Thursday, December 30, 2010

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அனைவருக்கும்  இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் .


மனம் நிறைந்த மகிழ்ச்சியும்,
உடல் நிறைந்த ஆரோக்கியமும்,
இனிய நட்புகளும் சூழ,
உற்றார் உறவினரோடு 
2011  சிறக்க எங்கள் அனைவரின்   இதயம் கனிந்த வாழ்த்துகள்.
ரேவதி மற்றும் நரசிம்ஹன் குடும்பம்.

Friday, December 24, 2010

மறந்த சங்கதிகள்

இலந்தைப் பழமும்  கொடுக்காப்புளி மரமும்
அமீரகம்  போயிருந்தபோது   பார்த்த கொடுக்காப்புளி  மரத்தைப் பார்க்கச்  சந்தர்ப்பம்
கிடைத்தது.  கீழே கிடந்த பழுப்புத் தோலும் சிவந்த பழமுமாகக் கிடந்த கொடுக்காப்புளி  

பழங்களைப் பார்த்த போது தோன்றிய  நினைவுகள்  பல.
பள்ளிக்கூட வாயிலில் விற்கும் இலந்தப் பழம், ஐஸ் குச்சி,கமர்கட்,கடலை  மிட்டாய்,எள்ளுப் புண்ணாக்கு மிட்டாய்  எல்லாம்  நினைவில் நடனமாடின.

கொடுக்காப்புளிக்காவது அம்மா ஓரணா கொடுப்பார்.  மற்றவை வாங்கவே கூடாது:)
என்ஜிரண சக்தியின்  மேல் அத்தனை  நம்பிக்கை அவர்களுக்கு.


தங்கமணியும், சீதாலக்ஷ்மியும் வாங்கும் நெல்லிக்காயும்,இலந்தம்பழமும் 
பண்டமாற்று  முறையில் என் தோள் பையில் வந்து சேரும்:)
அதற்கு நான் மாற்றாகக் கொடுப்பது, அம்மா   இடைவேளை போது சாப்பிடக் கொடுக்கும் தட்டையும், முறுக்கும்  தான்.

அந்தத் தோழிகளைத்தான்   சிநேகத்தோடு   நினைக்கிறேன். எந்தக் குடும்பத்தைக் கட்டி மேய்த்துக் கொண்டிருக்கிறார்களோ:)
என் பெண்ணிடம் இந்தக் கண்டிஷன்   எல்லாம் நான் போடவில்லை.
உனக்கு  என்ன விருப்பமோ அதை  , சுத்தமா   இருக்கா என்று    பார்த்துவிட்டு வாங்கிக் கொள் என்றும் சொல்லிவிடுவேன்.


  பிள்ளைகள் இருவருக்கும்  இந்த ஆசை வந்ததில்லை. அது என்ன  விஷயம் என்று தெரியாது:)நிறைய விளையாடத்தான் ஆசை காட்டுவார்கள்.
மாடவீதியில் வள்ளிக்கிழங்கும்,நெல்லியும் மாங்காய் இஞ்சியும் கொட்டிக் கிடக்கிறது.

ஆசைக்கு   ஆறே  எண்ணம்  நெல்லிக்காய் வாங்கி வந்தேன்.

இதெல்லாம் எழுத   ,கருத்து கிடைத்த இடம் ஒரு பள்ளிக்கூட வாசல். அரைப் பரீட்சை முடிந்து பிள்ளைகள் களிப்புடன் ஓடி வந்த    வேகம்.
 கிளிகளும்,குயில்களும் ஒன்று சேரக் கூடிக் குலவுவது போல   ஒரு கலவையான ஒலி.
சந்தோஷத்தின் பிரதிபலிப்பு.

அனைவருக்கும்  இனிய க்றிஸ்துமஸ் திரு நாள்   நல் வாழ்த்துகள். 


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, December 22, 2010

சின்ன அரும்பு மலரும்


  நீ இருக்க.தாத்தா இருக்கார். இந்த வீடும் ஸ்பெஷல் வீடு.!
எனக்கு ஓட்ட  குட்டி கார் இருக்கு.
விளையாட   டாய்ஸ் இருக்கு.
எனக்கு இந்தியா   ரொம்பப் பிடிக்கும். வார்ம்  ஆக இருக்கு.இனிமேல்  நான் இங்கயே  இருக்கேன் பாட்டி.                                                      


எனக்கு மனம் நிறைந்து விட்டது......
இதைவிட

வேற சொர்க்கம் உண்டா.?
Thursday, December 16, 2010

மார்கழி வந்தது.துதி பாடும் மாதமும் வந்தது

மார்கழி மாதத்தின்   தனித்துவம் மனம் விழிப்பது. நேற்று வரை  அதிகாலை என்றால் ஐந்தரை மணி.

