Naachiyaar

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Tuesday, May 15, 2018

ENGAL BLOG, எங்கள் Blog படத்துக்கான கதை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஈரோடுக்குக் கிளம்பணும்னு தவிப்பு பெரியவர் சர்மாவுக்கு.
கணேச சர்மா. மகன் வீட்டில் திருச்சியில் இருக்கிறார்.
அவருக்குச் செய்ய வேண்டிய கர்மா ஒன்று ஈரோடு,பெருந்துறையில்
காத்திருந்தது.

64 வயதில் மிக ஆரோக்கியமாகவே இருந்தார்.
நல்ல பழக்க வழக்கங்கள். கட்டுப்பாடான
சாப்பாடு.
தேகப் பயிற்சி எல்லாம் இன்னும் கை கொடுத்தன.

தன்னுடைய 26 வயதில் இணைந்த மனவி  கோமளா வும் வைதீக ஆச்சார முறைகளைக் கைவிடாதவள்.
திருமணத்தின் போது கணேசனின் காதைக் கடித்தவள்
அக்கா விலாசினி.
இந்த உழக்கை எப்படிடா ஆண்டு குழந்த பெறப் போகிறாய்.
 மரப்பாச்சி போல இருக்காளே என்றதும்
அக்காவை முறைத்த நினைவு இப்போது வந்தது.

பெண் பார்க்க வந்த போது, அரியமங்கலம் கிராமத்தில்
சிட்டுப் போலத் திரிந்தவள் 17 வயது கோமளா. அம்மா அப்பா இல்லாமல்
பாட்டியின் கவனிப்பில் செழிப்பாக வளர்ந்தவள் தான். உயரம் தான் குறைவு.
 அவள் ,ஒரு நொடியில் அவரைப் பார்த்துத் தலை குனிந்து கொண்டாள்.
இவர்தான் அந்த முக அழகைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.  சின்ன முகத்தில் அரக்குக் குங்குமம்.
வைர மூக்குத்தி,சிகப்புக்கல் பதித்த தோடு,கழுத்தில் இறுகப் பிடித்த கெம்பு அட்டிகை.
சத்தமில்லாத வளையல்கள்.
சற்றே தூக்கிக் கட்டி இருந்த புடவைக்குக் கீழ் தெரிந்த வெள்ளைப் பாதங்களும் கொலுசும்
அவர் மனதில் அப்படியே பதிந்தன.
 அந்த வயதில், அவர்  PWD OFFICER ஆக இருந்தார்.


பெண் உள்ளே போன பிறகு தாத்தா பாட்டி , கணேசனின் அம்மா அப்பாவைப் பார்த்தார்கள்.
கொஞ்சம் குள்ளமோடா கணேசா என்றாள்  அம்மா.
லக்ஷணமா இருக்கா என்றார் அப்பா.

கணேசன் தலை நிமிர்ந்து. சீக்கிரம் திருமணம் முடிக்க வேண்டும்
அப்பா. எனக்கு சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் வருகிறது.

என்றபடி எழுந்து விட்டான்.

ஒரே கண்ணோட்டத்தில்  கூடத்துக் கதவின் பின் நின்ற கோமளா வையும்
பார்த்து நான் வருகிறேன் என்று சொல்லி
அவன் வெளியே சென்றான்.
உள்ளே பேச்சு வார்த்தை நடந்து முடிந்ததும் பெற்றோரும் அத்தையும்
வெளியே வந்தார்கள்.

அவர்கள் வாயைத்  திறப்பதற்கு முன்பே,
உங்களை அலட்சியப் படுத்தி ஒன்றும் செய்யவில்லை அப்பா.
எனக்கு இந்தப் பெண் தான் சரி. என் இஷ்டத்துக்கு மதிப்புக் கொடுங்கள்.

தை மாதம் பார்த்த பெண்ணைப் பங்குனியில் மணம் முடித்தான் கணேசன்.
வழிபட வேண்டிய திருத்தலங்களுக்கெல்லாம் சென்று விட்டு
சென்னையில் பார்த்து வைத்திருந்த வீட்டுக்குக் குடிவைக்க
அவன் பெற்றோர்கள் வந்தார்கள்.
 கோமளாவை அவர்களுக்கும் பிடித்துவிட்டது
அவள் சீர் செனத்தியோடு வந்ததும் பிடித்தது.

 அந்தச் சின்ன வீடு, செழித்தது கோமளாவின் கைவண்ணத்தில்.
திரைச்சீலைகள், தையல் மெஷின்  மூலம் செய்த எம்ப்ராய்டரி
குஷன்கள். என்று வீடே பளபளா என்றிருந்தது.

அடுத்து வந்த பத்து வருடங்களில் ஐந்து குழந்தைகள்.
இரண்டு பெண்களும் மூன்று ஆண்களுமாக.

உதவிக்கு பாட்டி தாத்தா  வந்தார்கள்.
மாப்பிள்ளையின் அன்பும் ஆதரவும் அவர்களுக்கு அபரிமிதமாகக்
கிடைத்தன. கணேசனின் உத்தியோகம் உயர்ந்தது.
கைகளில் பணம் சேர்ந்ததும் அவர் கொடுத்து வைப்பது கோமளாவிடம் தான்.

அடுத்த பத்துவருடங்களில் பிள்ளைகள் வளர்ந்து கல்லூரி சேர்ந்தனர்.பெண்களுக்கு வேண்டும் என்கிற பாத்திர பண்டங்கள்,நகைகள் எல்லாம்  கோமளவின் முயற்சி.
அவருக்கு ஒரு கவலை இல்லாமல் வாழ்க்கை ஓடியது.

