About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, October 14, 2007

கொலு நாட்கள்

முன் குறிப்பு;

இங்கே இருக்கும் கரடியும்,குதிரையும் எங்கள் வீட்டு சிங்கம் செய்தது.
நல்லா இருக்குனு சொல்லிடுங்க:))

மற்ற இரண்டு படங்களூம் கொலு 2005 சென்னை.

இப்போப் பதிவுக்குப் போகலாம்.

வேற ஒண்ணும் இல்லை. இங்கே வந்ததுல இருந்து நிறைய பொதிகை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் சந்தர்ப்பம்,

வழக்கம் வந்துவிட்டது.

இப்போதும் நிறைய வளப்பமும் ஆரோக்கியமும் கொண்ட பசு மாடுகளுக்கு நடுவில் நின்று கொண்டுபன்றி, முயல் வளர்ப்பு பற்றிய நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டுதான் எழுதுகிறேன்.

1551க்குப் போன் செய்தால் விவசாயம் பற்றின எல்லாத் தகவல்களும் கிடைக்கும்னு முடித்துவிடுவாங்க.

அப்புறம்தான் பகவத்கீதை சொற்பொழிவு.

கீதைத் தத்துவம் புரிந்துகொண்டு(அப்போதைக்கு)

ஞானம் பெற்று அப்புறம் காற்றில் விட்டுவிட்டு இட்லி சாப்பிடப் போவதும் தினப்படி வேலைகள்.ஆனால் அதற்காகக் காலையிலும் மாலையிலும் காது குளிர நல்ல வார்த்தைகள் கேட்பதை விடுவதில்லை.என்றாவது ஒரு நாள் தெளிவு பிறக்காதா என்ற ஆவல்தான்.:)))

இதனால்தான் ஏதாவது ஒரு பதிவிடணும் என்று நினைக்கும்போது முன்னுரை,டிஸ்கி, விளக்கம் எல்லாமே ஒரு பதிவாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது.:))நேயர்களே,.... சக பதிவர்களே... இதற்கு மேல் எழுதப் போவது இன்னோரு கொசுவர்த்திப் பதிவு.

ஸோ, எச்சரிக்கையாக இருப்பவர்கள், மன உறுதி இல்லாதவர்கள் வேறு பதிவுக்குப் போய் விடுங்கள்:))இதற்குப் படங்களாகப் போட்டு இருப்பது இப்போதைய கொலு என்றாலும்,

நான் சிறப்பாக நினைப்பது பிறந்த வீட்டுக் கொலுவைத்தான். பெற்றோரும், குழந்தைகளுமாய் உழைத்துக் கொலுப்படி நிர்மாணம் செய்யப்படும்.

அம்மாவின் கையழகில் அந்த 22ஆம் எண்,சன்னிதிதெரு வீடு புதுப் பொலிவு பெறும். ஒரே ஒரு பெரியதெருவைக் கொண்ட அந்தத் திருமங்கலம் ஊரில்,

ஒரு முனையில் பஸ் நிலையம், ஆனந்தா திரையரங்கு.

மறு முனையில் மீனாட்சி அம்மன் கோவில்.

நடுவில் இரு பக்கங்களிலும் முறையே ஒரு உடுப்பி ஹோட்டல்,ஒரு தபாலாபீஸ், ஒரு ஜவுளிக்கடை, ஒரு அரசமரத்தடிப் பிள்ளையார் இவ்வளவும் அடங்கும்.கிளைபிரியும் இடங்களில் வலது பக்கம் ஒரு குட்டித் தெருவும் இடதுபக்கம் ஒரு ச்சின்னக் கடைத்தெருவும்

உண்டு. அங்கு முதலாக ஒரு பிரசித்தி பெற்ற வேர்க்கடலைக் கடையும் இருக்கும்.