இந்த உடலுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது.

இன்றோ நான்கு மணிக்கு விழிப்பு வந்தாச்சு.கண்ணனையும் கோதையையும் நினைக்க 
  மனதூசு அகற்றி, தீப மங்கள ஜோதியில் லயித்து அனைவரும் இனிதே  வாழப் பிரார்த்திக்கலாம்
.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, December 13, 2010

விடுமுறையில் இருக்கிறேன்:)

டிசம்பர் மாதம் பிறந்தது. வேடந்தாங்கலில்   பறவைகள் கூடின.
பாட்டும் பரதமும்     , காண்ட்டீனுமாக அலையும்   மக்கள்.

அவசியத்துக்காகவும், ஆதரவுக்காக்கவும் சில விருந்தாளிகள் வரவு.
இவையெல்லாம் செய்திகள்.

இவையெல்லாம்  நம்ம வீட்டுக்கும் பொருந்தும்.
முக்கியப்பட்டவங்க ஒரு மூணு வாரம் தங்குவதற்கு வரோம்
அப்படீனு சொன்னதும்
நாம   தட்ட ஆரம்பித்த தூசி  வெளில  போகிற மாதிரி போயிட்டுத் திரும்ப வந்து உட்கார்ந்து கொள்ளுகிறது.

இப்பதான் கொசுக்களும் சொந்தம் கொண்டாட ஆரம்பிக்கின்றன. என்ன இருந்தாலும் சென்னை ரத்தத்துக்கும், சிகாகோ ரத்தத்துக்கும் வித்யாசம் கண்டுபிடிக்க வேண்டுமே:)

பாதி படித்த  புத்தகங்களை எல்லாம்  ஒரு பெரிய பையில் போட்டு   கட்டிலுக்கு அடியில் தள்ளியாச்சு.

நாலு வாரம் கழித்துத் தேடும்போது மறந்து தொலைக்கும்.

வரவங்களுக்கு   கெமிக்கல்ஸ் நெடி ஆகாது.
அதனால இரண்டு நாட்கள் முன்னாடியே பேகான்  ஸ்ப்ரே  அடித்து
அவங்க தங்குமிடத்தைச் சுத்தம் செய்தாச்சு.ஓடாத ட்ரெட்மில்லை ஓரம் தள்ளி  அதன் மேல் பாய் படுக்கைகளைச் சுத்தி வச்சாசு.
பேரன் அது மேல ஏறி தேகப் பயிற்சி செய்ய ஆரம்பித்தால்...அந்தப் பயம்தான்.!!
தாஜ்மகால்   பார்க்க அழைச்சுண்டு போறியா பாட்டி?
 நம்ம ஊர்லியே நிறைய இடங்கள் இரூக்குப் பா. அதைப் பார்க்கலாம்.
ஓகே.


இஸ் இட் ஸ்டில்   ரெயினிங் பாட்டி.?
சின்னவனின் ஆசை. தண்ணீரில் ஆட.


 இல்லை ராஜா.
ஒ:)
அதனால இன்னும் மூணு வாரத்துக்கு உங்க எல்லாருக்கும் என்  கவிதை,கதை,கட்டுரை எல்லாவற்றிலிருந்தும் விடுதலை கொடுக்கிறேன்.

எஞ்சாய்  மக்களே:)                                                               


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, December 10, 2010

மீண்ட காட்சி

வாழ்க்கைக்கு  இரு கரைகள்.
மேடும் உண்டு
பள்ளமும் உண்டு
இன்று
தொலைக்காட்சியில்  ஒரு  அதிர்வு
வேறு நினைவை மீட்டது.
வேறு குதிரைகள்
வேறு  மக்கள்
வலி தாங்காத முகங்கள்
 கொதித்து அழும் உள்ளங்கள்
தாக்கப்பட்ட  அரசு
குதிரைக் காலில் மாட்டிய வீரன்
எங்கேயோ பார்த்திருக்கோமெ
ஓ,ஜாலியன் வாலா பாக்.!!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, December 09, 2010

காலையில் தினமும்

காலையில் தினமும் கண்விழித்தால்
கண்ணில் படும் இறைவனிடம்
வேண்டுவது என்ன.
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி.
இன்றாவது ஒரு லீக், ஒரு ஸ்காம்,
இல்லாமல் பத்திரிகை படிக்கவிடு

ஆண்டவன் சொன்னான்
பத்திரிகை  வேண்டாம்
தொலைக்காட்சி வேண்டாம்
சும்மா இருத்தலே சுகம்.
காலங்கள் மாறினாலும்
 காட்சிகள் மாறாது.

