Blog Archive

Friday, January 31, 2020

உலகநீதி கதை 3.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 

உலகநீதி  கதை 3.

//சினம் தேடி அல்லலையும் தேடவேண்டாம்
சினந்திருந்தார் வாசல் வழி சேர வேண்டாம்

தருமத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம்//

Image result for avoiding  anger

குழந்தைகளுக்குப் பள்ளியிலிருந்து வரும்போதே 
பசி. 
அவர்கள் அம்மாவும் வேலையிலிருந்து வரவில்லை.

கையில் தான்  அலைபேசி இருக்கிறதே.
என்ன செய்வது என்று அறிவுரை கேட்டுக் கொண்டார்கள்.

அவர்களுக்குப் பிடித்த உணவை செய்து தரட்டுமா என்று 
கேட்டதற்கு  மறுத்துவிட்டார்கள். ஐந்து நிமிடத்தில் 
வாக்குவாதம் ஆரம்பித்துவிட்டது.

அவசரத் தேவைக்குப் பாலைக் கொடுத்துவிட்டு 
இருபக்க விவாதத்தைக் கேட்டு முடிப்பதற்கும் 
அவர்கள் அம்மா, பிடித்த பலகாரத்தை வாங்கி 
வருவதற்கும் சரியாக இருந்தது.

அவர்களுக்கு அதுதான்  தேவையாக  இருந்தது.
சாப்பிட்டு முடித்ததும், கோபம் தீர்ந்ததா என்றதும் சிரிக்கிறார்கள்..

இதுதான்  சரியான சந்தர்ப்பம்  என்று 
அவர்களை  அழைத்து உட்கார வைத்தேன்.
ஸாரி , பாட்டி  , நாங்க ரொம்ப  சத்தம் போட்டுவிட்டோம் என்று 
கேட்ட குழந்தைகள்  மீது   என்ன சொல்வது என்றே 
தெரியவில்லை.
அதற்குத்தான் இந்தப்  பாடலைச்  சொல்ல நினைத்தேன்.

தருமத்தை ஒருநாளும் மறக்க  வேண்டாம் .
இது என்ன சொல்லு என்றேன். 
பேத்திக்குப் புரிந்தது. 
தானம் செய்ய வேண்டும்  என்றாள் .

அடுத்து  சினம் கொள்ள வேண்டாம். வேறு யாராவது கோபப்பட்டால் அந்த இடத்தில்  இருந்து விலகிவிட வேண்டும். என்று சொன்னதும்.

அது முடியுமா பாட்டி. 
முடியும். கண்ணா. 

கொஞ்ச நேரம் முன்னால்  ஒரு பெரியவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்.

ராமர் கதை தெரியுமா என்றேன்.  என்ன பாட்டி, 
நன்றாகத் தெரியும் என்கிறார்கள்.
அதில ஹனுமான் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றதும்.
நல்ல புத்திசாலி,பலவான், மெதுவாகப் பேசுவார், தைரியம் அதிகம். 
வீர தீர பராக்கிரமசாலி என்று அனுமன் சாலிசா 
போல சொல்ல ஆரம்பித்தனர்.:)

"அவர் ஒரு தடவை நல்ல  சிக்கலில் மாட்டிக் 
கொள்ள நேர்ந்தது. அவரின் அளவில்லாத 
பாசத்துக்கு ஆட்பட்டிருந்த ராமருக்கும் சுக்ரீவனுக்கு கருத்து பேதம் "
என்று விபீஷண  சரணாகதி  பற்றி சொல்ல ஆரம்பித்தேன்.

விபீஷணன், அண்ணன் ராவணனை விட்டுவிட்டு ராமனிடம் அடைக்கலம் கேட்கும் போது,
சுக்ரீவன் மறுக்க,
கருணாசாகரனான  ராகவன் , தன்னைச் சரணமடைந்தவனைக் காக்க வேண்டும் என்கிறார்.
சுக்ரீவனோ  விபீஷணனை  நம்பக்கூடாது. அவன் உங்களைக் கொன்றாலும் கொல்லுவான் 
என்று சொன்னதும் ராமர் மனம் வாடுகிறது.
இது வரை சும்மா இருந்த   அனுமன்,

சுக்ரீவனிடம் சென்று  அவனிடம் சினத்தை அகற்றி நிதானமாக இருக்கச் சொல்கிறார்.
உனக்கு ராமர் உயிர் மேல் எவ்வளவு அக்கறையோ அதே போல அவர் தம் சரணாகதித் தத்துவத்தின் மீது 
உயிர் வைத்திருக்கிறார்.
நீ விபீஷணனை வேண்டாம் என்றால் அவர் உயிரை விடுவது நிச்சயம்.
உனக்கு அது  தர்மமாகப் படுகிறதா "
என்றதும்  சுக்ரீவனின் சினம் சட்டென்று  தணிந்தது.

என் மேலும் ராமருடைய இரக்கத்தின் மேலும் நம்பிக்கை வை.
இரு உயிரைக் காப்பாற்றுவாய் என்கிறார்.


பிரச்சினை தீர்ந்தது என்றேன்.Image result for VIBHISHANA SARANAGATI

நீ கோபம் இருக்கும் இடத்தில் இருக்கக் கூடாது என்றல்லவா சொன்னாய் என்று சமயோசிதமாகக் கேட்டான் சின்னவன்.

உண்மைதான் பா. அனுமனால் கோபத்தை விரட்ட முடிந்தது.
நிதானமாக யோசித்துப் பேச முடிந்தது.

எல்லோரும் கோபம் கொண்டால் ஒரு காரியமும் நடக்காது.
நல்ல வேலையும் நின்று போய்விடும்.

இருவரும் யோசித்தார்கள்.

பசி வரும்போது  பேசாமல் இருக்கணுமா ?
நிதானமா இருக்கணும் என்றேன்.
கொஞ்சம் கஷ்டம் பாட்டி.!
ஆமாம் பா. இப்போதிலிருந்தே  பழக ஆரம்பிக்கலாம்.

இன்னும் கொஞ்சம் வயதானால் தெரியும் என்றேன்.
 உனக்கு கோபம் வராதா என்றாள்  பேத்தி. வரும்பா .
இப்பதான் பேசுவதைக் குறைத்து வருகிறேன் என்றேன்.

ஓஹோ. அப்பா எங்களுக்கும் நிறைய நாள் ஆகும் என்றான் சின்னவன்:)




Thursday, January 30, 2020

தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்

வல்லிஸிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழவேண்டும்.

உலக நீதி.

//////மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
வனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே///

இந்தப் பாடல் குழந்தைகளுக்குப்  புரிவது கடினமாக இருந்தது. 

இந்தக் குளிர் நாட்களில்  பள்ளிக்குச் செல்வதைத் தவிர 
வேறு  வேலை இல்லை.
நானும் கணினியின் மூடிவைத்துவிட்டால் பேத்தியும் பேரனும் 
உடன் வந்து அமர்ந்துவிடுவார்கள்.
அவர்கள் தொலைகாட்சி ரிமோட்  எடுப்பதற்குள்,
நான் கதை ஆரம்பிக்க வேண்டும்,
பெரியவளுக்கு அமர்சித்ர  கதா அனைத்தும் மனப்பாடம்.

அதனால் அந்தக் கதைகளைச் சொல்ல முடியாது.

புதிதாகத் தான் சொல்ல வேண்டும்.
அதனால் உலக நீதி பாடல்களை படிக்க ஆரம்பித்தேன்.

மேலே இருக்கும் பாடலின் சிலவரிகளை விளக்கி 
அலிபாபா கதையில் வரும் அவன் அண்ணன் காசிம்,,
பணத்திப் பதுக்கி வைத்ததையும், மேலும் பணத்துக்கு ஆசைப் பட்டதையும் , கடைசியில் அந்தப் பேராசையிலேயே 
உயிர் துறந்தையும் சொல்ல  
அவர்களுக்கு கொஞ்சம் புரிந்தது.

பணம்  அவசியம் தானே பாட்டி என்கிறார்கள் இருவரும்.

பேராசை வேண்டாமே என்று இடை மறித்தாள்  பேத்தி.
உண்மைதான் மா.
செல்வம் எப்போது பெருகும் தெரியுமா 
என்று கேட்டேன் .பாங்கில் போடலாம் என்றான் சின்னவன்.
நீ சொல்லு பாட்டி. 

நம் ஊரில் ஒரு ஏழை விவசாயி இருந்தான்.

அவன் நிலத்தில் கிடைக்கும்  வருமானம் கொஞ்சம் தான்.

இரண்டு மூட்டை நெல்லே கிடைத்தது.

அறுவடை  முடிந்தபிறகு  நெல்லை அரிசியாக்கி,
நிலத்தைப் பார்வையிடப் போனான். அங்கே அணில்களும்,காகங்களும் சிந்தியிருந்த நெல்மணிகளைப்  பொறுக்கி  உண்டு கொண்டிருந்தன.
அப்போது அங்கே இன்னொரு வயதானவரையும் பார்த்தான்.
அவரும் தானியங்களை சேகரித்துக் கொண்டிருந்தார்.

பெரியவரை அணுகி, வணக்கம் சொல்லி ஐயா நீங்கள் ஏன் இங்கே எடுத்துக் கொள்கிறீர்கள் ?என்று வணக்கத்துடன் கேட்டான்.

நானும் பண்ணை,நிலம் என்று இருந்தவன் தான் அப்பா.
மேலும் மேலும் நிலங்கள் வாங்கினேன்.
மனைவிகூடச் சொன்னாள்  போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. என்றாள் . நான் கேட்காமல் 
பலவிதமாக நெல் வியாபாரங்கள் செய்து, பதுக்கிவைத்து விற்று 
குற்றம் புரிந்தேன். ஆண்டவனுக்கு என்  நிலையை மாற்றத் தோன்றிவிட்டது.
காலம் மாறி   மாரி பெய்து அழித்தது. பெய்யாமல் அழித்தது.

ஒரே மழையில் நிலங்கள் பாழடைந்தன .
பிறகு வறட்சி. எனக்கோ மக்கள் இல்லை. மனைவிக்கு நோய்.
நிலம் விற்றால் வாங்க ஆளில்லை .

"ஏன் பாட்டி ,அப்பர்சாமி  அபார்ட்மெண்ட்ஸ் கட்டி இருக்கலாமே என்றாள்  இந்தக்  காலத்து  பேத்தி :)

அந்தக்  காலத்தில் அதெல்லாம்  கிடையாதுமா என்றேன் நான்.

பெரியவர் சொன்னார்,

"இது போல அறுவடையான நாட்களில் கிடைக்கும் எல்லா வகை தானியங்களும் காய்கறிகளும் எனக்கு உதவும் என்றார்.

இதெல்லாம் எப்படிப் போதும் ஐயா.
"
என் பழைய குடியானவர்கள்  உதவுவார்கள்.
என் பங்கும் இருக்கட்டும் என்றே  இந்த வேலை செய்கிறேன்."

