About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, January 20, 2008

பாதுகையே நாட்டை ஆளும்
பாட்டி!! ஒரு கதை சொல்லேன். இப்படித்தான் எங்கள் இரவு நேரம் ஆரம்பமாகும்.


நாள் பூராவும் பள்ளிப்பாடங்கள் எழுதிவிட்டுக் கொஞ்ச நேரம் தாத்தாவோடு கேள்விக்கணைகள் தொடுத்து அரட்டை அடித்துவிட்டு,


அவர் தூங்கப் போனதும் என்னிடம் வருவான் பெரிய பேரன்.


இரண்டு வருடங்கள் முன்னால் சொன்ன சாக்கலேட் மரம், ஐஸ்க்ரீம் வீடு, பகாசுரன் கதை இதெல்லாம் இப்ப வேண்டாம்.


நான் பெரியவனாய்ட்டேனே பாட்டி:))
சரி ராமாயணம் சொல்லலாமான்னதும் ரொம்ப ட்ராஜிக்கா இல்லாம சந்தோஷமான பார்ட் மட்டும் சொல்லு'' என்று பதில் வரும்.


இவனுக்காக ராமாயணத்தில் கொஞ்சம் சைடு கதைகள் எல்லாம் இட்டுக் கட்டி சொல்வதும் உண்டு.


ஏனெனில் கேட்கிற கேள்விகள் சுலபத்தில் பதில் சொல்ல முடியாது.


உ-ம், ராமர் பரதன் கிட்ட பாதுகைகளைக் கொடுத்துட்டு வெறும் காலோட போனாரா.


பரதன் வேற ஏற்பாடு(another pair of sandals)


செய்திருக்கலாமே.


அப்போ சீதை,லக்ஷ்மணர் இவர்களும் செருப்பு போட்டுக்கலியா?
சாமி!!னு ஆயிடும்.


நான் என்ன, கம்பரா,வால்மீகியா என்று தேடிப் படித்த வகையும் இல்லை. எல்லாம் கேள்விஞானம்.


ஒரு நிமிஷம் இந்த கே ஆர் எஸ் போன் நம்பரை வாங்கி விஷ்ணு(பேரன்) கிட்ட கொடுத்து விட்டால் என்ன என்று தோன்றியது.


அவர்தான் எல்லாவற்றுக்கும் ரெடியாகப் பதில் தேடித் தருவார்.


போனால் போகட்டும் பாவம் கண்ணபிரான் ரவி என்று விட்டுவிட்டேன்.:)


அதற்குப் பதிலாகப் பாதுகா தேவியின் மகிமையைச் சொல்லலாம் என்று ஆரம்பித்தேன்.
''ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய பாதுகா சஹஸ்ரம் நூலில் இந்த அழகான கதை வருவதாகப் படித்தவர் ஒருவர் எனக்குச் சொன்ன விஷயத்தை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஸ்ரீராமன் சேதுக்கரையில் நிற்கிறான்.

சுக்ரீவன்,லக்ஷ்மணன் ,அனுமன்,அங்கதன் இன்னும் மற்ற வானர சேனைகளும்,கரடிப் படைகளும் சீறிவரூம் கடலைப் பார்த்து,ஏங்கி நிற்கின்றனர்.

எப்படிக் கடப்பது இந்தக் கடலை??


அனைவராலையும் தாண்டக் கூடிய தொலைவு இல்லையே என்று யோசித்தபோது,விபீஷணின்
ஆலோசனைப்படி உணவும் நீரும் அருந்தாமல், தர்ப்பசயனத்தில் இருக்கிறான் ஸ்ரீராமன்.
சமுத்திரராஜன் வரவில்லை. ராமபாணத்தைப் பூட்டி கடல் மேல் ஏவும்போதும்
கடல் பொங்கியதாம். ஆனால் வற்றவில்லை. பிறகு நடந்த ,அணைகட்டும் படலம்
ராவண வதை,ஸ்ரீராமபட்டாபிஷேகம் எல்லாம் தெரிந்த,தெளிந்த புராணம்.

