About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Friday, June 13, 2008

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோமிக மிக நன்றாக சமைப்பவர்கள் மத்தியில், நீட்டோலை வாசியா நெடுமரம் நான்.


அவர்கள் பேசும்போதெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டு,

வானொலியில் சொல்லும், ம.மலரில் வரும் குறிப்புகள் எல்லாம் எழுதி வைத்துக் கொண்டு சமைத்த காலங்கள் உண்டு.


அது எங்க குழந்தைகளின் போதாத காலம்.:)

சில அனுபவங்களுக்கு அப்புறம், ;அம்மா எனிதிங் நியூ ' அப்படீனு கேக்கிறதையே பெரியவன் விட்டு விட்டான்.

(அவ்வளவு பயம்)பசங்க அலறுகிற மாதிரி ஒரு மாங்காய் ஜாம் செய்து

இருந்தேன்.


இந்த சோகம் ஆரம்பித்தது ,முதல் முதலா எங்க வீட்டு மாமரத்தில மாங்காய் அபரிமிதமாகக் காய்த்த 1983 சித்திரை மாதம்.


ஊறுகாய் போட்டால் ஒத்துக்கொள்ளும்படி இருக்கும். சும்மா சொல்லக் கூடாது. நல்லா காரமா ,எண்ணையில் மிதக்கும் மாங்காய்த் துண்டுகளை அழகாக பாட்டில்களில் பாக் செய்து எல்லாருக்கும் கொடுத்திருக்கிறேன்.
அவர்கள் எல்லோருமே நல்லாத்தான் இருக்காங்க:)

அப்போ சென்னையில் ஹாப்பினஸ்னு ஒரு சாகலேட் பானம் நடமாடிக் கொண்டிருந்தது.

