாக்கு வாதத்துக்குப் பிறகு முதலில் கேட்ட பாடல் ''யாதோன் கி பாராத்''!  :0)

வரிசையாக  மேரே சப்னோன்கி ராணி, பாகோன்  மே சலி ஆஆஆஆ:0)
இப்படித்தொடர்ந்ததாம் அவர்கள் மீண்டும் காதல்கதை.

இப்பவும் மூட்  அவுட் '' அப்படி இப்படி என்று சின்னச் சின்ன  தகறாருக்கெல்லாம் கூட சிடுவேஷன் சாங்க் போடப் பெண்ணும் பழகிக் கொண்டு விட்டாளாம்.

அமீரகம் வரை  வந்த இதமான   பாடல்கள்,அவர்களுக்குக் கொஞ்சமாவது மாற்றம் கொடுத்திருப்பது  எனக்குச் சந்தோஷமே.
அமீரகத்தில் கிடைக்காத பாடல்களா  என்று தோன்றிய்து    எனக்கு.

 இருந்தாலும் அவர்களின் அருமையையும், உள்ள அன்பையும் உணர்ந்த ஒருவர்  கொடுத்த  பரிசு  உண்மையிலியே    பயன் பட்டிருக்கிறது.இசையின் பெருமைக்கு   என்ன பெயர் வைப்பது!  மியூசிக் தெரபி??

















எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

Friday, January 14, 2011

கொஞ்சும் மொழி

எங்க வீட்டின் மூன்று  வாரிசுகள் புதிதாக்ப் பள்ளிக்குப் போக ஆரம்பித்திருக்கிறார்கள்.
முதல் பேத்தி கிட்டத்தட்ட  6,7 மாதங்களாகப் போகிறாள்.

ஜெர்மனில் இரண்டொரு வார்த்தைகள்  சொல்ல வந்திருக்கிறது. கணினியில் என்னிடம் பெயர்களை  டைப்   செய்து அசத்துகிறாள்.  இப்ப இங்கே வந்து  சென்ற இரண்டாவது பேரன்   முதலில் மாண்டிசோரிக்குப் போக மறுத்து
இப்பொழுது பழகிக் கொண்டிருக்கிறான்.
அடுத்தாற்போல  துபாய் பேத்தி  இரண்டு வாரங்களாகப் போய்க் கொண்டிருக்கிறாள். முதல் இரண்டு நாள் அழுது புரண்டு ஊரைக் கூட்டிய குழந்தை, இப்போது  மற்றொரு பெண்குழந்தைக்கு
ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாளாம்.

ப்ளீஸ் டோன்'ட்  க்ரை. யுவர் மதர் வில்  கம் அண்ட் பிக் யு அப்'' அப்படி ன்னு!!

நம்ம அமெரிக்கப் பேரர் ,பேச்சில் வல்லவர். ஒரே ஒரு உதாரணம் கொடுக்கிறேன்.
அவனும் அவன் அம்மாவும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது யாரும் போன்  செய்து விடக் கூடாது;)
அவளைப் பேச விடாமல்  நச்சரித்து விடுவான்.
ஒரு முக்கியமான    விஷயமாக அவள் பேசும்போது   இதே போல  அராத்து செய்திருக்கிறான்.
அவள் கோபம் அதிகமாகி அவனுக்குச்  சரியானா  டோஸ் கொடுத்து இருக்கிறாள். அரைமணி நேரம் அவள் அவனைக் கோபித்துக் கொண்ட பிறகு, அவளுக்கே கொஞ்சம் வருத்தமாகி விட்டது.

