About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Tuesday, February 12, 2008

திண்டுக்கல்,சென்னை .. மதுரை1965திண்டுக்கல்லை விடும் நேரம் வந்தது. 'பசுமை நிறைந்த நினைவுகளே' பாடல் வெளிவந்த நேரம்.:)
கேட்க வேண்டுமா சோகத்துக்கு:)
பள்ளி ஓஏடியில் மாண்டிசோரி குழந்தைகள் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி(கைதி கண்ணாயிரம் படம்)பாட்டுக்கு வண்ணமயமாக ஆடினார்கள்.
எட்டாம் வகுப்பினர் அடுத்த வீட்டுப் பெண் படத்திலிருந்து ஒரு பாடலுக்கு நடனம்!
பின்னணியில் அப்போது பிரபலமான கம்செப்டம்பர் இசை.
விளையாட்டுப் பந்தயங்கள் நடைபெறும் திடலுக்கு அவ்வப்போது வந்து உற்சாகப் படுத்தும் நாட்கள், மேடையில் பரிசு வாங்கும் நாட்கள் இதைத் தவிர நெருக்கத்தில் பார்க்க முடியாத தலைமை ஆசிரியை
ஒவ்வொருவரையும் சந்தித்து ஆசீர்வதித்தார்.தமிழ்,
கணக்கு, புவியியல், ஆங்கிலம், விஞ்ஞானம் என்று எல்லாப் பாடங்களையும் போதித்த மிஸ்.க்ளாரா ஜேம்ஸ், மிஸ் நவமணி,மிஸ்லீலா செல்லையா,தமிழ் ஆசான் திரு ரெட்டியார் என்று அனைவரும் கூடி அமர்ந்திருக்க, அன்றைக்குப் புதிதாக ஒரு வேடம் நாங்கள் எல்லோரும் புனைந்தோம்.
பழக்கமே இல்லாத பட்டுப் புடவை அணிந்தோம்:)
பதினாறு வயது பொம்மைகள் நிற்பது போல அந்த கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில் வேடிக்கையாக இருக்கும். ஆனால் அது ஒரு பொக்கிஷம்.
இந்ததோழிகளில் சிலரைக்
காலங்கள் கடந்த பிறகுச் சந்திக்க முடிந்தது.
ஒருவர் ரிசர்வ் வங்கியில் பணி செய்கிறார். ஒருவர் ஜில்லா கலெக்டர் ஆனதாகக் கேள்விப்பட்டேன். இன்னோரு
அமைதியான தோழி, கணவன் குழந்தைகள் நலனுக்காகவே பிறவி எடுத்தது போல விருது நகரில் இருக்கிறாள்.
என்னை விட வயதில் சிறியவர்கள் இருவரும் அறிமுகம் ஆனார்கள்.ஒருவர் நம் வலை உலகப் பத்திரிகையாளர் அருணா ஸ்ரீனிவாசன்.
இன்னோருவர் எனது ஓரகத்தியாகவே வந்துவிட்டார்.
அப்போது திண்டுக்கல்லில் கல்லூரி கிடையாது.
அதனால் படிக்க ஆசைப்படுபவர்கள் திருச்சிக்கோ மதுரைக்கோ போக வேண்டும்.
பரீட்சைகள் முடிந்து மதிப்பெண்களும் வந்த பிறகு,
அப்பாவுக்கு என்னை எங்கேயும் அனுப்ப மனமில்லை.
சென்னையிலிருந்த எனக்கு என் முதல் கைக்கடிககரம் கொடுக்க வந்த மாமா அப்பாவுக்கு என்னை நன்றாகக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுவதாகச் சொன்னதால்,
அம்மாவும் நானும் ரயில் ஏறினோம், அது ஒரு ஜூன் மாதம் 19ஆம் தேதி என்று நினைக்கிறேன்.
