About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, July 26, 2017

ஆடிக் கொருதரம் அமாவாசைக்கு ஒரு தரம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

வலைப்பூவில் எழுத்துக்களை பதிவதால்
மனா பாரம் குறைக்கிறதென்று நினைத்தேன். பல நல்ல இதயங்களை நோகடிக்கிறேன் என்பதை தாமதமாகப் புரிந்து கொள்கிறேன்.
துன்பம் என்பது யாருக்கு இல்லை.
மரணத்தை விடக் கொடிய   வியாதிகளில் துன்புறுபவர்களை , எத்தனையோ நபர்களை சென்னையில் தங்கி இருக்கும் போது பார்த்தேன்.

முக்கியமாக முதியவர்கள்.
முன்னெல்லாம் இல்லாத அளவுக்கு ,வயது கூடிக் கொண்டே போகிறது.
எண்பதுகளில் 90 களில்  இருந்த அளவு கட்டுக்கோப்பான குடும்பங்கள் இல்லை.
எங்கள் தெருவிலேயே  என்னைவிட வயதான பெண்மணிகள்  ஓரளவு சமாளித்துக் கொள்ளுகிறார்கள்.
ஆண்கள் அந்த அளவிற்கு மனவலிமை கொண்டது   போலத்  தோன்றவில்லை.
என் கணவரின் சிறுவயதுத் தோழர், பிரமாதமாகக் கிரிக்கெட் விளையாடுபவர்,  அறுபது வருடங்கள்  தாம்பத்தியத்திற்குப் பிறகு மனைவியை இழந்த அதிர்ச்சியில்    மனம் பிறழ்ந்திருக்கிறார்.

வழக்கமாக  நடக்கும் விஷயம் இல்லை இது. எல்லாக் குடும்பத்தைப் போல இவரது மகன் மக்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில்.
தந்தைக்கு வேண்டும் அளவு வசதி செய்து விட்டு
தம் தம் ஊருக்குத் திரும்பிவிட்டனர்.  மனைவி யைப் பிரிந்த வருத்தத்திலு ம்  அக்கம் பக்க  விஷயங்களில் மிக அக்கறை காட்டி, அன்றாட வேலைகளைக் கவனித்து வந்தவர்க்குத் திடீர்  என்று மன அழுத்த நோய் வந்து விட்டது.

நான் முன்பெல்லாம் அவரும் மனைவியும் அழகாக  அனுமன் கோவிலுக்குப் போவதையும், மாலை நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடை  பயிற்சி  மேற்கொள்ளுவதையும் இவரிடம் சொல்லி காட்டுவேன்.
அட எவன் மா நடப்பான் அங்க. எல்லாம் உட்கார்ந்து அரட்டை அடிக்கிறார்கள் என்று சிரிப்பார் சிங்கம்.

இந்த தடவை அவரைக் காணாததால் பால் கொண்டு வருபவரிடம் விசாரித்தேன்  அய்யா எல்லாத்தையும் மறந்து போயிடறாருமா. மகன் வந்து வைத்தியம் செய்தார். இப்ப தூக்க மாத்திரை கொடுக்கிறாங்க.
காலையில் எழுந்து  முகம் கழுவி பலகாரம் அருந்திவிட்டு, மாத்திரை எடுத்துக் கொண்டு தூங்கப் போய்விடுகிறார்.
         இன்னும்  கொஞ்ச  நாட்களில்  நகருக்கு வெளியே இருக்கிற   முதியோர் இல்லத்துக்கு  அழைத்துப் போகிறார்கள். என்று வருத்தத்துடன் சொன்னார்.
          வயதானாலும் மிகச் சுறு சுறுப்பாக இயங்குபவர்களையும் பார்த்தேன்.  நடந்து சென்று வேலை முடித்தவர்கள் இப்பொழுது வண்டியில் சென்று அதே உத்ஸாகத்துடன்   வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் .
                                யாருக்கு  என்ன என்று யாரோ எழுதி வைத்த விதிப்படி நடக்கிறது.  மனமகிழ்ச்சி இருந்தால்  வாழ்வும் மகிழ்ச்சிதான்.  எல்லா வசதியும் இருந்தும்  துணை இழந்தவர்கள் முடங்குகிறார்கள்.  துணை மறைந்தாலும் ஆட்டோவிலாவது எரிக் கபாலி தரிசனம் செய்யும் வாசுமதி அம்மாவும் இருக்கிறார்கள் 😊

16 comments:

நெல்லைத் தமிழன் said...

