About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, February 22, 2013

நட்சத்திரப் பூக்கள் எழுதியவர் ''வேனா''


பழைய புத்தகப் பொதியலில் இந்தக் கதையும்  இருந்தது. வேனா  என்பவர்
எழுதிய  சிறுகதை. ஆதர்ச தம்பதிகள் இருவரின் ஒரு நாள் வாழ்க்கை.
தேவநாதன்  தகப்பனார் இல்லாத குடும்பத்தை முன்னுக்குக் கொண்டுவந்துவிட்டு
தாயின் கடைசிகாலத்தில் அவள் இஷ்டப்பட்ட  இந்திராவையும் மணம்
செய்கிறான். இருவரும் சேர்ந்து நோய்வாய்ப்பட்ட  தாயையும்  கரையேற்றி
நிமிரும்போது அவன் கையிருப்புகள் குறைந்து விடுகின்றன. சாதாரண
அலுவலகத்தில் குமாஸ்தாக  இருப்பவனின்  அன்பு மனைவி அவன்
வருமானத்துக் கேற்ற வழியில் சிக்கனம் செய்து குடித்தனம் செய்கிறாள்.

இந்த நிலையில் அவனது வேலையில் வேறு ஒரு ஊருக்கு மாற்றப் படுகிறான்.
இப்போது அந்த செலவும் சேர்ந்து கொள்கிறது.சொற்பப் பணமும் கரைந்த நிலையில் அடுத்த மாத சம்பளத்துக்குக் காத்திருக்கும் நேரம்.
தினப்படி செலவை நண்பர்களிடம் பத்து ரூபாய்,ஐந்து ரூபாய் என்று  கடன் வாங்கிச் சமாளிக்கிறான்.
அரிசி இருப்பு  குறையும் போது,கமலம் அவனை அணுகுகிறாள்.
காலைக் காஃபியோடு   இருக்கும் அவனுக்கு கோபம்  வருகிறது.
''என்னை  ,இந்த நேரத்தில் கேட்டால்  என்னதான் முடியும்.
பட்டினி கிடந்தால் ஒன்றும் ஆகாது,.''
சுடுவார்த்தைகள்   இதுவரைக் கேட்டறியாத  கமலத்துக்கு வருத்தம் மேலிடுகிறது.
 அதை மறைத்துக் கொண்டு அவனை வழிஅனுப்புகிறாள்.
வாசலுக்கு வந்ததும் மதிய உணவுக்கான  பையைத் தேடுகிறான்.
அவளைத் திரும்பி நோக்க ஒன்றும் இல்லை  செய்வதற்கு. மாவு நேற்றே தீர்ந்துவிட்டது என்றதும்
பசியும் கோபமும் மேலிட அலுவலகத்துக்கு விரைகிறான்.
எங்கெங்கோ  அலைந்தும் பணம் பெயரவில்லை.
கடைசியாக அலுவலக  மேனஜரையே அணுக நினைக்கிறான்.
கொஞ்சம் தயக்கத்திற்குப் பிறகு
அவரிடம் நிலைமையை விளக்கிப் பணம் கேட்க,அவர் ஆதரவாக  இருபது ரூபாய்
கொடுத்து உதவுகிறார்.
அரிசி பத்தணாவுக்கு விற்றகாலம்.(கதையில்).
பணம் கையில் கிடைத்த மகிழ்ச்சியில்    தேவநாதன் உணவுவிடுதிக்குச் சென்று
காஃபி,டிபன் சாப்பிட்டு,வாயில் வெற்றிலையும் ,மனதில் மகிழ்ச்சியுமாகத் திரும்புகிறான்,.
இருட்டிவிடுகிறது.
வாசலிலேயே  கவலையோடு காத்திருக்கிறாள் கமலம்.
அவளைப் பார்த்ததும்  நினைவுக்கு வருகிறது அரிசி விஷயம்.

அவள் சாப்பிட்டாளோ என்றகவலையோடு அவள் கொடுத்த காப்பியைக் குடிக்கிறான்.
  அரிசி வாங்கணுமே!
இப்ப கடையெல்லாம் பூட்டி இருக்குமே நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்  நீங்கள் சாப்பிட வாருங்கள்''
 அவளுக்குச் சட்டென்று நினைவுக்கு வருகிறது.ஒருவருக்கே போதுமான குழைந்த சாதம் இருப்பது.
அவன் அணைப்பிலிருந்து விலகி,அவன் தந்த கதம்பத்தையும் வைத்துக் கொண்டு.
இதோ முற்றத்துக்கு வாருங்கள் பிசைந்து   கொண்டு வருகிறேன்
என்றபடி நழுவுகிறாள்.