ஒவ்வொரு நாட்டுக்கும்
ஒவ்வொரு அழுக்கு.
ஒவ்வொரு நாட்டுக்கும்
ஒவ்வொரு அழகு.

டிஸ்கி.
இது கவிதை இல்லை.
வெண்பா கண்டிப்பா இல்லை.
புதுக் கவிதை இல்லை.
மரபும் நமக்குப் பழக்கம் இல்லை.
இது வெறும் வயிற்றெரிச்சல்.
வெறும் கையாலாகாத்தனம்!
**********************************

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

Wednesday, December 08, 2010

முதன் முதலாக....பள்ளிக்கூட அனுபவங்கள்


ஸ்விஸ் பேத்தி
மாண்டிசோரி போக ஆரம்பித்துக் கிட்டத்தட்ட  மாதங்கள் ஆகப் போகிறது.
தம்பி பிறந்ததும் , அம்மாவிடம் பெண்ணுக்குப் பாசம் அதிகரித்துவிட்டது.
நானும் உதவிக்கு இருக்கிறேனே  என்ற நல்ல எண்ணம்தான்.:)

அக்காவாகத் தன் கடமைகளைச் சரியாகச் செய்வதில் அவ்வளவு ஈடுபாடு.!!
அந்தக் குட்டிப் பாப்பாவையும் பார்க்கணுமே.அக்கா குரல் கேட்கிற பக்கமெல்லாம் தலையைத் திருப்புகிறான்.

ஏதோ ஒரு வெள்ளிக்கிழமை , அவளுக்குப் பள்ளி விடுமுறை. நான் மகனிடம்
என்பா  அது ஸ்கூல் போகலியேன்னு    கவலைப் படறதா என்றால் , அவன் பலமாகச் சிரிக்கிறான்.

அது  ,படுக்கையை விட்டே எழுந்திருக்கவில்லை ,
எங்கே எழுந்தால்   ஸ்கூலுக்குப் போகச் சொல்லிவிடுவார்களோ என்று அந்த டாபிக்கையே எடுக்க மாட்டாள்.
இத்தனைக்கும் பள்ளியில் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கு கொள்வதில் அத்தனை மகிழ்ச்சி.  அவ்வப்போ ஜெர்மனில் வேறு பாடி அசத்துவாள்.

அங்கே  கதை அப்படியென்றால் அமெரிக்காவில், மூன்று நாட்கள் பள்ளி அழைத்துப் போவதற்கே,
ஜகஜ்ஜாலம் செய்ய வேண்டி இருக்கிறதாம்.
நாலு வயசும் பூர்த்தியாகிவிட்டது.

பள்ளிக்குப் போகவே பயமாக இருக்கிற்தாம் அந்தப் பேரனுக்கு. ஏகப்பட்ட வேலைகள்   தருகிறார்களாம். ஐய்யாவிற்கு   யாரும் சொல்லிச் செய்வது என்பது ஏற்புடையது கிடையாது. :)
ஏண்டா  இப்படிச் சொல்றே என்று கேட்டால் நீ தனியே  இருப்பியேம்மா'' என்று கண்ணைக் கசக்குகிறானாம்:)
இதே போல இரண்டு மாதங்கள் ஓடி விட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்னால் பிறந்த நாளுக்கு டோநட்ஸ் எடுத்துக் கொண்டு போய்த் தன் கூடப் படிக்கும் குழந்தைகளுடன்
பகிர்ந்து கொண்டான்.
தன் பெற்றோரும் வந்தததால் அன்று பள்ளிக்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லையாம்.

அங்கெ  அவனது   மிஸ் சூசன்,எப்போதும்போல  அமெரிக்கன்  ப்ளேட்ஜ் ஏதோ ஒன்று இருக்காம். அதைச் சொல்லிவிட்டுப் பள்ளி துவங்குவார்களாம்.
அதற்கு எல்லோரும் தங்கள் தங்கள் இதயத்தில்  அதாவது சட்டைக்கு மேலே கையை வைத்துச்   சொல்லணுமாம்.
இவன் தன்னிடத்தில் நின்று கொண்டு முகத்தில்  சீரியஸாக வைத்துக் கொண்டு ,அப்பா அம்மாவைத் தேடினானாம்.
அப்பா கையில் வீடியொ வைத்து படம் எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தானாம்.
உடனே  அம்மா கண்களை நேராகப் பார்த்து,அப்பா பக்கம் கை காட்டி, அப்பா  தன் கையை நெஞ்சின் மேல் வைத்துக் கொள்ளச் சொல்லு என்று  சைகை
  செய்யறானாம்:)

