About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, June 07, 2013

மறதி நல்லதா...கெட்டதா.


 மறதி. நினைவில்லாமை(பெரிய ஆமை)

இதில் பரிசு பெறும் ரேஞ்சிற்கு  பல நபர்களை எனக்குத் தெரியும்.

என்னையும் சேர்த்துச்  சொல்கிறேன்.:)

வியாதியின் அறிகுறிகள்.
தலையில் மூக்குக் கண்ணாடியை வைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றுவது.

வீட்டின் பின்கதவைச் சாத்திவிட்டுத்  தாழ்ப்பாள் போட  மறந்து,  போட்டுவிட்டதாகச் சாதிப்பது.

பத்துவயதில்  பார்த்தவர்களைப் பசுமையாக நினைவில் வைத்திருப்பது.

பத்துவருடங்களுக்கு முன் பார்த்தவர்களை மறப்பது.

தெருவிலோ,சூப்பர் மார்க்கெட்டிலோ  திடிரென்று யாரையாவது பார்த்துப் புன்னகை பூப்பது.
அவர்கள்  தங்கள் வண்டியை அவசரமாகத் தள்ளிக் கொண்டு போய்விடுவார்கள்.  என்னுள் சோகம்தான்  மிஞ்சும்.

மறதி நல்லதுதான். சோகங்களை மறக்கலாம். (ரொம்ப சிரமம்)
நல்லதை நினைக்கலாம்.
என்னுடன் ஒரே ஒரு வருடம் எதிராஜில் படித்த
பத்மா எனும் பெண்மணியைக் கோவிலில்
சந்தித்தேன்.
அங்கு  அன்னக் கட்டளைக்குப் பணம் செலுத்தும் இடத்தில் இருந்தார்.
நான் அவர் பின்னால் நிற்கும்போது. ''உன்னை எனக்குத் தெரியுமே' என்றார்.

வெகு நாட்களுக்குப் பிறகு  என்னை   'ஒருமையில்  அழைத்தவரைப் பார்த்து


விழித்தேன். நீதானே லாஜிக் பேட்சில் இருந்தே.
ஆமாம்.
ஜயந்தி,துர்கா,காவேரி,ராஜேஸ்வரி,ஜானகி  ஞாபகம் இருக்கா.
ஓ!நன்றாக ஞாபகம் இருக்கு.'
அப்புறம் என்னை எப்படி மறந்தாய்.

நாந்தான் கே.பத்மா.
ஓ!
நீ?
நான் ரேவதி.
பத்தியா.
காலேஜ் டே  ரிஹர்சல் ல  'ஆஜா  ராஜ்குமார்'  பாடினியே!
உன்னை ஒன்று கேட்பேன் வேற பாடின. நினைவு இருக்கா.

அதெலாம் மறக்கலை.
அப்ப என்னை மட்டும் எப்படி மறந்த.
நான் உன்னை மறக்கலை பாரு.
ஐயோ  ஸாரிமா..  லைட்டா  நினைவுக்கு வருது. நீ பச்சை பூபோட்ட ப்ளௌசும்,பச்சை தாவணியும் போட்டு இருந்த இல்ல?
அட!மூக்கில் விரலை வைத்தாள்.

நான் என்ன போட்டு இருந்தேன் சொல்லு பார்ப்போம்.  இது நான்:)


நீ  ப்ளூ கடாவ்   புடவை,டார்க் நீல  மாலை  கழுத்துல போட்டு இருந்த.
கறுப்பு மையால் நீட்ட   திலகம் வச்சிருந்த.

அசந்துவிட்டேன்.
அந்த இடத்திலேயே அணைத்துக் கொண்டோம்.
நீ மாறிவிட்டாய்   பத்மா.
இல்லை ரேவா,நீ மாறவில்லை,நானும் மாறவில்லை.
48 வருடங்கள்   உன்னிடம் நிறைய மாறுதல். எதையோ யோசித்துக் கொண்டே இருந்தாய். நான் இரண்டு தடவை  உன்னைக் கூப்பிட்டுத் தோளைத் தொட்டதில்தான் திரும்பினாய்.

வயசாச்சு:)

நானும் அதே 65 தான். என்னைப் பார்த்தால் எப்படி இருக்கு.
நன்றாக இருக்கு.
நான் இப்பதான்   ஒரு டூடோரியல் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்றேன்.