பத்திரமாக ஊருக்குப் போய்ச் சேர்ந்ததுபற்றி மகிழ்ச்சி.

படித்தவுடன் "அவரவர் விதிவழி அடைய நின்னனரே" என்றுதான் தோன்றியது. ஆண்கள் பொதுவா கம்பீரமும் மிடுக்கும் காட்டினாலும் எல்லாம் மனைவி இருக்கும்வரைதான். கிராமத்தைவிட்டுக் கிளம்பும்போதே கூட்டுக் குடும்ப கான்செப்ட் போய்விட்டது. இளமையில் தனியாக (கூட்டுக் குடும்பம் அல்லாமல்) நல்லதாகத் தெரிகிறது. கொஞ்சம் வயதாகும்போதுதான் அதனுடைய பிரதிகூலம் தெரிகிறது.

இந்தமாதிரி அனுபவங்களைப் படிக்கும்போதும், நாமே நம் குடும்பங்களில் பார்க்கும்போதும் பயம் மனதில் வருவது நிஜம். "ஒழி என்றால் ஒழியுமோ, விலகு என்றால் விலகுமோ விதி?"

ஸ்ரீராம். said...

நெல்லைத்தமிழன் தமிழில் புகுந்து விளையாடுகிறார்.

அவர் சொல்வது போல பயம் வருவது நிஜம். அந்த முதியவர் பற்றி படிக்கும்போது என் அப்பா நினைவுக்கு வருகிறார். ஆண்களுக்கு அவ்வளவு மனோபலம் இருப்பதில்லை. உறவுகளின் திடீர் நோய்வாய்ப்படலும் பயத்தை .பயத்தை என்பதை விட ஒரு வித வெறுமையை..

ராஜி said...

எல்லாம் விதிப்படிதான் நடக்கும்ம்மா

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் நெல்லைத்தமிழன். வா என்றால் தான் வருமோ ,இல்லை போ என்றால் தான் போமோ விதி. இந்தவயதானவரின் உற்சாகமான நாட்கள் என்னால் மறக்க முடியவில்லை. சிரிப்பு தான்., சத்தம் போட்டு பேசுவதுடன் ,அருகில் இருப்பவர்கள் அனைவரையும் மகிழ வைப்பார்.
அவரைப் பார்க்கப் போனபோது கூட என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். நான் யார் என்று தெரியவில்லை. தனக்காக யாரும் எதையும் விட்டுக் கொடுப்பதையும் அவர் விரும்பி இருக்க மாட்டார்.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம், அன்பு நம் மனதை எவ்வளவு பலவீனப் படுத்திவிடுகிறது என்று
நினைத்தால் பகீர் என்கிறது. என் தந்தை முதலில் இறைவனடி சேர்ந்தது கூட இப்பொழுது ஒரு
ப்ளெசிங்க் என்றே நினைக்கிறேன். என் அம்மா சமாளித்துக் கொண்டது போல் அவரால் இருந்திருக்க முடியாது. நிறைய பிரார்த்தனைகளும் மனத்திடமும் கிடைக்க வழி காணுவோம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராஜி மா. விதி ஒன்றுதான் வலியது. நேற்று ஒரு ஸேதி, எங்களுக்குத் தெரிந்த
கலைச் செல்வி ஒருவருக்கும் இந்த அல்சைமர் வந்திருக்கிறதாம்.

Geetha Sambasivam said...