பிழைச்சுப்பாங்கப் பா. கடவுள் எல்லோர் பக்கமும் இருந்து காக்கட்டும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Sunday, December 05, 2010

காலைப் பொழுதில் கார்த்திகை மாதம்

மழையில்  குடை  அழகு:)
காலை  5.30 மணி அளவில் வாசல் கதவருகில்
ஒரு மழைக் காலை 5/11/2010
ச்விட்சர்லாண்ட் காலை 4/12/2010
சிகாகோ  காலை 4/12/2010
சிகாகோ  காலை 4/11/2010புகைப்படப் போட்டியில் தலைப்பு அதிகாலை என்று  தந்தார்கள். தீபாவளிப் பரிசாக ஒரு  புது  காமிரா வேறு கிடைத்தது. கேட்கணுமா.தேன் குடித்த நரிக்கு கையில் வடையும் கிடைத்தால் எப்படி:) அதுதான் நிறைய படங்கள் எடுப்பது என்று தீர்மானம். போட்டிக்கு இல்லாவிட்டாலும் அதிகாலையில் போட்டோ எடுப்பதும் அருமையாக இருக்கிறது. நல்ல அனுபவம். கண் கொடுத்த இறைவனுக்கு நன்றி.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Thursday, December 02, 2010

24/7

கணினி     கட்டாய ஒய்வு எடுத்துக் கொண்டது.
தோழி கீதாவின்  உதவியால்  ஒரு நல்ல கணினி  நுட்பம் தெரிந்த  ஒருவரின்
உதவி கிடைத்து இன்றுதான் நானும் கணினியும் சமநிலைக்கு வந்தோம்:)
நன்றி கீதா.
மறு பிறவி எடுத்த மகிழ்ச்சி நிலைக்க இறைவனை வேண்டுகிறேன்!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, November 22, 2010

நிலவும் வானும் நிலமும் கதிரும்..3

அந்தக் கதை பரத்தின் அம்மாவைப் பொறுத்த வரை கண்டிப்பாக ஒரு திருப்புமுனை.
தினசரி சண்டைகள்,பட்டினிகள்,வேலை இழப்பு, 

 உறவினர்கள் வந்தால்
அவமானம் எல்லாவற்றையும் தாண்டுவதற்கான   பொறுமையை அவள் பயிற்சி செய்து வந்தாள்.  குழந்தை பரத்தின் நிலைமைதான்  அவளை மிகவும் வருத்தியது.
எப்பவும் சந்தோஷமாக விளையாடும் அப்பாவை  கிட்டத்தட்ட   மறந்தே விட்டான்.
அப்பா ஒரு பயம் தரக் கூடிய  உருவமாகத் தான் தெரிந்தார்.
மாமாவீட்டில் போய் இருக்கவும் அவன் கவுரவம் இடம்
கொடுக்கவில்லை.
.
அம்மா சொல்லித்தந்த கந்தசஷ்டிக் கவசம்
சொல்லும்போது கூட   மது வாசனை வந்தால் அவனால் தியானம் செய்ய முடியாமல் போகும்.
சிநேகிதர்களை  வீட்டுக்கு அழைத்து வரவும் தயக்கம்.
அப்பா எந்த நிலைமையில் இருப்பாரோ என்று. முடிந்த வரை அவன் அவர்கள் வீட்டுக்கு விளையாடப்  போய்விடுவான்.
இப்படியே பதினைந்து வரை கடந்துவிட்டான்.
அந்தக் சமயத்தில்தான் பரத்தின் அம்மா  சென்னையில்
நடக்கும்  மறுவாழ்வு மையத்தைப் பற்றிக் கேள்விப் பட்டு
அங்கு செல்ல  ஆசைப் பட்டாள். கணவன் ஒத்துக் கொள்ள வேண்டுமே.!
இன்னும் அவன் தான் ஒரு ஆல்கஹாலிக் என்பதையே ஒத்துக் கொள்ளவில்லை.
நான் என்ன  பாதையில் விழுந்து கிடக்கிறேனா.
வீட்டிலேயே என்  ஏஜென்சி நடத்துகிறேன்.
நஷ்டமாக இருந்தாலும்,,,,, நாமெல்லாம் சாப்பிட்டுக் கொண்டுதானே
இருக்கிறோம்.
இதெல்லாம் அவனது வாதம்.