ஒரு ஐந்து பைசாவுக்கு இரண்டு எட்டு வயது வயிறுகள்

நிரம்பிவிடும். கடலைமணிகளும் பெரிதாக இருக்கும்.
வலது பக்கம் போகும் தெருவில் ஒரு ஐய்யனார் கோவில் இருந்ததாக நினைவு. அதற்கு எதிர்த்தாற்போல் ஒரு பெரிய சுற்றுச்சுவர் இல்லாத கிணறு ஒன்றும் இருக்கும்.

தினம் ஆதாரப் பள்ளிக்குப் போகும்போது அந்த இரண்டு இடங்களையும் ஓடியே தாண்டிவிடும் வழக்கம் எங்களுக்கு.
இப்போது நினைத்தால் கூடக் கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. அங்கே(கோவிலுக்குள் இருக்கும் )கொடுக்காப்புளி மரத்தின் பழங்கள் அப்படியே இன்னும்
நாவின் நினைவில் இருக்கிறது
அந்தக் கிணற்றில் கோட்டி இருப்பதாகவும் சொல்லுவார்கள்.

எனக்கும் என் தோழிகளுக்கும் மிகப் பிடித்தமான கொலு இருக்கும் ரஜினியின் வீடு இந்த இரண்டு அட்வென்சர் ஸ்பாட்ஸ் தாண்டிதான் போகணும். அவங்க வீட்டில 11 படிகள் நிறைய மிகப் பெரிய அளவில் பொம்மைகள் வீற்றிருக்கும். அவர்கள் சொந்த ஊர், தென்னாற்காடு. பண்ருட்டியில் செய்த வளப்பமான,செழுமை கொஞ்சும் ராமர்பட்டாபிஷேகம், ஆலிலை கிருஷ்ணன்,செட்டியார் கடை, மலையப்பன், வெள்ளைக்கார துரைகள்,தேர்கள் இன்னும் நிறைய வகைகளில் பொம்மைகள் வண்ணமயமாக இருக்கும்..

அதைப் பார்த்துவிட்டு நம்ம வீட்டுக்கும் அது போல வாங்க வேண்டும் என்றால்,அப்பா மாட்டேன் என்று மறுப்புச் சொல்ல மாட்டார். நாமே அதைவிடப் பிரமாதமாகச் செய்யலாம்மா என்று, உறுதி அளித்து அதை நிறைவேற்றுவார்.
முதலில் வாங்குவது கலர்க் காகிதங்கள் அதில் இரண்டு நாட்களில் தோரணங்கள் உருவாகிவிடும்.
அடுத்தப் ப்ராஜெக்ட் தெப்பக்குளம். அப்பாவுக்குக் கிடைத்தது ஒரு பெரிய பிஸ்கட் டின். அதை ஒரு ஒரு உப்புத்தாளால் தேய்த்து பளபளவென்று ஆக்கிவிட்டார்.
அப்புறம் என்ன!! சுற்றிக் காவியும் சுண்ணாம்பும் அடித்தால் குளம் ரெடி:)) வாசலில் பொம்மைகள் விற்ற மதுரைக்காரரிடம் ஒரு ஸ்ரீரங்கநாதரும், தெப்பக் குளத்தில் ஓட ஒரு குட்டிப் படகு,படகோட்டியோடு கிடைத்தது.

அடுத்தாற்போல குளத்தைச் சுற்றிப் பார்க் வேணுமே. சுற்றுப்புறத்தில யாரும் வீடு கட்டவில்லை. எல்லாம் பழைய வீடுகள்தான்.
இருக்கவே இருக்குக் கிணத்தில தூறு வாருகிற தொறட்டிகரண்டி. புரட்டாசி மாதம் மழைக்குமுன்னால கொஞ்சம் தண்ணீர் குறைவாகத்தான் இருக்கும். வாளியை இறக்கினாலே மண்ணும் தண்ணீருமாகத்தான் வரும்.