விவசாயி முருகனுக்குச் சட்டென்று தோன்றியது. ஐயா எங்கள் குடும்பமும் சின்னதுதான். நீங்கள் எங்களுடன் வந்து இருங்கள். நாமிருவரும் உழைத்து முன்னேறலாம் என்றான்,
சொன்னதோடு இல்லை அவரை அழைத்துச் சென்று உணவை உண்ண  வைத்தான்.
அவரையும் அவரது நோய் கொண்ட மனைவியையும் தன்  வீட்டில் இருக்க வைத்தான்.

பெரியவர் உடல் வலுவால் முருகன் நிலம் செழித்தது. முருகன் அவன் 
மனைவி செந்தாமரையின் கவனிப்பில் 
பெரியவரின்  மனைவியும் எழுந்து நடமாட ஆரம்பித்தாள் 
படிப்படியாக முன்னேறி ஊர் முழுவதும் 
அவர்களால் நலம் பெற்றார்கள்.
என்று நிறுத்தினேன்.

இதுக்கும் அந்தப் பாட்டுக்கும் 
என்ன சம்பந்தம் என்றால் பேத்தி.

பாடுபட்டு பணத்தைச் சேர்த்தால்  மட்டும் போதாது.
அதை ஒளிக்காமல் எல்லோருடனும் பங்கு கொண்டால் அது மேலும் மேலும் வளரும்.
மனம் தாராளமாக இருந்தால், செல்வமும் நம்மிடம் தங்கும் 

என்பதுதான்  அர்த்தம். என்றேன்.  OK, I WILL SHARE MY CHOCALATES WITH
you  akka.

Ok I will share all my colour   boxes with you //
என்றாள்  பேத்தி. நலமுடன் வாழ்க. இன்னமும் கேள்விகள் அவர்களுக்கு 
இருக்கின்றன  அவர்களுக்கு.

Image result for brothers and sisters









Wednesday, January 29, 2020

மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்

வல்லிசிம்ஹன் 
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் .
++++++++++++++++++++++++++++++++++++++++++++


பாடல் : 1    உலகநீதி .

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

+++++++++++++++++++++++++++++++++++++++++++



குழந்தைகளே ,



பாட்டி ஏன் கடமை என்கிற வார்த்தையை  அடிக்கடி உபயோகப் படுத்துகிறாள்னு பார்க்கிறீர்களா. அம்மாவிடம் அப்பாவிடம் ராமரும் அவர் சகோதரர்களும் இருந்த மாதிரி,

பாண்டவர்களும் அவர்கள் அன்னையிடம் மிகப்

பாசம் காட்டிப் பணிவும் காட்டுவார்கள்.



அம்மாவிடம் இயல்பாகவே நாம் பாசமாகத் தானே இருப்போம். 

அம்மாவை விட்டால் நம்மிடம் வேறு யார் இத்தனை அன்பாக இருப்பார்கள்?



அதனால நாம் அவளிடம் அன்பாக இருப்பது 

,கடமை என்று சொல்லக் கூடாதே. அது தானாக 

இருக்க வேண்டியதுதானே என்று நினைக்கிறீர்கள் இல்லையா.







இப்போ ஒரு குட்டியா ஒரு கதை சொல்கிறேன்.



ஒரு சின்ன கிராமத்தில் இரண்டு வீடுகள். இரண்டு வீட்டிலும் குழந்தைகள் உண்டு. அதில் பெரிய பையன்கள் இருவரும் ,

பெண்கள் இருவரும் நெருங்கிய தோழர்களாக வளர்ந்தார்கள்.

பையன்கள் பள்ளிக்குக் கிளம்பும்போது அம்மா' போய்விட்டு வரேன் னு சொல்லிட்டு ஓடி விடுவார்கள். பெண்கள் இருவரும் தங்களுக்கு உண்டான வேலைகளை முடித்து விட்டு, தாய்கள் தங்கள் தலையில்



சூட்டும் பூக்களையும் வைத்துக் கொண்டு



அன்போடு அம்மாவைக் கட்டியணைத்து போய்விட்டு வரேன் மா'ன்னு சொல்லிக் கிளம்புவார்கள்.



அதன் பின் இரு தாய்மார்களும் சிறிது நேரம் பேசிவிட்டுத் தங்கள் வேலைகளைப் பார்க்கச் செல்வார்கள்..

இயல்பாகவே பெண்களுக்கு அம்மாவிடம் அன்பைக் காண்பிப்பது வழக்கம் இருக்கும். பசங்களுக்கு



(எல்லாப் பசங்களையும் சொல்லவில்லை. சில பையன்களுக்கு மட்டும் சொல்கிறேன்.:) )



அந்த மாதிரி அன்பை வெளிக்காட்டுவது வழக்கத்துக்கே வருவது இல்லை.



இது ஒரு சின்னப் பயிற்சிதான்.



காலங்கார்த்தால எழுந்திருக்கும் போதே குழந்தைகளே நீங்கள் உங்கள் பற்களைத் துலக்குவது,பால் சாப்பிடுவது,பாடப்



புத்தகங்களை எடுத்துவைப்பது என்று வழக்கம் செய்து கொள்வது போல



ஸ்வாமி சந்நிதியில் கைகூப்பி உங்களுக்குச் சொல்லிக் கொடுத்த



சாமி பாட்டுகளையோ ஸ்லோகங்களையோ சொல்லுங்கள்.



அந்த நாள் பூராவும் எப்பவுமே கடவுள் உங்களுடன் இருப்பதாக நம்புங்கள். அவர் இருப்பார்.



அந்த நம்பிக்கையோடயே அம்மாவையும் அப்பாவையும்



வணங்குவதையும் வழக்கமாக இன்றிலிருந்து ஆரம்பியுங்கள்.



இந்த வழக்கம் உங்களிடம் இருக்கும் வரை



பணிவும் அடக்கமும் உள்ள பிள்ளைகளாக நீங்கள் வளருவீர்கள்.



அம்மாவும் அப்பாவும் எத்தனையோ கடமைகளை உங்களுக்காக அன்போடு செய்கிறார்கள்.



அவர்களைத் தினம் வணங்குவதை உங்கள் கடமையாக எடுத்துக் கொள்ளுங்கள்.



முதலில் சிலசமயம் மறக்கும். பரவாயில்லை. அதற்குப் பின் பழகிவிடும்.



கடவுள் போலவே அம்மாவின் அன்பும் உங்களைக் காக்கும்.



சரியா குழந்தைகளே.



அன்புடன் வல்லிப் பாட்டி.

Image result for அன்னையும் குழந்தைகளும்



இதையே அந்தக் குழந்தைகளும்,அதாவது 

கதையில் வந்த பையன்களும் ஆரம்பித்துவிட்டதாகச் சொன்னார்கள். 

சந்தோஷமாக இருக்கிறது,. இன்றையக் குழந்தைகள் நாளைய பெரியவர்கள்

தங்கள் குழந்தைகளுக்கும் இந்தப் பாடத்தைச் சொல்லித்தரட்டும்.



ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

+++++++++++++++++++++++++++++++++++++++++++







குழந்தைகளே ,  நலமோடு இருங்கள் 



Monday, January 27, 2020

தவம் 5 ... பாகம். கதை 2020 ஜனவரி

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

தவம் 5 ...இறுதி பாகம். கதை 2020 ஜனவரி 

Image result for south Indian tamil mother and son
இந்த நாள்  இனிய நாளாக   இருக்க வேண்டும் என்று 
வேண்டியபடி, குளித்து  முடித்து , மணியை ப் பார்த்துக் கொண்டு 
ஆறு  ஆனதும் ,மகனை  அழைத்தாள் .

குட் மார்னிங் மா. 6 மணிக்கு நீ அழைப்பாய் என்று தெரியும்.
அம்மா இன்று முதல் வகுப்பே ,
மிக சுவாரஸ்யமாக இறுக்கப் போகிறது.
உடல் உறுப்புகள்   எல்லாம் அறிமுகப்படுத்துகிறார்கள்.

கொஞ்சம்  கை  நடுங்காமல்  வகுப்பை அணுக வேண்டும்.
என்று சிரித்த வண்ணம் பேசும் மகனின் குரல் ,மகிழ்ச்சியில் ஆழ்த்த, நடப்பதெல்லாம்  நன்மைக்கே என்று நினைத்தபடி,
வசந்த், 

ஒரு அலுவலக வேலையாக தஞ்சாவூர் 
வந்திருக்கிறேன். 
ஒரு இன்வெஸ்டிகேஷன். நான் மட்டும்   வரவேண்டும் என்று நேற்று 
இரவு சொல்லி   உடனே கிளம்பினேன்.

உனக்குப் படிப்பு இங்கே என்றால்  ,எனக்கு வேலை 
இங்கே வந்துவிட்டது. உன்னை மதியம் பார்க்க முடியுமா என்று கேட்டாள் .
அம்மா, நிஜமாவா   , என்னம்மா நீ முன்புதான் இது மாதிரி  ஊருக்கு கிளம்புவாய்.
இப்போது இங்கே வந்திருக்கியா..Image result for south Indian tamil mother and son
!!!!!!!!
   ஒரு மணிக்கு   கல்லூரியில் வரவேற்பறைக்கு வாம்மா. நான் அங்கே வருகிறேன்  .  ஒரு பத்து  நிமிடங்கள்  தாமதமாகலாம். 
சிறு  குழந்தை போல மகிழும் மகனின் குரல் அவளை நெகிழ்த்தியது.
சரிப்பா, நீ  காலை உணவு முடித்து 
வகுப்புக்கு கிளம்பு.

நான் வந்ததும்  உன்னை அழைக்கிறேன்.
கவனம் சிதறாமல் படிப்பில் மனம் செலுத்துப்பா.
என்று உரையாடலை முடித்தாள்.
உடனே  அண்ணாவின் அழைப்பு  வருவதைக் கண்டு 
படபடக்கும் இதயத்துடன்," அண்ணா,  எல்லாம் சரியாக இருக்கா"
என்றாள் .

நீ காலை உணவை முடித்து  அறையில் இரும்மா. நான் பத்துமணி அளவில் வந்துவிடுவேன்.
விமான வழிப் பயணம். எட்டு மணிக்கு 
திருச்சியில் இருப்பேன் . அடுத்த ஒரு மணி நேரத்தில் தஞ்சாவூர்.

குமரன் வெறும்  எண்ணத்தோடு நிற்கப் போவதில்லை மா.

நீ  அங்கே சென்றது  நன்மைக்கே.
மகன் பாசம் அவனை வரவழைக்கவில்லை.

தந்தையின் சொத்துக்கு  ஆசைப்பட்டு  வந்திருக்கிறான்.
நீ கவலைப் படாதே. நான் வக்கீல்  வேல்முருகனோடு 
வருகிறேன் " என்று சொன்னான்.

"அட இதுவா விஷயம். சரிண்ணா , நீ கவலைப் படாதே 
நாம் எதையும் சமாளிக்கலாம்" 
என்று  முடித்து வைத்தாள் .