அந்தச்  சாப்பாடு எப்படியெல்லாம் வருகிறது என்று பரத் அம்மா மட்டுமே
அறிந்த உண்மை.
 தன் அப்பாவுக்கு எழுதிப்போட்டுக் சில நாட்கள்
பணம் வரும். சில நாட்கள் தம்பியின் தயவில்.
சிலநாட்கள் ,
திரு கிறிஸ்டோபரின்    வண்டியில் வந்து இறங்கும்.
எத்தனை நாட்களுக்கு இது சரிப்படும் என்று நினைத்த
பரத்தின் அம்மா ,அவனது பத்தாம் வகுப்பு முடிந்ததும்,
தன் கணவனை அணுகி , எனக்காக ஒரு தடவை சென்னை வாருங்கள் .
என்னதான் சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
துணைக்கு என் தம்பி வருவான்.
என் மாமாவின் வீட்டுக்குப் போய் இறங்கலாம்.
இரண்டு மூன்று நாளைக்காவது நீங்க  கொஞ்சம்   கண்ட்ரோலில்   இருக்கணும்.

இது நடக்கவில்லையானால் உங்களை சைக்கிட்டியாரிஸ்ட் கிட்ட தான் அழைத்துப் போக வேண்டும்.
அவரிடம் பேசிவிட்டேன்.
மூளைக்குப் போகும் நரம்பு மண்டலத்தில் சின்ன ஆப்பரேஷன் செய்தால்
சரியாகிவிடும். சைட்  எபெக்ட்ஸ் எல்லாம் இருக்குச் சந்தர்ப்பம் உண்டு என்று
சொன்னார். மனசைத் திடமாக்கி இந்த விவரங்களை   அவள் சொல்லும்போது 
சில்லென்ற பயம் புகுந்தது பரத்தின் அப்பாவுக்கு.
இல்லை இந்த கவுன்சிலிங் சென்டருக்கு  வருகிறேன்.
இரண்டு நாள் ! நாம் திரும்பி விடவேண்டும்.!

குலதெய்வம் முருகனை  வேண்டி அவர்களது சென்னைப் பயணம் ஆரம்பித்தது.
சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற முடியாத
கணவனை, அவனது உளறலையும், பரத்தின் கண்ணீரையும் சகித்துக் கொண்டு சென்னை வந்து இறங்கினாள் பரத்தின் அம்மா.
மாமா வீடு வருவதற்கு முன்பே வழியில் தனக்கு வேண்டிய மதுவை வாங்கினவனைக் கண்டு மனம் தளராமல்,
மாமா வீட்டுக்கு வந்தார்கள்.
அதிசயமாக  மாமா கண்டு கொள்ளவில்லை. அவர் மிலிட்டரியில் இருந்தவர்.
இது போல என்ன என்ன பார்த்திருப்பாரோ.!
அவருடன் ஒரு சிநேகிதரும் இருந்தார்.
பரத்தை உள்ளே போகச் சொல்லிவிட்டு இவர்களை நிறுத்தினார்.
அவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டுக் கணவன் நின்றதுதான் பரத் அம்மாவுக்கு அதிசயமாக இருந்தது.
எதோ பாரம் இறங்கியது போல உணர்ந்தாள்.
கட்டுக்கு அடங்காமல் வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு மாமியைப் பார்க்க
உள்ளே சென்றாள்.  மாமி அவளை ஆசவாசப் படுத்திக் கவலைப் படாதம்மா
மாமாவோட சிநேகிதரும் 
குடிப் பழக்கத்திலிருந்து  மீண்டவர் தான். அவருக்கு எப்படிப் பேசுவது,அழைத்துப் போவது எல்லாம் தெரியும்.
குளித்துவிட்டு வண்டி ஏறுங்கள் . மியூசிக் அகாடமி பக்கத்தில் சாந்திரங்கனாதன் என்ற பெண்   இந்த மாதிரி சென்டரை ஆரம்பித்திருக்கிறாள்.
அவள் சொல்கிறபடி செய்யுங்கள் என்று நால்வரையும் வீடு வண்டியிலயே அனுப்பி வைத்தாள்.
இது ஆரம்பம்தான்.
முதலில் கீழ்ப்பாக்கத்தில் இருந்த தனியார் மருத்துமனையில்
உடலில் இருந்த  டாக்சின்ஸ்   எல்லாம் வெளியேற்ற ஏற்பாடு நடந்தது.
அது முடிந்து டாக்டர் ஒருவரின் தெரபி
ஆரம்பித்தது. அங்க இருந்த 6 நாட்களும்  குழந்தை பரத்
பெற்றோர் இருவருக்கும் ஒரு தூக்க முடியாத
டிபன் காரியரில் சாப்பாடு கொண்டு வருவான். அதுவும் இரண்டு
பஸ்கள் ஏறி இறங்க வேண்டும்.
பரத் அம்மாவின் வேதனை சொல்லி முடியாது. பெற்றது ஒரு பிள்ளை. அதற்கு இப்படி ஒரு நிலைமை வந்ததே.
பதினைந்து வயது  என்றாலும்  போஷாக்குப் போதாதால் 
நறுங்கலாக இருப்பான். கைகள்  சிவக்க வெய்யிலில் அவன் வரும்
கோலம்  அம்மாவை இன்னும் வருத்தும்.
அம்மா அப்பாவுக்குக் சரியாகிடுமாம்மா
என்று கேட்பான்.
இதற்கப்புறம்   நான்கைந்து  தடவை சிகித்சை எடுத்துக் கொண்டபிறகுதான் ஒரு தெளிவிற்கு வந்தார் அப்பா.  வயது  நாற்பத்தைந்து.
முருகன்  கண் திறந்தான்..
அரபு நாடுகள்   ஒன்றில்  பைனான்ஸ்  கம்பனியில் வேலை கிடைத்தது.
அதிசயத்திலும் அதிசயம் அதற்குப் பிறகு பரத்திற்கு ஒரு தங்கையும் பிறந்தாள்.!