அதனால வண்டல் மண்ணும் கிடைத்து கடுகு,கேழ்வரகு போட்டாச்சு. குட்டிச் செடிகளும் முளைத்து நந்தவனமும் ஆச்சு. நடுவில ப்ளாஸ்டிக் நாற்காலிகள்,மேஜைகள், இதைதவிர தீப்பெட்டிகளால் உருவான பீரோக்கள், சாக்கலேட் சுற்றிவந்த ஜிகினாப் பேப்பரில் உருவான பெண்கள், பழைய கிராமபோன் இசைத்தட்டுகளில் வரையப்பட்ட பூக்கள் இன்னும் எத்தனையோ அம்மா அப்பா கைகளில் மல்ர்ந்த அழகு உருவங்கள் அந்த மூன்று
படிகளை அலங்கரிக்கும்.
செலவில்லாத கொலு.
காலையில் எழுந்திருக்கும் போதே இன்று புதிதாக என்ன செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு கொலு பக்கத்தில் உட்கார்ந்து அசை போட்டுவிட்டு, பொம்மைகளைத் தொடாமல் தள்ளி நின்று அழகு பார்த்து, மாலை வந்ததும், வீட்டுக்குக் கொலு பார்க்கவரும் சிறுவர் சிறுமியரின் அருட்புரிவாய் கருணைக்கடலே, எனையாளும் மேரி மாதா, பாடல்கள் எல்லாம் கேட்டுஊர்சுற்றல் முடிந்து
நம் வீட்டுச்சுண்டலையும் சாப்பிட்டு ஒவ்வொரு பொம்மைக்கும் குட்நைட் சொல்லாத குறையா பார்த்துவிட்டுப் படுக்கப் போகும் ஆனந்ததிற்கு ஈடேது??
சரஸ்வதி பூஜை அன்று படிக்கவேணும்கிற ஆர்வம் கட்டுக்கடங்காமல் போகும்:)அன்ரு இரவு சாஸ்திரத்திற்கு ஒரு பொம்மையை அம்மா படுக்க வைத்துவிடுவார்கள். படு சோகமாக இருக்கும்.
ஒரு நாள் தான். விஜயதசமி அன்று பள்ளிக்குப் போய் விட்டால் தீபாவளிப் பட்டாஸ் பேச்சில் வந்துவிடும்.

கொலுவுக்கு வந்ததற்கு நன்றி மக்களே.:))Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

22 comments:

துளசி கோபால் said...

கரடியும்,குதிரையும் நிஜம்மாவே நல்லா இருக்கு.


ஹயக்ரீவர் அட்டகாசம்.

கீதா சாம்பசிவம் said...

விட்டுப் போனது எல்லாம் தேடிப் பிடிச்சுப் படிச்சாச்சு, நல்லா எழுத்தில் மெருகேறி வருகிறது. நல்லாத் தான் ட்யூஷன் எடுத்திருக்காங்க, பெசண்ட் நகர்க் கடற்கரையிலே, அருமையான பதிவுகள். இன்னிக்குத் தான் நேரம் கிடைச்சது படிக்க.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி.
இந்தத் தடவை ஹயக்ரீவர் இடம் மாறி விட்டார். துபாய்க்கு:)))
பின்ன ஏர்லைன்ஸ் பிழைக்கவேண்டாமா..
சிங்கத்துக்கிட்ட சொல்றேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா,
கொலுவெல்லாம் எப்படிப் போயிண்டு இருக்கு..
கனெக்ஷன் வந்து விட்டதா.
மெள்ளவே படிக்கலாமே. எங்கே போகப் போகிறது எழுத்து, கடவுள் புண்ணியத்தில் வரும் நல்ல நாட்களில்
நல்லவற்றையே படிக்கலாம்.

நாகை சிவா said...

கொலு சூப்பர்...

முத்துலெட்சுமி said...

கரடிகுதிரை நிஜமாவே நல்லா வந்த்ருக்கு ..அது ஏன் மேலேருந்து எடுத்திருக்கீங்க படத்தை...
கொலு கொசுவத்தி நல்லா சுத்திஇருக்கீங்க.. :)

Anonymous said...