ஐந்து வருடங்கள்  முன்பு நடந்த  ,சொத்துப் பிரிவு நினைவுக்கு வந்தது.
 இளைய மகனிடம் நம்பிக்கை இழந்த  மாமனார்,
 தன பரம்பரை சொத்தை    மூத்த மகன் ,ஒரு பாதி , மறுபாதி 
பேரன் வசந்த்க்கு   என்று பிரித்து விட்டார்.
நிலபுலன் மட்டும் தான் இருக்கும் வரை 
அனுபவிக்கும் படியும், அதன் பின் மருமகள் 
மாலதியைச் சேரும்படி   வக்கீல் ஞானசம்பந்தனைக்  கலந்து உரையாடி 

வக்கீலின் மகன் வேல்முருகன் ,மற்றும் 
இரு மூத்த உறவினர்கள், சாட்சி  கையெழுத்துப் போட 
உயில் எழுதப் பட்டு வாங்கி லாக்கரில் வைக்கப் பட்டது.

இந்த செய்தி  ,குமரனுக்கும்  ரெஜிஸ்டர்ட்  தபால் வழியே அனுப்பப் பட்டது.
கேட்டதும்  ,சினம் கொண்டு அப்பாவிடம்  வாக்குவாதம் செய்தவன்,
எதிர்காலத்தில்  தான்  எதிர் வழக்கை  இட்டு 
வாதாடப் போவதாக வும் எச்சரித்திருந்தான் .

அவன் தந்தை   அசைந்து கொடுக்கவில்லை.
மகன்  நிறைய பணம் சேர்த்து வைத்திருப்பதையும்,
கொடைக்கானலில் வீடு வாங்கி இருப்பதையும் 
அவர்  அறிவார் .
ஒரு பெண்ணின் பாவத்தைத் தேடிக் கொண்டவனுக்கு தன்  சொத்து போவதை அவர் விரும்பவில்லை.

பெரிய வக்கீலும்   குமரன்  வழி தொந்தரவு 
வராகி சந்தர்ப்பம் இல்லை என்றும். அவனால் 
எதிர்க்க முடியாது என்றும் வலியுறுத்திச் சொன்னார்.


காலை உணவை  முடித்துக் கொண்டு 
தஞ்சைப் பெருங்கோயிலுக்கு மெல்ல நடந்தாள்  மாலதி.
இந்தத் தடையைத் தாண்ட  பெருவுடையாரே 
உதவ வேண்டும் என்று பிரார்த்தித்தாள் கொண்டால்.
சட்டம் தன்  பக்கம் என்றாலும் 
கணவனாயிருந்தவனின் துர்க்குணத்தை  அறிந்தவள் ஆனதால் கொஞ்சமே பயந்தாள்.

அண்ணனின்  அழைப்பு  கேட்டதும் நிம்மதி  பெருமூச்சு விட்டபடி 
பேசினாள் .
நாம் சாப்பிட்டுவிட்டுக்  கல்லூரிக்குப்  போகலாம்.
அவனும் வருகிறான் மா. கவலைப் படாதே.

நாம் முதலில் கல்லூரிக்குப்  போய் விடலாம்.
 வசந்த்  குழம்ப மாட்டான்.
இந்தப் பதினெட்டு வயதுக்குள்  இந்தக் குழந்தைக்கு  எத்தனை சோதனை அம்மா. என்ற அண்ணனின் குரல் கரகரத்தது.

நாம் இதையும் கிடப்போம். குழந்தை  மனம் 
நோகாமல்  பார்த்துக் கொள்வோம் 
என்று சொன்னவள் ,வண்டி ஒட்டி செல்வத்திடம் 
கல்லூரிக்குப் போகச்  சொன்னாள் .
அவள் மனம் இருந்த  நிலையில்   உணவு தொண்டையில் 
இறங்க   மறுத்தது .
அவளும்  அண்ணன்  செந்திலும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய 
அங்கு வரவேற்பு  அறையில்   குமரன் நிற்பதையும் 
வசந்தைப் பற்றி விசாரிப்பதையும் கண்டு 

மாலதியின் உடலே  பற்றி எரிவது போல 
இருந்தது.  தன்னை  நிதானப் படுத்திக் கொண்டு 
அறையின் வாயிலில் வசந்தைச் சந்திக்க நின்று கொண்டாள் .

வசந்தும் வந்தான். 
அம்மாவின் அருகே வந்தவன், அவளின் பதட்டத்தை ஒரு நொடியில் 
புரிந்து கொண்டான்.
அவள் கைகளை பற்றிக் கொண்டு அம்மா,என்றவனைத் தீர்க்கமாய்ப் பார்த்தவள்  ,
கண்ணா, நாம் போய் சாப்பிடலாம் வா என்று 
கல்லூரி விடுதி சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்று அவனிடம் 
தந்தை வந்திருப்பதையும், அவரின்  எதிர்பார்ப்பையும் சொன்னாள்.
கண்ணா 
அவர் உன்னிடம்  ,தாத்தா கொடுத்த சொத்தை 
 தன்னுடன்  பகிந்து கொள்ளும்படிக் கையெழுத்து வாங்க வந்திருக்கிறார் .
உனக்குப் பதினெட்டு  வயதில்  அப்பா கொடுக்கும் பரிசு என்றாள் .

நிதானமாக வசந்த் சொன்னான்.
பங்கு வேண்டாம் அம்மா. முழுவதுமே கொடுத்து விடுகிறேன்.

எனக்கு அவரைப் பார்க்க வேண்டாம்.
நீயே சொல்லிவிடு.     

வக்கீல் சாரிடம் சொல்லி  தேவையான பத்திரங்களைத் தயார் செய்து கொடு அம்மா.
21 வயதில் தான்  எனக்கு அனுபவப் பாத்தியதை வரும்.
அதுவரை நீதான்    அந்த சொத்துக்குப் பொறுப்பாளி.

நான்  யாரையும் சந்திக்க விரும்பவில்லை.
என்று சொல்லும்  மகனைக் கண்டு 
அதிசயித்துப் போனாள்  மாலதி.

நான்தான் இவனைப் பெற்றவள் .
என்னையே மிஞ்சி விட்டான் என் மகன்.என்றபடி அவனை கட்டி
 அணைத்துக்  கொண்டாள் .

பக்கத்தில் நிழலாடுவதைக் கண்டு  நிமிர்ந்தவள் 
அண்ணன்  செந்திலைப் பார்த்துப் புன்னகைத்தாள் .

அவனிடம் விவரத்தைச் சொன்னவள் ,

என் மகன் மிகப் பெரியவனாகி விட்டான்.
யாரையும் கண்டு நான்  அஞ்சவேண்டாம் .
அவன்  தன்னைக் கவனித்துக் கொள்வான்.
எனக்குக்   கவலை இனி இல்லை  என்றவள்.
நீ சாப்பிடுப்பா.   மாலை வருகிறோம்.
என்று  சொல்லிவிட்டு மீண்டும் அவனைஅணைத்துக் கொண்டாள் .

வனவாசத்திலிருந்து மீண்ட ராமனாகத் தன்  மகனைக் கண்ட 
பெருமை. அவள் முகத்தில் ஒளிவிட்டது.

அண்ணா நீயும் வக்கீல் வேல்முருகனும் அவரைக் கவனித்துக் கொள்ளுங்கள். நான்  கொஞ்ச நேரம் உறங்கப் போகிறேன் என்று அந்த இடத்தை விட்டு அகன்றாள் .

சுபம்.

















Sunday, January 26, 2020

அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்

வல்லிசிம்ஹன் 
எல்லோரும் வளமாக   வாழ வேண்டும் 


அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்


அண்ணா அண்ணா என்றபடித் தன் பின்னாலயே வரும் தங்கச்சியைப் பார்த்துச் சின்னாவுக்குக் கோபமாக வந்தது.ஒண்ணரை வயசில்குண்டு குண்டுக் கால்களை வைத்துக் கொண்டு தட்டுத் தடுமாறித் தன்னை எங்கேயும் போகவிடாமல்

தொல்லை கொடுக்கும்,அவளை அப்படியே தூக்கி அம்மாவிடம் விட்டுவிட்டு வந்தான்.அம்மாவுக்கு அவன் கோபம் சிரிப்பை வரவழைத்தது.ஏண்டா தங்கச்சியை அழைச்சுண்டு போயேன். அவளும் மணலில் விளையாடுவாள் என்று கேட்டாள்.



அவள் மண்ணைச் சாப்பிடுவா, இல்லாட்டாத் தலைல போட்டுப்பாம்மாஎன்று முணுமுணுத்தான் சின்னா.

சரி இங்க வா, ரெண்டு பேரும் சாப்பிடுங்க. நான் கதை சொல்கிறேன்.அவள் தூங்கிடுவா. நீ விளையாடப் போலாம், என்றபடி வாசனையாகக் கடுகும்,கொத்தமல்லி,கறிவேப்பிலை தாளித்த

தயிர்சாதத்தைப் பாத்திரத்தில் எடுத்துக் கொண்டுதங்கச்சிப் பாப்பாவையும்

தரையில் உட்கார்த்தித் தானும் உட்கார்ந்து கொண்டாள்.



சின்னாவும் கைகைளைக் கழுவிக்கொண்டு,ஆவலோடு வந்தான்.''ஒரே ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம். அவருக்கு ஒரு இரண்டு குழந்தைகளாம். ஒண்ணு ராஜகுமாரன்,இன்னோண்ணு ராஜகுமாரி.அவன் பேரு சின்னா.அவ பேரு தங்கச்சியாம்மா என்று ஆவலோடு கேட்டான் சின்னா. அப்படியே வச்சிக்கலாமே என்றபடி கதையைத் தொடர்ந்தாள்,. அம்மா.அந்த ராஜகுமாரன் ரொம்ப புத்திசாலி,தங்கச்சிகிட்ட நிறையப் பாசமா இருப்பான்.

ஒரு நாள் ராஜா ராணி இரு குழந்தைகளும் காவிரி ஆற்றின் கரையோரமாக உலாவி வரப் போனார்கள்.வழியெங்கும் பூத்திருந்த பூக்களையெல்லாம் பறித்துத் தங்கச்சி கிட்டக் கொடுத்துக் கிட்டே அண்ணன்,தங்கச்சியோட கொஞ்சம் தூரம் வந்துவிட்டான்.பின்னால் அம்மா அப்பா வருகிறார்கள் என்று நினைத்தபடி இருவரும் ஓடிக் கொண்டிருந்தனர்.



திடீர் என்று வானம் இருட்டிக் கொண்டு மழை வருவது போலத் தோற்றம் கொடுத்தது வானம்.

