Thursday, April 26, 2018

மதுரை 1955 சித்திரை

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஈசன் அடி  போற்றி.
இளங்காலை பசும் தென்றல் வயல் வெளியிலிருந்து கிளம்பி வரும்போதே குரல் கொடுப்பார் பாட்டி. இடம் பழங்காநத்தம்.

 திருமங்கலத்தில்   இருந்து அங்கே வருவதற்குசித்தப்பாவின்JEEPவந்துவிடும். பனிரெண்டு மைல்.

இரண்டே செட் துணிமணிகள்.
ரங்கன்  இந்தப் பயணங்களுக்கு கிடையாது. முதலில் ஜீ ப்பில் ஏறுவது அவன் தான்.
அப்பா அவனை வேறு இடம் அழைத்துப் போவதாகச் சொல்லி இறக்கி விடுவார்.


மூன்று  வயதுக்கு குழந்தைக்கு என்ன தெரியும்.
அவனே மானஸீகமாக வண்டி ஒட்டிக் கொண்டு வீட்டிற்குள் போய் விடுவான்,.
எங்களுடன் உத்ஸாகப் பேசியபடியே சித்தப்பா வண்டி ஓட்டும் அழகை நான் பார்ப்பேன்.
வண்டி குதித்து ஏறி இறங்கும் போதெல்லாம் குதுகலம் .

பழங்காநத்தம் வந்ததும்  பாட்டி தாத்தா ராஜ்ஜியம்.

அங்கே பின்புறத்தில் சித்தப்பா  குடும்பம். அதாவது பாட்டியின் தங்கை குடும்பம்.

அதைத்தவிர இன்னும் ஆறு வீடுகள் இருந்தன.
 தாத்தாவின் முதல் வரவேற்பு முரளிக்குத்தான்.

என்னடா  பளிச் பளிச்ன்னு பதில் சொல்றயா என்பார்.
என்னை  பார்த்ததும் ,கைகால் அலம்பிண்டு
பாட்டிக்கு   உதவி பண்ணு .
 அப்பத்தான்கீரைக்குழம்பு கிடைக்கும் என்றதும் நான் உள்ளே ஓடிவிடு வேன் .

சித்தப்பா அறையில் ஒரு நல்ல பெரிய  ஜன்னல் இருக்கும். அதன் வழிபார்த்தால்    பக்கத்து வயல் வெளியில் நடக்கும் வேலைகள் தெரியும். அறுவடை முடிந்ததும்
அங்கே சினிமாக் கொட்டகை வந்துவிடும்.
சாயந்திரமானால் ராஜா ராணி வசனங்கள் கேட்கும். கலர் கலராக டிக்கெட்டுகள் வாங்கி  மக்கள் உள்ளே செல்லும் காட்சி தெரியும். அங்கு திரையிடப்பட்ட அத்தனை படங்களின் வசனமும்
எனக்கு அத்துப்படி.

அங்கே படம் பார்க்காதது எனக்கு வருத்தம் தான்.😊😊😊
சிவாஜி கணேசனின் அசோகா நாடகம், பிள்ளைக்கனியமுது படப்பாடல்கள் எல்லாம் காதில் விழும்.


கொசு தொந்தரவு நிறைய ஆனதும் சித்தப்பா கறுப்புத் தார் அடித்த தட்டிகள் போட்டு மறைத்து விட்டார்.

அந்த நாட்களில் காலை எழுந்திருப்பது, உமிக்கரியில் பல் தேய்க்கவே.
 தாத்தா ஒரு பக்கம் சந்தியா வந்தனம் செய்வார்.
பாட்டி வந்து வேப்ப மரத்தில் இருந்து கொழுந்துகளாகப் பறித்து
எங்கள் இருவருக்கும் முதல் உணவாகக் கொடுப்பார்,.

பால் வந்ததும் பாட்டி காய்ச்சி முடிப்பதற்குள், தாத்தா இருவருக்கும் இரண்டு பேரி ச்சம்பழங்கள் கொடுத்து, ஒரு நல்ல மலை வாழைப்பழமும் கொடுப்பார்.