//நேயர்களே,.... சக பதிவர்களே... இதற்கு மேல் எழுதப் போவது இன்னோரு கொசுவர்த்திப் பதிவு.
ஸோ, எச்சரிக்கையாக இருப்பவர்கள், மன உறுதி இல்லாதவர்கள் வேறு பதிவுக்குப் போய் விடுங்கள்:))//

வ‌ல்லிம்மா, கொசுவ‌த்தி ப‌திவு போர்னு யார் சொன்னாங்க‌. கொசுவ‌த்திப்ப‌திவுல‌ தான் எல்லாருக்கும் ப‌ல‌ நினைவுக‌ள‌ கிள‌றிவிடும். கொலு ந‌ல்லா இருக்கு

கீதா சாம்பசிவம் said...

ஹயக்ரீவருக்கு அடிச்சது சான்ஸ், இலவசமாய் துபாய் போயிட்டார். எவ்வளோ பெரிய கொலு!

வல்லிசிம்ஹன் said...

முத்துலட்சுமி,
கொலுவுக்கு டெல்லீலேருந்து வந்திட்டீங்க.

அப்போ எடுத்தபோது, குதிரை நிக்காம அடம் பிடிச்சுது.
அதான் டாப் ஆங்கிள்.:))
நன்றிப்பா.
இப்போ அதுக்குக் கால் சரி செய்தாச்சு.

வல்லிசிம்ஹன் said...

சின்ன அம்மிணி,
எங்க கொலுவுக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றிப்பா.
இப்ப வச்சிருக்கிற கொலுவைப் போட்டோ எடுத்துட்டேன்.
அப்லோட் செய்யத்தான் முடியலை.

கண்டிப்பா கொலுவுக்கு கௌரவம் செய்ய வேண்டியதுதான்.,
கொசுவத்தி கொளுத்தியாவது...

வல்லிசிம்ஹன் said...

கீதா, இதான வேண்டாம்கிறது. ஒரு தட்டு பொம்மைகளைப் பார்த்துட்டு, பெரிய கொலுனு கதைக்கிறீங்களா.:)

அவர்...ஹயக்ரீவர், இலவசமாப் போகலைப்பா.
பைசா கட்டித்தான் போனார்....

ambi said...

//கரடியும்,குதிரையும் எங்கள் வீட்டு சிங்கம் செய்தது.
நல்லா இருக்குனு சொல்லிடுங்க//

குதிரையும் கரடியும் தான் நல்லா இருக்கு. போதுமா? :))

யப்பா! ஹயகிரீவர் ஆஜானுபாகுவா ஜம்முனு இருக்காரே!

பதிவும் நல்லா இருக்கு. இவ்ளோ சொல்லி இருக்கேனே, சுண்டல் கிண்ணத்தை கண்ணுலயாவது காட்டுங்க. :p

மதுரையம்பதி said...

நல்லா இருக்கு படங்கள்....அப்படியே ஒரு சுண்டல் படமும் போட்டிருக்கலாம்...

வல்லிசிம்ஹன் said...

அம்பி,வரணும் வரணும்.
உங்க ஊரு தசரா எப்படிப் போய்க்கொண்டிருக்கு.

சுண்டல் படம் அடுத்த பதிவில்:)
வந்ததுக்கு ஒரு பாட்டுப் பாடிட்டுப் போகக் கூடாதா:)))

வல்லிசிம்ஹன் said...

வாங்கோ மதுரையம்பதி.,
மௌலி!!
அம்பியும் நீங்களும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. சுண்டல் படம் சுசி ருசியாப் போட்டு விடுகிறேன்.:))

ambi said...

பாட்டு தானே இதோ பாடிட்டா போச்சு!

"ஜானகி தேவி, ராமனை தேடி இரு விழி வாசல் திறந்து வைத்தாள்!

ராமன் வந்தான்! மயங்கி விட்டாள்! தன் பெயரை கூட மறந்து விட்டாள்!"

என்ன ராகம்? தாளம்?னு TRC சார் சொல்லுவார். :p

இலவசக்கொத்தனார் said...

நல்லாத்தான் சுத்தி இருக்கீங்க. படிகளை அடுக்குவதும் அதன் மேல் வெள்ளைத்துணியை விரிப்பதும் என ஆரம்பமாகும் அட்டகாசங்களை நினைத்துப் பார்க்கிறேன். சுண்டல் ரெடியா?