சட்டென்று நின்றான் ராஜகுமாரன். தங்கச்சி கையை இறுக்கப் பிடித்துக் கொண்டு, பாப்பா பயப்படாதே, நாம திரும்பிடலாம்என்று வந்தவழியே திருபினேன். ஆறும் அப்போது பார்க்க வேற வர்ணத்தில் இருப்பதாகத் தோன்றியது அவனுக்கு. அங்கெ ஒரு பெரியவர் அடுத்த கரையில் நிற்பதைப் பார்த்தபோதே அந்தப் பெரியவர் அவனைப் பார்த்து

'' தம்பி சீக்கிரம் மேட்டுப் பக்கம் ஏறு.ஆத்தில வெள்ளம் வர சத்தம் கேக்குது'' என்றார்.


ஒரு கணம் கலங்கினாலும், தன் பயத்தைக் காட்டிக் கொள்ளாமல்,தங்கச்சிப் பாப்பாவை அழைத்துக் கொண்டு காவிரியின் கரையை விட்டுமேலே மரங்கள் அடர்ந்த பகுதிக்கு அவன் ஏறவும்தடதடவென்று ஆற்றில் வெள்ளம் நுரைத்துக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. சற்றுமுன் மணலாக இருந்த இடத்தில் எல்லாம் தண்ணீர் நிரம்பி ஓட ஆரம்பித்தது.தங்கச்சியை அருகில் இருந்த மரத்துக் கிளையில் ஏற்றிவிட்டுத் தானும் ஏறிக்கொண்டான் அண்ணா. பயப்படாதே பாப்பா, வெள்ளம் வந்தா உதவிக்கு யராவது வருவாங்க'என்றவனைப் பார்த்துத் தங்கச்சிப் பாப்பா சிரித்தது. நீ தான் என்னைப் பார்த்துப்பியே அண்ணா. எனக்குப் பயமில்லை என்றது.தைரியமாக இருக்கும் தங்கச்சியைப் பார்த்து அண்ணாவுக்குப் பெருமை.சாப்பிட ஒன்றும் எடுத்து வரவில்லையே என்று தோன்றியது.



பக்கத்துமரத்தில் நாவல் பழங்கள் இருப்பதைப் பார்த்தான். ''பாப்பா ,நீ கவனமா உட்கார்ந்துகொள்,நான் நாவல் பழம் பறித்து வருகிறேன், நாம் சாப்பிட்டுக் காத்து இருப்போம். அம்மா அப்பா இருவரும் படகு கொண்டு வருவார்கள்'' என்றபடி அடுத்த மரத்துக்கு எச்சரிக்கையோடு தாவிப் போனான். அண்ணாவையே பார்த்தபடிப் பத்திரமாக இருந்தாள் பாப்பா.

ஒரு கையில் பறித்த பழங்களைப் பிடித்தபடி இன்னோரு கையால்மரக்கிளைகளைப் பற்றிகொண்டு சின்னா திரும்பி வந்தான்.

பசி மிகுதியாக இருந்ததால் இருவரும் பழத்தைசி சீக்கிரம் சுவைத்துச் சாப்பிட்டார்கள்.



கதையை நிறுத்திய அம்மாவிடம்,சின்னா கேட்டான்,ஏம்மா ராஜாராணி குழந்தைகளைத் தேடவில்லையா என்று கேட்டுக் கவலைப் பட்டான்.இன்னும் கொஞ்சம் சாதத்தைக் கலந்து வந்த அம்மா,அவனிடம்.''பின்ன ராஜகுமாரன்,குமாரி காணோம்னா தேட மாட்டாங்களா, இப்ப நீ எங்கியாவது போனா அம்மா தேடுவேன் தானே? என்று மறு கேள்வி அவனுக்குப் போட்டாள்.ஓ அப்ப சரி.. என்று கொஞ்சம் தெளிந்தான்.பாதித்தூக்கத்தில் சாமியாட ஆரம்பித்த பாப்பா கூட விழித்துக் கொண்டு, அம்மா தன்னி என்ன ஆச்சு என்றாள்.



அப்படிக் கேளுடா கண்ணுன்னு அம்மா தொடர்ந்தாள். கொஞ்சம் இருட்டிய பிறகே ராஜாவோட பெரிய படகில் ராஜகுமாரனையும் பாப்பாவையும் கூவி அழைத்தபடி ராணியும் ராஜாவும் ரொம்பக் கவலையோடு வந்துக் கொண்டிருந்தார்கள்.அவர்கள் கண்ணுக்கு வெள்ளம்தான் தெரிந்தது. கரையோரம் பார்க்கத் தோன்றவில்லை.ராஜகுமாரன் சின்னா தான் மரக்கிளையிலிருந்து குரல் கொடுத்தான்,சின்னப் பாப்பாவும் சேர்ந்து கொண்டாள்.



குரல் வந்த திசையில் பார்த்தாலும் அவர்களுக்கு குழந்தைகள் தெரியவில்லை. சற்றே ஜாக்கிரதையாக உற்று நோக்கியதில் ராஜ உடைகளும் பாத அணிகளும் தெரிந்தன.

நிதானமாக அந்த மரத்துப் பக்கம் வந்தது படகு.தண்ணீர் சுழித்துக் கொண்டு ஓடியதால் கவனமாக இருந்தார்கள்.

படகிலிருந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு ராஜா மரம் பக்கம் வந்து,முதலில் பாப்பாவையும்,சின்னாவையும் இறக்கினார் ராஜா.அவர் கைக்குள் வந்ததும் குழந்தைகள் அதுவரை தைரியமாக இருந்த அழகை,வீரத்தைப் பாராட்டினார்.

இருவரையும் தண்ணீரில் விடாமல் தான் அவர்களைத் தூக்கி கொண்டு தண்ணீரில் நீந்தி,

ராணியிடம் கொடுத்தார்.

குழந்தைகளை மீண்டும் கண்டபிறகுதான் ராணிக்குக் கவலை தீர்ந்தது.



இந்தக் கதையிலிருந்து என்ன தெரிந்தது சின்னா என்று அம்மா கேட்டாள்.பாப்பா, உடனே ''தண்ணி கிட்டப் போகக் கூடாது'' என்றது. சரி.பாப்பா சமத்தாச் சொல்லிட்டா. புத்திசாலிப் பப்பா.சின்னா நீ சொல்லு என்று மீண்டும் கேட்டாள்.சின்னா சிறிது யோசித்து ''அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்'' என்ற நீதியுரையைச் சொன்னான்.

எந்த நேரத்திலும் பயப்படக் கூடாது. பதறாத காரியம் சிதறாது என்றும் சொன்னான்.

இந்தக் கதையை எங்கள் பேரனிடம் சொல்ல நேர்ந்த காரணம், முதல் தடைவையாக அவன் ஒரு பெரிய மால் இல் வழிதெரியாமல்வேறெங்கோ போன விஷயம்தான்.அப்புறம் மைக்கில் அவனை விளிக்கவும் வந்துவிட்டான்.அதிலிருந்து மனம் போன போக்கில் அவன் போவதில்லை.:)



இது மிகப் பழைய கதை. இங்கிருக்கும் பேரன் பேத்திக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் நேற்று வந்தது.

Saturday, January 25, 2020

தவம் 4

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .

தவம்  4   தொடர் கதை ஜனவரி 2020

Image result for forgetting  quotes

செய்தி கேட்டதும்  மனம் கலங்கியது என்னவே உண்மைதான்.
மாலதி உடனே எழுந்தாள்.
அண்ணா எனக்கு  தஞ்சை   செல்ல வேண்டும் . உதவி செய்வாயா.
என்றாள் .

அவசரப் படாதே மா. 
நாளை காலை  அவனை நான் சந்திக்கிறேன். ஒரு நாள் பொறு .
தகப்பனுக்கும் மகனிடம் உரிமை உண்டு "
என்று சொன்னதும் மாலதி சீறினாள் .
''அம்போன்னு விட்டுட்டுப் போனாரே .
அப்போ இந்தக் கடமை  காணமப்  போயிருந்ததோ ?
இப்போ உரிமை வந்து  திடீர்னு எப்படி வந்தது?"

என்று க்  கூறிய தங்கையின் முகத்தைப் பார்த்துப் 
பயந்து போனான்   அண்ணா.

"ஆத்திரப்  படாதேம்மா. அவன் அப்போது சட்டப்படி ஒத்துக்கொண்டான். பையன் மைனர்  என்பதால். இப்போதும் அவனுக்கு 18 வயது ஆனாலும்   '
தந்தையாக  ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது.

பையனாக இஷ்டப்பட்டால் அது வேறு  வழி.
நம் குழந்தை அப்படிப்பட்டவன்  இல்லை.
பதறாத  காரியம் சிதறாது. ''
என்ற அண்ணனை   கண் சிமிட்டாமல் பார்த்தாள் .

அண்ணா  அந்த மனிதனைப்  பற்றி உனக்குத்  தெரியாது. 
குழந்தை வசந்துக்கு இரண்டு வயதாகும் போது வந்தாரில்லையா.

குழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்சக் கூட இல்லை.
இன்னொரு காரியம் செய்தார்.
எனக்குத் தெரியாமல் , தனக்கு இனிமே குழந்தை வேண்டாம் என்று 
சர்ஜரியும் செய்து கொண்டார்.

எனக்கு அப்போது தெரியவில்லை.
அதே ஆஸ்பத்திரிக்கு வேறு ஒரு செக்கப்புக்குப் 
போன  பொது எனக்குத் தெரிந்த ஆயா , ஏம்மா ஒத்தை பிள்ளையோடு இப்படி செய் து கிட்டீங்க.என்று  ஆதங்கப் பட்டுக் கொண்டாள் .

வாய் பேசாமல் வந்துவிட்டேன்.
அதன் பின் கடிதம் எழுதுவதையும் விட்டு விட்டேன்.
இப்போது அங்கேயும் பிள்ளை இருக்காது,.
திடிரென்று பிள்ளை மேல்  பாசம் வந்து ,
உன்னை நான் அமேரிக்கா அனுப்பறேன்னு சொன்னால் கூட 
நான் ஆச்சரிய பட மாட்டேன். அவன்  ஒத்துக்க கொள்வான் என்று 
நான் நம்பவில்லை. 18 வருடங்களாகத் திரும்பிப் பார்க்காத பிள்ளையின்  மீது திடீர் பாசம்  ஏன் "
எனக்கு என் பிள்ளைக்கிட்டப் பேசணும் அண்ணா.

அதுவும்   இந்த  ஆரம்ப காலத்தில் அவன் மனம் கலங்கக்  கூடாது.
அவன் முழுமனதுடன் படிக்க வேண்டும்.

என் பையன் என்னை விடப்  பெரிய தியாகி. ஊரில் எத்தனையோ முறை  கேள்விகளுக்கு ஆளாகி இருக்கிறான்.
குமரன் அவனைப் பார்க்க வேண்டும் என்றால் என்னுடன் தான் 
பார்க்க வேண்டும். என்று திட்ட வட்டமாகப் பேசியவளின் உடல் நடுங்கியது.

