Blog Archive

Wednesday, April 29, 2020

காய்கறி தோசை.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

காய்கறி தோசை.

Vegetable utappam recipe in tamil|How to make vegtable utappam ...

இன்றைய மாலை டிபனுக்கு மாமியார் செய்யும் காய்கறி தோசை 

செய்தேன் .

52 வருடங்களுக்கு முன்  ,இரண்டாவது  பிரசவத்தின் போது 
ஒரு மாதம் வந்து இருந்தார்.
மகன்  வேலைக்குப் போகும் முன்  அவசரமாகச் செய்து கொடுப்பார்.
அவரும்  மறுப்பு சொல்லாமல்  சாப்பிட்டுக் கிளம்புவார்.

வெறும் அரிசி மாவு மட்டுமே தேவை.

கூடவே,  ஆழ்வார் பாடினது மாதிரி, நன்றாக வதக்கிய 
பச்சைப் பட்டாணி, பீன்ஸ், உ.கிழங்கு,காரட், கொத்தமல்லி,
ப.மிளகாய்   எல்லாம் கலந்து 
அரிசிமாவில் வெண்ணெய்,உப்பு,  வெந்நீர், விட்டு 
மெத்தென்று   பிசைந்து கொள்வார்.

அப்படியே உருட்டி தோசைக்கல்லில்  தட்டி 
சுற்றிலும்  நல்லெணெய் ,நெய்  கலந்து 
இருபுறமும்  வேகவிட்டு முறுமுறு  என்று எடுத்துச் சூடாக மகனின் தட்டில் 
பரிமாறுவார்.
பார்க்கவே அழகாக இருக்கும்.

வெங்காயம்  கிடையாது:)

நீங்களும் செய்து பார்க்கலாம்.


Tuesday, April 28, 2020

Ghar More Pardesiya - Full Video| Kalank | Varun, Alia & Madhuri| Shreya...

வல்லிசிம்ஹன்

என் உயிர் நின்னதோன்றோ!

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
ஏதோ  ஒரு  வீரன்  நிற்பது  போல ஒரு தோற்றம் இந்த நிழல்
படம் எனக்கு பிரமை கொடுத்தது.
பாஹுபலி   தொடர்ந்து பார்ப்பதின்  விளைவோ என்று நினைத்தேன்.
அது இல்லை .என் நிஜ வாழ்வின்  கதா நாயகன், கண் முன்னே 

நிகழ்த்தி  ,என்னை அதிர வைத்த  கதை.
சிங்கம்  இப்படித்தான் உயரத்தில் நின்று  போகன்வில்லாக் கிளைகளை வெட்டுவார்.

வீட்டின் மரம்  போகிறவர் வருகிறவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று வெளியே ஏணியை வைத்து 
ஏறும்போது நடைப்பாதையில் இருக்கும் பள்ளங்கள் சில சமயம் 
ஏணியை ஆட்டம் கொள்ள வைக்கும்.

போகிற வர நண்டு சுண்டு ,மாமிகள் மாமாக்கள் எல்லாம் 
என்ன ஹார்ட் வொர்க்  என்று பாராட்டிவிட்டுப் போவார்கள்.

சற்று ஆடினாலும்,
வருகிற பஸ் ,கார் இடித்துவிடப் போகிறதே என்று பயமாக இருக்கும்.

 இந்த நிழல் அந்த சம்பவத்தை நினைவுக்கு கொண்டு வந்தது.

Saturday, April 25, 2020

எங்கோ ஆரம்பம் சீக்கிரம் விலகும்.

வல்லிசிம்ஹன்  எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 
எங்கோ ஆரம்பம் சீக்கிரம் விலகும்.

மாற்றங்கள் கொண்டு வந்தது இந்த நிகழ்வு.

குடும்பம் ஒன்றானது. ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம். சில புதுப்
படங்களைப் பார்க்கிறோம்.
வளர்ந்த முடியை அவரவர் சரி செய்து கொள்கிறார்கள். தெருவெங்கும் நிசப்தம். நடக்கும் செல்லங்களும் அவர்களது எஜமானர்களுமே(!!!!)
இருக்கிறார்கள்.

முகமூடி இல்லாமல் யாரும் வண்டி ஏற முடியாது.
வண்டியே  நகர மறுத்தது.
அதற்கு உயிர் கொடுக்கும் பாட்டரிக்கு உயிர் கொடுக்க
ஒரு கேபீள் தேவை.

அந்தக் கேபிள் கொண்டுவருவதற்கும் யாரிடமும்
முனைப்பு இல்லை.
அமேசான் வழி அதை வாங்கியாச்சு.
இனி நம் கையே நமக்கு உதவி.
பழைய பதற்றங்கள்,
ஓடு ரயிலைப் பிடி,
 எழுந்திரு ப்ராஜெக்டை முடி,
20ஆம் தேதிக்குள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்
என்பதெல்லாம் இல்லை.
எல்லோரும் வீட்டில் இருப்பதால், முதலாளி,தொழிலாளி
என்ற பேதம் சற்றே ஒதுங்கி விட்டது.
பேசுவதில் ஒரு நிதானம். அடக்கம் எல்லோரிமும் வந்திருக்கிறது.

அம்மா நாள் முழுவதும் செய்யும் வேலைகளைப்
பார்க்கிறார்கள். அவரவர் அறைகளைச் சுத்தம் செய்வதிலும், 
உடைகளை எடுத்து வைப்பதிலும் அதிக கவனம் காட்டுகிறார்கள்.
மாப்பிள்ளை எல்லா வேலைகளிலும் பங்கு கொள்கிறார்.

 அவ்வப்போது விவாதங்கள் வராமல் இல்லை.
வீட்டுக்குள்ளே அடைந்து கிடப்பது
பலவித பயங்களை எழுப்புகிறது. என்னால் முடிந்தவரைப்
பேரப்பிள்ளைகளிடம் அணைப்பு காட்டி,
உலகத்தில் ஆரோக்கியத்துக்கு மேல் எதுவும் இல்லை
என்பதைச் சொல்லுகிறேன்.
பயத்தினால் வரும் சினங்கள் சற்றே அடங்குகின்றன.

மீண்டும் கலகலப்பு சேர்ந்து கொள்கிறது.
மீண்டும் பாஹுபலி பார்த்தோம்.
மஹாபாரதத்துக்கும் இந்தப் படத்துக்கும் இருக்கும்
ஒற்றுமை,வேற்றுமைகளை விவாதிக்கிறோம்.

ஒரு குடும்பம் முன்னேற வேண்டும் என்பதில் தந்தைக்கும் 
தாய்க்கும் இருக்கும் பொறுப்புகளையும்
அதை வெற்றி பெற வைப்பது பிள்ளைகளின் 
கடமை என்பதையும் அவர்களுக்குச் சொல்ல வேண்டி இருக்கிறது.
அவர்கள் வளரும் சமுதாயம் ஒரு சுய நல சமுதாயம். 

20 வயதுக்குள் சம்பாதிக்கும் திறன் வந்து விடுகிறது.
அத்துடன் பெற்றோரின் இன்றைய ய மனதுக்கும் 
அமெரிக்கப் பிள்ளை மனதுக்கும் எத்தனையோ
சிந்தனையில் தடுமாற்றங்கள்.

இதெல்லாம் மாற இறைவனே ஏற்படுத்திக் கொடுத்த 
ஒரு சந்தர்ப்பமாகப் பார்க்கிறேன்.
பணமிருந்தால் எதை வேண்டுமானாலும் 
சாதிக்கலாம் என்ற மன நிலை 
எங்கோ ஒரு மூலையில் படிவதை முளையிலே
கிள்ளி எறிய மாபெரும் சந்தர்ப்பம்.

சாதி த்தவர்களை முடக்க ஒரு கிருமியால் முடிந்ததென்றால்
இறைவனின் தீர்மானத்தை நாம் மதிக்க வேண்டும் 
என்ற ஒரு பொறி இப்போது
பற்றிக் கொள்கிறது. நமக்கு ஆன்ம பலம் நிறைய.
அதை இந்தக் குழந்தைகளிடமும் போதிக்க எங்களுக்கு வரம் கொடுத்திருக்கிறான் 
இறைவன். 
நாம் அனைவரும் வாழ்வோம் அவனுடைய கருணையால்.