வல்லிசிம்ஹன் said...

அம்பி, எல்லாக் கொலுவிலேயும் இதே பாட்டா:))

ராமன் தேடிய சீதைனு கூட பாட்டு இருக்கே .. தெரியாதா:))
பாட்டு ரொம்ப நன்றாக இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கொத்ஸ்.
அதெல்லாம் தனி சுத்தல்:)

கொலுப்படிகள் வராத காலம் அது. வீட்டில இருக்கிற பென்ச், மேஜை,கவுத்திப்போட்ட மர பீரோனு படிகள் அமையும்.

மேஜைக்குள் சில புத்தகங்களை வைத்துவிட்டு,கொலு முடிந்தபிறகு அவசரமாகப் படிக்கும் கூத்தும் செய்வோம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி ராகம் வேணுமுனா நான் சொல்லலாம். தாளம் உன்னுடையதங்கமணி தான் சொல்லனும் ஏன்னா அவுங்க தாளாத்துக்குதானே இப்போ ஆடறே.
வல்லியம்மா யாணை நல்லா இருக்கு.இன்னும் சுண்டல் வந்து சேரலே

வல்லிசிம்ஹன் said...

வரணும் தி.ரா.ச.
எப்பவோ அனுப்பியாச்சே சுண்டல்????
வந்து சேரலியா:))))
இன்னோண்ணு,, யானை எங்க இருக்கு. அது ஒரு குண்டு கரடி. கூடுதலா குண்டா இருக்கு அவ்வளவுதான்.
யானையும் செய்து இருக்கார் சிங்கம். அதை அடுத்த பதிவில பொடறேண்:))
நன்றிம்மா.

SALAI JAYARAMAN said...

கொலுப் பதிவில் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு எழுதிய கடிதத்தை இங்கு உங்கள் பார்வைக்கும் கொண்டு வரவேண்டுமென்று தோன்றியது. என் பதிவுகளை கீதாசாம்பசிவம் மலரும் நினைவுகளிலும் காணவும். o.k விஷயத்துக்கு வருவோம்,

கொலுவைப் பத்தி எழுதினதும் எதிர் சேவையைப் போல் என் கொலு சேவை அதான் ஒவ்வொரு ஆத்துக்கா சுண்டல் வாங்கப் போறது பத்தித்தான். கொலுன்னாலும் எல்லாராத்துக் கொலுவும் ஒண்ணா இருக்காது. ஏற்ற தாழ்வுகள் இருக்கும். ஆனால் ஏழ்மையைப் பரிகசிக்கும் குணம் யாருக்கும் கிடையாது. எங்கள் கொலுப்படை சாத்வீகப் படை. அதிரடி கிடையாது. எங்கள் தெருவில் மூன்று பகுதி. எங்கள் படையில் பெண் வீரர்களும் உண்டு. எச்சுமி, லதா, பிச்சம்மா இவாள்ளாம் பெண் பிரிகேடியர்ஸ். எங்களுக்குள் எழுதப்படாத சட்டங்கள் உண்டு. எங்கள் கூட்டத்துக்கு தனி மரியாதை. எல்லாராத்திலேயும் எங்களுக்கு கொலுக் கதவுகள் திறந்தே இருக்கும். ஏன்னா எங்களில் அரசைவைப் பாடகிகள் உண்டு. நாங்களும் ரொம்ப சமத்து. மொத்தம் 10, 12 பேர் இருப்போம். அனைவரும் எங்கெங்கோ இருக்கிறோம். தொடர்பே இல்லை.