பரத்தும் வெளிநாடு  போய்ப  படித்துவந்து சென்னை தனியார் 
அலுவலகத்தில்  வேலைக்கு அமர்ந்தான். 
முப்பது வயது இருக்கும்போது   தன்னுடன் வேலை பார்த்த பெண்ணையே  
திருமணம் செய்ய ஆசைப்பட்டான்.
பரத்தின் மாமா  எல்லாம் விசாரித்து தலை அசைத்தார்.
மருமகளும் நல்லவளாக அமைந்தாள்.

பரத் தன் மாமா  மாமியைத் தன்னோட வரவழைத்துக் கொண்டான்.
இவ்வளவு பெரிய  கதையை , இந்தப் பரத் என்னும் குழந்தை தன் அப்பாவின் அன்பை எப்படி  தொலைத்தது. மீண்டும் கிடைக்கப் பெற்றாலும்  ஒட்டாமல் போனது   எல்லாம் உங்களுக்கும் எனக்கும் புரியும்.பரத்தின் மனைவிக்குச் சொல்வது அவ்வளவு எளிதில்லையே .தனக்குக் கிடைக்காத சலுகையும் செல்லமும் பரிவும்,தன் மகனிடம் காண்பிக்கிறான். அவ்வளவுதான். இன்னொரு குழந்தையும் பிறந்தால் ,  இதுவும் மாறலாம்:)
 தொடரும்  
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, November 20, 2010

நிலவும் வானும் நிலமும் கதிரும் பயிரும்..2


நிலவும் வானும் நிலமும் பயிரும்


++++++++++++++++++++++++++++++++++++++++

10:42 AM 11/20/2010

இந்தக் கதை-சம்பவத்துக்கு அடிநாதம் ஒரு குடிப் பழக்கம் கொண்டிருந்த தந்தை.அவர் பெயரெல்லாம் அவசியமில்லை. பாதிக்கப் பட்டவன் பரத். அவனுக்கு இப்போது தந்தையும்


அன்னையுமாக இருப்பவர்கள் அவனது மாமாவும் மாமியும் தான்.

அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை.தூத்துக்குடியில் குடும்பம் நடத்திவந்த பரத்தின்

பெற்றோர்கள்,நல்லதொரு கம்பெனியின் ஆதரவில் ஆநந்த

வாழ்க்கை நடத்திவரும் போது நடுவில் வந்த வழக்கம்

இந்த மது அருந்துவது.

தூத்துக்குடியில் ஒரு செல்வந்தர் பரத்தின்

அப்பா அலுவலகத்தின் வாடிக்கையாளர்.எப்பவும் எந்த விசேஷமாக இருந்தாலும் அவர்கள் வீட்டிலிருந்து வண்டி வந்து

இவர்களை அழைத்துப் போகும்.

வேற்று மதத்தினராக இருந்தாலும் வித்தியாசமெல்லாம் கிடையாது.

அவர்கள் வீட்டிலும் குழந்தைகள் இருந்தன.இன்னும் இரண்டு மூன்று தோழர்கள் சேர்ந்து கொண்டால் நேரம் போவது தெரியாது.

சீட்டுக்கட்டும்,மதுவும், மற்ற சகலகொறிக்கும் பண்ட்ங்களும் சேர்ந்து கொண்டு

முதலில் சந்தோஷமாகத் தான் கழிந்தது.பரத்தின் அம்மா சைவம் என்பதால் அவளுக்குத் தோசையும்,ஊறுகாயும்

தயிர்சாதமும் அழகாக அலங்கரிக்கப் பட்ட தட்டில் வந்துவிடும்.