Thursday, April 23, 2020

நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி

வல்லிசிம்ஹன்

எல்லோருக்கும்  வளமாக  வாழ வேண்டும் 

அனைவருக்கும் வணக்கம். 
என் எண்ணங்களை அப்படியே மற்ற வலை ப் பதிவுகளில் 
இடுவதனாலோ  என்னவோ , இந்தப் பதிவிலும் எழுத வேண்டும் என்ற எண்ணம் குறையலானது.
சுற்றி நடக்கும்  விஷயங்களை  இங்கே குறிக்காவிட்டால்,
வலைப்பதிவு இருந்தும் 
வாளா விருக்கும் மட் டித்தனத்தைப் பிரபலப்படுத்தும்:)

பிப்ரவரி  29 வந்ததிலிருந்து,
சியாட்டிலில் ஆரம்பித்த இந்தக் கிருமி பற்றிய செய்திகள் அளவுக்கு மேல் 
பயத்தைக் கிளம்பினாலும்,
நாம் இருக்கும்படி இருப்போம்,

மற்றது இறைவன் கையில்  என்பது நிச்சயமான 
வகையில்,
 அப்போதிலிருந்து இன்று வரை  வாசல் கதவைத் திறக்கக் கூட இல்லை.
பிறகு காய் கழட்டுவனுமே.
மாப்பிள்ளையும், மகளும் 75   சதவிகித  வேலைகளை செய்துவிடுகிறார்கள். அவர்களும் வெளியே போவதில்லை.
தங்கள் அலுவலக நேரம் போக மிச்ச நேரம் கணினியில் 
ஆன்லைன் ஆர்டர்கள் வேறு வேறு கடையில் 
செய்வதில் செலவழிகிறது.

சர்வ பொருட்களையும்  சோப்புத் தண்ணீரில்  கழுவி, மீண்டும் நல்லதண்ணிரில் அலம்பித துடைத்து 

சேமிக்க வேண்டி இருக்கிறது.
அதிகமாகிவிட்ட பொருட்களை, தர்ம நிறுவனங்களுக்குத் தொலைபேசினால் அவர்கள் இல்லாதவர்களிடம் சேர்ப்பார்கள்.

நம் ஊரிலும் சாப்பாடு தயாரித்து 
கொண்டு போய்க் கொடுப்பதை  வழக்கமாகக் 
கொண்டிருப்பதை படித்து  சந்தோஷமாக இருந்தது.

மிரட்டும் செய்திகளைக் கேட்பதைக்  குறைத்துக் கொண்டு விட்டேன்.
எந்த விதத்திலும் நம் உதவி அங்கே தேவைப்படப் போவதில்லை,,
பின் கேட்டு என்ன லாபம்/
ஊர்க்காவலனாக இருப்பவரின் உண்மைக்குப் புறம்பான பேச்சுக்களைக் 
கேட்டு அலுப்புதான் மிச்சம்.

நம் ஊரில் இருக்கும் கட்டுப்பாடுகள்  அதிசயிக்க வைக்கின்றன.
நாங்கள் இருக்கும் இந்த மாநிலமும் எச்சரிக்கைகளை நல்ல படியாகவேக் கடைப்பிடிக்கின்றனர்.

வியாதி பரவுவது  ஒரு பக்கம். 
திடீரென்று ஏற்படும் மார்படைப்பு, ஸ்ட்ரோக் , பிரசவம் எல்லாம் பாதுகாப்பான முறைகளில் கவனிக்கப் படு கின்றன.

இத்தனை நாட்கள் வரை  அஞ்சிக்கொண்டிருந்த மக்கள் இனி தாராளமாக ஹெல்த் கேரை அணுகலாம். ஆவன  செய்யப் படும் . நோய்த்தொற்று இருக்கும் இடத்தில் இவர்கள் சிகித்சை நடக்காது 
என்று உறுதி மொழி அளிக்கப் படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் குறைந்து வரும் எண்ணிக்கை போல இங்கே குறைய இன்னும் நாட்களாகும்.

பள்ளிகள் இனி அடுத்த வருடம் தான். அதாவது கோடை விடுமுறை முடிந்து செப்டம்பர் மாதமே பள்ளி திறக்கப் படும்.

பிறகும், அதி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் 

நவம்பர் ஃ ப்ளூ சீசன். பின்னாலயே இதே தொற்று இரண்டாம் சுற்று வர போகிறது என்பதுதான் இன்றைய நிலைமை.

கண்டிப்பாய் நாம் மீள்வோம்.
நாம் அவனை நோக்கி எழுப்பும் பிரார்த்தனைகள் 
கட்டாயம்  இறைவன் காதில் விழும்.

விசேஷமாக ஏதாவது கேள்விப்பட்டால் மீண்டும் பதிகிறேன்.
நலம் வாழப் பிரார்த்தனைகள்.






How a Kerala couple built a sustainable mud house and forest of their dr...

வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்

Wednesday, April 22, 2020

புதுமை. தாய்மை

வல்லிசிம்ஹன்
https://youtu.be/bvtwWhKdxhM

Tamil Song Lyrics: சமுத்திரம் - சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்

Tamil Song Lyrics: சமுத்திரம் - சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்: சந்தோஷ சாரல் தினம் ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ சந்தோஷ சாரல் தினம் ... வல்லிசிம்ஹன்

A.R. Rahman - O Rey Chhori Best Lyric Video|Lagaan|Aamir Khan|Alka Yagni...

வல்லிசிம்ஹன்

இனிய மாலை வணக்கம். லகான் பாடலை ஒட்டி ,
இன்னோரு தமிழ்ப் பாடல் வந்தது.
சந்தோஷக் காற்று தினம் ஜன்னல் என்று வரும்

Tuesday, April 21, 2020

TAMIL RARE OLD--Thendrale nee selvaai(vMv)--MANTHIRAVATHI 1956

வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 

Monday, April 20, 2020

பேனாவின் காலங்கள்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழவேண்டும்.

நம்ம ஏரியா , கவுதமன் ஜி பக்கத்தில் , அன்பர் சுப்பிரமணியம்,
அழகாக பேனாவால்
எழுதி பகிர்ந்திருந்தார்.
பேனாக்களும், இங்க பாட்டில்களும்,
இங்க்  கரைகளும் ஆக்கிரமித்த காலம் ஒன்று இருந்தது.
கடிதங்கள், பத்திரங்கள்  எல்லாம் எழுத அவை உபயோகப் பட்டு வந்தான்.
எழுத்தாளர்களின் முக்கிய படைப்புகளும் 
பேனாவால் எழுதப் பட்டவையே.


எகிப்து  மன்னன் சொல்வதையெல்லாம் 
படி யெடுக்க ஒரு ஆள் எப்பொழுதும் இருப்பாராம்.

அங்கேதான் பாப்பிரஸ் மரம், ஓலைகள்,எழுத்தாணிகள் 

உபயோகப்பட்டு வந்தன.

நம் அரசர்களும்  ,புலவர்களும் எழுத்தாணி உபயோகித்ததைத் திரைப் படங்களில் பார்த்து இருக்கிறோம்.

ஏடுகளைப்  பார்த்து நாடி ஜோஸ்யம் சொல்வதையும் 
பார்த்திருக்கிறேன்.
நம் தமிழ்த் தாத்தா,எத்தனை இடங்களுக்குச் சென்று காவியங்களை மீட்டு வந்தார் என்பதுவும் தெரியும்.
நம் கீதா சாம்பசிவம்  அவரைப் பற்றி   எழுதியது எல்லாமே காவியம்.

நாங்கள் படிக்கும் போது ஆறாம்  வகுப்பிலிருந்து பேனாவைக் கையில் பிடிக்கக் கற்றுக் கொடுக்கப்படும்.