அதிர்ச்சியுடன் தங்கையைப் பார்த்த அண்ணன் 
செந்தில்,   தங்கையை ஆதரவுடன் அணைத்துக் கொண்டான்.

இதெல்லாம் ஏன் அம்மா மறைத்தாய்  என்று கேட்டதும்,
மாமனாருக்குத் தெரியும் அண்ணா.
அவர்தான் என் பெயரையும், வசந்த் பெயரையும் 
நம் அப்பா பெயருடன் இணைத்தார்.
நான் மாலதி மகாதேவன்,
அவன் வசந்த் மஹாதேவன்  என்று முடித்தாள்.

அப்பாவுக்குத் தெரியுமா என்ற போது 
தலையை அசைத்தாள். பெயர் மாற்றத்துக்கு அவர் சம்மதித்துதான் இது நடந்தது.
மற்றது தெரியாது  என்றாள் .
நான் எங்கே போயிருக்கேன்மா. இப்படி ஒரு 
சமாச்சாரம் நடந்ததே தெரியாமல்  போச்சே என்று கலங்கிய அண்ணனைப் பாசத்துடன்  பார்த்தாள்  தங்கை .

ஞாபகம் இல்லையா அண்ணா, 'அண்ணி வீட்டில் அவள் தந்தைக்கு வரக்கூடாத நோய் வந்து நீங்கள்  எல்லோரும் 
போராடிக் கொண்டிருந்தீர்களா.
நல்ல வேளையாக    அந்த மாமா பிழைத்தெழுந்தார்.
உனக்கு அனாவசிய அழுத்தம் தரவேண்டாம் என்று தான் 
சொல்ல வில்லை. ''

தங்கையின் பெருந்தன்மையையும், தன் கவனக்  குறைவையும் 
யோசித்தான். இது போல சுதந்திரமாகச்  சிந்திக்கும்படி வளர்த்த தன்  பெற்றோரையும்   நினைத்துப் பெருமைப்பட்டான்.

அண்ணா, வா என்னுடன் சாப்பிடு  என்று வலுக்கட்டாயமாக அவனை உட்கார வைத்தாள் 
மாலதி.
உனக்குப் பழக்கப் பட்ட கணேஷ் டிராவல்ஸ் வழியாக நான் போகிறேன் அண்ணா.
நீ உன் வேலையில்  என்ன ஏற்பாடு செய்ய வேண்டுமோ  அதை 
செய்துவிட்டு வா. இரண்டு நாளில் திரும்பிவிடலாம்.

லட்சுமி  ஹோட்டலில் உனக்கு அறை , பதிவு செய்கிறேன் அம்மா 
நானும் தங்க சவுகரியமாக இருக்கும் 
என்றபடி  அவன் சாப்பிட்டு முடித்த போது 
மணி  எட்டு ஆகி இருந்தது.

தந்தைக்கும் மனைவிக்கும் தொலைபேசிவிட்டு,
டிராவல்ஸ்க்கும்  ஒரு  நல்ல அம்பாஸடர் வண்டியும் 
வண்டி  ஓட்டியாக  செல்வம் என்பவரையும் கேட்டுக் கொண்டான்.
அவர்கள், அவனது அவசரத்தை உணர்ந்தவர்களாக 

ஒரு மணி நேரத்தில்  அனுப்பினார்கள்.

கவலையோடு தங்கையைப் பார்த்தவனை 
மாலதி ஆறுதல் சொன்னாள் .
இன்னும்  ஏழு  மணி  நேரத்தில் அங்கே இருப்பேன்.
முருகன்  துணை. என்று  பழனி தண்டாயுதபாணியின் படம் முன் நின்று வணங்கினால்.
கண்களோரம்  கண்ணீர்  சேர்ந்தது.
"என் குழந்தையை என்னுடன் நீ வைப்பாய் என்று 
தெரியும் முருகா. என்னைச் சலனம் அண்டாமல்  
அருள்."
என்று திருநீற்றை  நெற்றியில்   இட்டுக்  கொண்டாள் .

இரண்டு நாட்களுக்கான  துணிமணிகள்  அடங்கின சிறு பெட்டியும் 
கைப்பையில்  மற்ற எல்லாம்  பணம் உட்பட எடுத்துக்  கிளம்பும் தங்கையைப் பெருமையுடன்  பார்த்தான்.
நான் குமரனைக் கவனித்துக் கொள்கிறேன் அம்மா. நீ கவலையில்லாமல் கிளம்பு.

நான் கொடுத்த பெட்டியையும்  எடுத்துக்கொள்
என்று  அவள்  வாசலை அடைந்ததும்
வீட்டுக் கதைவை  சாத்திப் பூட்டினான்.
சரியாக நாலு மணிக்கு இன்னும் இருள் பிரியாத காலையில் 
லட்சுமி  விடுதியில்  இறங்கினாள்  மாலதி.

பணம் கனக்குப் பார்க்க, வண்டி ஒட்டி செல்வத்தைப் பார்க்க, வேண்டாம் அம்மா.
மீண்டும் சென்னை திரும்பும் வரை உங்களுடன் இருக்கச் சொன்னார் உங்கள்   அண்ணன் .என்கிறார் அவர்.

சட்டென்று  ஒன்றும் சொல்ல முடியாமல்  ,தலை அசைத்த, நீங்கள் சிறிது ஓய்வெடுங்கள்.
எட்டு மணி அளவில் மருத்துவக் கல்லூரிக்குச் செல்வோம் 
என்ற படி  விடுதிக்குள்  புகுந்தாள்  மாலதி.









.

Thursday, January 23, 2020

தவம் 3

வல்லிசிம்ஹன் 

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 
தவம் 3

கண்ணயர்ந்த மாலதிக்கு, அடுத்த நாள் வேலைகள்
காலையில் காத்திருந்தன. முதலில் அவள் தேடியது கைபேசியைத்தான்.

அதிகாலை தஞ்சாவூரை அடைந்த வசந்த், பல்கலைக் கழகத்துக்குப் போவதாகவும் ,பிறகு ,தங்கள் கல்லூரி விடுதிக்கு செல்வதாகவும்
குறிப்பிட்டிருந்தான்.
தன் நண்பனாக ஆதித்தனையும் அழைத்துச் செல்வது இனிமையாக
இருப்பதாகச் சொல்லி இருந்தான்.

நல்ல நட்பு அடுத்து வரும் வருடங்களில் தொடர வேண்டும்
என்று கடவுளைப் பிரார்த்தித்த படி, அன்றைய வீட்டு வேலைகளையும்
சமையலையும் அவள் முடித்த போது மணி எட்டு.

வெறுமையாகக் காட்சி அளித்த வீட்டில்,மாலை வந்ததும் சில மாற்றங்கள் செய்து ஆக்கபூர்வமாகச் செயல் பட வேண்டும் என்ற முடிவோடு

தன் ஸ்கூட்டரைக் கிளப்பினாள்.Image result for Tanjore medical college

Photo 1


தஞ்சாவூர் மருத்துவக் கல்லுரியும் , விடுதியும்.

அலுவலகம்  சென்ற பிறகும் மகனைப் பற்றிய  சிந்தனைகளே அவளைச்  சுற்றி வந்தன.
சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் இருந்த 
மத்திய மைய ஆயத்  தீர்வை அலுவலகத்தில் 
மூன்றாவது மாடியில் அவளுக்கு வேலை.
நல்ல சம்பளம்., இத்யாதிகள் மத்திய அரசு முறைப்படி அவளுக்குக் 
கிடைத்தன.
இதெல்லாவற்றுக்கும் காரணம் அவள் மாமனார் தான். அவரும் மத்திய அரசு வேலையிலிருந்து ஒய்வு பெற்றிருந்ததால்,
அவளை தேர்வுகள் எழுதவைத்து 
வேலை யில் சேர்ந்த பிறகே ஓய்ந்தார். அக்கவுண்ட்ஸ் 
இலாகாவில்  நல்ல  உயரிய பதவிக்கு 
வந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன.

வருடத்துக்கு இரண்டு வார விடுமுறை. விடுமுறை அலவன்ஸ்.
பெற்றோரை அழைத்துக் கொண்டு ஒரு தடவை , மாமனார் ,மாமியாரை அழைத்துக் கொண்டு  ஒரு தடவை  என்று கன்யாகுமரி, இராமேஸ்வரம் என்று போய் வந்தாள் .

இரு பக்கத்தினரும் தங்களோடு வந்து  இருக்கும்படி 
அழைத்தும் அவள் செல்லவில்லை.
அங்கே ஏற்கனவே  இருக்கும்   கொழுந்தனார்,அவரது குடும்பம் ,
பிறந்தவீட்டில் அண்ணா அவன் குடும்பம்  இருக்கும் போது 
 தானும் அங்கே இருக்க மனம் வரவில்லை.

அவள் மனம் தனியாக இருக்கவே விரும்பியது.
இரு வாரங்களுக்கு ஒரு முறை இரண்டு இடங்களுக்கும் சென்று இயன்ற உதவியைச் செய்து வருவாள்.
குமரன் சென்னை வருவதே நின்று விட்டது.
 விவாகரத்தின் பலனாக தீர்ப்பு  சொன்ன  குடும்ப
நல கோர்ட் மூலம் அவன் அளிக்க வந்த பணத்தையும் 
அவள் மறுத்து விட்டாள் .
அப்போது மண்டிக்கிடந்த மனக்கசப்பு கூட 
இப்போது   குறைந்துவிட்டது.
''இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தான் தேவன் அன்று ''என்ற 
பாடல் போல வாழ்வை ஒப்புக் கொண்டுவிட்டாள்.

மனம், மற்ற நல்ல  வாழ்வு  வாழும் தம்பதிகளை 
நினைக்கும் போது சில சமயம் தனிமை உறுத்தும்.

சுலபமாக அந்த நினைவுகளைத் தள்ளிவிட அவளால் முடிந்தது.
அவள் மேற்கொண்ட  யோகப் பயிற்சிகளும் ,கடவுள் வழிபாடும் அவளை உறுதியாக இருக்க வைத்தன.

வசந்த் நல்ல வாழ்வு பெற வேண்டும், திருமணம் அமைய வேண்டும் .
என்ற நற்கனவுகளைக் கண்டு வந்தாள் .
தாயை உணர்ந்த அந்த மகனும் அவள் சொன்ன பேச்சுக்கு மறு  பேச்சு 
பேசாத  பிள்ளையாக  வளர்ந்தான். 
வேலை முடிந்த அடுத்த நொடி ,கீழே இறங்கி வந்த மாலதி,
வீடடைந்து குளித்து விட்டு

புரசைவாக்கம் ஸ்ரீனிவாசர் கோவிலுக்கும், பிள்ளையார் கோவிலுக்கும் சென்று வந்தாள் .
இரவு உணவாக வேகவைத்த காய்கறிகளும் சப்பாத்தியும் போதும் அவளுக்கு.
அலைபேசி அழைத்ததும் மகன் முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள்.
அவளது நலம் விசாரித்தவன்,
தன்  முதல் ஆண்டு முதல் நாள் நடந்த விவரங்களை சுவைபட அவளுக்கு விவரித்தான்.
மனமெல்லாம்   பூரிக்க அவன் பேசுவதைக் 
கேட்டுக் கொண்டிருந்தாள் மாலதி.
என்னப்பா சாப்பாடு என்ற கேள்விக்கு" இனிதான் 
அங்கே போகணும்ம்மா. 
இப்ப பசி இல்லை.  இரவு  சூடாகச் சாப்பாடு  இருக்குமாம்.
வார இறுதியில் தஞ்சைக்குச் சென்று வரலாம்.

