About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Tuesday, November 01, 2011

அக்டோபர் 31 ஒரு பெண்ணின் டயரி

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
இந்த மல்லி,கதம்பம் எல்லாம் நிறைந்த மதுரையை விட்டுக் கிளம்ப வேண்டிய நேரம்  வந்த வருடம் 1965  அச்டோபர் மாதம் 29 ஆம் தேதி.
. அன்றைய   டயரித்தாள்     குறிப்பு இங்கே.


****************************************************************
இன்று காலையிலிருந்து ஒரு பரபரப்பு.
எங்கள் மூவருக்குமே   என்ன ஏது என்ன செய்யப் போகிறோம்
என்று தெரியவில்லை. அத்தையிடமிருந்து வந்த கடிதத்தை அப்பா இன்னும் இரண்டு தடவைகள் படித்தார்.

ராம் கல்யாணம் ஆப்பட்ஸ்பரியில் நடக்கிறது. அதற்காக சிம்மு வருகிறான். ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால், மேலும் முஹூர்த்த நாளாக இருப்பதாலும்
நேரம் காலம் பற்றி யோசிக்கவேண்டாம்.
நீங்கள்   வெள்ளிக்கிழமை  ராத்திரி ரயிலில்  கிளம்பி வந்துவிடுங்கள்.
நான் மற்ற விவரங்களை நீ உன் மாமியார் அகத்துக்கு  ,புரசவாக்கத்துக்கு வந்த பிறகு சொல்கிறேன்.


பெண் சாதாரணமாக  உடை  உடுத்தினால், இருந்தால் போதும். நகை நட்டு ,பெரிய பட்டுப் புடவை இதெல்லாம் எங்கள் வீட்டில் வழக்கம்  இல்லை.

அதே  போல காபி  மட்டும் போதும்.
நல்ல வெளிச்சமான அறையில் பெண்ணைப் பார்க்க வேண்டும்......(  :)   )

கூட்டம் வேண்டாம். இந்த ஷரத்தெல்லாம் படித்து அப்பா கொஞ்சம் அரண்டு போயிருந்தார்.
அம்மாதான்  பெரிய இடம் அப்படித்தான் பேசுவார்கள்.
நம் பெண்ணுக்கு என்ன குறைச்சல்.
போகலாம் . நல்லது நடந்தால் சரி  என்று சொல்ல அப்பாவும் தயக்கத்துடன்
'சம்மதித்தார்.
பெண்ணை அவர்கள் வந்து பார்ப்பதுதானெ முறை. யாராவது இப்படிப் பெண்ணை ஊர் விட்டு ஊர் அழைத்துப் போவார்களா  இது , சீனிம்மாப் பாட்டியின் கேள்வி.
அவர்கள் கல்யாணம் என்று மனத்தில் நிச்சயம் செய்து விட்டார்கள். அதனால்தான், அந்த வீட்டுப் பெரிய பாட்டியிடம்  ஆண்டாளைக் காண்பிப்பதற்காக வரச் சொல்லுகிறார்கள்''  இது உள்ளூரில் இருக்கும் இன்னோரு அத்தையின் தகவல்.


தம்பிகள் இருவரையும் பஸ்ஸில் ஏற்றிச்  சித்தப்பா வீட்டுக்கு அனுப்பி விட்டோம்.
சின்னவனுக்கு(13)  ஒன்றும் பிடிக்கவில்லை.
நீ என்ன ஸ்பெஷல். உன்னை மட்டும் அழைத்துப் போகிறார்கள். என்று என்னிடமே  கேட்கிறான்.
நான் வந்து சொல்கிறேண்டா.  சமத்தாக இரு.என்று அவனைச் ச்அமாதானப் படுத்திவிட்டு  சாயந்திரம் 6   மணிக்குக் கிளம்பும் திருவனந்தபுரம்  எக்ஸ்ப்ரசில்
கிளம்பப் பசுமலையில்  பஸ் ஏறினோம்.
அந்த வருடத் தீபாவளிக்காக  ஹாஜிமூசாவில் வாங்கின ஆரணிப்பட்டுப் புடவையே கை கொடுத்தது. நீலமும் சாம்பல் கலரும் கலந்து
உலகத்திலியே அழகான  புடவையாக எனக்குத் தோன்றியது  அப்போது.
நடுவில் மினுக்கும் வெள்ளி புட்டாக்கள் .
பாட்டி(அப்பாவின் அம்மா)  வாங்கிக் கொடுத்த காசுமாலை அம்மாவின் பெட்டியில்   பத்திரமாக வைக்கப் பட்டது.
எங்கள் மூவருக்கும் சேர்த்தே ஒரே பெட்டி.
வழக்கமான கூஜா. இரவில் சாப்பிட  புளியோதரையும் தயிர் சாதமும்.


பார்த்து நட,. பராக்குப் பார்க்காதே  அம்மாவின் குரல் என்னை
உலுக்கியது. மதுரை ரயில் நிலையம். சித்தப்பாவின் குரல்.
நாராயணா  எல்லாம் ஜாக்கிரதையாக முடித்துக்  கொண்டு வா..
நாங்களும் வண்டி ஏறி விட்டோம்.
அம்மா அப்பா இருவரும் தூங்கவில்லை.
எப்பொழுதும் ஜன்னலோரத்தைப் பிடித்துக் கொள்வதுபோல இப்போதும்
போய் உட்கார்ந்து கொண்டு வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஏதாவது கவலை இருக்கிறதா பாரு   இந்தப் பெண்ணுக்கு என்று   அம்மாவிடம் அப்பா சொல்வது என் காதில் விழ  எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.

அசட்டுப் பிசட்டு என்று ஏதும் பேசிவிடாதே. குனிந்த தலை நிமிரக் கூடாது இதெல்லாம் அம்மா.
நான் அப்பாவிடம் மட்டும் சொன்னேன்.
அவாளுக்கு என்னைப் பிடித்தால் போதாதுப்பா. எனக்குப் பிடித்தால் தான்  கல்யாணமே.  அதனால்   கவலையே படாதே'' என்று சொல்லிவிட்டு  ரயிலுடன் கூட வரும் நட்சத்திரங்களோடு, கரிப்புகை வாசனையையும்
ரயில் வண்டியின் கட்கடச்  சத்தத்துக்கு ஒரு பாட்டையும் பாடி
அனுபவித்துக் கொண்டு  தூங்கி விட்டேன்.:)
இதன் அடுத்த நாட்கள்  நிகழ்ச்சிகளை   முன்பே பதிந்து விட்டேன்.

இங்கே  பார்த்துக் கொள்ளலாம்;)
http://naachiyaar.blogspot.com/2010/01/blog-post_10.html

ஆகக்கூடி  அக்டோபர் 31  எங்கள் வாழ்வின்   திருப்பம் கொடுத்த நாள்.

சந்திப்பு,  மஹா பெரிய    வலிமை பெற்றது. இறைவன் கொடுத்த வர்ங்களை என்றும் காக்க அவனே துணை.