அந்த லாவகத்தைக் கற்க நான் மிகச் சிரமப்பட்டேன்.

குழந்தைகள்  காலத்தில் ரியினால்ட்ஸ் வந்து விட்டது.
எங்கள் மகனுக்கும் ,அவன் தந்தைக்கும் பழைய பேனா  மோகம் நிறைய உண்டு.
பலவிதமான உலகத்தரம் மிக்க பேனாக்கள்  துபாயில் ஆன்ட்டிக்  கடையில் கிடைக்கும்.
பேனா, வாட்ச்,  என்று ஒரு பொக்கிஷத்தையே சேமித்தார்கள் 
தந்தையும் மகனும்.
அப்பா  ரிடையர் ஆகும் வரும் தபால் ஆபிஸ் கட்டைப் பேனா, இங்க பேனா, என்று விதவிதமாக வைத்திருப்பார்.
கணினி எல்லாம் தொட்டதில்லை. என் மக்களுக்காகவும் , எத்தனை ஜாதகங்கள் எழுதி ருப்பாரோ கணக்கு இல்லை.

1996  வரை டயரி எழுதி வர  வருடா வருடம் தம்பிகள் பேனாக்களும் டயரிகளும் கொடுப்பார்கள்.
Add caption
பழைய காலத்து இங்க்  குப்பிகள் 

 பழைய   ஃ பௌண்டைன்  பென் 

பச்சை இங்க்  என் விருப்பம்.







Jayakanthan Short Story - 'Agni Pravesam' [Audio] [Tamil]

வல்லிசிம்ஹன்

Saturday, April 18, 2020

கங்கா,விசாலம் படமும் புத்தகமும்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும் .

கங்கா,விசாலம்  படமும் புத்தகமும்.

His film world - Frontline

இணைய படுத்தலில் செய்திகள் கூட விட்டுவிட்டு வருகின்றன.
உமா கொடுத்த குறிப்பு  என்னை வெகுவாக பாதித்தது.
சில நேரங்கள் படித்த காலத்திலேயே ,கங்காவுக்காக 
வருந்திய நேரங்கள் பல.
லட்சுமி,  ஸ்ரீகாந்த் ,சுந்தரிபாய் நடித்த படத்தைப் பார்த்து 
சங்கடம் மேலும் அதிகரித்தது.
இந்த மனுஷனுக்குத்தான்  எத்தனை வீர்யம் 
எழுத்துக்களில் காண்பிக்க முடிந்தது.

இந்தப் படைப்பு ஒரு காவியம் அல்லவா.

உமாவும் பேசினாள்  நேற்று மதியம்.
அவள் பெற்றோருடன்  குடியிருந்த காலனியில் இதே சமூகத்தைச் சேர்ந்த 
அம்மா ,பிள்ளை,பெண். நாலு வீடு தள்ளி இருந்தார்களாம்.
பெண்  ஒரு மில்லில் மேனேஜிங்  டைரக்டரின் 
காரியதரிசி.
வயது 29 ஆகியும் திருமணம்  கை  கூடவில்லை.
தம்பி படித்து அங்கிருந்த பேருந்து  கம்பெனியில் 
வியாபார பிரிவில் சேர்ந்து நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்த காலத்தில் 
விசாலி, நம் கதா நாயகி 
வீட்டுக்கு வரும் நேரம் குறைந்தது.

நல்ல உடை உடுத்தி அவள்  செல்லும்போது 
கண்டு பொறாமைப் படாத  குடும்பமே 
கிடையாது. வெறும் காரியதரிசிக்கு  இத்தனை ஆடம்பரமா 
என்று அதிசயித்தனர்.


அம்மாவும்  அவளும் வாக்குவாதம் செய்வது 
தெருவிலே கேட்கும் அளவிற்கு  விஷயம் வளர்ந்து விட்டது.

உமா போன்ற பெண்களுக்கு அவள் ஒரு கதா நாயகியாகத் தெரிந்தாள் .

திடீரென்று ஒரு நாள்  அவள் வீட்டில் போலீஸ் நடமாட்டம். 
உயிர் இழந்த விசாலத்தின் உடல் அழகாகக் கட்டியிருந்த நீல நிற நைலக்ஸ்  புடைவையுடன்  ஆம்புலன்சில்  கொண்டு 
போகப்பட்டது.

அனைவரும்  அவள் தற்கொலை செய்து கொண்ட 
செய்தி  கேட்டு திடுக்கிட்டனர்.
நெடு நாட்களுக்கு  விசாலியின் அம்மா, அடிவயிற்றிலிருந்து கதறுவது தெளிவாகக்  கேட்டது.

பிறகு  சேகரிக்கப் பட்ட செய்தி,
விசாலமும் ,அவள் கம்பெனி  முதலாளியும்,
காதல் செய்ததும்,
அது கல்யாணத்தில் முடியாததால்,
தன்  வாழ்வை அவள் முடித்துக் கொண்டதும் தெரிய வந்தது.


உமாவிடம் நான் கேட்டேன். கங்கா இவளை மாதிரி 
ஏமாறவில்லையே. தன்னைத் தூய்மையாகத் தானே வைத்துக் கொண்டால். பிரபு, அவளை விட்டு விலகினாலும் தன்னை மாய்த்துக் 
கொள்ளவில்லையே என்று சொன்னேன்.

அந்த  வேற்றுமையை நான் சொல்லவில்லை.
அந்தக் காலனியில் இருந்தவர்கள் பேசியதே அவளைக் கொன்றுவிட்டதோ என்று எனக்குத் தோன்றியது.

காதல் தோல்வியைக் கூட சகித்துக் கொள்ளலாம். அம்மா,தம்பி 
இவர்களின் கடும் சொல் 
 பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏளனம், இதெல்லாமும் அவள் முடிவுக்கு காரணம்.
இத்தனைக்கும், சாதி வித்யாசத்தினால் அவள் திருமணம் நின்றது.

ஊர் அறிய, வாசலில் வந்து அவளை வண்டியில் அழைத்துச் சென்ற 
முதலாளிக்கு 
அவளைத் திருமண பந்தத்தில்  வைத்துப் பார்க்க முடியவில்லை.

கங்கா  மாதிரி தைரியமாக வாழ்வை எதிர் நோக்கவில்லை விசாலம். அநியாயமாக ஒரு உயிர் போனது என்றாள் .

ஆமாம் கங்கா மாதிரி பெண்கள்  கதைக்குள் 
உலாவலாம்.
வெளியே யும் இருக்கலாம்.

நமக்கு கண்களில்  படவில்லை என்பதால் கங்கா 
உற்பத்தியாகும் இடத்தைச் சந்தேகிப்பவர்  இல்லை.
அவள் பிரத்தியட்ச தெய்வம்.
ஜெயகாந்தனால்  படைக்கப் பட்ட மாந்தர்கள் யாருமே சோடை  போனதில்லை.

உமா   பேசியதில்   அந்தப் பழைய நாட்களுக்கே 
போயாகிவிட்டது. படமும் பார்த்துவிட்டேன் .

அருமையான படம். உயிரோடு உலாவிய 
கங்கா வும் பிரபுவும்  பார்த்த திருப்தி.

என் தங்கை சுபாவும்  நானும் பேசிக் கொண்டிருந்தால் 
ஜெயகாந்தன்  நடுவில் வராமல் இருக்க மாட்டார்.

இப்போது உங்களுடன் பகிர்ந்ததில்  ஒரு திருப்தி.

மீண்டும் இன்னொரு  புத்தகத்துடன் பார்க்கலாம்.






Friday, April 17, 2020

படமும் பாடமும்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.
சில நேரங்களில் சில மனிதர்கள்.

படமும் பாடமும்.

இங்கே சொல்வது கொஞ்சம் உண்மை  கொஞ்சம்  கற்பனை.
Sila Nerangalil Sila Manithargal — 50 Best Tamil Movies — 14

இங்கே அடுத்த தெருவில் இருக்கும் உமா என்னைப்  போல் புத்தகப் பைத்தியம். சினிமாப பைத்தியமும் தான்.