இதில் வக்கீல் PSR ஆத்துக் கொலு ரொம்ப விசேஷம். கொலுக்கு ஒரு மாசத்திற்கு முன்பே அவா வீடு களை கட்டிடும். பரணிலேர்ந்து பொம்மையெல்லாம் எடுத்து, உடைந்த பொம்மைக்கெல்லாம் மரியாதை செய்து அவைகளை நல்லடக்கம் பண்ணிடுவோம். போர்க்கால அடிப்படையில் ராணுவ உதவிக்கு எங்கள் குழுக்களின் ஆண் பிரிகேடியர்ஸ் ஆத்து, ராமகிட்டு (அதான் இராமகிருஷ்ணன் தான் மருவி ராமக்கிட்டு வாயிட்டான்) முன்னாடியே போய் மாமிக்கு உதவியாய் படிகட்டி, விளக்கு மாட்டி, பித்தளை விளக்கையெல்லாம் புளிபோட்டு தேய்த்து மாமியை அசத்திடுவோம். எங்களுக்கு ஒன்பது நாளும் ஸ்பெஷல் பாக்கெட்டில் சுண்டல் உண்டு. ஏரியா விட்டு ஏரியா போறதில்லை. அங்கே எதிரி நாட்டு பிரிகேடியர்ஸ் வட்டங்கட்டி பெண் பிரிகேடியர்ஸ் கேலிக்கு ஆளாக்கப் படுவார்கள். 8ம் கிளாஸ் வந்தபோது கொலு போவது நின்றது. பெண் பிரிகேடியர்ஸ் பெரியமனுஷி ஆயிட்டாள்னு நியூஸ். என்ன அதே அச்சுப்பிச்சு கொண்டை, பாவாடை சட்டை என்ன பெரிய மனுஷி ன்னு அப்பாவித்தனமாய் ஆண் பிரிகேடியர்ஸ் டிஸ்கஷன். பெரியவளாயிட்டான்னா நாங்கள்லாம் திடீரென்று எல்லாரும் 5 அடி 6 அடி உயரமாயிருப்பான்னு நினைச்சோம். பக்கத்தாத்து மாமா வந்து டேய் தத்துப்பித்துக்களா அவாளோடலாம் இனிமே சேரப்பிடாதுன்னு சொன்னார். எச்சுமி, லதா எங்களோட விளையாடறதையும் நிறுத்திட்டா. ரொம்பப் பெரிய மனுஷின்னு நினைப்பு. இன்னிக்கு எல்லாரும் பாட்டியாயிருப்பா.


இன்று 6 வது படிக்கும் பையனுக்கூட காதல், கல்யாணம், உறவு, பிரசவம் ன்னா என்னன்னு தெரிகின்றது. இது நல்லதா கெட்டதா? ஒண்ணும் புரியலே. இதில் பள்ளிகளில் செக்ஸ் கல்வி வேறு வேண்டுமென்று அறிவு ஜீவிகள் மெனக்கிடுகிறார்கள். ரசனை கெட்ட தலை முறை உருவாகிவிட்டது. எத்தனை பெண் பிள்ளைகளுடன் இருந்திருக்கிறோம். ஒரு காதல் உண்டா? ஓடிப் போனதுண்டா? நல்ல கலாச்சாரத்துடன் வளர்க்கப் பட்ட காலம் அது. அறிவிலும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. இதோ மிடில் ஏஜில் கம்யூட்டர் கற்றுக் கொண்டோமே. நல்ல பணியில் உள்ளோமே. அன்று நிறைவாய் இருந்தோம். குறைவான வருமானம் இருந்தது. இன்று நல்ல வருமானம், விருந்தோபலற்ற, கலாச்சார சீர்கேடடைந்த ஒருசமுதாயம் உருவாகி வருகிறது. சீக்கிரம் விழித்தால் நலம்,

நம் காலம் அது ஒரு கனாக் காலம்.

"அந்த நாள் போனதம்மா, ஆனந்தம் போனதம்மா, இந்த நாள் அது போல இனிவருமா" என்ற பாடல் வரிகள்தான் காதில் கேட்கிறது.

பதிவுக்கு பதில் ரொம்ம தாமதந்தான். இருந்தாலும் மன்னிக்கவும். பழைய நினைவுகளை அசை போடுவது அலாதி சுகமே. வாய்ப்புக்கு நன்றி.