ஓ!
நீ  என்ன செய்கிறாய்.ஆங்கில   லிட்ரேச்சர் படிக்கணும். தமிழ்க் கவிதை எழுதணும்னு சொல்லிக் கொண்டிருந்தயே.
நம் பேராசிரியை இந்திரா கூட   உன்னைத் தமிழ்
பட்டப் படிப்புப் படிக்கச் சொன்னாங்களே''
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அவளுடைய உற்சாகத்தைப் பார்த்து எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.

நான் கேட்க மறந்தது அவள் குடும்பத்தைப் பற்றி!!

அதற்குள்
நம் வண்டி   உறும ஆரம்பித்தது.  கேட்டது.
வைத்தியரைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தோம். அவசரமாகத்
தொலைபேசி எண்களை எழுதிக் கொண்டு  பிரிந்தோம்.

அன்று முழுவதும் மனம்    உற்சாகமாகப் பழைய நாட்களை அசைபோட்டது.

அவள் கேட்ட கேள்வியும் சுற்றி வந்தது. நீ  ஃபேஸ்புக்ல இருக்கியா:)

எனக்கு மறதி இருந்தால் என்ன. மற்றவர்களுக்கு நினைவு இருக்கு.!!!!!!!!

ஒரே  ஒரு சட்டம். அவர்களுக்கும் என்னைப் பற்றிய நல்ல நினைவுகளே இருக்கணும்:)
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

42 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கெட்டவற்றை மறக்க... துன்பத்தை மறக்க... துரோகத்தை மறக்க... etc.... மறதி அவசியம்... ஆனால் சிரமம்...

நன்றி அம்மா...

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் தனபாலன். நம்பிக்கைத் துரோகத்தை மறக்க முடியாது. துன்பத்தை மறக்க முடியாது. நடந்த
கெட்டவற்றை மறக்கத்தான் வேண்டும். எனக்கே சொல்லிக் கொள்கிறேன்:)
நன்றி மா. உங்கள் பின்னூட்டங்களை மறக்க மாட்டேன்.

வருண் said...

கண்ணதாசன் பாடல்வரிகள்போல், இரண்டு மனம் இருந்தால் ஒன்று நினைத்து வாடவும், இன்னொன்று மறந்து வாழவும் வசதியாயிருக்கும். இல்லைங்களா?

ராஜி said...

உங்க மறதி லிஸ்ட்ல இருக்குறதுல பாதி எனக்கும் இருக்கு. அவ்வ்வ்வ்வ்வ்வ் என்ன செய்ய?!

indrayavanam.blogspot.com said...

தனபாலன் கருத்தை அமோதிக்கிறேன்

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் வருண்.
இரண்டு மனங்கள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் குழப்பம் மிஞ்சும்.எது நிஜ மனம் என்று.
அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டுமே

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராஜி.

மறக்காத கணவர் இருந்தால் தேறிடலாம்.அவருக்கும் மறதி இருக்கக் கூடாது:)
என் பிள்ளைகளில் பெண் மறக்க மாட்டாள். சின்னவனும் மறக்கமாட்டான். பெரியவனுக்கு மறதி உண்டு:(

வல்லிசிம்ஹன் said...

நன்றி இந்திரயவனம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மறக்கவே முடியாத பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

மறதி என்பதே மிகப்பெரியதோர் வரம்.

அந்த வரம் எனக்கு ஏனோ இதுவரைக் கிட்டவில்லை. ;)

Geetha Sambasivam said...

போன ஜன்மத்து நினைவு கூட உனக்கு இருக்குனு கேலி செய்வாங்க. அந்த அளவுக்கு ஞாபக சக்தி இருந்தாலும் சமைக்கிறச்சே உப்புப் போட்டேனா இல்லையானு தெரியறதில்லை. வாயிலும் விட்டுப் பார்க்கும் வழக்கம் கிடையாது. நிவேதனம் பண்ணணும்னு மட்டும் இல்லை. பண்ணினப்புறமும் பார்க்கத் தோன்றாது. உப்பு இல்லாமல் சமைத்த நாட்களையும் உப்புக் கூடப்போட்டு சமைத்த நாட்களையும் எங்கே கொண்டு செல்ல??? அதே போல் சில நாட்கள் பிபி மாத்திரை சாப்பிட்டேனா இல்லையானு நினைவில் வராது. சாப்பிட்ட மாதிரியும் இருக்கும். சாப்பிடாத மாதிரியும் இருக்கும். சந்தேகம் வந்துட்டால் திரும்ப இரண்டாவது முறையாயிடுமேனு சாப்பிடாமல் விட்டிருக்கேன். :)))))

Geetha Sambasivam said...

