About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, April 16, 2008

ஒரு காதல் 1928இல்

இந்த கோபுரம் சிகாகோ டௌன் டவுன்ல இருக்கிற ஒரு கட்டிடம்இதெல்லாம் திரு.சுந்தரராஜன் பேத்தி இருக்கும் ஊருக்கு நாங்க போன போது எடுத்த பல படங்களில் ஒன்று.
Posted by Picasaஇந்தப் பூங்கொத்து போன வருடம் எனக்கு அனுப்பப்பட்டடது:)
வாடவே இல்லை.:)


முந்திய பதிவில் எங்க மாமனாரின் அறுபதாம் கல்யாணம் பற்றிக் கொஞ்சம் எழுதி இருந்தேன்.


அப்பொழுது சாப்பாட்டு வேளையில் மாமாவின் தோழர்கள் அவரையும் அம்மாவையும் பரிகாசம் செய்ய ஆரம்பித்தார்கள்.
முதல் கேள்வி என்னிடம் வந்தது. ரேவதி, உனக்குத் தெரியுமா
உங்க மாமனாரும் மாமியாரும் காதலித்துக் கல்யாணம் செய்தவர்கள் என்று?/
என்றதும் எனக்கு ஒரே அதிசயம்.
இல்லையே தெரியாதெ, அம்மா நிஜமாவா என்று அம்மாகிட்டக் கேட்கத் தயக்கம்.
நண்பரோ விடுவதாயில்லை.
உங்க மாமியார் நடுத்தெரு(மைலாப்பூர்)விலிருந்து லேடி சிவஸ்வாமி பள்ளிக்கு வரும்போது எஸ்கார்ட் யாரு தெரியுமா, உங்க மாமனார் தான்.
எப்படி கனெக்ஷன் ஒண்ணும் புரியலையே, என்று நான் சொன்னதும். அம்மாவும்,மாமாவின் தங்கையும் ஒரே வகுப்பில் படித்தார்களாம்.
தங்கை மாட்டுவண்டியில் முன்னால் போக மாமா சைக்கிளில் வந்து பள்ளி வாயில் வரை வருவாராம்.
அப்போதுதான் கமலம்மாவைப் பார்த்திருக்கிறார்.
தன் சீதை இதுதான்னு அப்பவே தீர்மானம் செய்துவிட்டாராம்.
அம்மாவுக்கு அப்போது 13 வயது .மாமாவுக்கு 16..
மாமா பளுதூக்கும் வழக்கம் உண்டு.
அதற்கேற்ற உடலமைப்பு:)
அந்தக் கால ஜானி வேய்ஸ்முல்லர் என்ற நிச்சல் வீரர் போலத் தோற்றமளிப்பாராம்.
அந்தத் தோற்றத்திற்காகவே தனக்கு அப்பா, தனக்கு வைத்த குடுமியைக் கிராப்பாக மாற்றிக்கொண்டவர்!!
எல்லா விளையாட்டும் பள்ளியில் பிரமாதமாக விளையாடுவாராம்.
அந்த விளையாட்டுகள் நடை பெறும் நேரம் அத்தை, அம்மாவைப்
பி.எஸ் பள்ளிக்கு அழைத்துவந்து, தன் அண்ணாவைச் சுட்டிக் காட்டினாராம்.
அம்மாவும் பார்த்துவிட்டுப் போய் விட்டார்.
இந்த விஷயம் பெற்றோருக்குத் தெரிய வந்துவிட்டது:0)மாமாவின் பெரிய அண்ணவிற்குக் கல்யாணம் முடிந்திருந்த வேளை.
ஆஜிப்பாட்டிக்கும் ஆச்சா தாத்தாவுக்கும் இந்தக் கல்யாணத்தையும் நடத்த ஆசை வந்துவிட்டது.
பிள்ளைவீட்டாரோ பெரும் தனக்காரர்கள்.
பொண்ணு அப்பாவோ ஹைக்கோர்ட்டில் வக்கீல்.நிறைய சமூக சேவை செய்பவர்.மைலாப்பூரில்,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியோடு சேர்ந்து பெண்களுக்கான அபய நிலையம் கட்டியவர்.மரியாதைக்குரிய குடடூஊஉம்பம் என்ராலும் இவர்களைப் போல வைரங்களில் பேச்சு நடத்துபவர்கள் இல்லை.
கைத்தறி புடவை,எளிமை வாழ்க்கை என்று இருப்பவர்கள்.
பையனோட அம்மாவும் அப்பாவும் பெண் வீட்டிற்கு வந்ததும் அவர் சொன்ன முதல் வார்த்தை, ராஜகோபாலாச்சார், நான் என் பெண்ணுக்கு வைரத்தில ஒண்ணும் செய்ய மாட்டேன்.