கடல் வற்றாமல் போனதற்கு ஸ்ரீமன்நிகமாந்த மகாதேசிகன் தன் பாதுகாசஹஸ்ரத்தில்
புதிய அழகிய அர்த்தமுள்ள காரணம் கொடுக்கிறார்.
ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடக்கவில்லை. அவருடைய பாதுகைகள் அரியணையில் அமர்ந்தன. அவைகளுக்குப் பட்டாபிஷேகம் நடத்திவைத்தான் பரதன்.
பாதுகாதேவி பெருமான் சரணங்களிலிருந்து கிளம்பி சிம்மாசனத்தில் அமர்ந்தன.
அவர் கைகளைப் பற்றிய திருமகள் சீதையோ கானகத்தில் நடந்தாள்.
இங்கே நந்திகிராமத்தில் பாதுகாதேவிக்குத் தினம்
காலை மாலை என்று சகல புண்ணிய நதிகளிலிருந்தும் கொண்டுவந்த தீர்த்தங்களால்
அபிஷேக ஆராதனை செய்தான் பரதன்.
அவ்வளவு புண்ணிய தீர்த்தங்களும்
சர்யு நதியை அடைந்து சாகரத்தையும் சேர்ந்தனவாம்.
வழக்கமாகக்
கடலில் நதிகள் சங்கமிக்கும்போது கடலுக்கு ஏதும் மாற்றம் கிடையாதாம்.
ஆனால் ஸ்ரீராமபாதுகா தீர்த்தம் அப்படியில்லையே!!
அதற்குத் தனி மகிமை அல்லவா!!

அம்ருதம் போல இந்த ஸ்ரீபாதுகாதீர்த்தம் கடலில் கலந்ததும் கடல் மேலும் விருத்தியாக,
கடல் நீரும் பெருகி விட்டதாம்.
அத்தனையும் அக்ஷ்யமாக வளம் பெருக,
அதே கடல் நீரில் ராம்பாணம் வந்தும் கடல் நீர் வற்ற சந்தர்ப்பமே இல்லாமல்
போய்விட்டதாம்.
ஸ்ரீராமபாணம்,பாதுகா தேவியின் சரண் புகுந்து புறப்பட்ட தீர்த்தத்திடம்
வாக்குவாதம் செய்யாமல் திரும்பிவிட்டதாம்.
என்ன ஒரு கற்பனை.!!
அவ்வளவு பெரிய மகா மகானின் வாக்கியங்களைப் படித்தவுடன்
இதையே கதையாகச் சொல்லத் தோன்றியது.
ஸ்ரீராமா சரணம்.
ஸ்ரீராம பாதுகா சரணம்.
ஸ்ரீ பாதுகா தேவியே சரணம்.
இந்தக் கட்டுரைக்கு ஆதாரம் ஸ்ரீந்ருசிம்ஹப்ரியா தை மாத இதழ்.
நன்றி.
சொற்குற்றம் பொருள் குற்றம் பொறுக்கவேண்டும்.


18 comments:

துளசி கோபால் said...

//இவனுக்காக ராமாயணத்தில் கொஞ்சம் சைடு கதைகள் எல்லாம் இட்டுக் கட்டி சொல்வதும் உண்டு.//

நாச்சியார் மொழியில் ராமாயணம் ஆரம்பிங்கப்பா.
நல்லா இருக்கும். எல்லா இட்டுக்கட்டும் அதுலே இருக்கணும்:-))))

வல்லிசிம்ஹன் said...

நீள் பதிவாகிவிட்டது.
இருந்தாலும் இந்தப் பாட்டையும் சேர்க்க ஆசைப்படுகிறேன்.
சம்பூர்ணராமாயணம்(எண்டிஆர்,சிவாஜி,பத்மினி)படத்தில் வந்து ஸ்ரி.கே.வி.மஹாதேவன் இசை அமைத்த பாடல் என்று நினைக்கிறேன்.

பரதனும் சத்ருக்கினனும் பாடுவது போல் அமைந்திருக்கும்.
உருக்கமான பாடல். எத்தனையோ நினைவலைகளைக் கிளப்பிவிடும்...

இதோ பாடல்
பாதுகையே....பாதுகையே.
பாதுகையே நாட்டை ஆளும்.
என்னாளும் உன் பாதுகையே நாட்டை ஆளும்..
பூவுலகெல்லாம் போற்றிடும் தேவா
பூவுலகெல்லாம் போற்றிடும் தேவா
பாதுகையே நாட்டை ஆளும்.