அடுத்த பத்து வருடங்களில் திருமணங்களும் முடிந்தன.

அத்தனையும் கோமளாவின் சாமர்த்தியம்.

திருச்சியில்
.
புதுவீடும் கட்டி கிரஹப்  பிரவேசம் நடத்தினார்கள்.
பெண்கள்,அவர்களின் பிரசவங்கள் எல்லாவற்றையும்
அலுக்காமல் செய்து கொண்டாடினாள் .
முதல் மகனுடன் திருச்சியில்  குடும்பம் தொடர்ந்தது.

யாரையும் கடிந்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டாள்.
அவரது   அறுபதாவது வயதில் ரிட்டையரான கையோடு ஷஷ்டி அப்த பூர்த்தி ஆனது.

குடும்ப வழக்கப்படி அனைவரும் திருப்பதி
சென்று   வந்தவளுக்குத் தாங்க முடியாத வயிற்று வலி .

பொறுக்க முடியாத நிலையில்
ஆஸ்ப்பிட்டலுக்குப் போக வேண்டி வந்தது.

டாக்டர் கொடுத்த இன்ஜெக்ஷனில் கொஞ்சம் தூங்கினால்.
கணேசனைப் பயம் சூழ்ந்தது.

ஒரு விதத்திலும் முகம் சுளிக்காதவள், இப்படி த்தவித்துப் போகிறாளே  என்ற யோசனையில் இரவு கழிந்தது,.

இரண்டு நாட்கள் பூரண பரிசோதனை செய்ததில்
வயிற்றில் டியூமர் இருப்பது தெரிந்தது.
அடுத்தது பயாப்சி.

அவர்கள் நினைத்திராத வகையில் தீர்ப்பு.
புற்று நோய்.
இரண்டாவது ஸ்டேஜ்.
கீமோ  உதவலாம். போகப் போகத்தெரியும்.
கோமளம் இதை எல்லாம்   கண்டு அதைரியப் படவில்லை.

வியாதி வரும், போகும். எல்லாம் சரியாகிடும் பாருங்கள் என்று வீடு திரும்பிவிட்டாள் .

உடம்பு இழைத்தது.
இருந்தும் தன வழக்கமான வேலைகளை செய்து
கொண்டிருந்தாள்.
 முடியாத பொது படுத்துக் கொள்வாள்
இரண்டு வருடங்கள் போராடினாள் .
 சிரிப்பு மாறத முகத்தோடு,
மிகவும் முடியாத நிலையில்
தன்னிடம் இருந்த நகைகள் ,சிறந்த பட்டுப் புடவைகளை மனதார
பெண்களுக்கும் மருமகள்களுக்கும் பிரித்துக் கொடுத்தாள்.
 அதே பச்சைப் புடவை,சிகப்பு ரவிக்கையுடன்
 துளிக்கூடக் கறுக்காத தலைமுடி காற்றிலாடிக் கணேச சர்மாவைக்
கலக்கத்தில் ஆழ்த்த ,
மருமகள்  வாயில் ஊற்றிய கங்கை ஜலம் கடைவாயில் வழிய
 இறைவனை நோக்கிப் பயணித்து விட்டாள்.

ஒரே ஒரு ஆசை அவள் பட்டது, இந்த ஈரோடு பெருந்துறைக் குளியல்.
குடும்பம் ,குடும்பம் என்று யந்திரமாக, மகிழ்ச்சியான யந்திரமாகச் செயல் பட்டாலும்,
அவள் ஆசைப் பட்டது இந்தக் குளியலுக்கும், திருக்கடவூர் அபிராமி தரிசனத்துக்கும் தான்.

நிறைவேற்ற முடியாமல் எது தன்னைத் தடுத்தது என்று
யோசித்துப் பார்த்தார் சர்மா.
 ஒரு நிமிடத்தில்  நினைத்து,அடுத்த நிமிடத்தில் எல்லோரும் எங்கே எல்லாமோ போகிறார்களே.
தனக்கு ஏன் அவள் தாபம் புரியவில்லை.
   அவள் ஏன் என்னை வற்புறுத்தவில்லை. ஏன் இப்படி அடங்கீப்
போனாள். இன்னோரு ஜன்மம் அவளைப் போலக் கிடைக்குமா.
நாற்பது வருட வாழ்வில் ,ஒரு  நாள் கூட அலு த்தது கிடையாது.
ஒரு மனஸ்தாபம்  கிடையாது.

  எனக்காகத் தன் வாழ்க்கை முழுவதும் அர்ப்பணித்தாளே.
 குள்ள உருவமானத் தன்னைக் கம்பீர புருஷன் வரித்ததாலா.
 குழந்தைச் செல்வங்களும், மாடும் மனையும் கிடைத்ததாலா.

இப்போது இந்தக் கலசத்தில் அடங்கி விட்டாளே.
  இனியாவது அவள் இந்தக் காவிரித் திரிவேணியில் சங்கமிக்கட்டும் என்று
புதல்வர்களின்  உதவியோடு கண்ணில் பொங்கும் பிரவாகத்தோடு
//போய் வா கோமளி,
 அடுத்த ஜன்மம் உனக்கும் எனக்கும் உண்டு.
அனைத்துப் புண்ணியத் தலங்களுக்கும் போவோம்// என்று
நா குழறச் சொல்லியபடி படித்துறையில் அமர்ந்தார்.

மனமாரப் பழைய நினைவுகளில்  மூழ்கக் கைகளால் கண்களை மூடிக் கொண்டார்.
கால்களை மெல்லத்தடவியபடி காவிரி ஓடினாள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++Add caption