அவள் கைமணத்தோடு இருக்கும் சாப்பாட்டைச் சீக்கிரமே சாப்பிட்டு முடித்து ஏப்பம்
விட்டவன் \'நீயும் சாப்பிடு' என்று கைகழுவப் போகும்போதுதான்
சாயந்திரத்துக்கு அரிசி இல்லை என்று அவள் சொன்னது நினைவூக்கு வருகிறது.
சட்டென்று சமையலறையை எட்டிப் பார்க்கிறான். அவள் பாத்திரத்தைக் கழுவி
வைத்துவிட்டுத் தண்ணீரைக் குடித்துக் கொண்டிருக்கிறாள்.
கழிவிரக்கம் தொண்டையை அடைக்க அவள் பின்னால் வந்து நிற்கிறான். அவன் முகக் கலவரத்தை உணர்ந்த அவள்
எனக்கு இப்போதெல்லாம்
பசிப்பதே இல்லை.
ஏன்?
ஹ்ம்ம். இதையெல்லாம் சொல்லித் தெரியணுமா எங்க வீட்டுக்காரருக்கு என்று நாணம் காட்டுகிறாள்.
இப்படி முடிகிறது கதை.
மனம் மிகுந்த மகிழ்ச்சியில் தலை நிமிர்ந்து  வானத்தைப் பார்க்கிறான்.
அங்கே இருளிலும் நட்சத்திரங்கள் பூக்களாகச் சந்தோஷத்தை
உணர்த்துகின்றன.
இது கதைச் சுருக்கம் . !! உள்ளே இன்னும் துல்லியமான உணர்வுகள்
அழகாகத் தொடுக்கப் பட்டிருக்கின்றன.
அடுத்த கதையைச் சென்னையில்   கொடுக்க முயற்சிக்கிறேன்.:)


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

24 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை.

பெரும்பாலான வீடுகளில், கணவன், தனது மனைவிக்கு உணவு இருக்கிறதா என்று பார்ப்பதே இல்லை.

இருப்பதை இரண்டு பேரும் சேர்ந்து உண்ணலாமே....

Anonymous said...

// ஆதர்ச தம்பதிகள் இருவரின் ஒரு நாள் வாழ்க்கை.//
இவர்களா ஆதர்ச தம்பதிகள்? பதிவை படித்து முடித்ததும் இது ஒரு தம்பதிகளின் ஒரு நாள் வாழ்கை என்றுதான் தோன்றுகிறது.

வாங்க, வாங்க!
சென்னை உங்களை மீண்டும் அன்போடு வரவேற்கிறது. :))

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் கதை நடந்தகாலம் எங்கள் அம்மா அப்பா இளம் தம்பதியராக இருந்த காலம்.

அப்போதெல்லாம் பெண்களுக்கு அவ்வளவு வாய்ஸும் கிடையாது. புருஷர்களும் மொத்தக் குடும்பத்தைக் கவனிக்கும் அளவிற்கு
மனைவியையும் கவனித்தார்களா என்று தெரியவில்லை.
தேவராஜனுன் கமலமும் வாழ்க்கையின் ஆரம்பித்தில் பொறுப்புகளின் சுமையில் அழுந்தியவர்கள்.தாயார் இறந்தபிறகே
தாம்பத்தியம் துளிர்விடுகிறது.

என்ன சொன்னாலும் தேவராஜன்,கிளப்பில் பலகாரம் சாப்பிட்டு மனைவிக்கும் ஒரு பார்சல் கொண்டுவந்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன்:)
எல்லோரையும் குறை சொல்ல முடியாது. சிறிய தவறுகள் பிற்காலத்தில் அவர்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் அளவிற்கு வளரும்.:(

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

அன்பு மீனாக்ஷி,
இவர்கள் அந்த நாளைய ஆதர்ஸ தம்பதியர்.
காதலன் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவிலும் கைகொடுத்தே''வகை. தங்கைகள்
திருமணம் அம்மாவின் நோய் எல்லாவற்றையும் கணவனின் அன்பு ஒன்றையே ஆதரவாக நம்பி நடக்கிறாள்.
அவனும் மென்மையானவன் தான். பசியும் பணமில்லாமையும்
அன்பைச் சற்றுத் தள்ளி வைத்துவிட்டதோ. எனக்கும் தேவராஜன் மேல் கோபம்தான்.
இந்த மாதிரிக் கதைகளை நான் என் திருமணவயதில் படிக்க தந்தை கொடுத்தார்.
அந்த நிலையிலிருந்து இன்னும் வெளிவரவில்லை நானே:))))))))))))))))))))))))
நன்றிமா.

sury Siva said...