நீதியும் நேர்மையும் நெறியோடு இன்பமும்
நிலவிடவே எங்கள் மனத்துயர் மாற்றவே....பாதுகையே

உனது தாமரைப் பதமே
உயிர்த்துணையாகவே
மனதினில் கொண்டே நாங்கள் வாழுவோம் ராமா....
பதினான்கு ஆண்டும் உந்தன் பாதுகை நாட்டை ஆளும்...
அறிவோடு சேவை செய்ய அருள்வாயே ராமாஅ....

தயாளனே சீதாராமா ஷாந்த மூர்தியே ராமா
சற்குணாதிபா ராமா சர்வரக்ஷகா ராமா!!!

தந்தை சொல்லைக் காக்கும் தனயனான ரா..மா..
தவசி போலக் கானிலே வாசம் செய்யும் ராமா
தத்வ வேத ஞானியும் பக்தி செய்யும் ராமா
சத்யஜோதி நீயே நித்யனான ராமா!!!
நித்யனான ராமா நித்யனான ராமா.
ராம் ராம் ராம் ராம் ராம் ராம்.

சிவாஜியும் டிஎம் எஸும்,
சீர்காழியும் பிழிந்தெடுத்துகொடுத்த நெகிழ்வான பாடல்.
கேட்க முடிந்தால் எத்தனைநன்றாக இருக்கும்:(

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி,
உண்மையாகவா:00))
செய்துடலாமா.

குட்டிகளுக்குச் சொல்றா மாதிரி பெரியவர்களுக்கும் சொல்லலாமா.
நன்றிப்பா.

மதுரையம்பதி said...

//ஏனெனில் கேட்கிற கேள்விகள் சுலபத்தில் பதில் சொல்ல முடியாது.
உ-ம், ராமர் பரதன் கிட்ட பாதுகைகளைக் கொடுத்துட்டு வெறும் காலோட போனாரா.//

உங்களை பேரன் துளைக்கிறான் என்னை பெண் துளைக்க ஆரம்பித்துவிட்டாள். இதனாலேயே கொஞ்ச நாள் முன்னாடி கே.ஆர்.எஸ் கிட்ட சொன்னேன், அவரும் சிறுவர்களுக்கான கதைகள்ன்னு ஒரு பதிவு தொடங்கலாமென்றார்.இன்னும் அவருக்கு நேரம் கிட்டவில்லை..ஏதோ கடப்பாறை, கல்பாறைன்னு பிசியா இருக்காரு.

பாச மலர் said...

செய்யுங்க வல்லி மேடம்..குழந்தைகளுக்குச் சொல்ல எங்களுக்கும் உறுதுணையாக இருக்கும். எங்களுக்கும் தெரியாத கதைகள் இருக்குமே.

இலவசக்கொத்தனார் said...

கதை கேளு கதை கேளு
ராமாயணக் கதை கேளு,
சுவையோடு சுகமாக
வல்லிம்மா கதை கேளு....

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.
கட்டாயம் குழந்தைகளுக்கு நம்ம கதைகள் தெரியணும்.
அதற்கு ரவிகண்ணபிரானை விட்டால் வேறு யார்?
நாங்கள் கேட்காத கேள்விகளை உங்க ஜெனரேஷன் கேட்டது. இப்போது உங்க பசங்க அதுக்கும் மேலேயே கேட்பார்கள்:))
சமாளியுங்கள்!

வல்லிசிம்ஹன் said...

வரணும் பாசமலர்.

எனக்குத் தெரிந்த கதைகளைச் சொல்லுகிறேன்.

குழந்தைகளுக்குப் பிடித்தால் சரி.

வல்லிசிம்ஹன் said...

ஹ்ம்ம். சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் லெவலுக்கு உசத்தியாச்சு.:)

நன்றி கொத்ஸ்.

ambi said...

அருமையான கதை. பாதுகைகள் நாட்டை ஆண்டதுக்கு இன்னொரு கதை உள்ளாது.

பாற்கடலில் பரந்தாமன் பள்ளி கொண்டிருந்தபோது, சங்கும், சக்கரமும், பாதுகையை கேலி செய்தனவாம், "பார்! நாங்கள் இறைவனின் திருகைகளை அலங்கரிக்கிறோம். ஆன்னல் நீயோ காலில் தான் உள்ளாய்"
இதை அறிந்த பகவான், இரண்டுக்கும் தக்க பாடம் புகட்ட எண்ணி, ராமவதாரத்தில் சங்கின் அம்சமாய் பிறந்த பரதன் தலையில் பாதுகைகளை சுமக்க செய்தாராம். சக்ர அம்சமாய் பிறந்த சத்ருக்கனை கவரி வீச செய்தாராம்.
கதையின் ஆதாரம் எல்லாம் எனக்கு தெரியாது. என் இளவல் கணேசன் தான் எனக்கு சொன்னான். :))

கீதா சாம்பசிவம் said...

