About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, April 30, 2014

அன்பில் மலர்ந்த நல் ரோஜா சில் நினைவுகள் 10

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption                                                                                   மூன்றாம்   நாள்  எல்லோரும் வந்து பார்த்தாகிவிட்டது. சென்னையிருந்து    பாட்டியும் வந்தாச்சு. மாலை வேளையில் அனைவரும் வரவும் அ  இந்தப் பிள்ளை தூங்க ஆரம்பிப்பான்,. அவர்கள் அந்தப் பக்கம் போனதும் எழுந்து அழ ஆரம்பிப்பான்.  பக்கத்தில்  இருக்கும் அம்மாக்கள் பிள்ளை அழுதுமா. இடுப்புத்துணி மாத்தி,பால் கொடு., என்பார்கள். இரண்டும் சிரமமான வேலைகள்.                                                               எங்கள் இருவருக்கும் யுத்தமே நடக்கும். நடுவில் நர்சம்மா வந்து  சமாதானப் படுத்திவிட்டு  பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா என்று பாடாத குறையாகத் திட்டிவிட்டுப் போவார்.                                            சிங்கத்தின் சிநேகிதர்   மதுரைக்கு வந்தவர் திடீரென   எங்கள் ரூமுக்கும் வந்தார். கொஞ்சம் வயதானவர்.  குழந்தையைப் பார்த்துவிட்டு  முரடனுக்கு முரடன் தான் பிறந்திருக்கான் அருள்வாக்கு வழங்கிவிட்டுப் போனார்............................. அவர் வந்துவிட்டுப் போனதும் கவனிப்புக் கூடியது. என்ன சொன்னாரோ தெரியாது.. நான் அவர் கொண்டுவந்த கடிதத்தில் மூழ்கி இருந்தேன். குட்டிப் பையாவுக்கு அப்பா  முதல் கடிதம் எழுதி இருந்தார். நான்  சனிக்கிழமை வரேன். அம்மாவைப் படுத்தாதே. அவளுக்கு ஒண்ணும்  தெரியாது ....இப்படிப் போனது. எனக்கோ சிரிப்பு. ஏண்டா உனக்குப் புரிகிறதா. எனக்கு ஒரு வரி இல்லை  உனக்குதான் முழுக்கடிதமும் என்று சிரித்தபடி இருந்தேன்.                                              அடுத்தநாள் புதன் கிழமை. எனக்கு வீட்டுக்குப் போகலாம் என்று தோன்றிவிட்டது.   குழந்தையை எடுத்துக் கொண்டு அங்கிருக்கும் தலமை நர்சிடம் வீட்டுக்குப் போகலாமா என்று அனுமதி கேட்டேன். ஹவ் டு யூ ஃபீல் என்றார். வெரி குட், என்றதும் உடனே ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்தார்.   இது என்ன புது மரியாதை என்று யோசித்தபோது, ஓஹோ சின்ன மாமியார்தானே   இங்க எல்லாத்துக்கும்  தலைவரோட மனைவி. அது இவர்கள் காதில் விழுந்திருக்கும்>}}}       நான்  பசுமலைக்குத் தொலைபேசி நானும் குழந்தையும் வரும் விஷயத்தைச் சொல்லச் சொல்லிக்    கேட்டுக் கொண்டேன். அவர்களும் சொல்ல  பெற்றோர் உடனே ஏகப்பட்ட புத்திமதிகள் வழங்கத் துவங்கினார்கள்.  