இருவரும்  புத்தகங்கள்   பரிமாறிக்கொள்வோம் .
அவளுக்கு கிடைத்த  பழைய சிடிக்களைக் கொடுப்பாள் .
அப்படிப் பார்த்தவை தான் திரிஷ்யம்,  இன்னும் சில மலையாளப் 
படங்கள்.

கோவையிலிருந்து வந்திருக்கும்  நல்ல பெண். திருமணம் செய்தது ஒரு  வேற்று மாநில  வாலிபரை.

இப்போதுதான் இந்தப்  பெயர்சொல்ல விரும்பாத ஒன்றால்  
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியவில்லையே.

அவள் கொண்டு வரும் எதுவும் வாசலில் வைத்துவிட்டுப் போவாள்.
அதை  சானிடைஸ்  செய்து எடுத்துக் கொள்வோம்.
அது போல  நான் கொடுக்கும் புத்தகமும் புனித நீராடி தான் அவள் வீட்டுக்குள் புகும் 

என்பதும் தெரியும்:)

மாமி உங்க வீட்டைத் தாண்டி நடக்கிறேன் . ஜன்னல் வழியாகக் கைகாட்டுங்கள் என்று செய்தி அனுப்புவாள்.
நானும்  மகளும் ,
அவளும் கணவரும்   நடப்பதை பார்த்து 
சந்தோஷக் கையசைப்பு செய்வோம் .
சிரித்துக் கொண்டே கடப்பார்கள்.
இப்போது மூன்று நாட்களாகப் பெய்யும் பனிமழை யில் இணையமும் 
படுத்த 
நடக்கப் போக முடியாமல் எல்லோரும் முடங்கி கிடக்கிறோம்.
இப்போதுதான்  ஜூம்  வந்திருக்கிறதே.
எல்லோரும் சேர்ந்து பேசலாம் என்று முயற்சித்தால் அதற்கும் வழி இல்லை.
பாண்டவர் வனவாசம், ராமர் சீதை லக்ஷ்மண  வனவாசம் போல 
வாழ்க்கை நடக்கிறது.
அவர்களுக்கு கனி கிழங்கு உண்ணக் கிடைத்தது. நமக்கு 
அந்தத் தொந்தரவு இல்லை.
ஒபர்வீஸ்  பால் முதற்கொண்டு   எல்லாம்  வாசற்படிக்கு வந்து விடுகின்றன.

எல்லாவற்றையும்  ,முன்பு பாட்டியும் ஆஜிப்  பாட்டியும் சாணி தெளித்து எடுத்துக் கொண்டது போல 
சோப்  தண்ணீரில் கழுவி ,துடைத்துக் காயவைத்து எடுத்துக் கொள்கிறோம்.
இவர்கள் பாடுபடுவதை ப்   பார்த்து நாம் உதவலாம் என்றால் ,
நம் மீது அவ்வளவு  நம்பிக்கை கிடையாது.😎😎😎😎😎😎😎😎😎😎😎


ஒரு நாள்  உமா கொண்டுவந்து கொடுத்த புத்தகம் சில நேரங்களில் சில மனிதர்கள்.
அதற்குள்  ஒரு  சிறு குறிப்பு.  இதை  மாதிரி ஒரு மனுஷியை எனக்குத் தெரியும்  என்று எழுதி இருந்தாள் .
எனக்கோ மிச்ச கதையையும்   கேட்க ஆவல்.
என்ன சொன்னாள் ?
இன்றுதான் இணைய  இணைப்பு சரியாக இருக்கிறது. கேட்டு விட்டுச் சொல்கிறேன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


Kandathai sollugindraeen.wmv

வல்லிசிம்ஹன்
சில நேரங்களில் சில மனிதர்கள்.
மீண்டும் படித்து, மீண்டும் கேட்டு,
விஸ்வனாதன் குரலையும்,ஜெயகாந்தனின் சிந்தனை வரிகள் எத்தனை அற்புதம்.
நன்றி ஜெயகாந்தன் சார்.
கவிதை வரிகளையும்
அனுபவிக்கிறேன். அன்னாட்கள் பொன்னாட்கள்.

Arya follows Parvathy Menon | Bangalore Naatkal Scenes | Lakshmi Rai kis...

வல்லிசிம்ஹன்,
இனிமை.

Thursday, April 16, 2020

அடுத்த 20 நாள் எதற்காக ? Dr Ashwin Vijay Speech | Lockdown Extension

வல்லிசிம்ஹன்
நற்செய்தி

சில நினைவுகள்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ  என் பிரார்த்தனைகள் 

சில நினைவுகள் 

நாளுக்கு நாள் அதிகரித்து வரும்   இந்தத் தொற்று,விரைவில் நம்மை விட்டு நீங்க 
அனைத்துக் கடவுளர்களையும்  நமஸ்கரித்துப் பிரார்த்திக்கிறேன்.

சின்னச் சின்ன கைகள்  தலையைப் பிடித்து விடும் போது ஆசீர்வதிக்கப் பட்டவளாக உணர்கிறேன்.
போறுமா பாட்டி  என்று கேட்கிறான் பேரன்.
கூடவே  கம்ப்யுயூட்டர்  முன்னால உட்காராதே. என்று சொல்லிவிட்டு மாடிக்குப் போய்விடுகிறான்.
அவனுடைய  zoom  வகுப்பு முடிந்ததும் 
தோழர்கள் இணையத்துக்கு வந்து விளையாட வந்துவிடுவார்கள்.
அடுத்த அறையில் பெரிய பேரன் ஒரு கையில் செல் போன்,
அடுத்து கணினியில்   code ரைட்டிங் 
என்று பிசி.
சாப்பிட இருவரும் வரும்போது  நான் கேட்பேன்.
என்னடா பசங்களா பாட்டிக்கு மட்டும் புத்திமதி யா. என்றால் நமட்டுச்  சிரிப்புடன்   ஓடி விடுவார்கள் .உலகமே  இணையத்தின் பக்கம் தான். 
மாப்பிள்ளை   அலுவலக வேலை. மக்களுக்கு அலுவலக வேலை.
நான் என் புத்தகங்களுடன்.

சீக்கிரமே உடல் வலி, தலைவலி போகட்டும்.
மற்றவர்களுக்குத் தொந்தரவு தரக்  கூடாது.
புத்தம் புதுக் காலையில் மீண்டும் பார்க்கலாம்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊

Tuesday, April 14, 2020

வளமையான புத்தாண்டு மலர வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன்
எல்லோரும்  வளமாக வாழ வேண்டும் 

இன்று மலர்கின்ற புத்தாண்டு 
அனைவருக்கும் சகல வளங்களையும்,
சௌபாக்கியங்களையும் 
ஆரோக்கியத்தையும்  கொண்டு வரவேண்டும்.
 நல்ல காலம் பிறந்து நல்லாட்சி மலர்ந்து 
இனிமையே நிரம்ப வேண்டும்.
இறைவன் எப்போதும் துணை  இருக்கவேண்டும்.

Saturday, April 11, 2020

ஒரு புதுக்கதை.

வல்லிசிம்ஹன்
ஒரு புதுக்கதை.
 தன்  முன் நிற்கும்  நிற்கும்  பத்துவயதுச் சிறுவனைப்
பார்த்தார், அந்தப் பிரபலப் பள்ளியின் தலைவி.
அவனை அழைத்து வந்த   அவனுடைய அன்னையையும்
கவனித்தார் . இரண்டு பேருடைய முகமும் களைத்திருந்தது.

என்ன  பிரச்சினை. பையனோ ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டினான்.
அன்னையும்  அவர் கேட்ட கேள்விகளுக்கு 
சட்டென்று  பதில் சொன்னார்.
சென்னைக்குப் புதிதாக வந்தவர்கள். இந்தப் பள்ளியின் சம்பளமோ 
அதிகம் .
அவர்களுக்குச் சிபாரிசோ சென்னையின்   பிரபலத் 
தொழிலதிபரின்  மனைவியிடம் இருந்து.