நம்ம ரங்க்ஸ் இதுவரை மாத்தாத பெயர்களிலே உங்க பெயரும் ஒண்ணு, மத்தவங்களுக்கெல்லாம் இஷ்டத்துக்குப்பெயரை மாத்திடுவார். :)))))) நானாய்ப் புரிஞ்சுண்டு ஒரிஜினல் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்லியும்,....... எங்கே! :))))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபு சார். மறதி உங்களுக்கு இருந்திருக்க வாய்ப்பே கிடையாது. இத்தனை பெரிய ஸ்தாபனத்தில்
பதவி வகித்திருக்க முடியுமா:)

வல்லிசிம்ஹன் said...

ஆஹா,நான் தினம் மறப்பது மருந்தைத்தான். சிலசமயம்நேத்திக்கு எடுத்துக் கொண்டோமா ன்னு கூட சந்தேகம் வந்துவிடும்.
இப்போது ஒரு டைம் கணித்துவைத்திருக்கிறேன்.
புதியதலைமுறை செய்திகள் ஆரம்பிக்கும் போது அத்தனை மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டுவிடுவது.:)
உப்பு விஷயம் கூட அப்படித்தான்.சமைக்கும் போது சாப்பிடுகிற வழக்கம் கிடையாது.
மாமனார் சொல்வார் இன்னிக்கு உப்பிலி அப்பனுக்குத் தளிகையா என்று:)
சாம்பு சாருக்கு என் பெயர் ஞாபகம் இருக்கா. அட! நீங்கஃபோன் செய்த அன்னிக்குகூட எந்த கீதான்னு இவருக்குத் தெரியவில்லை. மருமகள் என்று நினைத்துவிட்டார்.

Ranjani Narayanan said...

சில விஷயங்களில் மறதி வரப்பிரசாதம்!
உப்பு போட மறப்பது, தாழ் போட்டோமா என்பது நினைவில்லாமல் போவது எல்லாம் எல்லோருக்கும் நிகழ்வதுதான். அந்த சமயத்தில் நம் கவனம் அங்கில்லாமல் போவதுதான் காரணம்.
இதற்கெல்லாம் கவலை வேண்டாம் வல்லி!

சென்ற வாரம் நான் மகள் வீட்டில் இருந்தேன். எங்கள் வீட்டிற்கு ஒரு தம்பதியர் வந்து தங்கள் பிள்ளைக்கு உபநயனம் என்று அழைப்பிதழ் கொடுத்துவிட்டுப் போயிருக்கின்றனர்.

அவர்களை உட்கார வைத்து, காப்பி வேண்டுமா என்று கேட்டு உபசாரம் எல்லாம் பலமாகச் செய்திருக்கிறார் ரங்கஸ். ஆனால் அவர்கள் என்று அவர்கள் கிளம்பிப் போனபின்னும் அவருக்கு நினைவு வரவில்லை. அழைப்பிதழ் முழுக்க முழுக்க கன்னட மொழியில்.

நான் திரும்பி வந்து அழைப்பிதழ் பார்த்து பெயர் படித்த பின்தான் இவருக்கு அவர்களை ஞாபகம் வந்தது, என்ன செய்ய?

வல்லிசிம்ஹன் said...

அப்பாடா ரஞ்சனி.
அம்மா மாடு வந்தது கதைதான் போலிருக்கிறது:)
இவரும் இதே தான். எனக்கு அவரைத் தெரியும்(இவருடைய உறவினராகவே இருப்பார்)ரொம்ப நாளாச்சா. மறந்துவிட்டேன்.
பிறகு நான் ஃபோன் செய்து அசடு வழிந்து யார் என்னனு விசாரித்து அப்புறம் ஓஹோன்னு கட்டி அணைக்காத குறையாகப் பேசுவார்.
மாமியார் மூணுதலைமுறைக்கு ஞாபகம் வைத்திருப்பார். இதே ஆள் நகரில் எங்க போனாலும் வழிகண்டுபிடித்துக் காரைக் கொண்டுவந்துவிடுவார்,.
நான் எங்க தொலைந்தேனோ அங்கேயே நிற்பேன் வழி தெரியாமல்.கவனக் குறைவால் ஏற்படும் மறதி.