சில வாரங்களுக்குப் பிறகு நீயும் வந்தால் நல்ல கோவில்கள் பார்க்கலாம் வரயா அம்மா". என்று  கேட்கும் மகனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
கட்டாயம் வரேன் பா. உனக்கு சரியாக சிற்றுண்டி  வகைகள் வாங்கித் தரவில்லை.
திட்டமிட்டு   எல்லாம் செய்கிறேன் என்றவளை  இடைமறித்தான் மகன். வேற்றுத்தீனி உடலுக்கு நலம் இல்லை அம்மா. நான் பழங்கள் வாங்கி  சாப்பிடுகிறேன். நீ கவலைப் படாதே என்றான்.

"நான் போய் அறையை ஒழுங்கு செய்கிறேன். 
நீ பத்திரமாக இரும்மா. கவலைப் படாதே" என்ற மகனுக்குப் பரிவுடன் விடை கொடுத்தாள் .

வாயில் மணி அடிக்கும் சத்தம் கேட்டு விரைந்தவளுக்கு ,அண்ணனைப் பார்த்ததும்  மகிழ்ச்சி .
என்னண்ணா  ஃ போன் செய்திருக்கலாமே என்றவளை,முதுகில் தட்டியவன் ,இங்கே கெல்லிசுக்கு வந்தேன், அப்படியே உன் மகனைப் பற்றிக் கேட்டுப் போகலாம் என்று இங்கே வந்தேன்.
என்ற அண்ணன் , 
"இதோ பாரு, இந்தப் பெட்டியில் 
புதிதாக வந்த ஸ்டெதஸ்க்கோப், மற்றும் வெள்ளை மேல்  ஆடை, 
ஸ்டெரைல் கையுறைகள்,
நான் படித்த புத்தகங்கள் எல்லாம் இருக்கிறது.
இப்போது விலை கொடுத்து வாங்க முடியாத அளவு உயர்ந்து விட்டது.

நானே போய்க்  கொடுக்க ஆசை.
நீயும் நானுமாக ஒரு சனிக்கிழமை போய் வரலாம் வா." என்றான்.
அண்ணா ,,,யென்று ஆரம்பித்தவளைத் தடுத்தான் அன்னான்.
"முறையாகப் பார்த்தால்  நானே அவனுக்கு எல்லாம் செய்யணும்.
அவன் முந்திக் கொண்டுவிட்டான்.
நல்ல படிப்பு அவனுக்கு இந்த இடத்தைப்  பிடித்துக் 
கொடுத்தது.
நல்லா இருக்கட்டும். அண்ணா  பார்த்துக்கிறேன் 
முடிந்தவரை. அதை நீ மறக்காதே "என்றவனின் 
கைகளைப் 
பிடித்துக் கொண்டவள் 
கண்கள்  கலங்கின.
இன்னொரு விஷயம் என்று ஆரம்பித்த அண்ணன் '' குமரன் வந்திருக்கான் மா, அவனுக்கு  வசந்தைப் பார்க்கணுமாம்.''

செய்வதறியாமல் உட்கார்ந்துவிட்டாள்  மாலதி.
மீண்டும்  பார்க்கலாம்.













Tuesday, January 21, 2020

தவம் 2

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .

தவம் 2

 புதிதாகக் கட்டப்பட்ட அந்த குடியிருப்பு 
ஐந்து வருடங்களுக்கு முன் மாலதியும் வசந்தும் குடியேறிய
இடம். 
அங்கிருந்து வசந்த் படித்த எம் சி டி எம் பள்ளி
ஒரு தெரு கடந்ததும் இருந்தது. 
அவனது எட்டாம் வகுப்பின் போது அவர்கள் வாழ்க்கையில்
பெரிய மாற்றம் நடந்தது. 
மாலதியின் கணவனுக்கு இருந்த இன்னோரு உறவு
 வெளிச்சத்திற்கு வந்தது.
திருமணம் ஆன போதே குமரன் அரபு நாடுகளில்,துபாயில்
இருந்தான்.மணமான  இரு மாதங்களில்
அவன் துபாய் திரும்பிய போது அடுத்த வருடம் தனக்கு
வேலையில் உயர்வு கிடைக்கும் ,வீடும் கிடைக்கும்
அப்போது மாலதியை அழைத்துக் கொள்வதாகச் சொல்லிச் சென்றான்.
இரண்டு வருடங்கள் கழித்து அவன் வந்தபோது
வசந்த், ஒரு வயதுக் குழந்தையாக இருந்தான்.
 மாலதியின் பெற்றோர்களுக்கு இன்னும் வயதான தோற்றம் வந்தது.
எல்லா மனைவிகளும் போலக் கணவனின் தோற்றத்திலும்,அவன் வாங்கி வந்த புதுப்
புது பொருட்களிலும் ஆசை இருந்தாலும்,
அவன் தெளிவில்லாமல் இருப்பதாகத் தோன்றியது.
அந்த வருடமும் அவன் அழைத்துச் செல்லவில்லை.
இப்படியே பத்து வருடங்கள் கழிந்தன,
மாலதி தன் படிப்புக்கு ஏற்ற விதத்தில் ஒரு 
வளமான தனியார் நிறுவனத்தில் சேர்ந்து
படிப்படியாக முன்னேறி, இப்போது இருக்கும் மனையை வாங்கினாள்.
வங்கிக் கடன் உதவி செய்தது.
கணவன் பணம் அனுப்புவது குறைந்ததும்
அவளுக்குத் தோன்றிய கேள்வி ,அவனுக்கு
வேலை இல்லையோ என்ற கவலைதான்.
 பனிரண்டு மாதங்களுக்கு ஒரு முறை விசா புதுப்பிக்க 
அவன் ஏதாவது ஒரு வேலையில் இருந்தே
ஆகவேண்டும் என்பது தெரியும். அவனுக்கு அனுப்பிய
மெயிலுக்குப் பதில் இரு வாரங்கள் கழித்தே
கிடைத்தது.
குமரனின் பெற்றோருக்கும் புரியவில்லை.

குமரனின் தோழன் ஒருவன் வந்து இருப்பதாகக்
கேள்விப்பட்டு மாலதியின் தந்தையும் , குமரனின் தந்தையும் சென்று
பார்த்தார்கள்.
திடீரென்று போனதால் அவனைப் பார்க்க முடிந்தது.
அவன் அவர்களைக் கண்டு ,வெளியே போக இருந்தான்.
மெல்ல விஷயம் வந்தது.
அவனுக்கு உடல் நிலை சரியில்லாத போது
சந்தித்த ஒரு மருத்துவமனை தாதி, அவளும் நம் நாட்டைச் சேர்ந்த
பெண் தான்.
இப்பொழுது இருவரும் திருமணம் செய்யாத தம்பதிகளாக
வாழ்ந்து வருகிறார்கள்.
அவன் அடுத்த தடவை வரும் பொழுது அனேகமாக 
விவாகரத்து கேட்பதாக இருக்கிறான்.
மாலதி இதைக் கேட்டு அதிர்ச்சி அடையவில்லை.
எதிர்பார்த்தே இருந்தது போல இருந்தாள்.

மகன் படிக்கக் கிளம்பி

இப்போது தனியாக விடப்பட்ட நிலையில் 
அத்தனை நினைவுகளும் வந்து  அவள் மனதில் அலைமோத
முதல் முறையாகக் கண்ணீர்  வெடித்து வந்தது.

இனி என்ன...பார்க்கலாம்.

காய்கறி+ தட்டை

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.



படம் கூகிள் உதவி
  காய்கறி தட்டை
+++++++++++++++
கடந்த  ஞாயிறு மாலை, 
குழந்தைகள் பனி சறுக்கல் விளையாட்டுக்குச் சென்று 
மிகுந்த பசியோடு வந்த போது 
நானும் மருமகளுமாக இதை செய்தொம்.
பேத்திக்கு சமையலில் ஆர்வம் அதிகம்.
அவளும் உருளைக்கிழங்கு உரித்துக் கொடுத்து,
எல்லா  உதவிகளையும் செய்ய அரை மணி நேரத்தில் உருவான 
PATTIES
எனப்படும்  இந்த சிற்றுண்டி செய்வது மிகச் சுலபம்.
ஒரு மாறுதலுக்கு இதை பதிவிடுகிறேன். 
எவ்வளவு ரசிகர்களைச்  சென்றடைகிறது என்று பார்க்கலாம்.

நடுவில் ஒரு பக்கம்.
300,400 என்று பக்க  விசிட்டர்களைக் காட்டுகிறது 
ப்ளாக்கின்  ஸ்டாட்டிக்ஸ்.
பின்னூட்டங்களோ மொத்தமே நாலு.
இது என்ன மாயம் என்று தெரியவில்லை.

அன்பும் உணர்ச்சிகளும்  கிராம நாள் வாசமும் வீசும் அன்பு துறை செல்வராஜூ மாதிரி எழுத வரவில்லை.
திட்ட வட்டமாகப் பிழை இல்லாமல் 
எண்ணங்களை பதியும்  அன்பு  கீதா சாம்பசிவம் 
மாதிரியும் நான் எழுதவில்லை.
நேர்மை ரௌத்திரம் பழகும் கில்லர்ஜி தேவகோட்டை ஜி மாதிரியும் எழுத்து வீச்சு இல்லை.

திருக்குறள் பேசும்  அன்பு திண்டுக்கல் தனபாலனின் தரமும் எனக்கு வாய்க்கவில்லை.
அன்பு தங்கச்சி கோமதி அரசுவின் விசால ,எழுத்தறிவு,தமிழ்ப் புலமையும் 
இல்லை.
எங்கள் ப்ளாக் ,ஸ்ரீகௌதமன் ஜி, ஸ்ரீராம் அவர்களின் 
அன்பு வளையம்  அடையும் பெருமையும் இல்லை.

இத்தனை இல்லை களுக்கும்   நடுவில் 
வந்து கருத்துக்கள் பதியும் அனைவருக்கும் என் நன்றி.
எழுத வேண்டும் என்ற  தாகம் என்னை விட்டுப் போகாமல் இருக்க இறைவனே துணை.