அந்த வாடிக்கையாளர்...க்ரிஸ்டோஃபர், வந்து பரத்தின் அம்மா சரியாகச் சாப்பிடுகிறாளா


என்று பார்த்துவிட்டுத் தான் போவார்,.

நல்ல மனம்.அவரது மனைவி குணவதி அம்மாளும் அப்படியே. அவளும் வயதில் பெரியவள் தான்.

ஆனால் அசராமல் கணவரின் விருந்தினர்களை முகம் சுளிக்காமல்

கவனிப்பாள்.

ஒரு இரு வருடம் இதுபோல் ஓடியது.

பரத்தின் தந்தைக்குத் திருநெல்வேலிக்கு மாற்றல்.இதற்குள் க்ரிஸ்டோபருடனான நட்பு மிகவும் வலுத்துவிட்டது. உண்மையிலியே

மிக்க அன்பு பூண்ட நண்பர்கள் ஆனார்கள்.

ஒரே ஒரு வித்தியாசம்.

பரத்தின் தந்தைக்கு மது இல்லாமல் ஒரு நாளாவது இருக்க முடியவில்லை.சம்பளப் பணத்தில் அழகாக ஓடிக் கொண்டிருந்த

குடும்பம் கடன் தொல்லைக்குள் மாட்டியது.

திடீரென முன்பின் சொல்லாமல் வந்த க்ரிஸ்டோஃபர் நண்பனின்

நிலை பார்த்து அதிர்ந்து போனார்.

என்னம்மா மகளே, எனக்கு ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா.

நான் அந்நியமாகிவிட்டேனா.'என்று வருத்தப் பட்டவர்

பரத்தின் அப்பாவைக் கையோடு

தன் ஊருக்கு அழைத்துப் போனார்.

அங்கு இரண்டு மூன்று நாட்கள் இருக்க வைத்து,

அவரைத் தெளிய வைத்து

மீண்டும் திநெல்வேலிக்கு அழைத்து வந்துவிட்டார்.அங்கிருந்தே பரத்தின்(அப்பாவின் பெற்றொர்) தாத்தா பாட்டிக்குத்

திருச்சிக்குத் தொலைபேசியில் விஷயத்தைச் சொல்லி

உடனே புறப்பட்டு வருமாறு அழைத்தார்.

அவர்களோ இது போன்ற விஷயங்களில் தெளிவில்லாதவர்கள்.

தானாகச் சரியாகிவிடும். தங்கள் மகன்

அப்படிப்பட்டவன் அல்ல என்பதில் உறுதியாக இருந்தார்கள்.அந்த நிலைமையில் தான் பரத்தின் அப்பாவுக்கு

அளவுக்கு மீறின போதையில் கார் ஓட்டும்போது,

ஒரு மரத்தில் மோதின விபத்து நிகழ்ந்தது.குழந்தை பரத்திற்குப் பன்னிரண்டு வயது.

நல்லவேளையாக அடியேதும் இல்லாமல் அவன் தந்தை தப்பித்தாலும்

அவரைச் சரிசெய்து வீட்டுக்கு அழைத்து வர

இப்போது இருக்கும் மாமா ரகுநாதன் தான் உதவினார்.

போலீஸ் கேஸ் ஆகாமல் பார்த்துக் கொண்டுஅதற்கு மேற்பட்ட உதவிகளையும் செய்து கொடுத்துவிட்டு

பக்கத்தில் இருக்கும் திருச்செந்தூருக்குத் திரும்பினார்.

அவர் வேலை,சொந்த வீடு,மனைவி மகள்,மகன்

எல்லோரும் அங்கேதான் இருந்தார்கள்.திருப்புகழ்,முருகன்,கோவில் இதுதான் அவருக்கு எல்லாம்.

தங்கை கஷ்டப்படுவதை அவரால் சகிக்க முடியவில்லை.

எங்களோடு வந்துடுமா,நான் பார்த்துக் கொள்கிறேன்

என்று எத்தனையோ சொல்லிப் பார்த்தார்.பரத்தோட அம்மாவுக்குத் தன் கணவனின் மேலிருந்த அன்போ

கரிசனமோ குறைந்ததே இல்லை.அந்த நிலைமையில் தான் சிவசங்கரி அம்மா எழுதின

ஒரு மனிதனின் கதை'' படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.


  எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, November 18, 2010

நிலவும்வானும் நிலமும் கதிரும்......1


'எப்ப பார்த்தாலும் அப்பா அப்பா!!''


நான் மனுஷியாத்தெரியலையா உனக்கு?