ஸ்ரீராம். said...

சிலருக்கு நேற்று நடந்தது ஞாபகம் இருக்காது. போன வருடம், சில வருடங்களுக்கு முன்னால் நடந்தது ஞாபகம் இருக்கும். என் அம்மா அப்படி! சிறுவயதிலும் திருமணத்திலும் என்ன உடை போட்டிருந்தார் என்று கூடச் சொல்லுவார். கீதா மேடம் சொல்வது போல சாம்பார்ல உப்பு போட்டேனோ கேஸ்!

எங்க அப்பா பேப்பர்ல ரெண்டாம் பக்கத்தை வீடு முழுதும் தேடியவர்!

எனக்கும் மறதி இருக்கிறது. என் மனைவி நேரெதிர்! பயங்கர ஞாபகம். உங்களைச் சந்தித்த அன்று என்ன புடைவை காட்டியிருந்தீர்கள் என்று சொல்வார்!

நன்றல்லது அன்றே மறப்பது நன்று. இப்போ எல்லாம் நன்றியையும் சேர்த்தே மறக்கிறார்கள்!

ராமலக்ஷ்மி said...

தோழியும் நீங்களும் சந்தித்து அளவளாயிய பரவசம் எங்களையும் தொற்றிக் கொள்கிறது.

கழுத்தில் கண்ணாடியை மாட்டிக் கொண்டு தேடுவது, தாழ் போட்டதை மறந்து மீண்டும் சென்று பார்ப்பது நானும் செய்கிறேன்:)!

அப்பாதுரை said...

Seinfeld பார்த்திருக்கிறீர்களா? girlfriend பெயர் மறந்து போய் 'hey you' என்ற் கடைசிவரை சமாளித்துக் கடைசியில் அசடு வழியும் episode நினைவுக்கு வந்தது.

நாற்பது வருடங்களுக்குப் பிறகு உடன் படித்தவரது ஆடையலங்காரத்தை நினைவுக்கு வைத்திருந்தது ஆச்சரியத்திலும் பேராச்சரியம்.

சந்தடி சாக்குல பின்கட்டு தாழ்ப்பாள் மறந்ததை சொல்லிட்டீங்க.

அப்பாதுரை said...

மறதி நல்லதில்லை.
அடுத்தவர் தவறுகள் தவிர.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.சமீப மறதி,நீண்டகால மறதி எல்லாம்தான்.
நமக்கு வேணும்கிறது நினைவு வைத்துக் கொள்வது.வேண்டாம்கறதைப் பின்னால் தள்ளிவிடுவது.பெண்கள் சிலவிஷயங்களைக் கண்டிப்பாக மறக்க மாட்டார்கள். என்னைக் கேட்டால் இவர் எந்த அனிவெர்சரிக்குக் கடைசியாப் புடவை வாண்க்கிக் கொடுத்தார் என்பது நினைவு இருக்கு:)சொல்லிக் காண்பிக்கலாம் இல்லையா.பாவம் அவர்.சிலசமயம் மதியம் என்ன சாப்பிட்டோம்கறது கூட மறப்பேன்.:)எல்லாம் கவன சமாசாரம்தான்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி.
நீங்களாவது போட்ட தாழ்ப்பாளைச் செக் செய்கிறீர்கள். போடாத தாழ்ப்பாளைப் போட்ட்டேன்னு சொல்லி வெளிக்கதவைப் பூட்டிவிடுவேன்.
வந்த பிறகு கதவு திறந்து இருப்பதைப் பார்த்து கத்துவதும் நான்தான்.:(இனி இப்படி நடக்காது.:)

வல்லிசிம்ஹன் said...

Seinfield* Mad about you இரண்டையும் சேர்த்துப் பார்த்தது உண்டு.துரை.