மீண்டும் சமையலறைக்குள் போகலாம்.:)

தேவை உ.கிழங்கு  6
கொத்தமல்லி, வெங்காயம், கருவேப்பிலை,
ப.மிளகாய், 
4 மேஜைக்கரண்டி சோள  மாவு.
பட்டாணி, காரட் ,காலிப்ளவர்  துண்டுகள்,சிறிதே  குடைமிளகாய்த் துண்டுகள் 
உப்பு காரம் அவரவர் இஷ்டம்.

நாங்கள் செய்த முறை ...

உருளைக்கிழங்கை வெழுமூன  வேக வைத்துக் கொண்டு அதில் சொன்ன சோளமாவைக் கலந்து உப்பு,மஞ்சள் பொடி 
சேர்த்துப் பிசைந்து  வைத்துக் கொள்ள வேண்டும்.

மற்ற பச்சைக் காய்கறிகளை சிறிது எண்ணெயில் ஒரு துளி  உப்பு  போட்டு 
சிறிது வெண்ணெய்  சேர்த்து 
வதக்கி மாவுடன்  கலந்து கொண்டால் நம் 
PATTIES தயார்.
தோசைக்கு கல்லை அடுப்பில் சூடு பண்ணி ஒவ்வொரு  உருண்டையையும் கவனமாகத் தட்டி சுற்றி வர வெண்ணெய் 
இட்டு அடை போல்  தட்டி எடுத்தால் மொறு மொறு 
சுவை தட்டை  தயார்.

செய்யும்போது படம் எடுக்கத்  தடா.

இதையே  பேத்தி அவனில் இன்னும்  கரகர வென்று வைத்து எடுத்தாள் அவள் கேக்,பிரௌனிஸ்  கில்லாடி.
நமக்கும் அவனுக்கும்  அவ்வளவாக தோழமை கிடையாது.

நன்றி மீண்டும் பார்க்கலாம் .








Monday, January 20, 2020

தவம் ..1

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்

தவம் ..1

  எழும்பூர் ரயில் நிலையம் இளம் மாணவக்கூட்டத்தில்
மூச்சு விடமுடியாமல் திணறிக் கொண்டிருந்தது.
தென் மாவட்டங்களுக்குப் பள்ளி விடுமுறை
முடிந்து போகிறவர்கள், கல்லூரி மேற்படிப்புக்குப் போகிறவர்கள் என்று பலவித
வகைகளில்
பெரியவர்கள் ,சிறியவர்கள்,அனுப்ப வந்த பெற்றோர்கள்
என்று பலவிதம்.

மாலதி, தன் ஒரே மகன் ஸ்காலர்ஷிப் கிடைத்து
தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேரக் கிளம்பிக் கொண்டிருந்ததை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
நன்றாகப் படித்தவனுக்கு ,பள்ளி முதல் மாணவனுக்கு மரியாதை செய்தது
ஒரு அறக்கட்டளை. முழு செலவையும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்து
பத்திரிகைகளிலும் வந்திருந்தது.

மாலதியின் கணவர் விவாகரத்து செய்து 5 வருடங்கள்
ஆன நிலையில் ,தன் ஒரு சம்பாத்தியத்தில்
குடும்பத்தை கௌரவமாக நடத்த சற்றே சிரமப்பட வேண்டி இருந்தது.
பொறுப்பு மிகுந்த மகனாக இருந்த வசந்த்,
எல்லா வருடங்களிலும் முதல் மாணவனாக வந்து
பள்ளியின் பண முடிப்பும் பெற்றிருந்தான்.

அந்தப் பணத்தையும், தன் சேமிப்புப் பணத்தில்
கொஞ்சமும் போட்டு, அவனுக்கு மூன்று
செட் ,நல்ல பாண்ட்,சட்டை வாங்கி வைத்தாள்.

ஒரு சின்ன பெட்டியில் அடங்கி விட்டது அவனது
முழு உடமைகளும்.

அவனுக்கு இரவு உணவாக இட்லி, தயிர் சாதம் தனியே
கட்டிக் கொடுத்திருந்தாள்.
முதன் முறையாக மகனைப் பிரிவது,அவளுக்குச் சற்றே கலக்கமாக இருந்தது.
 அவனுடன் படிக்கப் போகும் ஆதித்தனின் பெற்றொர் அருகில் நின்ற வண்ணம்
அவனுக்காக வைத்திருக்கும்
உணவுப் பொட்டலங்களையும், முறுக்கு,தட்டை வகையறாக்களையும்
ஒரு பெட்டியில் வைத்து அவனுக்குக் கொடுத்துத்தார்கள்.
மாலதிக்குச் சட்டென்று கண்ணில் நீர் திரண்டது.

தன் தந்தை தன்னைப் படிப்புக்கு அனுப்பும்போது
செய்த உபசாரங்கள்,பார்த்துப் பார்த்துக் கட்டிக் கொடுத்த
மருந்துகள்,இன்லாண்ட் கவர்கள், எழுதத் தாள்கள்
என்று ஒரு சிறு பெட்டியே இருந்தது.

இப்போதோ கைபேசி வந்துவிட்டது.
அதையும் உபயோகம் செய்ய நேரம் தான் வேண்டும்.
அவள் அண்ணா மருத்துவம் படிக்கும் போது மாதத்துக்கு ஒரு கடிதம்
வந்தாலே அப்பா சந்தோஷப்பட்டுக் கொள்வார்.

இங்கோ அம்மாவுக்கு ஒரு சிரமமும் கொடுக்கக் கூடாது என்பதில் வசந்த்
மிகக் கவனமாக இருந்தான்.
முதன் முதலில் இருவரும் தஞ்சை சென்று பார்த்த
போதே அங்கிருக்கிற உணவுக் கூடங்கள் எல்லாம் பார்த்து விட்டுத்தான் வந்தார்கள்.
ஏற்கனவே அங்கே சென்றிருந்த நண்பர்கள்
நல்லவிதமாகவே அந்தக் கல்லூரியைப் பற்றிச் சொல்லி இருந்தார்கள்.

உணவுக்குடத்துக்கு மட்டுமான செலவை
மாணவர் பொறுப்பில் விட்டுவிட்டது அந்த அறக்கட்டளை.
படிப்பு பூர்த்தியாகும் போது ஒரு பெருந்தொகையாகக்
கொடுப்பார்கள் என்று தெரிந்தது.
அதுவரை மாலதி அந்த செலவை சமாளிக்க வேண்டும்.
மகிழ்ச்சியுடனே ஏற்றுக் கொண்டாள் அவள்.
அம்மா நேரம் ஆகிவிட்டது. இதோ விசில் ஊதி விட்டார்கள்.
நீ கிளம்புமா.
காலையில் உனக்கு செய்தி அனுப்புகிறேன்.
பத்திரம் அம்மா ஷேர் ஆட்டொவில் புரசவாக்கம் போய்விடு.
போய் எனக்கு செய்தி அனுப்பு.
நான் கவனமாக இருக்கிறேன் மா.
நீ பத்திரம் என்று சொல்ல வந்தவன் குரல் தழுதழுத்தது.
மகனின் கைகளை இறுகப் பற்றி,அவனுக்கு விடை கொடுத்தாள்
மாலதி.
ரயிலின் கடைசி விளக்கு மறையும் வரை
பார்த்துக் கொண்டிருந்தவள், கூட்டத்துடன் கலந்து வெளியே வந்து
புரசவாக்கம் பக்கம் போகும் ஷேர் ஆட்டோ,பார்த்துக்
கவனமாக ஏறிக் கொண்டாள். மீண்டும் நாளை பார்க்கலாம்.

Friday, January 17, 2020

வல்லிசிம்ஹன்


எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
சமயபுரத்தாயே  சரணம். 
நோய் தருபவளும் நீ நோய் தீர்ப்பவளும்  நீ.
என்றும் மறவாமல் உன்னை நினைக்க வைக்கிறாய்.
உன்னருளாலே மீளுவோம்.

Image result for samayapuram mariamman images



Wednesday, January 15, 2020

நிம்மதி உன் கையில் 3

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக   வாழ வேண்டும் 

நிம்மதி உன் கையில் 3
+++++++++++++++++++++++

இன்னும் இரண்டு நாளில் பொங்கல் நன்னாள் என்றிருக்கையில் 
சந்தர் வீட்டில்   உள்ள அனைவருக்கும் புத்தாடைகள் கொண்டு வந்தான்.
சுகந்தியும்,வனிதாவும் ஏற்கனவே வாங்கி 
சுகந்தி வீட்டில் வைத்திருந்ததைக் கொண்டு வந்தான்.

சுகந்தி பிறந்த வீட்டுக்கு வராததை  அம்மா வின் மனது 
ஒரு சோகமாகவே பார்த்தது.
ஏன் இந்தப் பெண் இவ்வளவு அலட்சியம் காட்டுகிறாள் அவளுக்கும் அம்மாவைப் பிடிக்காமல் போனதா என்ற நினைப்பு வருத்தியது. பொங்கல் நாள் வந்ததும் பொங்கல் பானை ஏற்பாடு செய்து 
வனிதாவை ப் பொங்கல் அடுப்பை ஏற்ற, பானையை வைக்கச் சொன்னாள்.

ஆச்சர்யத்துடன் பார்த்த வனிதா, அத்தை நீங்க வாங்க. வழக்கம்   மாற்றவேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள்.
'இல்லம்மா. புதுப்பானை போல நீயும்  நல்ல படியாக ஆரம்பித்து செய். 50 வருடங்களாக நான்  செய்தாச்சு.
இனி நீ எடுத்து நடத்து   ,எனக்கும்  முதுமை வந்தாச்சு.
முழு மனசோட சொல்கிறேன் ' என்று சொல்லும் அத்தையைப் பயத்துடன் பார்த்தாள்  வனிதா.

சந்தரும் அம்மாவைப் புரிந்து கொள்ளமுடியாமல் அம்மாவைப் பார்த்தான்.

அவர்களுக்குத் தெரியாதது,
சுகந்தி அம்மாவிடம் பொங்கல் தின வாழ்த்துகளோடு 
சொன்ன செய்தி.
போகி அன்று காய்கறிகள் கரும்பு வாங்க
வனிதா வெளியே போயிருந்த போது,
சுகந்தியின் ஃபோன் வந்தது.
அம்மாவிடம் தெளிவாகப் பேசினாள். சுகந்தி.
ஏன் அம்மா அவர்களை இது போல விலக்கி வைக்கிறாய். ரெண்டும் அப்பாவிகள்
உனக்கு அது கூடத் தெரியாதா.
அப்படி என்ன தான் உனக்கு நேர்ந்து விட்டது.
அப்பா மறைந்தது நீ எதிர்கொள்ள வேண்டிய உண்மை.
அவர்கள் உன்னை எந்த விதத்திலும் தாழ்த்தி விடவில்லை.
நீயா எதையோ நினைத்து இப்படி ஒரு மூர்க்கமாக இருந்தாயானால் நஷ்டப்படப்
போவது  நீ தான்.

