Blog Archive

Thursday, January 23, 2020

தவம் 3

வல்லிசிம்ஹன் 

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 
தவம் 3

கண்ணயர்ந்த மாலதிக்கு, அடுத்த நாள் வேலைகள்
காலையில் காத்திருந்தன. முதலில் அவள் தேடியது கைபேசியைத்தான்.

அதிகாலை தஞ்சாவூரை அடைந்த வசந்த், பல்கலைக் கழகத்துக்குப் போவதாகவும் ,பிறகு ,தங்கள் கல்லூரி விடுதிக்கு செல்வதாகவும்
குறிப்பிட்டிருந்தான்.
தன் நண்பனாக ஆதித்தனையும் அழைத்துச் செல்வது இனிமையாக
இருப்பதாகச் சொல்லி இருந்தான்.

நல்ல நட்பு அடுத்து வரும் வருடங்களில் தொடர வேண்டும்
என்று கடவுளைப் பிரார்த்தித்த படி, அன்றைய வீட்டு வேலைகளையும்
சமையலையும் அவள் முடித்த போது மணி எட்டு.

வெறுமையாகக் காட்சி அளித்த வீட்டில்,மாலை வந்ததும் சில மாற்றங்கள் செய்து ஆக்கபூர்வமாகச் செயல் பட வேண்டும் என்ற முடிவோடு

தன் ஸ்கூட்டரைக் கிளப்பினாள்.Image result for Tanjore medical college

Photo 1


தஞ்சாவூர் மருத்துவக் கல்லுரியும் , விடுதியும்.

அலுவலகம்  சென்ற பிறகும் மகனைப் பற்றிய  சிந்தனைகளே அவளைச்  சுற்றி வந்தன.
சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் இருந்த 
மத்திய மைய ஆயத்  தீர்வை அலுவலகத்தில் 
மூன்றாவது மாடியில் அவளுக்கு வேலை.
நல்ல சம்பளம்., இத்யாதிகள் மத்திய அரசு முறைப்படி அவளுக்குக் 
கிடைத்தன.
இதெல்லாவற்றுக்கும் காரணம் அவள் மாமனார் தான். அவரும் மத்திய அரசு வேலையிலிருந்து ஒய்வு பெற்றிருந்ததால்,
அவளை தேர்வுகள் எழுதவைத்து 
வேலை யில் சேர்ந்த பிறகே ஓய்ந்தார். அக்கவுண்ட்ஸ் 
இலாகாவில்  நல்ல  உயரிய பதவிக்கு 
வந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன.

வருடத்துக்கு இரண்டு வார விடுமுறை. விடுமுறை அலவன்ஸ்.
பெற்றோரை அழைத்துக் கொண்டு ஒரு தடவை , மாமனார் ,மாமியாரை அழைத்துக் கொண்டு  ஒரு தடவை  என்று கன்யாகுமரி, இராமேஸ்வரம் என்று போய் வந்தாள் .

இரு பக்கத்தினரும் தங்களோடு வந்து  இருக்கும்படி 
அழைத்தும் அவள் செல்லவில்லை.
அங்கே ஏற்கனவே  இருக்கும்   கொழுந்தனார்,அவரது குடும்பம் ,
பிறந்தவீட்டில் அண்ணா அவன் குடும்பம்  இருக்கும் போது 
 தானும் அங்கே இருக்க மனம் வரவில்லை.

அவள் மனம் தனியாக இருக்கவே விரும்பியது.
இரு வாரங்களுக்கு ஒரு முறை இரண்டு இடங்களுக்கும் சென்று இயன்ற உதவியைச் செய்து வருவாள்.
குமரன் சென்னை வருவதே நின்று விட்டது.
 விவாகரத்தின் பலனாக தீர்ப்பு  சொன்ன  குடும்ப
நல கோர்ட் மூலம் அவன் அளிக்க வந்த பணத்தையும் 
அவள் மறுத்து விட்டாள் .
அப்போது மண்டிக்கிடந்த மனக்கசப்பு கூட 
இப்போது   குறைந்துவிட்டது.
''இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தான் தேவன் அன்று ''என்ற 
பாடல் போல வாழ்வை ஒப்புக் கொண்டுவிட்டாள்.