பாதியைக் காதில் வாங்கிக் கொண்டு   மீண்டும் அறைக்கு விரைந்து  எனக்கான சிறுபெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டேன். அத்ற்குள் அங்கிருந்த  தாதிகள் குழந்தைக்குத் தொப்புள்கொடிக்கான ஏற்பாடுகள் என்ன செய்யவேண்டும் என்றெல்லாம்    எழுதிக் கொடுத்தார்கள். அதையும் வாங்கிக்கொண்டு     எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு   காத்திருந்த ஆம்புலன்சில் ஏறிக் கொண்டேன். மனம் முழுவதும் உற்சாகம். மெத்து மெத்து டவலில் சுற்றியிருந்த குழந்தையைப் பார்த்தபடி  அரைமணியில்  பசுமலை வந்துவிட்டோம். கூடவந்த நர்ஸ் குழந்தையை வாங்கிக் கொண்டார்.          கதவு திறந்ததும் குதிக்காத குறையாக இறங்கிக் குழந்தையையும் வாங்கிக் கொண்டேன். கூடவந்தவர் அப்பாவிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.   பத்திரமாக இருங்க என்றபடி விடைபெற்றார்கள்.     அவசர்மாக உள்ளெ நுழையப் பார்த்த என்னை அம்மாவின் ஆரத்திதட்டு நிறுத்தியது. ஹே. ...இதெல்லாமும் உண்டா.சரிதான்   கொஞ்சம் ராஜ்யம் செய்யலாம்    என்று   யோசனை தோன்றியது.       சீக்கிரம் உள்ளே  வா. நாங்கள்தான் சாயந்திரம் வருவதாகச் சொன்னோமே. அதற்குள் உனக்கென்ன அவசரம். நல்ல நேரம் பார்க்கவேண்டாமா    என்று அம்மா    பொரிந்தார்.  வந்துட்டேனேம்மா.  ரொம்பப் பசிக்கிறது.சாப்பிடலாமா என்றதும்  சட்டென்று சுதாரித்துக் கொண்டார்,. இப்படி ஓடிச் சாடறதெல்லாம் விடு. குழந்தையைக் கொடு. முதலில் போய்க் கட்டிலில் உட்கார்ன்ந்து கொள் என்றார்.. இப்படியாக ஏழாம் நாள் காப்பு,தொட்டில் எல்லாம் நடந்தது,.  சிங்கமும் வந்து சேர்ந்தார். கொசுவலை என்ன,   பிரம்புத்தொட்டில் என்ன, குழந்தைக்கான பிரம்பு பாஸ்கெட்,தெர்மாச்    ஃப்ளாஸ்க். ராட்டினமாகச் சுற்றும்   மணிகள்.  புது ஆளைப் பார்ப்பது போல எனக்குப் பிரமை.....       . புதிதக வாங்கியிருந்த கட்டில் மெத்தை ரப்பர்ஷீட் எல்லாம் பார்த்து மாமனாரை மெச்சிக் கொண்டார்.                         அடுத்த  நாள் புண்யாகவசனம் என்றிருக்கும் போது கமலம்மாவும் வந்துவிட்டார். பெட்டி நிறைய குழந்தைக்குத் துணிமணிகள் அத்தைகளின் பரிசுகள்  என்று ஒரே குதூகலம். குழந்தை எங்கள் வீட்டைக் கொள்ளவில்லையே. இவ்வளவு சின்னவனாக இருக்கானே.     ரேவதி சரியாகக் கவனித்துக் கொள்ளணும். நான் வேண்டுமானால்   க்ளாக்ஸோ ,லாக்டோஜன் ஏதாவது வாங்கி அனுப்புகிறேன் என்றதும் என் பாட்டி  மெதுவாக அவளே கொடுக்கட்டும் .குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம் என்றதும்  ஒருவழியாகச் சமாதானம் ஆனார். அடுத்தநாள் மங்கள ஸ்நானம். மணயில் குழந்தையை மடியில் கிடத்தியபடி    மந்திரங்கள் ஓதி     சடகோபன்,ஸ்ரீநாத்  என்று பெயர் சூட்டியாயிற்று. இன்று வரை பாபுதான் அவன் அப்பாவின் செல்லம்.