என் பெண் குணவதி, படிப்பை முடிக்கட்டும்.
அவள் குடித்தனத்திற்கு வேண்டிய மற்ற அத்தனை சீதனங்களையும் அனுப்பி விடுகிறேன் என்றாராம்.
பையனின் அப்பாவும் சளைக்காதவராய், பெண்ணுக்குத் தேவையான ஆபரணங்களைத் தாங்களே போடுவதாக அருமையாகச் சொன்னார். இருவரும் ஏற்கனவே சினேகிதர்கள். அதனால் லௌகீக விஷயங்களில் வம்பு வரவில்லை.
இதெல்லாம் நடந்து முடிந்த சில நாட்களில் மாமா சைக்கிள் பந்தயம் ஒன்றில் ,வேகமாக ஓட்டி கீழே விழுந்து இடது கையை முறித்துக்கொண்டு விட்டது.
உடனே பெண்ணின் பாட்டிக்குக் கவலை.
கமலா இருக்கிற அழகிற்கு ஒச்சத்தோட(குறை) மாப்பிள்ளை
எடுப்பார்களோ,கொடுப்பார்களோ என்று கேட்டதும், இதைக் கேட்டு மாமா
அவர்கள் வீட்டுக்கே எலும்புமுறிவு கட்டை அவிழ்த்த அன்றே போய், அந்தப் பாட்டியை நேரவே கேட்டாராம்.
என்ன மதுரைப் பாட்டி! உன் பேத்தியை நான் காப்பாத்த மாட்டேனு கவலையா என்று கேட்டராம்.
பாட்டிக்கு வெட்கம் வந்துவிட்டது, இத்தனை சுந்தரமான சுந்தரராஜனைப் பார்த்ததும்.
அங்கே இருந்த ஒரு ஆறடிக்கு இரண்டடி பென்ச், நல்ல தேக்கு மரத்தில்
செய்தது, அதைச் சுட்டிக்காட்டி அதை நான் தூக்கி காட்டட்டுமா என்று கேட்டு இருக்கிறார்.
கமலம்மாவுக்கோ பயம். தன் எதிர்காலக் கணவர் கையைப் பற்றி.
யாரும் வேண்டாம் என்று தடுப்பதற்குள்ளேயே அந்தப் பெரிய பெஞ்சைத்
தன் அடிபட்ட இடது கையால் தூக்கி விட்டாராம்.
அந்த பெஞ்ச் இன்னும் இங்கே இருக்கிறது:)
அதிர்ந்து போன பெண்வீட்டார், வந்த மாப்பிள்ளைக்கு திரட்டுப்பாலும் முறுக்கும் இலையில் இட்டு உபசாரம் செய்து அனுப்பினார்களாம்.
பிறகென்ன,
அழகான மரபீரோக்கள், கட்டில்கள், வெண்கல பொம்மைகள்,திருநெல்வேலியிலிருந்து வரவழைக்கப் பட்ட பாத்திரங்கள், தாமிர சொம்புகள் எல்லாம் வண்டிகளில் வந்து இறங்க,
சாஸ்திரி கடையில் வாங்கிய பட்டுப் புடைவைகள் சகிதம் திருமணம் பெண்வீட்டில் ஆனந்தமாக நடந்தேறியது.
மணநாள் ஃபெப்ரவரி 8, 1930
அந்தக் கால கேம்ப்ரிட்ஜ் மாணவி கமலா, கணவனைக் கைபிடித்ததும்,அதற்குப் பிறகு
சுண்டு மாமா லொயாலாவில் பிஏ பாஸ் செய்து சிம்ப்சனில் வேலைக்குச் சேர்ந்தார். இரண்டு இரண்டு வருட இடைவெளியில் ஐந்து குழந்தைகள் பிறந்தன.
அதன் பிறகு 24 வருடங்கள் கழித்து நான் இந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்:)

16 comments:

துளசி கோபால் said...

எத்தனை முறை படிச்சாலும் அலுக்கவே இல்லை.

எவ்வளவு நல்ல மனசு பெண் & பிள்ளை வீட்டாருக்கு.

அப்படியே உலகத்தில் எல்லாரும் இருந்தா.......

பூலோகமே சொர்கமா ஆகி இருக்குமே!!!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி,
சிங்கத்தோட அப்பா வழித்தாத்தா வெகு அன்பானவர். அவரை நான் பார்த்துப் பேசி இருக்கிறேன். அம்மா வழித் தாத்தா எங்களுக்கு சிறிய தாத்தா முறை. எனக்கு 10 வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டார்,.