பிறகுதான் காப்பி.  காப்பியில்
 நுரையே இல்லியே என்று கேட்பேன்.
இந்தப் பாட்டி நக்கலாகப் பேசுவார்.
மாடு விளக்கெண்ணெய்  சாப்பிட்டதாம். அதனால் தான் பால் நுரைக்கலைன்னு சிரிக்காமல் சொல்வார்.

அதற்குள் தாத்தா வாசலில் கொட்டகையின் கீழ் ஈஸி சேரில்
படுத்துக் கொண்டு எங்களை அன்று வந்த தினசரிகள், மஞ்சரி, லிப்கோ புத்தகங்களை வரிசையாகப் படிக்கச் சொ ல்வார். தம்பிக்கு வயது குறைவுதான் என்றாலும்  எழுத்துக்கு கூட்டிப் படித்து விடுவான்.
அடுத்தாற்போல் மாகாணி,வீசம் என்று வாய்ப்பாடு.

பாதி முடித்ததும் பாட்டி ,பழையது பிசைந்து வைத்துக் கொண்டு கையில்   இலையை ஏந்தி சாப்பிடக் கூப்பிடுவார்.

உனக்கு குழந்தைகள் படிப்பைக் கெடுப்பதே வேலை.
இன்னும் கொஞ்சம் நேரம் போனால் என்ன.
கவனம்  கெட்டது பார் என்று அதட்டுவார்.

பாட்டி அதை எல்லாம் லட்சியமே செய்ய மாட்டார்.
//எட்டுமணிக்குச் சாப்பிட்டு அதுகளுக்கு வழக்கம்.
பாவம் குழந்தைகள் //
😢என்று தயிர் , முந்தைய நாள் ரஸ மண்டி கலந்த தயிர் சாதத்தை, கைகளை உருட்டிப் போடுவார்.

  சட்டியில் உணவு தீர்ந்ததும் அதில் சாத்தேர்த்தம் என்று இன்னும் தண்ணீர்
விட்டுத் தானும் குடித்துவிடுவார்.
தாத்தாவுக்கு த்ரெப்டின் பிஸ்கட் தான் காலை உணவு  .
தாத்தா எங்களைக் குளிப்பாட்ட பொதுக் கிணற்றடிக்கு அழைத்துச் செல்வார்.

அவர் வந்தால் அங்கிருக்கும் பெண்மணிகள் நகர்ந்து விடுவார்கள்.

இந்த பாக்கியம், தாத்தா தண்ணீர் இறைத்து எங்கள்  மேல்விட லைப் பாய் சோப் வைத்துத் தேய்த்துக் கொண்டு குளிக்கும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்.
  இன்று என்னருமைத் தாத்தாவின் படம் ஒன்று கூட என்னிடம் இல்லை.

இந்தா , குட்டி ,,,சொம்பில் பாட்டிக்குத் தண்ணீர் எடுத்துக் கொண்டு போ என்று கொடுப்பார்.
நானும் தம்பியும் அம்மா கொடுத்திருந்த சிவப்புத துண்டை இடையில் கட்டிக் கொண்டு வீட்டுக்கு  வந்து விடுவோம்.

பாட்டி மண் அடுப்பில் சமைக்கும் குழம்பு வாசனை வீட்டைத் தூக்கும். ஆண்டா, இன்னிக்குச் சந்தைக்குப் போய் எல்லாம் வாங்கிண்டு வரலாம்.
இப்போதைக்கு குழம்பும் கீரையும் வடாமும் தான்
என்பார் பாட்டி.

மத்தியானம் சித்திரைத் திருவிழாவுக்கு டவுனுக்குப் போகலாம்.

தாத்தாவும் முரளியும் இங்க இருக்கட்டும் என்பார் ரகசியமாக.
பிறகென்ன சுவாரஸ்யம் தான். தொடரும்.


இந்தப்  பதிவில் ஏகப்பட்ட   எழுத்துப் பிழைகள் . அதைப் படித்து
எனக்கு சொன்ன  எங்கள்  ப்ளாக்  ஸ்ரீராமுக்கு   மனம் நிறைந்த நன்றி,