மறுநாள் அம்மா என்னை அழைத்துக் கொண்டு எதிரரஜ் கல்லூரிக்கு வந்தால் அனேகமாக அட்மிஷன் முடிந்த நிலையில்,
எங்கள் இருவரின் முக தாட்சண்யத்துக்காகவும் ப்ரின்சிபல் மிஸ் .மேத்யூஸ் கடைசி வகுப்பில் இடம் கொடுத்தார் என்று நினைக்கிறேன்.:)
அந்த மாதிரி இப்போதெல்லாம் குரூப் இருக்கா என்று கூடத் தெரியாது.
சிபாரிசு எதாவதுஎன்றால் என் ஆங்கில மதிப்பெண்கள் மட்டுமே!!
(தத்துவம்,தர்க்கம்?)
(அட்வான்ஸ்ட் ) ஆங்கிலம், இயற்கை விஞ்ஞானம்(பாடனி சுவாலஜி)
இன்றளவும் எனக்கு இந்தக் குறிப்பிட்ட காம்பிநெஷன் புரியவில்லை.
ஏற்கனவே நிறையப் பேசி பேசி எல்லாரையும் அறுப்பது வழக்கம். இதில லாஜிக் வேறு கேட்கணுமா;)
ரொம்ப நாளைக்கு கண்ணில பட்டவர்களையெல்லாம் ,
வகுப்பில் படிக்கும் வரிகளைச் சொல்லி அவர்களைக் கண்டபடி விரட்டி இருக்கிறேன்:)
அம்மா வழிப் பாட்டி நான் எப்படித் தெருவில் நடக்கிறேன், அக்கம்பக்கம் பார்க்கிறேனா என்றேல்லாம் கணிக்க அவ்வப்போது வீட்டை விட்டு வாசல் வரை வந்து பார்ப்பார். பாவம்.
நமக்கு அப்போது பொது அறிவு ஏன் இப்பவும் போதாது.
சினேகிதியோடு ஒரே போல நடந்து பஸ் நிறுத்தம்.
கையில் புத்தகங்கள், தயிர் சாத டிபன் பாக்ஸ்:)
பாட்டிக்கு கண்மை இடுவது கூடப் பிடிக்காது;))
எப்படியோ நானும் ஒரு வருடம் கல்லூரிக்குப் போனேன்.
நடுவில் அப்பாவை மதுரைப் பசுமலைக்கு மாற்றிவிட்டார்கள்.
மீண்டும் மதுரைக்கு வந்தது மகிழ்ச்சியான அனுபவம்.
அது என்ன மாயம், ஏன் இந்த உணர்வு எல்லாம் கேட்க முடியாது.
மதுரை,மீனாட்சி,மல்லி,மக்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
சின்னவன் சேதுபதி பள்ளியில் சேர்ந்தான்
நானும் வெற்றிகரமாக பியூசியை(இரண்டாம் க்ளாஸ்) முடித்துவிட்டு
மேற்படிப்புக்கு லேடி டோக்கா,ஃபாத்திமா கல்லூரியா என்ற கனவுகளோடு பசுமலைக்கு வந்து சேர்ந்தேன்.
மக்களே!
இனி வருவதெல்லாம் அங்கங்க எழுதி வைத்து இருக்கிறேன்.:))
இதோ லின்க்.
பதினெட்டு வருட வாழ்க்கை உங்களுக்குப் பாகம் பாகமாக வந்து சேர்ந்தது. ஏன் எழுதவேண்டும் என்கிற கேள்வியைவிட,
ஏன் கூடாது? என்ற நினைப்புதான். வரும் அடுத்த தலை முறைக்காக.
தமிழ் படிக்கும் பேரனுக்காக:)
கடந்ததை நினைத்தால் இப்போ வாழும் வாழ்க்கை இன்னும் மதிப்பு கூடும் என்ற நினைவும்தான்.
எதையும் மறக்கக் கூடாதில்லையா...
நன்றி.
மங்களம் சொல்லிடறேன்!!!