About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, October 26, 2011

இன்னுமொரு தீபாவளி நாள் கதை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இத்தனை மழை கொட்டுகிறதேமா. எப்படி வந்தாய்/ என்ற கேட்ட  வண்ணம்  கதவைத் திறந்தேன்.

ராணியும்  'இன்னாமா செய்யறது . நல்லநாள் வீடு கூட்டிப் பெருக்காமல் இருந்தால் நல்லா
இருக்குமா.''
எப்போது புதுசு  உடுத்திக் கொள்வாய். என்ற கேட்டவாறு ,அவளுக்குக்
கொடுக்கவேண்டிய பட்டாசு, மத்தாப்புக்களையும்,வெற்றிலை,பாக்கு மஞ்சள்
 எல்லாம் வைத்துக் கொஞ்சம்  பணமும் வைத்து,மிக்சர்,மற்ற இனிப்புகளையும்  வைத்து,
அவளிடம் உதவிக்குச் சென்றேன்.


அவள் கணவர்  அருணாச்சலமும் வந்திருந்தார். அம்மா  மாவிலக் கொத்து
கட்டிட்டேம்மா. மழைக்கு முன்னால   இதை அனுப்பிடுங்க, அமாவாசைக்கு
 நடுவீட்டுப் படையல்  செய்யணும் என்றவாறு  சென்றார்.

காப்பி எடுத்துக்கறியாமா  என்று  கேட்க ராணியைப் பார்க்கப்
போனால் பாத்திரங்களைக் கழுவின  கைகளால் அவ்வப்போது  கண்களைத்
துடைத்துக் கொண்டதைப் பார்த்து அதிர்ந்து விட்டேன்.
அமைதியான குணம் கொண்ட பெண். எட்டு வயதிலிருந்து இந்த வீட்டோடு வளர்ந்தவள்.
14 வயதில் திருமணம். ஐந்து குழந்தைகள் அதில் ஒரு பையனை
மூளைக்காய்ச்சலுக்குப்   பறிகொடுத்தவள்.
மற்ற   பசங்கள் வளர்ந்து, பெண்ணுக்கும் கல்யாணம் செய்துகொடுத்து
இப்பொழுது  பத்துப் பேரன்பேத்திகள் இருக்கிறார்கள்.
முதல் பையனுக்கு வீடு வாங்கிக் கொடுத்து விட்டாள்.
இவள் இருக்கும் விடு,அம்மா முனியம்மா  வாங்கிய ஹவுசிங் போர்ட்
வீடு.

இரண்டு பிள்ளைகளும் குடும்பத்தோடு இவளுடந்தான் இருக்கிறார்கள்.
அவ்வப்போது கசமுசா  என்று  தகறாரு வரும் சமாளித்துக் கொள்வாள்.


அதான் பண்டிகைக்குப் பணமும் கொடுத்தோமே
என்னபிரச்சினை இவளுக்கு
என்று நினைத்தபடி அவளை விசாரித்தேன்.

பணம் தேவையா, ஏன் அழுகிறாய் என்று கேட்டேன்.
இதோ வரேன் மா.என்ற வண்ணம் உள்ளே  வந்தாள்.
பணம் ஒண்ணும் வேணாம். எல்லாம் கொழுத்துக் கிடக்குதுங்க.
யரைச் சொல்ற நீ என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.

எல்லாம் வாய்ச்சிருக்கிதுங்களே பிள்ளைங்க அவனுங்களைத்தான்
என்று மீண்டும் கண்களைத் துடைத்துக் கொண்டாள்..

யாரைச் சொல்ற,?
காப்பியைக் கொடுத்தபடி  கேட்டேன்.
காப்பித் தம்ளரைக் கீழே வைத்துவிட்டு,
எல்லாம் எம் மூணு பசங்களைத்தான்மா சொல்றேன்.
நீங்க கொடுத்த  புடவை எல்லாம் கொடுத்தேன்மா.எடுத்து வச்சிக்கிட்டு,அல்லாம் வெளில கிளம்பினாங்க.
வீட்ல பண்டம் பலகாரம் செய்யணுமே, மூணு பொம்மனாட்டிகளுமாக் கிளம்பறீங்களே
  அப்படியென்ன வேலை இப்பனு கேட்டுப் புட்டேன்.
மூணு மருமவளுகளும், விருட்டுனு புருஷன்காரன் பிள்ளைங்களை அழைச்சிட்டுப் போயிட்டாங்க.
சாயந்திரமா  வந்தாங்க.ஆட்டோல போயி வந்திருக்காங்கமா.