என்னடா பையா  அம்மா  சாரி  சொல்லணும்னு எதிபார்க்கிறியான்னு கேட்டு இருக்கிறாள்.
 ஆமாம் யூ  ஷுட்  என்று கூலாகச் சொன்னானாம்.
இவளுக்கு இன்னும் கோபம் வந்தாலும் அவனிடமே கேட்டு இருக்கிறாள்.
நீ  நடந்து கொள்வது சரியா. என்ன  செய்தேன்னு இப்பத்   திருப்பி சொல்லு என்று கேட்க.
''நீ போன் பேசினியா, என்  வேலை எல்லாம் பாதி முடிக்காம இருந்ததா,
நான்  உன்னை நச்சரித்தேனா,
அப்புறம் கத்தினேன். அதான் நடந்தது.''
என்றானாம்.
இவ்வளவு தெளிவாச் சொல்வதைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு வந்திருக்கிறது.
சரி இந்த ஒரு தடவை  சாரி சொல்கிறேன். இனிமே இப்படி உன்னைப் பார்த்துக்  கோபிக்கலை.
நீயும்  ஓகே மா ன்னு சொல்லிடு''என்று கேட்டு இருக்கிறாள்.
அதற்கு அந்த நண்டு சொல்கிறதாம்
''இந்தத் தடவை மட்டும் ஓகே மா. ஐ  அக்சப்ட்'' அப்படின்னு சொல்லுவேன்.
பட் நெக்ஸ்ட் டைம் , சொல்ல மாட்டேன்.'' என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டானாம்.:)
:)









எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, January 13, 2011

1982 ஜனவரி 14, ஒரு பொங்கல் நாள்

  மத்தியானம்  சாப்பிட்ட போளியே  இன்னும் ஜீரணம்  ஆகவில்லை, அதுக்குள்ள இன்னோரு  மண்டை வெல்லத்தை எடுத்தாச்சு உன் மாமியார்,  போ போ !"" விரட்டினார் மாமியார்.

அவரது மாமியார்  என் மாமியார் ஆவது இந்த மாதிரி சமயங்களில் தான்.;)
''ஏன்  மா, நாளைக்குத் தானே பொங்கல் ,இன்னிக்கே என்ன ஏற்பாடு'' இது
என்' ஞே'  டைப்  கேள்வி:)
பொங்கப் பானைகார்த்தாலை 9 மணிக்கு வைக்கணும். அதுக்கு மத்த விஷயமெல்லாம் ரெடியாக் வேண்டாமா.
இருக்கிறதிலியே நீ தானே யங்கஸ்ட்....போ போ.
இல்லாட்ட  பாட்டி எங்களையும் அழைத்து விடப் போகிறார்;'' கிண்டல் தொனிக்க விரட்டும் நாத்தனார்.


சரிடா சாமி.என்னதான் செய்யறாங்க பார்க்கலாம்  என்று நினைத்த வண்ணம்,
''வரேன் ஆஜி'' என்று குரல் கொடுத்தேன்.

87 வயசு ஆஜிப்பாட்டி,
அரிவாள் மணை, பெரிய   தினமணி பேப்பர் விரித்துவைக்கப் பட்ட நிலையில்...,ஏலக்காய்  25  எண்ணம்,மண்டை வெல்லம் இரண்டு  பங்களூரிலிருந்து ஸ்பெஷலாகத் தருவிக்கப் பட்டது.,
பெரிய வகை முந்திரிப் பருப்பு.(ஏதாவது ஒரு பேத்தி  குவைத்திலிருந்து கொண்டு வந்து கொடுத்திருப்பார்.)
''வா வா வா, சின்னப் பெண்ணெல்லாம் மத்யானம் தூங்கக் கூடாது பார்.

இப்ப இதெல்லாம் தயார் செய்துட்டால் நாளைக்குப் பொங்கல் பானைக்கு ரெடியா  இருக்கும் இல்லையா என்று என்னை ஆஜி பார்க்கும் பார்வையில் ,என் தலை சரி சரி என்று நாலு தடவை ஆடும்.