மனம், மற்ற நல்ல  வாழ்வு  வாழும் தம்பதிகளை 
நினைக்கும் போது சில சமயம் தனிமை உறுத்தும்.

சுலபமாக அந்த நினைவுகளைத் தள்ளிவிட அவளால் முடிந்தது.
அவள் மேற்கொண்ட  யோகப் பயிற்சிகளும் ,கடவுள் வழிபாடும் அவளை உறுதியாக இருக்க வைத்தன.

வசந்த் நல்ல வாழ்வு பெற வேண்டும், திருமணம் அமைய வேண்டும் .
என்ற நற்கனவுகளைக் கண்டு வந்தாள் .
தாயை உணர்ந்த அந்த மகனும் அவள் சொன்ன பேச்சுக்கு மறு  பேச்சு 
பேசாத  பிள்ளையாக  வளர்ந்தான். 
வேலை முடிந்த அடுத்த நொடி ,கீழே இறங்கி வந்த மாலதி,
வீடடைந்து குளித்து விட்டு

புரசைவாக்கம் ஸ்ரீனிவாசர் கோவிலுக்கும், பிள்ளையார் கோவிலுக்கும் சென்று வந்தாள் .
இரவு உணவாக வேகவைத்த காய்கறிகளும் சப்பாத்தியும் போதும் அவளுக்கு.
அலைபேசி அழைத்ததும் மகன் முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள்.
அவளது நலம் விசாரித்தவன்,
தன்  முதல் ஆண்டு முதல் நாள் நடந்த விவரங்களை சுவைபட அவளுக்கு விவரித்தான்.
மனமெல்லாம்   பூரிக்க அவன் பேசுவதைக் 
கேட்டுக் கொண்டிருந்தாள் மாலதி.
என்னப்பா சாப்பாடு என்ற கேள்விக்கு" இனிதான் 
அங்கே போகணும்ம்மா. 
இப்ப பசி இல்லை.  இரவு  சூடாகச் சாப்பாடு  இருக்குமாம்.
வார இறுதியில் தஞ்சைக்குச் சென்று வரலாம்.

சில வாரங்களுக்குப் பிறகு நீயும் வந்தால் நல்ல கோவில்கள் பார்க்கலாம் வரயா அம்மா". என்று  கேட்கும் மகனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
கட்டாயம் வரேன் பா. உனக்கு சரியாக சிற்றுண்டி  வகைகள் வாங்கித் தரவில்லை.
திட்டமிட்டு   எல்லாம் செய்கிறேன் என்றவளை  இடைமறித்தான் மகன். வேற்றுத்தீனி உடலுக்கு நலம் இல்லை அம்மா. நான் பழங்கள் வாங்கி  சாப்பிடுகிறேன். நீ கவலைப் படாதே என்றான்.

"நான் போய் அறையை ஒழுங்கு செய்கிறேன். 
நீ பத்திரமாக இரும்மா. கவலைப் படாதே" என்ற மகனுக்குப் பரிவுடன் விடை கொடுத்தாள் .

வாயில் மணி அடிக்கும் சத்தம் கேட்டு விரைந்தவளுக்கு ,அண்ணனைப் பார்த்ததும்  மகிழ்ச்சி .
என்னண்ணா  ஃ போன் செய்திருக்கலாமே என்றவளை,முதுகில் தட்டியவன் ,இங்கே கெல்லிசுக்கு வந்தேன், அப்படியே உன் மகனைப் பற்றிக் கேட்டுப் போகலாம் என்று இங்கே வந்தேன்.
என்ற அண்ணன் , 
"இதோ பாரு, இந்தப் பெட்டியில் 
புதிதாக வந்த ஸ்டெதஸ்க்கோப், மற்றும் வெள்ளை மேல்  ஆடை, 
ஸ்டெரைல் கையுறைகள்,
நான் படித்த புத்தகங்கள் எல்லாம் இருக்கிறது.
இப்போது விலை கொடுத்து வாங்க முடியாத அளவு உயர்ந்து விட்டது.