அந்த பாட்டில் கெட்டியாக இருக்கும். அதோட மூடியில் ஹாப்பினஸ் என்று வேறு எழுதி இருக்கும். செண்டிமெண்ட் ஆவும் இருக்கும்,பாட்டில் சேர்க்கிறத்துக்கு ஆசைப் பட்ட நாட்கள்.
பக்கத்துவீட்டு தீபக்கோட பாட்டி மொட்டை மாடியில் உலர்த்திய ஒரு சுவையான பண்டத்தைப் பார்த்தேன்.
அப்போ வத்தல் வடகம் போடுகிற நாட்கள். நான் ஜவ்வரிசியைப் பிழிய அந்தப் பாட்டி மாங்காய் வத்தல் போடுவதாக அறிவித்தார்.
ஓ நாங்க கூடப் போடுவோம்னு நான் சொல்ல அது இல்ல இது. இது தித்திப்பு மாங்காய் என்றாரே பார்க்கணும்.
ஓஹோ ஆம்சத் போல இருக்கு ,அதான் எனக்குத் தெரியுமேனு நான் சொல்ல அவருக்குக் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. இதுல காரம் திதிப்பு எல்லாம் சப்குச் இருக்கும் என்றார். அவங்க வட நாட்டவங்க.
சரி இதையும் கேட்டுக்கலாம்னு என்ன விவரம்,செய்முறை சொல்லுங்க என்று பணிவோடு கேட்டதற்கு
அவங்க அசால்ட்டா மாங்காய்த் துண்டு எட்த்துக்கோ. உப்பு போடு
வெல்லம் போடு. மிளகாய்ப் பொடி போடு, காய வைச்சால் வத்தல் கிடைக்கும்னு சொன்னாங்க.
நமக்கு ஒண்ணு காரம் ஒண்ணு திதிப்பு அப்படிச் செய்தால் ஒழுங்கா வரும்.
அது இப்பத் தெரிகிறது.
அப்ப இளமைக்காலம் இல்லையா.
அசத்திட வேண்டியதுதான்னு எங்க வீட்டு மகாப் புளிப்பு மாங்காயைத் துண்டம் செய்தேன்.
உடனே அதில் உப்பு மிளகாய்ப் பொடி போட்டுப் பிசிறி வச்சாச்சு.
இனிமேல் வெல்லம் சேர்க்கணும்.
அங்கதான் சனிபகவான் லேசா எட்டிப் பார்த்துட்டார்.
சரிக்கு சரி வெல்லம் சேர்க்க சொன்னாங்களா, இல்ல பாதியா என்று கேட்க அடுத்த வீட்டு ஜன்னலைப் பார்த்தால் பூட்டி இருந்தது.
வாட்ச்மேன் அவங்க திருப்பதிக்குப் போயிட்டதாச் சொன்னார்.
அட ஆத்தோட போற மாமியாரேனு நினைத்துக் கொண்டு:)(இது வேற கதை)
சரி, நம்ம மாங்காயோ புளிப்பு. அதுக்கு வெல்லம் சரியாயில்லாட்டா
பசங்க சாப்பிடாதுன்னு,
வெல்லப் பாகா செய்து மாக்கய் மேல விட்டு விட்டால் பர்ஃபி மாதிரி செய்துடலாம்,
என்ற யோசனையில் வெல்லத்தை உருளியில் போட்டு
இளக்கி ,...
போன் அடித்ததா...
என்னன்னு கேட்டு வரதுக்குள்ள கெட்டிப் பாகு ஆகிவிட்டது.
அதன் தலையில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மாங்காயை அதோடு சேர்த்தேன்.
நல்ல வாசனை வந்தது.
கொஞ்சமே கொஞ்சம் வினோத வாசனை:0)
ஆறின பிறகு வாணலியில் கிளறுவதற்காக ஒரு கரண்டியைப் போட்டேன்.
சுழற்ற வந்தது. அப்பாடி!! இறுகிப் போகவில்லை.
தாம்பாளத்தில் கொட்டி விட்டு வெயில்ல வச்சால் ஆச்சு, என்று தைரியமாக
மதியம் கல்லூரியிலிருந்து சாப்பிட வந்த பெரியவனிடம், எப்படிப்பா மாங்காய் வாசனை நல்லா இருக்கு இல்லையா என்றதும்,
ஏம்மா மாங்காய்ப்பச்சடி செய்தியா என்று ஆசையாக வாணலியைப் பார்த்தான்.
ஒரே கறுப்பா இருக்கேம்மா.என்றபடி கரண்டியை எடுக்கப் போனான்.
ஆறட்டும்பா. நான் சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்றேன் என்று
நானும் கரண்டியில் கைவைத்தால் அது நகர்ந்தால் தானே:)
பயங்கரப் பாகு பிடித்துவிட்டது!!!
கொஞ்சம் சந்தேகமா இருந்ததால் ,எப்படியும் கரண்டியை வெளில எடுத்துடலாம் என்று மறுபடி அடுப்பில் ஏற்றினேன்..
சளக் ப்ளக் என்ற சத்தத்தோடு மாங்காய்த் துண்டுகள் வெல்லத்தோடு ஐக்கியமாகி விட்டன.
இன்னும் பாகு இறுகி கரண்டி,மாங்காய்,வாணலி எல்லாம் திரி மூர்த்தி சங்கமம் ஆகி,
அந்த அழகான கல்கத்தா வாணலியின் கதை முடிந்தது.
மாங்காயைப் பிரிக்க செய்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.
கொஞ்சம் வாயில் போட்டுப் பார்க்கலாம் என்று ஓரமாகக் கிடைத்த ஒரு சின்ன மாங்காய்த் துண்டை எடுத்து சுவைத்தால்...
அப்படியே தலைக்குப் போயிற்று காரம்.
கண்ணில தண்ணி வந்தாச்சு.
என்னைப் பார்த்துப் பெரியவனுக்கும், மகளுக்கும் சிரிப்புப் பொங்கியது.
''அம்மா ஸ்பெஷல் பாம் எல்லாம் தயாரிக்க வேண்டாம்.
இதை அனுப்பு. உன்னை டிஃபென்ஸில் சேர்த்துக் கொள்வார்கள்.
அணுகுண்டெல்லாம் எந்த மூலைக்கு எங்க அம்மா செய்த
மாங்கய்ப் பணியாரத்துக்கு முன்னால்" என்று
ஒரே ஆரவாரம்:)
அதனால் மக்களே இந்தக் கதையின் மூலம் உங்களுக்கு நான் சொல்ல வருவது,
வருமுன் காத்துக் கொள்ளுங்கள் என்றுதான்.
புதுசு புதுசாக சமைக்க நல்ல துணிச்சலும் விவேகமும் வேண்டும் அது என் கிட்ட இல்லை. ஒத்துக் கொள்கிறேன்:)