கதை சோகம் என்று சொல்லலாம் என்றால்,
காதலின் சொர்க்கத்தை அல்லவா காட்டுகிறது !

அது என்ன கடைசி படத்தில் வீட்டுக்குள் மழைத் துளிகள் விழுகின்றன என்று கூர்ந்து பார்க்கையில்
அவை மழைத் துளிகள் அல்ல பூமாரி என்றே புரிகிறது.

ஆமாம். நீங்கள் துபாயிலிருந்து வருகிறீர்கள் என்பதால், உங்களுக்கு ரத்தினக்கம்பளம் விரித்து
முதல் வலைப்பதிவாளராக வலைச்சரத்தில் வருக வருக வென‌
மலர்கள் தூவி வரவேற்கிறார்கள்.

நான் வருகையிலே என்னை வரவேற்க இங்கே பூ மழை பொழிகிறது , என்று பாடிக்கொண்டே
எம்.ஜி.ஆர். சென்னை டொமஸ்டிக் விமான நிலையத்திற்கு வருவீர்கள், அல்லது வந்து விட்டீர்கள்.

சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com

கோமதி அரசு said...

காஃபி,டிபன் சாப்பிட்டு,வாயில் வெற்றிலையும் ,மனதில் மகிழ்ச்சியுமாகத் திரும்புகிறான்,.//

20ரூபாய் பெற்றுக் கொண்டவர் வீட்டுக்கு வேண்டிய பலசரக்கு வாங்கி போய் இருந்தால் மனைவி அருமையாக சமைத்து தந்து இருப்பார்கள்.
அல்லது தான் உண்டபின் மனைவிக்கும் ஏதாவது வாங்கி போய் இருக்கலாம்.
பெண் எனும் தியாக தேவதை.

மழை படம் அருமையாக இருக்கிறது.

ஸ்ரீராம். said...

இம்மாதிரிக் கருக்கள் அந்தக் காலத்தில்தான் சாத்தியம். வீட்டின் நிலைமை தெரியாமல் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அரிசி வாங்காமல் வரும் அவனை என்ன செய்ய? கொண்டாட ஒரு மனைவி! ம்..ஹூம்!

ராமலக்ஷ்மி said...

அந்நாளைய மனிதர்களை அப்படியே பிரதிபலிக்கிற கதை. பெரும்பாலானவர்கள் இப்படிதான் இருந்திருக்கிறார்கள். ஆண்களில் பலர், பாசம் காதல் இவற்றில் அக்கறையும் சேர்த்தி என்பதை மறந்தவர்களாய். பெண்கள் எல்லாவற்றையும் பொறுத்துப் போகிறவர்களாய். பாடல் கூட உண்டே.. ‘எங்கே நீயோ நானும் அங்கே’ என.

Geetha Sambasivam said...

வந்தாச்சா சென்னைக்கு? பல ஆண்களுக்கும் இப்படித்தான் குடும்ப நிலவரமே தெரியாது. இதிலே இன்னும் சிலர் உள்ளே என்ன இருக்கு, இல்லைனு தெரியாமல் விருந்தையும் அழைச்சிட்டு வருவாங்க. சமாளிக்கும் பெண்கள் பாடு கஷ்டம் தான். அரிசி பத்தணா விக்கும்போதே இப்படிக் கஷ்டம்னா! என்னத்தைச் சொல்றது. ஆனால் எனக்கு இந்தக் கதை பிடிக்கலை. மனைவிக்குக் கதம்பம் மட்டும் போதுமா? அவளுக்குப் பசியும் இருக்குமே. அதையும் ஆற்றுவது கணவன் கடமை இல்லையா? எப்படி அவளை நினையாமல் தான் மட்டும் சாப்பிடலாம்? என்னதான் அந்தக் காலம் என்றாலும்.......... மனம் ஆறலை. :)))))

ராமலக்ஷ்மி said...

நான் இட்ட கருத்தைக் காணுமே:(. Spam-ல் உள்ளதா பாருங்கள் வல்லிம்மா.

சென்னை வந்து விட்டீர்களா:)?

வல்லிசிம்ஹன் said...

இன்றுதான் வந்தோம் சுப்பு சார்.
உடல் அலுப்புதான் மிகுதியாக இருக்கிறது.வலைச்சரத்தில் என் பதிவை
திரு இளங்கோ குறிப்பிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
இன்னும் அங்கு போய்ப் பின்னூட்டம் இடவில்லை.வீட்டைச் சுத்தம் செய்த பிறகுதான் மற்றவேலைகள்.
மழைத்துளிகளே ஆசீர்வாதம் தான். காதல் கதை என்று சொல்லலாம். இன்னும் கொஞ்சம் அந்தக் கணவன் கவனித்திருந்தானால்:(

வல்லிசிம்ஹன் said...