ஒரு  காலாண்டுக்கே  2000 அளவில்  செலவாகும்.
அதற்கப்புறம்  யூ னிஃபார்ம் , காலுறை, ஷூ 
என்று செலவு.
இதெல்லாம் முடியுமா இந்தப் பெண்ணால்.

அந்தப் பெண்ணுக்கு இருந்திருந்தால்  27 வயது இருக்கும்.
அவள் கணவருக்கு அம்பத்தூர்   தொழிற்பேட்டையில் 
பேருந்து ஓட்டும் வேலை.

மந்தைவெளியில்   சொந்த வீடு.  அதனால் தான் பக்கத்திலிருக்கும் 
இந்தப் பள்ளியில்  இடம் தேடி வந்திருக்கிறாள்.

சட்டென முடிவுக்கு வந்தவராக  அந்தப் பையனுக்கு 
ஐந்தாம் வகுப்பில்  இடம் இருக்கு என்று  எழுதிக் கொடுத்துவிட்டார்.
அப்போது கட்ட வேண்டிய தொகையையும்,
யூனிஃபார்ம்  தைக்க வேண்டிய இடத்தையும் சொன்னார்.

அந்தப் பெண்ணின் முகத்தில்  மாற்றம் ஏதும் இல்லை.
நன்றி சொல்லி கைகூப்பித் 
 தன்மகனின்  கையைப் பிடித்தபடி வெளியேறினாள் .

இண்டர்காமில்  தன்  குமாஸ்தாவை அழைத்தவர் 
அந்தப் பெண்   ,பணம் கட்டும்   விவரத்தைத் தன்னிடம் சொல்லும்படி 
கேட்டுக்கொண்டபடி    ,தன்  அறை  ஜன்னல் வழியே  வெளியே விளையாடும் மாணவர்களைப்  பார்த்தவர் 
நெடுமூச்செரிந்தார் .

Mother and child cartoon Royalty Free Vector Image

சிறிது நேரத்தில்  அந்த அன்னையும் மகனும்  மகிழ்ச்சி 
ததும்பும் முகங்களோடு  பள்ளிக்கூடத்தின் 
வாயிலைக் கடப்பதை பார்த்தார்.
குமாஸ்தாவிடமிருந்து   தொலைபேசி  மணி அடித்தது .
அவர்கள் பணம் கட்டிவிட்டதாக தெரிவித்தார் அவர்,.

மனதில் படர்ந்த வியப்புடன், தன நண்பரான தொழிலதிபருக்குத் 
தொலைபேசினார்.

''என்னப்பா நீ சொன்னவங்களுக்கு சீட் கொடுத்துவிட்டேன்.
அவர்களால் சமாளிக்க முடியுமா. 
பார்த்தால்   மத்தியதர  வகுப்பைச் சேர்ந்தவர்கள் 
பொல்லாத தெரிகிறது. அதனால் தான்  கேட்டேன்''

என்று விவரம் தெரிவித்தார்.
'' நீ கவலைப்படாதே.  அவர்கள் எனக்கு  தூர உறவுதான்.
அந்தப் பெண் மிக்க கேட்டுக் கொண்டதால் 
உன்னிடம் அனுப்பினேன் . அவள் திடம் எனக்குத் தெரியும். 
அவளே பட்டதாரிதான்.   தன கணவனைத் தேர்ந்தெடுத்துத் தான் திருமணம்  செய்து கொண்டாள் .

ஒருவிதத்தில் அவள் தந்தைக்கு நான் கடமைப் 
பட்டிருக்கிறேன்.  ஸ்கூல்  சம்பளம் கட்டுவதில் 
ஏதாவது  தொந்தரவு இருந்தால் சொல்லு. நான் கட்டிவிடு கிறேன்.''
என்றார்  அந்தப் பெரியவர்.
மனத்தில் திடீரென எழுந்த யோசனையை 
அவரிடம் பகிர்ந்து கொண்டார்  பள்ளி முதல்வர்.

அடுத்த நாள் பள்ளியில் மகனைக் கொண்டு வந்து விட்ட அந்த அம்மாவுக்கு ,முதல்வரிடம் அழைப்பு  வந்தது.

அறை  வாசலில்  நின்ற  பெண்ணை அழைத்து அவள் பெயரைக் 
கேட்டார்.
 சந்திரா சேகர் என்றவளிடம்,

''தன்  பள்ளியில்  இரண்டாம் வகுப்பு ,
ஆசிரியைப்  பதவி  காலி இருப்பதாகவும் 
தற்காலிகமாக அந்தப் பொறுப்பை 
எடுத்துக் கொள்ள முடியுமா '' என்று கேட்டார்.

இதை எதிர்பார்க்காத  சந்திரா,தான்  ஆசிரியைப் பயிற்சி எடுத்துக் கொள்ளவில்லை  என்ற செய்தியைச் சொல்லி, தயங்கினாள் .

எங்களுக்கு மிகவும் அவசரத் தேவை இருப்பதால் 
தற்போதைக்கு ஏற்றுக் கொண்டு 
பிறகு பயிற்சி எடுக்கலாம் என்று  சொன்னவரை ஆச்சரியத்துடன் பார்த்தாள்  அவள்.

750 ரூபாய்  அந்தப் பதவிக்கு சம்பளம் என்று தெரிந்து கொண்டதும் அவள் கண்கள்  கலங்குவதைப் 
பாராதது   போலத்  திரும்பிக் கொண்டார்.
தன்கணவனிடம் ஒரு  வார்த்தை சொல்லிவிட்டு அடுத்த நாளே 
பொறுப்பேற்றுக்  கொள்வதாகத் தெரிவித்தாள்  சந்திரா.


அவளுடைய உடைகள் சீராக இருக்க
வேண்டிய அவசியத்தைச் சொல்ல வந்தவர்
அந்த கண்ணியமான முகத்தைப் 
பார்த்துப் பேசாமலிருந்தார்.
அவள் கிளம்பியதும் தன் சினேகிதனுக்கு
போன் செய்தார். உன் தொழரின் பெண்ணுக்கு 
வேலை கொடுத்து விட்டேன்.
அவளுக்கு வாரம் தோறும் உடுத்த நல்ல
உடைகள் வேண்டாமா என்று சொன்னவருக்குத் தோழரின் சிரிப்பு தான் கேட்டது.
அதெல்லாம் என் மனைவி பார்த்துக் கொள்வாள்.

இலவசமாக எதையும் வாங்கிக் கொள்ள மாட்டாள் சந்த்ரா.
நீ கவலையை விடு என்று ஃபோனை வைத்து விட்டார்.

மனதில் இருந்து பாரம் இறங்கியதை உணர்ந்த
பள்ளி முதல்வர், அன்று தன் அன்னையிடம் சொல்ல
நிறைய செய்திகள் இருப்பதை நினைத்து மகிழ்ந்தார்.

நாற்பது வருடங்களுக்கு முன் தானும் தன் அன்னையும்
இதே பள்ளிக்கு கிட்டத்தட்ட சந்த்ராவின் நிலையில்
 வந்த சூழல் மனதில் நிழலாடியது.
தன் திறமைக்குக் கிடைத்த இடத்தைத் தக்க வைத்துக் 
கொள்ள அவரும் அவர் அன்னையும் மிகப் 
பாடுபட்டனர். அம்மா செய்த தியாகங்கள் 
அவருக்குத் தெரியும்.
இப்போது இந்த நிலைமைக்கு வந்தும்
தன் வேர்களை மறக்காமல் ,இன்று போல 
வருடாவருடம் ஒரு குழந்தைக்கு உதவ
வேண்டும் என்ற ஆசையை அன்னையிடம் அன்று
பகிர்ந்து கொண்டார்.

அவளும் பரிபூரண சம்மதம் தர ஷண்முகவடிவு

டிரஸ்ட் சீக்கிரமே உருவாகியது.


