பேரனைக் கடிந்துகொண்ட மருமகள் சுதாவைக்

கவலையோடு பார்த்தாள் மாலதி.

'விட்டுடும்மா அவனை. மாதத்துக்கு 20 நாள் பரத்

ஊர்ல இருக்கிறதில்ல. குழந்தைக்கு அப்பா மேல

ஏக்கம் வரத்தானே செய்யும்..'

இல்ல அத்தை இதுக்கு அவரும் ஒரு காரணம்.

எப்பவும் இவனோட விளையாடறது, வெளில

அழைத்துப் போவதுன்னு இங்க இருக்கிற

நாட்களைச் செலவழிக்கிறார்.என்னிடம் கூட  நிறைய நேரம்  எடுத்துப் பேசறதில்ல

அதுதான் அவர் ஊருக்குக் கிளம்பும்போது, இவனைச்

சமாதானத்துக்குக் கொண்டு வரது படு சிரமமா இருக்கு.

அலுப்புமா... நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன்,

இவர் கொஞ்சம் அதீதமாப் பிள்ளையைக் கொண்டாடிக்கிறார்.பாட்டியையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்த

ரஞ்சன் ஓடித் தன் அறைக்குப் போனான்.

நான் ஸ்கூலுக்குப் போமாட்டேன்.

அப்பா வந்ததான் போவேன்.

அழுகைக் குரலைக் கேட்டதும்,மாலதியின் மனம் இளகியது.ஐந்து வயதுக் குழந்தையை இப்படிக் கணவனும் மனைவியும்

பங்கு போட வேண்டாமே என்ற வருத்தம் மேலிட்டது.

தன் மகனை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

அதை மருமகளை உணர வைக்கப் பழைய கதையை எல்லாம்

அலச வேணுமே என்ற மன அழுத்தம் தோன்றியது.மெரினாவுக்கு நடக்கப் போயிருக்கும் கணவர் வரும்

வரைப் பேரனோடு செஸ் விளையாடி அவன் மனத்தை மாற்றினாள்.

அவருடன் பேசி இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்

குழந்தை கஷ்டப் படக் கூடாது இப்படி ஓடியது அவள்

சிந்தனை.சொல்லிவைத்தாற்போல் கதவு திறக்கும் சத்தம்

கேட்டதும் ரஞ்சன் தாத்தாவைக் கட்டிக் கொள்ள

ஓடிவிட்டான்.

என்ன ராஜா, என்ன செய்யறே முகமெல்லாம் சிவந்திருக்கு

என்றபடி அவனை அணைத்துக் கொண்டார் ரகுநாதன்.அவருக்குப் பருக பழரசத்தைக் கொண்டு வந்த மாலதி

'நீங்கள் வெளியே போகும் போது குழந்தையை அழைத்துப் போகணும்.

சின்னதுதானே,போரடிக்கிறது அவனுக்கு.

எங்க அவன் கொண்டு வர வீட்டுப்பாடம் முடிஞ்சத்தானே


அவன் அம்மா வெளியிலியே விடுவாள்,நம்ம காலம் மாதிரியா

என்று சிரித்தவண்ணம் சாயந்திரவேளை விளக்கு

வழிபாடு செய்யச் சித்தமானார் ரகு. நிரஞ்சனா!

நீயும் தாத்தாவோட ஸ்வாமி நமஸ்காரம்

செய்யறியா என்ற வண்ணம் அவனை

அழைத்துப்போனார்.

கொஞ்சம் அமைதி கண்டவனாக ,ரஞ்சனும்

சென்றான். மாமியாரும் மருமகளும் கொஞ்சம்

ஓய்வாக அமர்ந்து இரவு சமையலை முடித்து

தாத்தாவும் பேரனும் வந்ததும் சாப்பிடத் தயார் ஆனார்கள்.

மீண்டும் ஆரம்பிக்கப் போன மருமகளைக்

கண் காட்டி நிறுத்தினாள் மாலதி. வயிறு ரொம்பக்

குழந்தை சாப்பிடட்டும்,நானும் அப்பாவும் உன் கிட்டப்

பேசணும் என்று சைகையில் சொன்னாள்.

பள்ளியில் நடந்ததை எல்லாம் தாத்தாவிடம்

சொல்லிவிட்டுச் சந்தோஷமாகச் சாப்பிட்டு முடித்தது குழந்தை.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்


அனைவருக்கும் கார்த்திகைத் திருநாள்
வாழ்த்துகள். இருள் அகல ஏற்றும் தீபங்கள் மன இருளையும்,பயம்களையும் ,  
நோய்களையும் விரட்டி அடிக்கட்டும். சமாதானத்தையும்,மகிழ்ச்சியையும்   ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்