உண்மை தான். மனைவி இல்லை எனில் கணவனைக் கவனிக்கக் கூட ஆட்கள் இல்லை! பெண் தனியே சமாளித்துக் கொள்வதைப் போல் ஆணால் முடிவதில்லை. அந்தப் பெரியவரின் நிலையை எண்ணிக் கலக்கமாக இருக்கிறது. நல்லபடியாக நினைவுகள் திரும்பி மீண்டும் சேவை ஆற்றட்டும். நமக்கெல்லாம் என்ன காத்திருக்கிறதோ என நினைக்கையிலேயே பகீர் என்கிறது. :(

வெங்கட் நாகராஜ் said...

விதி வலியது... வேறென்ன சொல்ல....

இப்போது உடல் நலம் எப்படி இருக்கிறது. நீங்கள் அழைத்ததாக ஆதி சொன்னார்.

ஊருக்குத் திரும்பி விட்டீர்களாம்மா....

ராமலக்ஷ்மி said...

நிதர்சனம்.

காமாட்சி said...

அவ்வப்போது வருவதை அனுபவித்தே ஆகவேண்டும். பாசமுள்ள குடும்பமாக இருந்து,அவர்களுக்கும் செய்வதற்கு வலுவிருந்து செய்தால் பெரியவர்கள் பாக்கியம். வியாதிகளும்,ஆயுளும், மருந்துகளும் அதிகமாகிவிட்டது. யோசனையே செய்யக்கூடாது. எழுதலாம். நடைமுறையில் ஸாத்தியமில்லை. நீங்களும் அதிகம் யோசனை செய்யாதீர்கள்.ஏதோ தோன்றியதை எழுதினேன். அன்புடன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு காமாட்சி மா. ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்.
நீங்கள் கூறுவது மிக உண்மை. விதியை நொந்துதான் என்ன பயன். இனி நடப்பவைகள் நல்லதாக இருக்கட்டும். மன உறுதிக்குத்தான் பகவானைப் பிரார்த்திக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி. கண் முன் நடக்கும் நாடகங்கள். வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. பகவத் சங்கல்பத்தில் எல்லாம் நல்ல படியா இருக்கும். கவலையே வேண்டாம்மா.
அந்தப் பெரியவர் விஷயத்தில் மறதியும் நன்மையே. புதிதாகப் பிறந்ததாக நினைத்துக் கொள்வோம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் அன்பு வெங்கட். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கட்டும்.
நிறைய நேர்மறை எண்ணங்களால் மனதை நிரப்புவோம்.
ஆமாம் மா. ஆதியுடன் பேசினேன். நீங்கள் எல்லோரும் என் உறவல்லவா.
எனக்கு ஆதரவு உங்கள் அன்புதான்.

கோமதி அரசு said...

வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
என் அத்தை மாமாவை தனியாக தனக்கு பின்னே போக கூடாது என்றும் அவர்களை அனுப்பி விட்டு தான் தான் போக வேண்டும் என்றே சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.
அது போல் கடைசி வரை அவர்களுக்கு பணிவிடை செய்தார்கள்.
சுமங்கலியாக போவதில் என்ன இருக்கு? அவர்களை கடைசி வரை யார் கையிலும் விடாமல் பார்ப்பதே என் வேண்டுதல் என்றார்கள்.
என் அம்மா அப்பா சிறு வயதிலேயே எங்களை விட்டு போனார்கள் அம்மாதான் எல்லோரையும் வளர்த்து ஆளாக்கினார்கள்.
எண்ணெய் முந்தியோ! திரி முந்தியோ! என்பார்கள். இறைவன் என்ன நினைத்து இருக்கிரறோ!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
உங்கள் மாமியார் எத்தனை முன்னேற்ற சிந்தனையோடு இருந்திருக்கிறார்.
கனிவும் அன்பும் இருக்கும் இடத்தில் தான்
இந்த எண்ணம் எழும் . அதுவும் இவ்வளவு நீண்ட காலம்
கணவரோடு இருந்தவருக்கு அவரைக் குழந்தையாகவே பாவிக்கும்
உள்ளம் உருவாகி இருக்கும். யார் முந்தி என்பது இறைவன் கையில்.
நடப்பதை நல்லபடியாக ஏற்றுக் கொள்ளுவதற்கு நிறைய பக்குவம் வேண்டும்.
வாழ்க வளமுடன் அம்மா.