20 comments:

துளசி கோபால் said...

அமர்க்களமா இருக்கு!

ஹை ஸ்ரீநாத், வெல்கம் டு த நியூ வொர்ல்ட்!

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசிமா. இந்தச் சித்தியை அவன் அப்பவே பார்த்திருக்கலாம்னு எனக்குத் தோன்றுகிறது.>}

ஸ்ரீராம். said...

நினைவுகளின் அடுக்கிலிருந்து ஒவ்வொரு நிகழ்வையும் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

Geetha Sambasivam said...

நடுவில் ஏதோ ஒரு பதிவு படிக்கலை பொல இருக்கு. தேடிப் பார்த்தேன் கிடைக்கலை, மறுபடி பார்க்கணும். ஶ்ரீநாத் பிறந்ததுக்கு வாழ்த்துகள்.
மிக அருமையாக எளிமையாகச் சொல்லி வருகிறீர்கள்.

இராஜராஜேஸ்வரி said...

வாசம் வீசும் ரோஜா நினைவுகள்..!

வெங்கட் நாகராஜ் said...

நினைவுகள்....

சுகமான நினைவுகள் தொடரட்டும்மா....

முத்துசாமிப் பேரன் said...

நினைக்க நினைக்க புத்துணர்வூட்டும் நினைவுகள்

இடையில் படிப்பதால் கொஞ்சம் கடினமாய் இருக்கு.. முதலில் இருந்து வாசிக்க முயலனும்

வல்லிசிம்ஹன் said...

நினைவுகளை மீட்கும்போது இனிய எண்ணஙகள் வருகின்றன. எத்த்னையோ விஷயங்களைச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டோம் என்ற சோகமும் வருகிறது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா. எல்லோர் வீட்டிலயும் நடப்பதுதான். என் மன நிம்மதிக்காக எழுதுகிறேன்.தவறாமல் படிப்பதற்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜராஜேஎஸ்வரி உங்கள் பதிவுகளில் வரும் தெய்வ மணத்துக்கு என் பதிவுகள் ரோஜா வாசனை கொடுக்கின்றனவா. நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

ஆட்டோ பயாக்ரஃபி எழுத வேண்டிய வயதுதானே வெங்கட். நல்ல படியாக எழுதி முடிக்கணும். நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

முதல் வரவுக்கு மிகவும் நன்றி. முத்துசாமிப் பேரன். முடிந்த போது படியுங்கள்.

கோமதி அரசு said...

அம்மாவைப் படுத்தாதே. அவளுக்கு ஒண்ணும் தெரியாது ....இப்படிப் போனது. எனக்கோ சிரிப்பு. ஏண்டா உனக்குப் புரிகிறதா. எனக்கு ஒரு வரி இல்லை உனக்குதான் முழுக்கடிதமும் என்று சிரித்தபடி இருந்தேன்//


எனக்கு ஒரு வரி இல்லை உனக்குதான் முழுக்கடிதமும் என்று சிரித்தபடி இருந்தேன்//


அம்மாவைப் படுத்ததே அவளுக்கு ஒண்ணும் தெரியது அதில் இருக்கும் பாசத்தில் நீங்கள் இருக்கிறீர்களே அம்மா என்று சொல்லவில்லையா மகன்?
அருமையான நினைவுகள் அக்கா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி. மகன் வழியா அவர் என்னை அம்மான்னு சொன்னதுமே மகிழ்ச்சி. நினைவில் பசுமையாகப் பதிந்தவற்றை எழுதுகிறேன்.நல்ல நாட்களைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.

Ranjani Narayanan said...

ஒவ்வொரு வார்த்தையும் மனதை வருடுகிறது, வல்லி. தொடர்ந்து எழுதுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி, கட்டாயம் எழுதுகிறேன். ஒரு நல்ல மனிதருக்கு நான் செய்ய வேண்டிய மரியாதை இது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உங்கள் தளத்திற்கு முதல் முறை வருகிறேன் என்று நினைக்கிறன். இவ்வளவு நாள் தவற விட்டுவிட்டேனே!
நெஞ்சைத் தொடும் நினைவலைகள்.விவரிக்கும் பாங்கு அருமை

வல்லிசிம்ஹன் said...

உண்மையே முரளிதரன். உங்கள் போன்றவர்களின் கருத்துகள் எனக்கு மேலும் உரமளிக்கும். இது ஒருவகை ஆறுதல் மருந்து. மிக மிக நன்றி மா.

ராமலக்ஷ்மி said...

அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள்!

மாதேவி said...

அன்பில்மலர்ந்த ரோஜா நல்மணம்பரப்பி நிற்கிறது. வாழ்த்துகள்.