Tuesday, February 23, 2010

502,எண்ணங்கள் நல்லதனால்எத்தனையோ கொடுத்து வைத்திருந்தால் தாம் இப்படி ஒரு கணவர் அமைவார்.
நீங்க அதை நினைச்சு சந்தோஷப்படணும்.
என்னை மாதிரியா பாருங்கோ. இவர் இப்படி விபத்தில காலைக் கொடுத்துட்டு நிக்கிறாரெ.
மருமகள் சரியில்லை. மகன் சம்பாதிக்கிறது போறது என்று மருமகள் வேற இருபதாயிரம் சம்பாதிக்கிறாள்.
இருந்தாலும் என் நிலைமையைப் பார்த்தீர்களா.
இந்த மாதிரிப் பட்சணம் பலகாரம் செய்து
வாழ்க்கையை ஓட்டுகிறேன்.

''என்ன மூணரை க்ரௌண்ட் நிலம் திருவள்ளூர்ல மாமா செயலா இருக்கும் போது வாங்கிப் போட்டது.
இப்போ ....லட்சங்களுக்குப் போகுமாம்.
எதுக்குச் சொல்ல வரேன்னா ,பர்சைத் திறந்து இந்த வார்டு பாய்,நர்ஸ் எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
எப்பவுமே பணம் கைல இருக்கும்னு நினைக்கக் கூடாது வரும் போகும் அதுதான் செல்வ. சுகிசிவம் நேத்திக்கூட கதைல சொன்னாரே''

சாமி என்று ஆகிவிட்டது எனக்கு.ஒரு அரை மணி நேர அறுவை சிகித்சை.
கண்புரை அகற்ற.

காலையிலியே நானும் இவரும் நர்சிங் ஹோமுக்கு வந்தாச்சு.
அப்போது எனக்கு முன்னாலேயெ ஒரு அம்மா அங்கே உர்ட்கார்ந்திருந்தார். அவரது கணவருக்கும் அன்று இதே அறுவை சிகிச்சை.

நான் ஏற்கனவே கொஞ்சம் பயத்தோடு இருந்தேன்.
கண்புரை சிகித்சை எவ்வளவோ முன்னேறி விட்டது .இப்போது ஒரு லேசர் முறைப்படி இருபது நிமிடங்களில் லென்ஸைப் பொறுத்திவிடுகிறார்கள்.
இதில் பயத்துக்கு என்ன இடம் என்று தோன்றுகிறதல்லவ.

நாங்கள் அணுகிய கண்வைத்தியர் சற்று இளவயதினர்.

இவரைப் பரிசோதனை செய்யும்போதே, ''மூணு வருஷத்துக்கு முன்னாடியே செய்திருக்க வேண்டியது போல இருக்கே. ஏன் சார் இவ்வளவு முற்றிய பிறகு வந்திருக்கிறீர்கள்'' என்று சொல்லி ,சிங்கத்தோட கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டார்.
''எனக்குக் கண்ணெல்லாம் சரியாகத் தெரிகிறது.
இரவு வாகனம் ஓட்டும்பொழுது பிரச்சினையாக இருப்பதால்தான் வந்தேன்'' என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்.
பிறகு நாள் குறித்து நேரம் குறித்து ஹாஸ்பிடலுக்கும் வந்தாகி விட்டது. இவருக்கு முதல்
சிகித்சை என்பதால் ,இவரை அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்.
நடுவில் காப்பியும்,காலை உணவும் கொண்டு வந்து வைத்த பையனுக்கு நன்றி சொல்லி அவன் கையில் ஐந்து ரூபாய் கொடுத்தேன்.
அப்போது ஆரம்பித்தது இந்த அம்மாவின் அறிவுரை.
எனக்கோ சிகித்சை முடிந்து அரைமணியில் வெளியில் வெளியே வரவேண்டியவர் ஒரு மணியாகியும் காணோமே
என்று அவதியாக இருந்தது.


அப்புறம் வந்தார். மதியம் வரை இருந்துவிட்டு வேண்டிய மருந்துகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டோம்.
அது கதையில்லை.
இந்த அம்மா கொட்டிய சொற்கள் என் காதில் விழுந்து உள்ள போய் கடமுடா செய்யும்போதுதான் எனக்கு உரைத்தது.
நல்லதே சொன்னதாக வைத்துக் கொண்டாலும்,சொல்லும் முறை இடம் என்றெல்லாம் இருக்கிறதல்லவா.

நான் வெளியே வரும்போது, அந்த அம்மாவின் கணவருக்கும் ஆப்பரேஷன் முடிந்து அவரது அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்த அம்மாவுக்கு இன்னோரு கவலை முக மனைவி கிடைத்துவிட்டார். (பொழுதுதான் போகவேண்டுமே)
இது கொஞ்சம் சீரியஸ். இந்தப் புது அம்மாவின் கணவருக்கு ஆஞ்சியோகிராம் செய்து கொண்டிருந்தார்கள்.

கணவருக்கு நாற்பது வயது. இங்கெ உட்கார்ந்திரிந்த பெண்ணுக்கு 35 இருக்கும்.

பணம் சம்பாதிப்பதற்காக ஆண்கள் மேற்கொள்ளவேண்டி இருக்கும் கடினமாக வாழ்க்கை முறைகளே இந்த நோய்க்குக் காரணம் என்று தான் படித்த விவரங்க ளையெல்லாம் அவர் பேசப் பேச அந்தப் பெண் பதில் சொல்லாமல் ஏதோ பிரார்த்திக் கொண்டு இருந்தாள்.

மற்ற எல்லோருடைய நன்மைக்காகவும் அந்த அம்மா சீக்கிரம் வீட்டிற்குக் கிளம்பிவிட்டால் நல்லது என்று எனக்குத் தோன்றியதுஎல்லோரும் வாழ வேண்டும்.