இருவரும் வாக் சாதுர்யம் உள்ளவர்கள். நண்பர்களாக இருந்த ஒரே காரணத்தினாலேயே இந்தக் கல்யாணம் நடந்தது.

வீட்டு மாட்டுப் பெண்களில் வைர நெக்லஸ் போடாமலே பளீரிட்ட கமலம் எங்க மாமியார்.
அது ஒரு காலம்:)

கோபிநாத் said...

ஆகா...அந்த ராமருக்கு வில்லு..இந்த ராமருக்கு பென்சா!!! ;))

சூப்பர் ஜோடி ;))

கிருத்திகா said...

நல்லா அனுபவிச்சு அவர்கள் அன்பில் திளைத்து எழுதியிருக்கிறீர்கள்...படிக்கவே சுகமா இருக்கு..

சுல்தான் said...

1942 Love Story - Super
சுமுகமாய் முடிந்திருக்கிறதே! அதிசயம்தான்.

நானானி said...

அந்தக் காலத்துக் காதல் எவ்வளவு
கௌரவமாயிருந்திருக்கிறது!!
அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி..பெஞ்சையும் ஒடித்து....நோ..நோ...தூக்கி, வைர நெக்லேஸ் எதுக்கு அவரே ஒரு வைரம்தானே! கமலா கல்யாண வைபவம் வைபோகமாய் முடிந்தது.
ஒரு சுகமான,இதமான காதல் கதை.

வல்லிசிம்ஹன் said...

அடடா, கோபிநாத், நச் னு சொல்லிட்டீங்கப்பா.
நான் இதை நினைக்க வேஇல்லை.
வட்டப்பாறைனு ஒரு கல் முன்னாடி இருக்குமாம். இளவட்டம் அதைத் தூக்க குமரியுடன் திருமணம் நடைபெறும்

வல்லிசிம்ஹன் said...

சுல்தான் வரணும்.1942 லவ் ச்டோரினு பேர்வச்சுட்டீங்களா

வல்லிசிம்ஹன் said...

வரணும் நானானி .இப்பவும் நம் வரைக்கும் மாற்றம் ஏதும் இல்லை.

இனிமேல் கருத்துகள் வன்முறைகள் எல்லாம் மாறுகையில்
சொல்ல முடியாது. மணம் வேண்டாம் என்று சொல்வதே இப்போது ட்ரெண்ட்.

வல்லிசிம்ஹன் said...

கிருத்திகா,
என்னை அவர்கள் வேற்று வீட்டுப் பெண்ணாகவே நினைத்ததில்லை. நானும் அவ்வாறே.

இதனாலேயெ இவர்கள் ,இல்லாமல் வீடு நடத்துவது மிகவும் கஷ்டமாக இருந்தது.

ambi said...

சூப்பர், உங்க எழுத்துல அப்படியே கல்கியின் அலையோசை ரேஞ்சுக்கு காட்சிகள் என் கண் முன் விரிந்தன.

எல்லாத்தையுமே நான் படமாகவோ வீடியோவாகவோ தான் கற்பனை பண்ணி படிப்பேன்.

வல்லிசிம்ஹன் said...

அம்பி,

ஓகே:)
நடுவில் இந்டர்வெல் விட முடிந்ததா. பாரக்ராஃப் விடாமல் எழுதிட்டேனே அதான் கேட்டேன். இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு இல்லையா டி டேக்கு:)

கீதா சாம்பசிவம் said...

aahaa, itho oru love story! pure original! padikave enna oru sukam?

குமரன் (Kumaran) said...

அம்பி சொன்னது தான் எனக்கும் தோணிச்சு வல்லியம்மா. படிக்கிறதுக்கும் கண் முன்னால நடக்கிற மாதிரி நினைச்சுப் பாக்குறதுக்கும் ரொம்ப நல்லா இருக்கு. :-)

வல்லிசிம்ஹன் said...

கீதா,
பதிமூணு வயசுப் பொண்ணும், பதினாறு வயசுப்பையனும் பார்த்துக் கொண்டு,
இரண்டு வருடம் காத்திருந்து திருமணம் நடந்திருக்கு.

மாமியாரின் அப்பா பெண் பள்ளி இறுதி வகுப்பை முடித்துவிட்டே திருமணம் முடிக்க உறுதி யாக இருந்திருக்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமரன்.

நம்ம வாழ்க்கை ,கதைகளை விட சுவாரஸ்யம் இல்லையா:)