சரி அப்படி  என்னதான் வாங்கி வாந்தாங்கனு பாக்கலாம்னா, பை பையா  உள்ளே எடுத்துட்டு
 அவுக ரூம்பில  பொட்டில வச்சுக்
கிட்டாங்க.
என்னடா மாமியார்க்காரி இருக்காளே, பாட்டிம்மா வேற இருக்காங்க. நடுவீட்ல
 வச்சு வாங்கி வந்ததைக் காமிப்போமுன்னு அந்தப்  பிள்ளைகளுக்குத் தோணலியே.
நான்  அய்யரு வீட்ல பாக்காத  துணியா.
கண்ணு போட்ருவனா. ''என்று அதற்கு மேல சொல்ல முடியாமல் மீண்டும் அழ ஆரம்பித்தாள்..
இனிமே  ஏதாவது செய்றேனானு பாருங்க. எத்தனை
வாங்கித் தந்திருப்பேன். ஒவ்வொரு கல்யாணத்துக்கும் 50ஆயிரம்  செலவழிச்சேனே.  பேறுகாலத்தில  ஆசுபத்திரிக்கு இல்ல அழைச்சுட்டுப் போனேன்.
மூணாவது பொட்டைப் பிள்ளை பொறந்தாட்டுக் கருத்தடையும் செய்து வச்சேனே.இன்னும் கந்துவட்டிக்காரனுக்குக்  கொடுத்துக் கிட்டதான்
இருக்கேன்.
இப்ப  இப்படிக் கூட்டுச் சேர்ந்துட்டு ஆட்டம் போடறாங்களேன்னு  புலம்பல்.
இது நேற்று......................................................................................................

இன்று காலைல புதுப் புடவையும் காதுகம்மலும் கண்ணாடிவளையலுமாகச் சின்னப் பேத்தியை
அழைத்துவந்த    ராணி முகம் பூவாப் பூத்திருந்தது.
என்ன விஷயம் ராணின்னு கேட்ட என்னிடம் சாக்கலேட்டை நீட்டினாள்.
அம்மா  பெரியவனோட பொண்ணு மேசராயிடுச்சிம்மா.
மஞ்சாத்தண்ணி ஊத்தணும் உன்னைத்தான்   செலவுப்பணம்  கேக்கப் போறேன். முனை வீ ட்டு அம்மாவும் கொடுப்பாங்க.

மதியம் வர மாட்டேன். பிள்ளைக்குப் புடவை எடுக்கணுமில்ல, என்று பரபரவென்று வேலைகளை முடித்துவிட்டு  ஓடிவிட்டாள்.:))))


12 comments:

ஸ்ரீராம். said...

தன்னை அவர்களுடன் சேர்த்துக் கொள்ளாமல் தனியாக (மனதில்) ஒதுக்கி வைத்துள்ளார்களே என்ற ஆதங்கமும், ஆனால் இயல்பான பாசத்தால் மறுநாளே நடந்த சந்தோஷ நிகழ்வில் அதை எல்லாம் மறந்து தன்னுடன் அவர்களை இணைத்துக் கொள்வதும் (மனதில்)...."தானாடவில்லையம்மா சதையாடுது..." என்று பாட வேண்டியதுதான்!

வெங்கட் நாகராஜ் said...

என்னதான் செய்தாலும் தாய் மனசு மாறுவதில்லை.... இல்லையாம்மா...

நல்ல கதை... பகிர்வுக்கு நன்றிம்மா....

கணேஷ் said...

எப்போதுமே பாசத்துக்கு வலிமை அதிகம்தான். குற்றம் குறைகள் எதையும் பார்க்காது. அழகாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி!

வல்லிசிம்ஹன் said...

அதுதான் நிஜம். அம்மாக்களுக்கும் வாரிசுகளுக்கும் புரிபடாத பந்தம்.
அந்தப் பெண்களும் இங்கே வரும்.

அத்தை புரிஞ்சுக்கவே மாட்டேங்கறாங்கன்னு ப்ளேட்டையே மாத்திடும்:)
இவளைப் பார்த்தால் தான் பாவமா இருக்கும்.
நன்றி ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட்.
தீபாவளி சந்தோஷமாகக் கழிந்ததா.
ஆமாம் பெத்த மனம் பித்துனு சொல்லிக் கொண்டு கடக்க வேண்டியதுதான். எதை விட்டுவிட முடியும்.:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சோகமோ சந்தோசமோ அந்த அந்த நொடி தான்..ஓடிட்டே இருக்கவேண்டியது தான் ..:)

மாதேவி said...

அம்மாக்களின் மனங்கள் இப்படித்தான் :)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கயல்.
சோகத்தைப் பிடித்துத் தொங்கினால் எந்நாளும் சோகம்தான்.
உங்கள் தீபாவளி கலகலப்பாகக் கடந்தது என்று நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கணேஷ்.
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைதானே.

அந்தப் பழமொழியெல்லாம் தெரியாதவள் இந்த அம்மா. அன்றைய வேலையைச் சிறக்கச் செய்துவிடவேண்டும். அப்புறம் புலம்பவும் செய்வார். பாவம்.அக்கறை காட்ட அதிகம் ஆள் இல்லாதவர்.

வல்லிசிம்ஹன் said...

வாழ்க அம்மாக்கள். மாதேவி. அம்மா மன்னிக்காவிட்டால் நமக்கு ஏது சொர்க்கம்.:)

அமைதிச்சாரல் said...

அந்த நேரத்து ஆதங்கத்துல புலம்புனாலும் நீரடிச்சு நீர் விலகாதே.. இல்லையா வல்லிம்மா :-))

நானானி said...

நல்ல நிதர்சனம்.