அதுதான் என்னைக் கஷ்டப்பட வைக்கிறது கோமதி.
என்னதான் யோசித்துப் பார்த்தாலும் தான் சாப்பிடும்போது மனைவியை நினைக்கவேண்டாமா.
தியாகதேவதைகள் பெரிதும் மதிக்கப் பட்ட காலம். இன்னும் இந்த மாதிரிப் பெண்கள் இருக்கிறார்கள்.காதல் இருக்கலாம். இரண்டுபக்கமும் தியாகம் இருக்க வேண்டும்.இல்லையா மா.

வல்லிசிம்ஹன் said...

எக்ஸாக்ட்லி ஸ்ரீராம்.!!
எந்தக் காலத்திலும் கணவன் மனைவி சேர்ந்த குடும்பம் ஒழுங்காக இருக்க இருவர் உழைப்பும்,அன்பும் ஒன்று போல இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அச்சோ ராமலக்ஷ்மி, இந்தப் பாடலைப் பார்க்கும்போதெல்லாம் வருத்தமாக இருக்கும்.
ஏன் இப்படி காலில் விழுந்து கெஞ்ச வேண்டும்.:(
கண்ணகி காலத்தில் ஆரம்பித்து நடந்து கொண்டு இருக்கிறது.
பெண்தெய்வங்கள்.!!!நீங்கள் சொல்வது போலத்தான் அப்போது இருந்திருக்கிறது. 25% மாறுபட்டு இருக்கலாம்.
சிவசங்கரி கதைகளில் வரும் கணவர்கள் போல.:)

வல்லிசிம்ஹன் said...

வந்தாச்சு மா.
தூசி மூக்கை அடைக்கிறது.இன்வட்டர்
கொஞ்சம் தகறாரு பண்ணியது. இன்றுமுழுவதும் சென்னையின் இன்ப சூழலை அனுபவித்து,சமைத்து சாப்பிட்டு,காய்கறி வாங்கி:)
எனக்கும் கதைஆரம்பித்த விதம் பிடித்தாலும், முடிந்த விதம் ரசிக்கவிலை. இதையே தான் வாழ்விலும் பல சமயங்களில் நடக்கிறது. வெளியே பசி தீர்த்துக் கொண்டவர்க்கு மனைவி நினைவு ஏன் வரவில்லை!!

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி சென்னை வந்தாச்சு மா.
கீதா
கதையை
மாற்றி எழுதலாமா:)

Geetha Sambasivam said...

மாத்தி எழுதுங்க வல்லி, அதுவும் உங்க நடையிலே. காலம்பர வந்து படிச்சுக்கறேன். இப்போப் படுத்துக்கப் போயிண்டே இருக்கேன். :))))))

வல்லிசிம்ஹன் said...

சரி கீதா.அப்படியே செய்யலாம்.
ஏதாவது காப்பிரைட் ப்ரச்சினை வந்தா நீங்க காப்பாத்திட மாட்டீர்களா.:)

Geetha Sambasivam said...

//ஏதாவது காப்பிரைட் ப்ரச்சினை வந்தா நீங்க காப்பாத்திட மாட்டீர்களா.:)//

நீங்க குறிப்பிடும் கதை வந்து குறைந்த பட்சம் 60 வருஷம் ஆகி இருக்கும் ரேவதி. ஆகவே காப்பிரைட் பிரச்னை வரவே வராது. கவலை வேண்டாம். மேலும் கதையையும், ஆசிரியரையும், கருவையும் குறிப்பிட்டுவிட்டு இந்தக் கருவின் மூலம் எனக்குத் தோன்றிய வேறு கோணம் என எழுதலாம். பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து வந்த பல சரித்திர நாவல்களைப் போல! :)))))) ஒண்ணும் பிரச்னை இல்லை. :))))

RAMVI said...

அந்த நாளைய வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா அப்படியே செய்துடலாம்.ஊரு பேரு மாத்தி மீசை வச்சு ஜன்னல் வழியா ஓடறமாதிரி:)\

நன்றிப் பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரமா, முக்காலே மூணுவீசம் இப்படித்தான் இருந்திருப்பாங்க. இவர் கொஞ்சம் புதுமையைப் புகுத்தி இருக்கிறார்.:)

கோவை2தில்லி said...

கீதா மாமி சொன்ன மாதிரி நீங்க மாத்தி எழுதுங்க...:)