.இரண்டு பாத்திரங்களுக்கும் இப்போ வயசாகிவிட்டது. இப்பவும் ஸ்டார்வேர்ல்ட்ல வருகிறது.எனக்கு அந்தக் கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள் அதனால் அதனால் கொஞ்ச நினைவுகள் இருக்கு. அவளுக்கு அதற்கப்புறம் நிறையப் படித்தும் என்னை நினைவு வைத்திருந்ததுதான் ஆச்சரியம்.இன்னும் யோசித்தால் நானும் அவளும் நிறைய ஆர்க்யூ பண்ணுவோம்.:)அவள் எப்படி இருப்பாள் என்று யோசித்தால் பழைய முகம் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது.சங்கடம்.:(

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் மற்றவர்கள் தவறுகளை மறக்கத்தான் வேண்டும் . இல்லையெனில் வருத்தம் தான்.

ஹுஸைனம்மா said...

நிறையப் புலம்பணும்னு வந்தேன்... என்னைவிட சீனியர் ஆட்களோடு என்னையும் சேர்த்து விடுவார்கள் என்ற பயம் வருவதால்... கப்சிப்!!

மறதியை வெல்ல, இப்போதெல்லாம் எழுதிவைத்துவிடுகிறேன். பேப்பரும், பேனாவுமாகத்தான் இருப்பு எப்போதும்! (அவ்வ்வ்...) வீட்டில் எங்கு பார்த்தாலும், “post-it" பேப்பர்கள்தான். அதிலும், ஃப்ரிட்ஜ் கதவு நிரம்பி வழியும்!!

வல்லிசிம்ஹன் said...

நல்லவிஷயம்தான் ஹுசைனம்மா.

நீங்க எங்களோட சேர இன்னும் 15 வருஷம் இருக்கு:)என்ன ஆச்சு?/கேக்கலாமா:)

Geetha Sambasivam said...

//அழைப்பிதழ் முழுக்க முழுக்க கன்னட மொழியில்.//


நீங்களாவது கன்னடமொழி அழைப்பிதழை வைச்சிட்டு முழிச்சீங்க. எங்களுக்குத் தமிழில் வந்துமே சில அழைப்பிதழ்கள் யார் அனுப்பினாங்க என்ன உறவு அல்லது நட்புனே தெரியாமப் போயிருக்கு. :((( விலாசம் எல்லாம் கரெக்டா எங்க வீட்டு விலாசத்தைப் போட்டுப் பெயரையும் என் கணவர் பெயர் போட்டுச் சரியாகவே வந்திருக்கும். ஆனாலும் முழிச்சிருக்கோம். உறவினர் தெரிஞ்சவங்கனு தொலைபேசிக் கூப்பிட்டுக் கேட்டிருக்கோம். ம் ஹூம்! :((((

Geetha Sambasivam said...

ஹூசைனம்மா சாமான் பட்டியலைச் சொல்றாரோ? தெரியலை! லிஸ்ட் போட்டு சாமான் வாங்கினாலும் ஒன்றிரண்டு பொருட்கள் விட்டுப் போயிடும். அதுக்காக ஒரு முறை கடைக்குப் போறாப்போல ஆகும்! :((( கடைத்தெருவுக்குப் போய் லிஸ்டும் போட்டு எடுத்துட்டுப் போயும் மறந்துட்டு வருவார் நம்ம ரங்க்ஸ். சில சமயம் வண்டி டிக்கியில் வாங்கினதை வைச்சுட்டு எடுக்க மறந்து என் கிட்டே கொடுத்தாச்சுனு சாதிச்சு, நான் இல்லைனு சாதிச்சுக் கிட்டத்தட்டப் பேச்சு வார்த்தையே முறிஞ்சு போய், அப்புறமா ஒரு வாரம் கழிச்சு எதுக்கானும் டிக்கியைத் திறந்தா மெதுவா விஷயம் வெளியே வரும். அப்படியும் வந்த உடனே குடைவேன், என்ன வாங்கினீங்க, எங்கே இருக்குனு! :)))

ஒரு முறை வெங்காயம் ஒரு கிலோ சின்னச் சின்னதாய் ஒரே அளவாய் வாங்கிட்டு வந்திருக்கார். அதை நான் பிரிச்சுப் பார்க்காமல் கத்தரிக்காய்னு குளிர்சாதனப் பெட்டியிலே வைச்சுட்டு, வெங்காயமே வரலைனு சொல்லிட்டேன். உடனே அந்தக் கடைக்கும் போயிட்டார். அந்த அம்மா கொடுத்தேன், நீ எடுத்துப் பெரிய பையிலே வைச்சுண்டேனு நினைவாச் சொல்லி இருக்காங்க. டிக்கியையும் திறந்து பார்த்தாச்சு. நோ வெங்காயம். நான்கு நாட்கள் கழிச்சு இன்னிக்கு முழுக்கத்தரிக்காய்க் கறினு சொல்லிட்டு அந்தப் பையைத் திறந்தால் எல்லாம் வெங்காயம். ஹிஹிஹி. அ.வ.சி. தான்! வேறே என்ன பண்ணறது! :)))))))

வல்லிசிம்ஹன் said...