Wednesday, April 08, 2020

புளிப்பொங்கல் மறுபாகம்

வல்லிசிம்ஹன்

நலம் நலமறிய ஆவல்.  புளிப்பொங்கல்  மறுபாகம்

பிள்ளையாரே போற்றி
தேவையான பொருட்கள் ,
பச்சரிசி குருணை ஒரு  கிண்ணம், ஒன்றுக்கு மூன்று  
அளவில்   தண்ணீர், புளிக்கரைசல் அவரவர் விருப்பம்.,
உப்பு, 
தாளிக்க,
கடுகு ,சிவப்பு மிளகாய் ,இஞ்சி, மஞ்சள்பொடி,
வறுத்த வேர்க்கடலை ஒரு கைப்பிடி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு 

கொஞ்சம் புளி ,கரைத்து  ,அவரவர் ருசிக்கு ஏத்தவாறு .
உப்பு,
தாளிக்க கடுகு, 2 சிவப்பு மிளகாய், வேர்க்கடலை  வறுத்தது ,
கட லைப் பருப்பு, பெருங்காயம். சீரகம்

நல்ல கனமான வாணலி
அதை அடுப்பில் ஏற்றி,  இரண்டு மேஜைக்கரண்டி நல்லெண்ணெய்
விட்டு,

எண்ணெய் காய்ந்ததும் ,
கடுகு,கடலைப் பருப்பு, வேர்க்கடலை ,மிளகாய்,சீரகம் போட்டு 
கடுகு வெடித்து மற்றவை சிவந்ததும்,
தண்ணீர் மூன்று கப் வீட்டுக் கொதித்து வரும்போது புளிக் கரைசலையும் விடவேண்டும்,

உடனே, குருணையை   கை ,கையாகப் போட்டு,கட்டி தட்டாமல் 
கிளற வேண்டும்.

உப்பு சேர்த்ததும்,
 நல்ல தடிமனான மூடியைப் போட்டு 
மூடிவிட்டால் வேலை முடிந்தது.
பத்து நிமிடங்களில்  சிம்மரில்  வைத்து,கருவேப்பிலையை அலம்பி 
உப்புமாவுடன் சேர்த்து மீண்டும் மூடிவிட்டால்,
நன்றாக வேகும்.

காந்தல்  வேண்டுமென்றால் இன்னும் 
கொஞ்ச நேரம் வைத்திருக்கலாம்.
ருசித்து மகிழ்க .
+++++++++++++++++++++++++

இந்த விநாயகர் மனம் வைத்தால் , மஹாபாரதம் எழுதிய கையால் ,
அந்தத் தந்தக்  கொம்பு துணை இருக்க நிறைய 
எழுதலாம்.




புளிப்பொங்கல்

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும் .

புளிப்பொங்கல் 

Aaharam: Puli Pongal
எளிதான புளிப்பொங்கல்  இன்றைய  மாலை டிபன் .

ரொம்ப நாள் ஆசை.

பாட்டி செய்கிற மாதிரி வரவில்லை. பாட்டி கைக்குப் புளி
நிறைய  அளவுக்கு  வரும்.
இங்கே   வயிற்றுக்கு அத்தனை புளிப்பு ஆகாது.
எல்லோருக்கும் வெளியே போய்   விளையாட ,நடக்க முடியாததால்

உப்புசம் , உறக்கம், களைப்பு
அலுப்பு எல்லாம் தான்  மேலிடுகிறது.

பஜ்ஜி. போண்டா எல்லாம்  தடா. மாதத்துக்கு ஒரு தடவை
அதிகம்.

எனக்கு மாலை ஏதாவது பலகாரம் செய்தெ ஆகவேண்டும். சேமியா ,
ரவை, இட்லி,தோசை அலுத்து,
சுசி ருசியாக  ஏதாவது  செய்யலாம் என்று  யோசித்தவுடன் ,
அம்மா செய்யும் புளிப்பு பொங்கல் நினைவுக்கு வந்தது .

அம்மா, பாட்டி கைப்பக்குவம் வரவில்லை என்றாலும்,
நன்றாகவே இருந்தது.

பதிவிலும் பகிர்ந்து கொள்ளலாம் என்று எழுத ஆரம்பித்து பப்லிஷ் பட்டனையும் அழுத்திய பிறகு,
வியூ செய்தபோதும்  பதிவில் இருந்தது.
இரண்டு மணி நேரம் கழித்துப் பார்த்தால் 
காயப் , போயி போயிந்தி.

பிறகுதான் நான்  பவுர்ணமி  ஸ்பெஷலாகப் பிடித்த பாடலை வீடியோ போட்டிருப்பது நினைவுக்கு வர 

மீண்டும் இதோ எழுதுகிறேன்.







Tuesday, April 07, 2020

காணி சோம்பல் 2007 pathivu

வல்லிசிம்ஹன் காணி சோம்பல் 


MONDAY, MARCH 17, 2008

காணி சோம்பல்...










இந்தப் படங்களுக்கும், கீழே வரும் கதைக்கும் சம்பந்தம் இல்லை:)

ஒரே ஒரு ஊரிலெ ஒரு அம்மா. அந்த அம்மாவுகு வயதாகி விட்டது.
இருந்தாலும் மனது இளமையா இருந்தால் உடலும் சொன்ன பேச்சு கேட்கும் என்ற பரிபூரண நம்பிக்கை.

தப்பு இல்லைதான்.
அதே சமயம் ஆரோக்கியமும் பேணிக்காக்க வேண்டியதுதான்
என்பதில் கொஞ்சம் அசிரத்தை அந்த அம்மாவுக்கு.
என்ன, அந்த அந்த வேளைக்கு உண்டான மருந்தை உட்கொண்டால்
தானே உடல் வயப்படும்.'' என்று எண்ண.

அந்தச் சிந்தனைக்கு ஒரு தடை போடுவது போல, ஒரு நிகழ்ச்சி,.
கொசுக்களும், கரப்பான்பூச்சிகளும் திடிர்ப்பெருக்கம் செய்து வீட்டில் நிறைந்தன.
இந்தத் திடீர் தாக்குதலுக்கு என்னடா காரணம் என்று தேடியதில்,
பக்கத்து மனையில் பெஸ்டிசைட் நிறைய போட்டு, அங்கிருந்து தப்பி வந்த ஜீவராசிகள்.
சுற்றுச் சுவரைத் தாண்டியதும் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டன,.
ஒரு எலி,
ஒரு பெருச்சாளி, இதெல்லாம் பெரிய ஜந்துக்கள்.
நம்ம சாம்பர்(பூனை) சாரும் வேட்டைக்களத்தை மாற்றிவிட்டதால்
அம்மாவுக்கு ஆதரவு கொடுக்க யாருமில்லை:)
சரி என்ன செய்யலாம்னு யோசித்த அம்மா, தங்களோட சிங்கத்துக்கிட்ட சொல்லி
சாளரங்கள்:)
எல்லாவற்றுக்கும் கொசு வலை அடித்தாச்சு.
அது இனிமேல் கொசு வராம இருக்கும்.


ஏற்கனவே அடைக்கலாமாகி விட்ட கட்டில்களுகுக் கீழே,
கோத்ரேஜ் பீரோ மேலே ,சாமி ரூம் படங்களுக்குப் பின்னால்...
இடமா இல்லை.
அப்போது குழந்தைகள் பேரன்கள், பேத்தி வீட்டில் இருந்த காரணத்தால்
அவர்களை ஒரு பகலுக்கு வெளியே அனுப்பி விட்டு
வீடு முழுக்க பேகான் அடித்தாச்சு.
நமக்கு சுவாசம் சம்பந்தப் பட்ட பிரச்சினை ஏதுமில்லை,

அதனால் குளிக்கும் அறைகளுக்கு நாமே அமிலம் ஊற்றி மிச்ச மீதி
பாக்டீரியா அமீபா இனங்களை வெளியேற்றி விடலாம்னு அம்மா நினைச்சாங்க..
அங்க வந்தது காணி சோம்பல்.
எல்லாவற்றையும் பொறுமையாக முடிக்கும் போது,
நம்ம கொத்ஸ் சொல்லுவாரே:)
இதை இவன் முடிப்பான் என்று அதை அவன்கண் ஒப்படைப்பதுனு ஒரு வாக்கியம்

அந்த வாக்கியத்தை மறந்து,
மூக்கில துணி போட்டு மறைக்காமல் அப்படியே அத்தனை அமிலத்தையும் சீராக
மாடி குளியலறை, கீழே இருக்கும் குளியலறை என்று ஒரு துளி இடம் விடாமல் தூவியாச்சு.
அசட்டுத்தனம் தான்.
இப்ப தான் ஹார்பிக் வந்துடுத்தே, ஏன் இன்னும் அமிலம் என்று நீங்க கேட்டீங்கன்னா
ரொம்ப வம்பாப் போயிடும் சொல்லிட்டேன்.