//ஒரு நிமிஷம் இந்த கே ஆர் எஸ் போன் நம்பரை வாங்கி விஷ்ணு(பேரன்) கிட்ட கொடுத்து விட்டால் என்ன என்று தோன்றியது.//

சத்தியமான வார்த்தைகள். பலநேரம் எனக்கும் சில சந்தேகங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கலாமானு தான் தோணும்! :(

//அம்ருதம் போல இந்த ஸ்ரீபாதுகாதீர்த்தம் கடலில் கலந்ததும் கடல் மேலும் விருத்தியாக,
கடல் நீரும் பெருகி விட்டதாம்.
அத்தனையும் அக்ஷ்யமாக வளம் பெருக,
அதே கடல் நீரில் ராம்பாணம் வந்தும் கடல் நீர் வற்ற சந்தர்ப்பமே இல்லாமல்
போய்விட்டதாம்.
ஸ்ரீராமபாணம்,பாதுகா தேவியின் சரண் புகுந்து புறப்பட்ட தீர்த்தத்திடம்
வாக்குவாதம் செய்யாமல் திரும்பிவிட்டதாம்.
என்ன ஒரு கற்பனை.!!//

அருமையான கற்பனைதான், என்றாலும் நியாயமான ஒன்றே அல்லவா? அருமையாய் எழுதி இருக்கீங்க! இன்னும் தொடரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா.

அந்த பத்திரிகையில் வெளி வந்ததைப் படித்து விட்டு என்னிடம்
சொன்னவருக்குத் தான் நன்றி சொல்லணும்.

வல்லிசிம்ஹன் said...

அம்பி கற்பனைக் கதையாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது.
நமக்க்குத் தேவையான பொஒதனைகளும் புராணங்களிலிரும்துதானே கிடைக்கின்றன.


கணேசனுக்கு நன்றி.
இளவலாயிலிருந்து முதிய கருத்துகள் சொல்கிறார்.

தி. ரா. ச.(T.R.C.) said...

கதையின் ஆதாரம் எல்லாம் எனக்கு தெரியாது. என் இளவல் கணேசன் தான் எனக்கு சொன்னான். :))

கீதா மேடம் சொன்னது கரெக்ட்தான். கணேசந்தான் எல்லாத்துக்கும் உபயமா? பங்களூரிலும் பரதன் உண்டு போலும்.

வல்லியம்மா எதைப் பற்றி எழுதினாலும் handles at the soft handle.

வல்லிசிம்ஹன் said...

பாங்களூரு பரதன். நன்றாக இருக்கு;0

உண்மையிலேயே சிரஞ்சீவி கணேசனை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது.
பெற்றோர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
நன்றி தி.ரா.ச சார்.

குமரன் (Kumaran) said...

ஸ்வாமி தேசிகனின் பாதுகா சஹஸ்ரத்தில் வரும் இந்த திவ்யமான சுவையான செய்தியை இவ்வளவு நாள் கழித்து இன்று தான் படிக்க முடிந்தது வல்லியம்மா. அருமை. கணேசன் தம்பி சொன்ன கதையை நானும் கேட்டிருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

ஸ்வாமி தேசிகனின் பாதுகா சஹஸ்ரத்தில் வரும் இந்த திவ்யமான சுவையான செய்தியை இவ்வளவு நாள் கழித்து இன்று தான் படிக்க முடிந்தது வல்லியம்மா. அருமை. கணேசன் தம்பி சொன்ன கதையை நானும் கேட்டிருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமரன்,
என்னை என் பதிவுகளை மீண்டும் பார்க்க வைத்ததற்கு நன்றி.
ஈதில நம்ப முடியாத இன்னோரு ஆச்சர்யம், எங்க அம்மா எனக்காக வைத்திருந்த ஸ்ரீரங்கனாத திவ்ய மணி பாதுகைகள் பற்றிய புத்தகம்.
அம்மா நினைவும் உங்கள்ள் பின்னூட்டமும் ஒன்றாய் வந்து பாதுகா தேவியைச் சேவிக்க வைத்தன, நன்றிம்மா.