அந்த மத்யான வேளையில் தை மாத இள வெய்யிலில் அலுப்புத் தெரியாமல் இருக்கப் பழைய கதைகளை ஆஜி சொல்ல ஆரம்பிப்பார்.
நானும் அவர் சொன்ன பிரகாரம்,  சின்னக் குழவியால்  ஏலக்காயை  முதலில் பொடிப்பேன்.
இரண்டாவதாக  வெல்லம். ஏலக்காய்ப் பொடித்த இடத்திலேயே வைத்து மண்டை வெல்லத்தை உடைக்க வேண்டும். அதில் ஒரு பாதியை அந்த அரிவாள் மணையில் செதுக்கி எடுக்க வேண்டும்.
மிச்சத்தைப் பொடி வெல்லம் ஆக்க வேண்டும்.
பிறகு வரும் பச்சைக் கற்பூரம், ஜாதிக்காய்  வகையறா.

இதெல்லாம் செய்து முடிக்க  இரண்டு மணி நேரம் ஆகுமா.?
உடனே   காபிக்கடை.
ஆஜிக்கு நிறைய டிகாஷன் கஷாயம். எருமைப் பால் அப்போ கறந்து
வந்தது  தனியாகக் காய்ச்சி, அவருடைய வெள்ளி  டம்ப்ளரில் கொதிக்க கொதிக்கக் கொடுக்கணும்.
அப்பாடா என்று அவர் தன் பெரிய ஈஸிச்சேரில் சாய்ந்து கொள்வார்.

உள்ளே அரட்டை கலாட்டா நடக்கும் இடத்துக்கு நானும் போய்க் கலந்து கொள்வேன்.
''காரியக் கப்பல் வந்துவிட்டது.''என்று கலாட்டா  செய்வார்கள்.:)
ரங்காச்சாரி  கடையிலிருந்து  எடுத்து வந்திருந்த  புடவைகளைப் போட்டி  போட்டு ஆளுக்கொன்றாக எடுத்துக் கொள்ளுவோம்.


எனக்கோ மறு நாள் பொழுது விடிவதற்கு முன்னால் நடக்க வேண்டிய வேலைகளை எண்ணி இப்பவே களைப்புச் சேர்ந்தது போல இருக்கும்!
பொங்கல்  முடிந்து அடுத்த நாள் கனுப்பொங்கல். வீட்டில் இருக்கும் நண்டு,குஞ்சு குளுவான்கள்(பெண்கள்)   இருந்து என் பெரிய மாமியார் வரை அனைவரும்,   குளித்து முடித்த கையோடு புத்தாடை புனைந்து ஆஜி முன்னால்  நிற்க வேண்டும். அத்தனை பேர் நெற்றியிலும் கன்னத்திலும் பசு மஞ்சளை அழகாகத் தீற்றி விடுவார்.
திருமணமானவர்கள் தாலியை வெளியில் எடுத்து அவரிடம் காட்ட அதிலும் மஞ்சள் பூசுவார்.


ஒரு இருபது நபர்கள் இருப்போமா?

அத்தனை பேரும் வாழை இலை கரும்புத் துண்டுகள், முதல் நாள் வைத்த பொங்கல் பானை அத்தனையும்  மொட்டை  மாடியில் கொண்டு போய் வைத்து விட்டு, மாடியைக் கழுவித் தரையில் பத்து  எண்ணிக்கை  கோலங்கள் போட்டு அதில் மஞ்சள் இலைகளைப்    பரத்த வேண்டும்.
வயதில் மூத்தவர் ஆரம்பிக்க, இளையவர் வரை ஐந்து வரிசையாக சர்க்கரைப் பொங்கல்,வெள்ளை சாதம், மஞ்சள் சாதம், சிவப்பு சாதம்   என்று  ஐந்து ஐந்தாக நாலு வரிசை வைக்க வேண்டும்.

தட்டில் வைத்திருக்கும் வெற்றிலை,பாக்கு,மஞ்சள் ,வாழைப்பழ வரிசை எல்லாவற்றையும் சூரிய பகவானுக்குக் கை காண்பித்து விட்டு, ஆரத்தி எடுத்து,கனுப்பிடி வச்சேன்,காக்காய்ப் பிடி வச்சேன்,காக்காய்க்கும் குருவிக்கும்  கல்யாணம் என்று கோரசாக முழங்க வேண்டும்.
மனதில் அவரவர் சகோதரர்களுக்காகப் பிரார்த்தனையும் செய்து கொள்ளணும்.