எனக்கு புதீசா வரப் பொருட்கள் மேல அவ்வளவு நம்பிக்கை போதாது.
அதுக்கு மாத்தா எங்க வீட்டு உதவிக்கு வர இரண்டு அம்மாக்களுக்கும் அமிலத்தைக் கண்டாலே பயம்.
''ஐய்ய அத்தை யாரு திறக்கறது.
கையெல்லாம் பொரிஞ்சு போயிடும்மா. நீ பெனாயிலைக் கொடு களுவறேன்'' என்று விலகிக் கொள்ளுவார்கள். பினாயிலுக்க் அடங்குகிற ஜன்மங்களா இந்தக் கரப்பான் பூச்சிகள்???

அதுவும் திடீர் தீடீரனு பாய்ச்சல் வேற காட்டும் ,பறக்கும்
.பெண் மருமகள் உட்பட அத்தனை பெரும் அலறுவார்கள்.
ஏம்மா இத்தனை ஜீவராசிகளை வளர்க்கறே வீட்டுக்குள்ள?? என்று கடுப்பேத்துவார்கள்.
நாம் பெற்ற செல்வங்களைக் காப்பது நம் கடமையலாவா என்றுதான் அமிலத்தைக் கையிலெடுத்தார்.
அம்மா:))


அப்படிப் பொறுப்பாக வீசும்போது கொஞ்சம் தன் கால் களிலும்(இதற்குத்தான் அறியாமை விபத்து என்று பெயர்)
தெளித்துவிட்டார்:((

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது''னு யாராவது பாடுவதற்குள் இந்த ஆசிட் விஷயத்தை மறைத்து அதற்கு சந்தனம் பர்னால்,வெண்ணை,தோசை மாவு எல்லாம் அபிஷேகம் செய்து
உடை மாற்றிக்கொண்டு பழைய அம்மாவாகவே வளைய வந்து அவர்களை எல்லாம் ஊருக்கு அனுப்பிய பிறகு வைத்தியரிடம் போனால்,
நாகரீகமாக என்னை வைதார். '' நீங்க எல்லாம் படிச்சவங்கதானே.
காயம் பட்ட அன்னிக்கே வந்திருந்தா இவ்வளவு பெரிதாகி இருக்குமா.
இப்போ மூணு பெரிய புண்களான இவைகளுக்கு சிகிச்சை அளித்துக் குணமாவதற்கு 40 நாட்களாவது ஆகும்''
என்றார் அவர்.
ஏதோ இரண்டு மாதங்கள் ஓடி விட்டது.
அவர் சொன்ன வைத்தியம்  பலிக்கவில்லை.கேட்கவில்லை.
காலைக் கீழே வைக்கக் கூடாது, நடக்கக் கூடாது....இத்தியாதி இத்தியாதி.

அப்புறம் ஒரு தோல் வைத்தியரைப்  பார்த்தால், ஒரு சின்ன ஆப்பரேஷன் செய்து தோலை எடுத்துவிட்டார். ஐந்து நாட்களில் குணமாகியது.
இழுத்தடித்த  பழைய  டாக்டர் மேல் கோபம் வந்தது.



சும்மா இருக்க முடியாமல்
துளசியிடம் மட்டும் புலம்பிவிட்டு
உங்களையெல்லாம் பயங்கரமான சவுக்கார் ஜானகிப் புலம்பலில் இருந்து காப்பாற்றி,
மீண்ட ஆரோக்கியத்தோடு இதோ சிரித்துக் கொண்டே பதிவு போட்டு விட்டேன்.
அறிவுரை.
அமிலம் பக்கம் போகாதீர்கள்.
அன்புடன்:)))

Friday, April 03, 2020

காலமகள் கண் திறப்பாள்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.



காலமகள்  கண் திறப்பாள் 

Kanchipuram Tour Package - Rs.2400/- for one night - www.lemestay ...

எத்தனையோ இடர்களைத் தாண்டி வர உதவியாய் இருந்தவள் 
அன்னை காமாட்சி.

மக்கள் திருமணங்கள்,  பேரன்,பேத்திகள் 
அம்மா,அப்பா,தம்பிகளுக்கான வேண்டுதல்கள் 

வாழ்க்கையில் எந்த ஒரு துயரோ  இடரோ 
வரும்போதும் சரி, நேர்த்திக்கட னை 
நிறைவேற்றவும் அணுகுவது இவளைத்தான்.

வருடங்களுக்கு  இருமுறை காஞ்சீபுரம், இருமுறை 
மாங்காடு  என்று  வரவழைத்து விடுவாள்.

இவளை  ஒருதடவை பார்த்து  அருள் வாங்கி கொண்டால்,
அடுத்த தடவை திருமலை திருப்பதி பயணம் உண்டு.



Avercart Shree Sai Baba - Shirdi Poster 12x16 inch Framed (with ...
அம்மா வழிகாட்டிய  சந்நிதி.
Sri Balaji Mandir - Home | Facebook
இவர்கள் எல்லோரும் இருக்கும்போது  நாம மனதில்
சந்தேகம் அண்டக்கூடாது.
யாரோ செய்த  தவறுக்கு நாம் அனுபவிக்க வில்லை.
நாம் இயற்கைத்  தாயை வதைத்தோம்.
அவள்  வலுவிழுந்து போனாள் .
இனிய  மனத்துடன்  நற்செயல்களையே
செய்வோம்
எல்லாம் மாறும் என்று பெரியவர் ஒருவர் சொன்னதைக் கேட்டோம்.

இங்கே அமெரிக்காவில் உயிர் சேதங்கள் அதிகமாகி வரும் நேரம்.
அரசியல்வாதிகள் எதோ பேசட்டும்.
இன்னும் இரண்டு வாரம் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படும் யூகங்களையும் தாண்டி,
நம் குழந் தைகளையும்,பெரியவர்களையும்
வீட்டு  தலைவன் தலைவியையும் காக்க இறைவனிடம் வேண்டுவோம்.


வரும் செய்திகள் சஞ்சலப் படுத்துகின்றன.
பெண்ணின் தோழி,( பள்ளியில் ஒன்றாய்ப் படித்தவர் )
இங்கே நியூ ஜெர்சி மாகாணத்தில் அவரது கணவன் (பெண்ணின் திருமணத்துக்காக
அலைந்து,}
நோய்த் தொற்று வந்து ஒரே வாரத்தில் இறைவனடி அடைந்துவிட்டார்.

வீட்டிலேயே இருக்கச் சொல்லி அலறுகிறது எல்லா செய்திகளும்.
கேட்கத்தான் வேண்டும்.

நலம் பெறுவோம்.

Wednesday, April 01, 2020

எது சுதந்திரம். Old post 2018



WEDNESDAY, AUGUST 29, 2018


எது சுதந்திரம்.

Vallisimhan
எல்லோரும் நலமாக வாழவேண்டும் 


உடலொன்றைக் கொடுத்த கடவுள்,
உயிரையும் நினைவுகளையும் அதனுள் புகுத்தி இன்னார இன்னார் உனக்கு அன்னை தந்தையர் 
என்று அறிமுகப் படுத்திவைக்கிறான்.