அதையேன் கேட்கிறீர்கள் கீதா. பசலைக் கீரைக்கு ,புளிச்ச கீரை வரும்.

எங்க இரண்டு பேருக்கும் இரண்டு முருங்கை போதும் . நாலு நாலா வாங்கி .கடவுளே! கூட்டு,வேக வச்சதுனு போய்க் கொண்டே இருக்கும்.
ஏதோஒ இதாவது வாங்கிண்டு வராரேன்னு சம்மதமாகிவிடுவேன்.
நான் நீல்கிரீஸ்ல வாங்கின் பங்கள் தூக்க முடியாமல் இவர் தூக்கி வருவார்னு பார்த்தால் ,காலை வரை எல்லாம் காரில் உட்கார்ந்திருக்கும். விம் பார் காணுமே. அரிப் பை எங்கன்னு கேட்டால் நீங்க கொண்டு வரலியானு நான் கேட்க நீதான் ஒரு பையை எடுத்துக் கொண்டுபோனயேன்னு பாணம் விடுவார்:)

அமைதிச்சாரல் said...

மறதியும் வேணும்தான்..

ஹுஸைனம்மா said...

//நீங்க எங்களோட சேர இன்னும் 15 வருஷம் இருக்கு//

உங்களோட சேர நான் இன்னும் கால் செஞ்சுரி தாண்டனும்!! எங்கே... இப்பல்லாம் நாப்பதுலயே “அந்தக் கால 80”க்குள்ள பிரச்னைகள் - மறதி உட்பட- தொடங்கிடுதே... அவ்வளவெல்லாம் எட்டுவேனோ என்னவோ.. இறைவன் நாட்டம்!!

ஆனா ஒரு ஆறுதல், நல்லவேளை நான் சீக்கிரமே ப்ளாக் எழுத ஆரமிச்சுட்டேன். அதனால, வரலாறுல எம்பேரும் நிக்கும்!! (அடிக்க வராதீங்க) :-))))

//ஹூசைனம்மா சாமான் பட்டியலைச் சொல்றாரோ? //

கீதா மேடம், அது ஒரே ஒரு லிஸ்டுதான்! ஆனா, நான் செய்துமுடிக்க வேண்டிய வேலைகள், பிள்ளைகளிடம் ஏவ வேண்டிய வேலைகள், ஆத்துக்காரர் தலையில் கட்ட வேண்டியவை, பணியாளிடம் சொல்ல வேண்டியவை, அம்மாவிடம் பேசும்போது மறக்காமல் கேட்க வேண்டியவை, இந்த வாரம் ஃபோன் பேச வேண்டிய உறவுகள்(இல்லன்னா அதுக்கொரு கம்ப்ளெயின்ட் லிஸ்ட் வந்துடும்!), அப்புறம்... அப்புறம் வேறென்னல்லாம்னு மறந்துபோச்சே.... :-))))

மாதேவி said...

எனது கணவருக்கு உண்டு. போட்டிருந்த தனது கண்ணாடிக்கு மேலே எனது கண்ணாடியை எடுத்து போட முயல.... நான்சிரித்த சிரிப்பில் உசாரானார்.

"மறதிக்கு மருந்து மாஸ்ரரின் பிரம்பு" என சிறுவயதில் படிக்கும்போது பாடுவார்கள். முது வயதில் என்ன செய்யலாம் :)))))
மறதியை வாழ்த்துவோம்.

Geetha Sambasivam said...