கீழேயிருந்து வரும் ஏழு கறிக் குழம்பு வாசனையும், மற்ற சித்ரான்னக்களின் வரிசையும் பசியைக் கிளப்பிக் கீழெ  துரத்தும்.
ஆஜி எங்கள் எல்லோரையும் அமரவைத்து,  சமையல்காரரைப் பரிமாறச் சொல்லுவார்.
வயிறு நிறையச்  சாப்பிடுங்கோ    பொண்டுகளா'' என்னும் அன்புக்குரல்   இப்போதும் என் காதில் ஒலிக்கிறது.

அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நன்னாள்  வாழ்த்துகள்.
பால் பொங்கி இன்பம் பெருகட்டும்.









எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, January 09, 2011

முகங்கள்

மஹாபலிபுரம்   கடற்கரையில்...
செட்டிபுண்யம் கோவிலில்  பெருமாளை அழைக்கும் கிளி.
இவங்கதான்  போட்டிக்குப் போகிறாங்க. ஜனவரியின்  பிட் போட்டிக்கு.:)
இவர் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த முகத்துக்குரியவர். மிஸ்டர் கடோத்கஜன்:)
அழகு  பாலன். முருகன் ,கணத்தில் வந்து  காப்பாற்றும் கந்தனின்  நாமம்.
பெண்ணும் அவளது நண்பிகளும்.(எனக்கும் தான்)
பெண்ணும்   அவளது குடும்பமும்  ஊருக்குக் கிளம்பியாச்சு. புது வருடம் பிறந்து  இரண்டுமூன்று  நாட்களுக்குப் பிறகு  ஒரு நாள் சுற்றுலாவாக மஹாபலிபுரம் கிளம்பினோம்.  செட்டி  புண்ணியம் கோவிலில் முதல்   நிறுத்தம்.  மார்கழிப் பொங்கலை எதிர்பார்த்து  மனம்   குதித்தது.  அங்கிருந்தவரோ ஆறுமணியோடு பொங்கல்  தீர்ந்தது என்றார்.:(




  மறுபடிக் கிளம்பி  மஹாபலிபுரம் வந்து  சேர்ந்தோம். அங்க வந்ததும்  சக்தி இழந்துவிட்டேன்  என்றது எனது காமிரா.
என்ன செய்யலாம். பேரனது  காமிராவைக் கடன் வாங்கினேன்:)
அவன் எடுத்த படங்களை  எல்லாம்   என் கணினியில் ஏற்றும் போது, ஏதோ நினைவில்

டெலிட் செய்து விட்டது குழந்தை .  தாங்க முடியாத சோகத்தோடு   இருந்தான்.

அடுத்த நிமிடம், பரவாயில்லை பாட்டி, இன்னும் எத்தனையோ இடங்கள் இருக்கு.
இன்னும் நிறைய  படங்கள் எடுப்பேன் என்று  தானே சமாதானமாகிவிட்டான்.

20  நாட்களுக்கு  வசந்தம்  வீசிய நாட்களைப் பொக்கிஷமாக்கி வைத்திருக்கிறேன்.
அவ்வப்போது யாரிடமாவது சொல்லி அறுவையும் போடலாம்.:)
கேட்பவர்கள் மனநிலையைப் பொறுத்திருக்கிறது:).

சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும் நட்புகளுக்கும் வரும் தைப் பொங்கல்

நல்ல தருணங்களை அள்ளித்தரட்டும் என்று இறையை வேண்டுகிறேன்.













எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, January 04, 2011

சுத்தமான கொசுவத்தி

டிசம்பர் 31 1993.
  என்று   ஞாபகம் . பிள்ளைங்கள் வீட்டில் இருந்த நேரம். அப்பொழுது வாரா வாரம் ,ஃப்லிப்ஸ்  டாப் டென் பாட்டுகள் ஒளிபரப்பாகும். வருடம் பூராவும்   மிகுந்த  மதிப்பெண்கள்


பெற்ற  பாட்டுகள் தமிழ்   சன் தொலைக்காட்சியில்     வருட இறுதி நாள் இரவு
ஒளிபரப்பாகும்.

ஒட்டகத்தைக் கட்டிக்கோவா?''(ஜெண்டில்மன்  படத்தில்)
இல்லை  திருடா திருடா  படத்தில வரும்
வீர பாண்டிக் கோட்டையிலே''வா ? எது முதலிடம் பெறும்  இது ஒரு படபடப்பு;)

இப்படித் தமிழிலும்,  பிறகு
இந்தியில்   மோஹ்ரா  படம்!  அதில் வந்த  பாடல்  ஒன்று''தூ சீஸ்  படி ஹை  மஸ்த் மஸ்த்'' பிறகு'' சுரா கே  தில் மேரா...'' ஷில்பா ஷெட்டி அறிமுகமான படம்.
ருக்கு ருக் அரே பாபா ருக்.''   இளமைக்கால தபுவின் நடனம்..

அர்த்தம் தெரியாமலேயே  வெகுவாக ரசித்து   மகிழ்ந்த காலம்:0)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
எட்டு மணிக்கு சாப்பாட்டுக் கடையை முடித்துக் கொண்டு
தொலைக்காட்சி முன் அமர்ந்துவிடுவோம்.
சன்' சானல் மட்டும்  இருந்த காலம். இந்திக்கு   zee   சானல்.
வாழ்க்கை எளிமையாக இருந்தது.  அதுவே   சந்தோஷமாகவும் இருந்தது.
12  மணிவரை   ஒரு  பிரார்த்தனைக் காலம் போல  தொலைக்காட்சி பார்த்துவிட்டு  வாசலுக்கு வந்து  ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எதிர்த்த வீட்டுச் சின்னப் பையன்  பட்டாசு வெடிக்க ஆரம்பிக்கும்.

எங்கிருந்தோ வரும் மோட்டார் பைக் இளைஞர்கள்

காற்றுக்கும் வானத்துக்கும் சுற்றி நடந்து போகிறவர்களுக்கும், இன்னும் விளக்கெரியும் வீடுகளுக்கும்   வாழ்த்த்துகள் சொல்லிப் பறப்பார்கள்.

அத்துடன்  எங்கள் புத்தாண்டு ஆரம்பிக்கும்.
வெறும் ஆங்கிலப் பத்திரிகை மட்டுமே  மாதம்   54ரூபாய்க்கு வாங்கி
வந்த காலம்.
படங்கள் போட்டுப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அறிமுகப் படுத்திய தமிழ்ப் பத்திரிகைகள் வாங்காத காலம்.

ஆனால் புத்தாண்டு அன்று வீட்டுக்கு ஒரு புது பொருள்  வாங்கும் வழக்கம் வந்தது. அப்படித்தான் முதல்  வாஷிங் மெஷின் வந்தது.

பிறகு   எல்லாம்  காலமும் புத்தாண்டும் மாறியது.
பெரியவன் வேலை மாற்றம் பெற்று மும்பை போய்விட்டான்.
சின்னவன்   ஸ்விட்சர்லாந்துக்குக் கிளம்பினான்.

பெண்ணொ திருமணம்  செய்து கொண்டு  புதரகத்துக்குக் கிளம்பிவிட்டாள்.
பிறகு  பழைய உற்சாகம்   பரபரப்பு  அவ்வளவாக இல்லை. பத்துமணிக்கேத் தூங்கப் போகும் பழக்கம் வந்தது.

செக்  புத்தகத்தில் கையெழுத்துப் போடும்போது மட்டும் கவனமா இருக்கணும்:)
2011   என்று  எழுதணும்.:)
அனைவருக்கும்   மீண்டும் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.