குழந்தைப் பருவம், பள்ளிப் பருவம்,பிறகு திருமணம்.
இதில் ஆண் குழந்தைகளுக்குப் பொறுப்பும், சுதந்திரமும் கூடுதல்.
பெண் குழந்தை  திருமணம் ஆகும் வரை அப்பா
சொல்படி.
அப்படியே திருமணமான பிறகு கணவன் சொல்படி.
Add caption


என் வாழ்க்கை இப்படித்தான். மற்ற பெண்களின் வாழ்க்கை பற்றி அதிகமாகத் தெரிந்து கொண்டது என் புக்ககப்   பெரியோர்களின் கட்டுமானத்துக்குள் கற்றது.

பெரிய குடும்பமாக இருந்ததால் அவர்களுக்குள் ஒற்றூமையாக இருக்கும் போது இந்தச் 
சின்ன மருமகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.

வேலை எல்லாம் முடிந்தததா, பக்கத்தில் இருக்கிற ஆஞ்சனேயரைப் பார்த்து விட்டு வாயேன்
என்பார் பாட்டி.
போவேன்.
அறுபத்து மூவர் உற்சவங்கள் போது தினப்படி வெளியே போக 
அனுமதி உண்டு.
என் கணவர் கேட்பார். உனக்கு மட்டும் புது செருப்புத் தேவைப்படுவதே 
இல்லையே.
அவரிடம் சொல்ல முடியுமா, வெளியில் சென்றால்தானே செருப்பு உபயோகமாகும். என்று.
15  வருடங்களுக்குப் பிறகு நிலைமை  மாறியது.
குழந்தைகள்  கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தார்கள்.
திடீரென்று வேலை முடிந்தால் வீட்டை விட்டு வெளியே செல்லலாம்
என்பது எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.

வலியத் தேடி வந்த வாய்ப்பு ஒரு பப்ளிஷிங்க்  நிறுவனத்தில்
அழைப்பு வந்ததுதான்.
கோவிலில் சந்திக்கும் பெண் தான் வேலைபார்க்கும் கம்பெனியில் சேர விருப்பமா. என்றதும் திகைத்துப் போனேன்.
நான் பட்டதாரி இல்லையே என்றேன்.
உனக்குப் புத்தகங்கள் பிடிக்குமா. என்றாள்.
என் உயிரே அவைதான் என்றேன்.
அப்போது வந்து பார். பிடித்தால் சேர்ந்து கொள்.
உனக்கு முடிந்த நேரங்களில்
புத்தகங்களை அறிமுகப் படுத்திப் பள்ளிகளில் அவற்றை விற்கவேண்டும்..

அவை விலை உயர்ந்த வெளினாட்டுப் புத்தகங்கள்.
குழந்தைகளின் படிப்பு, குழந்தை வளர்ப்பு  ஆரோக்கியம், 
 விஞ்ஞான வளர்ச்சி, சமையல் கலை என்று பத்துப் பதினைந்து வகைகள் இருக்கின்றன.
என்று சொன்னதுதான் தாமதம்.சரி என்று விட்டேன்.
சுதந்திரமாகச் செயல் பட்டது அப்போதுதான்.
இப்போது சுதந்திரமாக இல்லையா என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.
எப்போது  முழு சுதந்திரம்.

முதுமை சுதந்திரம்.....

Vallisimhan

சுதந்திரம் என்பது கொடுத்து வருவதா. நாமாக எடுத்துக் கொள்வதா.
பெரியவர்கள் இருக்கும் வீட்டில்
மருமகள்களுக்கெல்லாம் சீக்கிரம் சுதந்திரம் என்கிற வார்த்தையை

உபயோகிக்க முடியாது.
பெரியவர்கள் காலையிலிருந்தே ஒரு திட்டம் போட்டு வைத்திருப்பார்கள். அது கோவிலாக இருக்கலாம், உறவினர்கள் வருகையாக இருக்கலாம்,

நம் குழந்தைகளின் பள்ளி விஷயமாக இருக்கலாம்.
 வைத்தியர் வருகையாக இருக்கலாம்.
எல்லாவற்றையும் யோசித்து நாம் இன்று 75 பைசா தொலைவில்
இருக்கும் பெற்றோரைப் பார்த்துவிட்டு  3 மணிக்குள் திரும்பலாம் என்று ,
யோசித்துப் பாட்டியிடம் பர்மிஷன் வாங்கினால்
, நாளைக்குப் போயேன். அரைமணி நேரத்தில் உன் பெரிய மாமனார் மாமியார்
வருகிறார்கள். அவர்கள் கிளம்ப மதியம் ஆகிடும்.
என்று சொன்னதும் எனக்கு சுருதி இறங்கிவிடும். என் மாமியார் அப்போது கை கொடுக்க நினைப்பார்.
அவள் போகட்டும். அவ அம்மாவுக்குக் கையே தூக்க முடியலையாம்.
என்னன்ன்னு போய்ப் பார்த்து விட்டு வந்துவிடுவாள். நான் இங்கே
பார்த்துக் கொள்கிறேன் என்பார்.

உன்னை நம்ப முடியாது. திடீர்னு தலைவலி வந்தால் கஷ்டம்.
நாளைக்குப் போகட்டுமே என்பார்  பாட்டி.

முடிந்தது அன்றைய உரையாடல். ஒரு மணிக்குப் பாட்டிக்குக் காப்பி
போட்டுக் கொடுக்கவும், விருந்தாளிகள் வரவும்.
அரிசி உப்புமா கிண்டவும் நேரம் போய்விடும்.


எதற்கு இந்த விலாவரிக் கதை என்று தோன்றும்.
எல்லா வீடுகளிலும் நடக்கும் விஷயம் தானே.

 ஆனால் 28 வயதில் இதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு இல்லை.
எதிர்த்துப் பேச பெற்றோர் கற்றுத்தரவும் இல்லை.

மீண்டும் 1989க்கு வருவோம்.  7 வருடங்கள் கழித்து மகள் திருமணம்.
அவள் அப்பா காரோட்ட, என் அப்பா வழிகாட்ட  அந்தத் திருமணம் நல்லபடியாக
நடந்தது.

அந்தத் திருமணத்துக்கு, என் ஐந்து வருட சம்பாத்தியமும்
 ஒரு நகையாக அவள் கழுத்தில் ஏறியது.

வரிசையாக வாழ்வின் ஏற்றம் பள்ளம் எல்லாம்
தாண்டிக் கண்விழிக்கையில் 2006 வந்திருந்தது.
இப்பொழுது என்னை இரு என்று சொல்லவும் ஆளில்லை.
போ என்று சொல்லவும் சந்தர்ப்பம் இல்லை.
குழந்தைகள் இருக்குமிடம் உதவி செய்யப் புறப்பட்டோம்

சிங்கம் எங்கும் சென்று வந்துவிடுவார். எனக்கு போகும் இடைத்திலும் வீட்டு சம்பந்தமான வேலைகள் இருக்கும். அன்பினால் செய்ய வேண்டிய
தேவைகள் அவை.
2010லிருந்து இருவருக்குமே வெவ்வெறு சிகித்சைகள்.

தவறேதும் இல்லை. கண்ணியமான சந்தோஷத்துடன் கடந்தது வாழ்க்கை.
2013இல்  சிங்கம் இறைவனடி சேரும் வரை.
பிறகு என் வாழ்க்கை  குழந்தைகள் கையில்.

வரச்சொன்னால் போவேன். அந்த ஊர் விசா முடிந்ததும் வேறு இடம்.
அவர்கள் உலகம் வேறு. என் உலகம் வேறு.
இணையத்தில் புகுந்தததால் 80 சதவிகித விடுதலை.
முன்பு முதுமை வரமா சாபமா என்று ஒரு தொடர் போனது.
\
இப்பொழுது சொல்கிறேன்
முதுமைக்கு உண்டான தளர்வு வந்தாலும் உடல் ஆரோக்கியமும்
மனத்திடமும், கை நிறையப் பணமும், எது நடந்தாலும்
பொறுமை காப்பதும் தெரிந்தால் இது சுதந்திர முதுமையே.
வாழ்க வளமுடன்.
வல்லிசிம்ஹன்