ஹூசைனம்மா சரியான மு.ஜா. மு.அம்மாதான் நீங்க! :)))

இந்த மூக்குக் கண்ணாடி விஷயத்திலே நம்மவரை யாரும் அடிச்சுக்க முடியாது. என்னோட கண்ணாடியை எடுத்துப் போட்டுண்டு படிச்சுப்பார். அவரோட கண்ணாடி தினுசு, தினுசா இரண்டு, மூணு இருப்பதால் குழப்பம். நான் இங்கே கண்ணாடியைத் தேடிட்டு இருப்பேன். எங்கே வைச்சியோம்பார் கூலாக. கடைசியில் பார்த்தால் அவரிடம் இருக்கும். குரங்கு வடையைப் பிடுங்கறப்போல பிடுங்கிக்கணும். :)))))அசடு வழிவார்.

வெங்கட் நாகராஜ் said...

மறதி.... நம்மில் பலருக்கு இது உண்டு.

என் விஷயத்தில் நெய்வேலி விட்டு வந்து பல வருடம் ஆகிவிட்டபடியால் பலரை மறந்து விட்டேன். ஒரு முறை நெய்வேலி செல்லும்போது ஒருவர் என்னிடம் வந்து ரொம்ப உரிமையாகப் பேசினார். என்னைப் பற்றி பல விஷயங்கள் தெரிந்து வைத்திருந்தார். எனக்கோ அவர் பெயர் கூட நினைவில்லை.... :(

மற்றபடி பொருட்களை வைத்துவிட்டு தேடும் அளவுக்கு இல்லை! :)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. ஹுசைனம்மா. மு ஜா முத்தண்ணாதான்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல் மறதி வேண்டும். காட்ரேஜ் சாவியைத் தொலத்துத் தேடிய பாட்டி உண்டு நம்வீட்டில்.
அந்தச் சாவியை எடுத்துக் கொண்டு தண்ணீர்த்துறைக்கு காய்கறி வாங்கப் போன அத்தை.
காது கேளாதவர்.
நிதானமாக சைகிள் ரிக்ஷாவில் வந்து இறங்கினார். என்ன எல்லோரும் ஓடித்தேடுகிறீர்கள்.என்றார்.
அத்தை காட்ரேஜ் சாவி தொலைந்துவிட்டது என்று நான் ஓடினேன்.
ஏய்ய் ஏய் இந்தா இதா பாரு என்று என்னிடம் திணித்தார். அதேதான்.:)

வல்லிசிம்ஹன் said...

இந்த முகம் மறக்கும் மறதி ரொம்பப் படுத்தும் வெங்கட். பரிதாபப்பட்டவர்கள் நாம்.:)

Jawahar said...

இது மாதிரி தருணங்கள் வாழ்க்கையில் மிக ரசனையானவை!

http://kgjawarlal.wordpress.com

வல்லிசிம்ஹன் said...

எங்க வீட்டில அவருடைய பொருட்களை மறக்க மாட்டார். மாதேவி. நாந்தான் மறதி அரசி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜவஹர். உங்கள் இடுகைகள் அனைத்தையும் படிக்க முடிகிறது. பின்னூட்டம்தான் போட முடியவில்லை. வேர்ட்ப்ரஸ் என்னை ஒதுக்குகிறது.:)

கோமதி அரசு said...

6ம் தேதி மதுரை போன போது என் விளையாட்டு தோழியின் அண்ண்வைப் பார்த்தேன் நீங்கள் சந்திராவின் அண்ணன் தானே! என்றேன் அவர் ஆச்சிரியப்ட்டு விட்டார் எப்படி அடையாளம் கண்டு கொண்டீர்கள் என்று .
பின் சந்திராவிற்கு போன் செய்து கொடுத்து பேசவைத்தார். நானும் அவளும் மகிழ்ச்சியாக பேசினோம்.

கோமதி அரசு said...

மறதி நல்லது தான். சில நேரங்களில் சில விஷயங்களை மறக்க வேண்டியது தான்.
மூக்கு கண்ணாடியை எங்கோ வைத்து விட்டு தேடுவது நடக்கிறது.

இது மீள் பதிவு என்றாலும் மீண்டும் படிக்கும் போது புதிதாக படிப்பது போல் இருக்கிறது.

Geetha Sambasivam said...

வீடு காலி பண்ணிண்டு வரச்சே எடுத்து வைச்ச இரண்டு வடிகட்டி, மூணு டபரா, ஒரு டப்பா ஆகியவற்றைப் பத்து நாட்களாகத் தேடறேன். நீங்க வேறே! நாங்கல்லாம் மறதியிலே டாக்டரேட்டே வாங்கிடுவோம்.:)))))