நானே போய்க்  கொடுக்க ஆசை.
நீயும் நானுமாக ஒரு சனிக்கிழமை போய் வரலாம் வா." என்றான்.
அண்ணா ,,,யென்று ஆரம்பித்தவளைத் தடுத்தான் அன்னான்.
"முறையாகப் பார்த்தால்  நானே அவனுக்கு எல்லாம் செய்யணும்.
அவன் முந்திக் கொண்டுவிட்டான்.
நல்ல படிப்பு அவனுக்கு இந்த இடத்தைப்  பிடித்துக் 
கொடுத்தது.
நல்லா இருக்கட்டும். அண்ணா  பார்த்துக்கிறேன் 
முடிந்தவரை. அதை நீ மறக்காதே "என்றவனின் 
கைகளைப் 
பிடித்துக் கொண்டவள் 
கண்கள்  கலங்கின.
இன்னொரு விஷயம் என்று ஆரம்பித்த அண்ணன் '' குமரன் வந்திருக்கான் மா, அவனுக்கு  வசந்தைப் பார்க்கணுமாம்.''

செய்வதறியாமல் உட்கார்ந்துவிட்டாள்  மாலதி.
மீண்டும்  பார்க்கலாம்.













13 comments:

KILLERGEE Devakottai said...

குமரனின் வரவு மாலதியை சலனப்படுத்துமா ?

அறிய காத்திருக்கிறேன் அம்மா.

Geetha Sambasivam said...

சரியான நேரத்துக்கு வந்து விட்டானா குமரன்? உழைத்தது எல்லாம் மாலதி! அவன் நடுவில் வந்த என்ன செய்யப் போகிறான்? இந்தப் பிள்ளையைத் தன்னந்தனியாக மாலதி முன்னுக்குக் கொண்டு வந்திருப்பதை அறிந்தும் இங்கே வந்து என்ன செய்யப் போகிறான்?

ஸ்ரீராம். said...

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியா அது!  தோற்றமே மாறியிருக்கிறது? எவ்வளவு விளையாடியிருக்கிறோம் அங்கு...

ஸ்ரீராம். said...

கதை முன்னேபின்னே புரியவிலையேயென்று பழையப்பகுதிகளைப் படித்து வந்தேன்.   அதை படிக்க விட்டிருக்கிறேன்.

கோமதி அரசு said...

நன்றாக போய் கொண்டு இருக்கும் வாழ்க்கையில் குமரன் வரவு !
மாலதி என்ன செய்யப்போகிறார் பார்க்க தொடர்கிறேன் அக்கா.

மாதேவி said...

இத்தனை வருடங்கள் குடும்பத்தை விட்டு இருந்த குமரன் மகன் ஆளாகி டாக்டர் படிப்பு படிக்கும்போது தான் சொந்தம் கொண்டாட வருகிறான் உறுத்தாதோ அவன் நெஞ்சம் ?

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
சரியான நேரத்தில் வருவத்ற்கு
குமரன் போன்ற கணவர்களுக்குத் தெரியும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
ஏதாவது காரணம் இல்லாமல் குமரன்
வருவானா. வசந்த் முதலில் அவனை வரவேற்பானா
என்று பார்க்கலாம். மாலதி கலங்காமல் இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,2014லிலேயே நிறையமாறி
இருந்தது. உங்களுக்கும் நிறைய வேலைகள் வந்து விட்டனவே .
பரவாயில்லை மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
மாலதி சமாளிப்பாள். ஆனால் வாழ்வின்
ஆதாரமாக அவள் நினைக்கும் மகனுக்கு
தொந்தரவு வராமல் காப்பாள்.
சங்கடம் தான். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
அவனுக்கு மனசாட்சி இருந்தால் இப்படி நடந்திருப்பானா.
ஏதோ திட்டத்துடன் தான் வந்திருக்கிறான்,.
பார்க்கலாம் மா,

வெங்கட் நாகராஜ் said...

இத்தனை வருடங்களுக்குப் பிறகு குமரனின் வருகை... நல்லதற்காகவே இருக்கட்டும்.

என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள, தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
அறுவடையாகும் நேரம் கள்ளர்கள் வருவார்கள்
முற்காலத்தில் .
இப்போது தந்தையே வந்து விட்டான்.