இப்ப சொல்லு, இந்த மாதிரி நீ அவர்களை நடத்த என்ன காரணம்/?
என்றதும் ஒரு நிமிடம் அசந்து போனாள் பர்வதம்.
என்ன நீ இப்படி எல்லாம் பேசற. தினம் சமைச்சுப்போட்டு மஹாராணி போல அவளை வைத்திருக்கேன்.

உங்க அப்பா வச்சிட்டுப் போன பணத்துல பாதிக்கு மேல
அவர் வைத்திய செலவுக்கே போச்சு.  இப்ப நான் சாப்பிடறதுக்கு
நான் உழைத்தால் எனக்கு நிம்மதியாக இருக்கு 'என்று சொன்ன அம்மாவின் 
குரலைக் கேட்டுத் திகைத்தாள் மகள்.

அம்மா நாங்க உனக்கு அவ்வளவு அன்னியமா
ஆகிட்டோமா. சந்தர் கேட்டால் இன்னும் நொந்துடுவான் மா.
செய்கிறதை சந்தோஷமா செய்யலாமே
வனிதாவை நீ ராணி போல நடத்துறது உண்மையானா
முதலில் கொஞ்சம் பாசத்தைக் காண்பி.
நாம் இருக்கிறதே மூணு பேர். அதில் அன்பாக இணைந்தவர்கள் வனிதாவும் என் கணவரும்.
நீ என் கிட்ட மத்திரம் நன்றாகப் பழகி என்ன பிரயோசனம்?
அவன் வெளினாட்டுக்குப் போகலாமா என்று யோசிக்கிறான் மா.
அவனுக்கு அது போல அழைப்பு.
வந்திருக்கு.
நீ இப்படி கொட்டாமல் கொட்டினியானால் அவன் ஓடியே போயிடுவான்.

ஏன் உன் புத்தி இப்படித் தடுமாறிப் போச்சு.
யார் உனக்கு இந்த மாதிரி உபதேசம் 
செய்தது. இல்லை டிவி சீரியல் மாமியார் காட்சிகள் பார்க்கிறியா.
வசனம் எழுதிக் கொடுத்த மாதிரி பேசறேயே.'
படபடவென்று பேசிய மகளின் குரல் கேட்டு அசந்து போனாள்
பர்வதம்.
வெளி நாடா? 
சட்டென்று நெகிழ்ந்தது அவள் மனம்.
பேசாமல் இருந்தே  தன் குடும்பத்தை இத்தனை தூரம் நோகடித்தோமே. அதுவும் 
இத்தனை வருடங்களாக.
என்ன நேர்ந்தது எனக்கு.
உண்மையான பாசம் கொண்ட குழந்தைகளை நோகடித்து விட்டேனே
என்று நினைத்தவள், மகளிடம் , பொங்கலுக்கு வரச்சொல்லி விட்டு ஃபோனை வைத்து
விட்டாள்.
அங்கே சுகந்தி அம்மாவைக் கடுமையாகப் பேசிவிட்டோமா
என்று குழம்பினாள்.
இதோ பொங்கல் அன்று சீராகிய மனத்துடன், மக்களை அரவணைக்க
பர்வதம் ரெடி.
மகனையும் மருமகளையும் குழந்தைகளையும்
அழைத்து தெய்வம் தொழுது, தன்னையும் வணங்கச் சொன்னாள்.
முகங்கள் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் விரிய 
அப்படியே செய்த மருமகளிடம், வெற்றிலை,மஞ்சள்,பாக்கு,பழம் ,பூ வைத்து
 நாமெல்லோரும் சேர்ந்து பொங்கலோ பொங்கல்!!! குரல் கொடுக்கலாமா
என்று கேட்டபடி  பேரன் களை அணைத்துக் கொண்டாள். நழுவிப்போன சொர்க்கம் கிடைத்த உணர்வு வந்தது.

டேய் சந்தர் ,
அக்கா வீட்டுக்குப் போங்கோ எல்லோரும். பொங்கல் கொடுத்து வீட்டுக் கு அழையுங்கள்.
எல்லோரையும் வரச் சொல்லு. சம்பந்தியோட பேசி நாட்களாச்சு
என்ற  அன்னையைப் பார்த்துப் பிரமித்தான். 
வேறெங்கும் போகும் எண்ணம் இனி எங்கிருந்து வரும்?


அனைவருக்கும் இனிய தினங்களுக்கான வாழ்த்துகள்.

Tuesday, January 14, 2020

பொங்கல் மலர்கள் நினைவுகள்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
 நற்  பால் பொங்கி நாம் வாழ  வந்தது தைப்பொங்கல்.
அனைவருக்கும் வாழ்த்துகள் .

பொங்கல் மலர்கள் நினைவுகள் 
++++++++++++++++++++++++++++++++++++வருடம் குறிப்பிடாமல் ஒரு அனுபவத்தை எழுத ஆசை.
இது கொஞ்சம் அனுபவப்பட்ட  40 வயதான நான்.

வீட்டில் பெரியவர்கள் எல்லாம் இல்லாமல்
தனியாகப் பொங்கல் செய்ய வேண்டிய நேரம்.
பெரியவர்களோடு செய்த முறைகள் நினைவில் இருந்தது.

பொங்கல் பானை வைப்பது ஒரு பெரிய
 கம்ப சூத்ரமா என்ற கேள்வி எழலாம்.
ஆமாம். நாம் ஏற்கனவே பழகிய முறைகளில் இருந்து மாறுபடும் எதுவும்
நமக்கு ஒரு சவால் தான்.
அம்மா வீட்டில் வெண்கலப் பானை 5 ஆழாக்கு 
சாதம் வடிப்பது.
அதேபோல் கழுத்துடன் கூடிய பானை ஸ்பெஷல் பொங்கல் பானை. வருடத்துக்கு ஒரு முறைதான் வெளிவரும்.
அதற்கு அலங்காரம் செய்வது அப்பா.
நாலு பக்கமும் நாமம் இட்டு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து கட்டி, கரும்பு வெட்டி 
 சிறு துண்டுகளாக
அரிந்து சணலில் கோர்த்து கட்டி விடுவார்.
புக்ககத்தில் அப்படி இல்லை.
எல்லாம் பெரிய அளவு.
சணலும் தடிமனாக இருக்கும்.
தேங்காய் உடைத்து அதில் துளையிட்டு, கடைசிக் கணுக்களை 
துளையிட்டு அவற்றையும் கோர்த்து, முழு வாழைப்பழம் சேர்த்து
இரண்டாவது கட்டாக மஞ்சள் இஞ்சி கொத்துகள் சேர்க்கப்படும்.

அளவில் மிகப் பெரிய பானை விறகடுப்பில் ஏற்றப்பட்டு,
முக்கால் அளவுக்குப் பாலும் நீருமாக கொதித்து,வழிந்து 
பிறகு முறைப்படி பொங்கல் தயாராகும்.
இதையே சட்டமாக நான் படித்துக் கொண்டு முதல் முறை அமலுக்குக் 
கொண்டுவந்தது என் மாமியார் மறைந்த பிறகு.
எல்லாமே புதிதாக இருக்க வேண்டும் என்று தெரியும்.
முதல் நாள் ஸ்டார் கடைக்குத் தொலைபேசி புது வெல்லம், அரைக்கிலோ வெண்ணெய்

ஏலக்காய், பச்சைக் கல்பூரம்.,முந்திரிப்பருப்பு 200 க்ராம்,குங்குமப்பூ ஒரு சின்ன டப்பா.
எல்லாம் பொங்கலுக்குப் புதிதாக வாங்கி வைப்பேன்.
எல்லாம் காலையில் வாங்கின கரும்பு, மஞ்சள் இஞ்சிக் கொத்தோடு
பெருமாள் அறையில் பத்திரமாக வைக்கப் படும்.
வெண்ணெய் மட்டும் ஃப்ரீசரில்.
போகி அன்று சாயந்திரமே வீட்டு வாசலில் இருந்து
கேட் வரை சகலமும் சுத்தம் செய்து கோலம் போட வசதியாகச்  செய்து விடுவோம் நானும் முனியம்மாவும்.
அன்று இரவு தூக்கம் அவ்வளவுதான் .எப்போது எழுந்திருப்போம் ,எப்போது வாசல் தெளித்துக் கோலம் போடுவோம் என்று உடல் பரபரக்கும்.
4 மணி காலைக்கு  வாயில் கேட் திறந்துவிடுவேன்.
தோட்டத்துக் குழயிலிருந்து தண்ணீர் பிடித்து மண்தரையில் தெளித்துக்
கோலம் போட ஆரம்பிதால் 45 நிமிடத்தில் கேட்டை மூடிவிடலாம். வீட்டு 
வாசலில் சிமெண்ட் தளம். பிறகு அதிலேயே கடப்பாக் கல் 
பதித்துக் கொடுத்தார் சிங்கம்.
Image result for Thai Pongal images



அங்கே செம்மண் இட்டுப் பெரிய கோலம்.
பிறகு வீட்டுக்குள்ளும் தொடரும்.

பிறகு நடமாட்டத்தின் போது கலைந்து போகத்தான் செய்யும்.
வருபவர்கள் செல்பவர்களைக் கோபிக்க முடியுமா:)
மாக்கோலம் இட்டால் தாங்கி நிற்கும்.நாம் தான் இட்ட
எழுத்துக்கு மாறி எழுதாதபவர்கள் ஆயிற்றே,
பெரியவர்கள் சொன்னதுதான்.
பிறகு ஆரம்பிக்கும் உள் வேலைகள்.
முதலில் அகத்துப் பெருமாள் ஸ்ரீ லக்ஷ்மின்ருசிம்ஹருக்குத் திருமஞ்சனம். அவருக்கு மடியாய்ப் புது வஸ்திரம் தோய்த்து உலர்த்தியதை
நேர்த்தியாகக் கட்டி அழகு பார்த்து,
பின்னர் குட்டி கிருஷ்ணர் தாயார் எல்லோரையும் தயார் செய்து மாலைகள்
சூட்டி, சாம்பிராணி, ஊதுபத்தி எல்லாம் காண்பித்து வெளியே
வந்தால் பொங்கல் நேரம் வந்திருக்கும்.
பால் பொங்கி குழந்தைகள் கணவர் டமடம என்று தட்டுகளைத் தட்ட
,சிறிது நேரத்தில் பொங்கலும் ஆகிவிடும்.
வாங்கின அரைக்கிலோ வெண்ணெயும் சர்க்கரைப் பொங்கல்
விழுங்கி விடும். பிறகுக் கண்டருளப் பண்ண சிங்கத்தை
அழைக்க வேண்டும். கைகால் அலம்பி நான் சொன்னபடியே
செய்து,பெரியவன் மணியடித்து கலாட்டா செய்ய, எல்லோரும் கையும் கிண்ணமுமாகப்
பொங்கலுக்கு வந்து நிற்பது
 நேற்று நடந்ததைப் போல் இருக்கிறது.

Related image



ஸ்ரீ ஆண்டாளின் திருவடிகள் சரணம்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி பாடிக்கொடுத்த பாசுரங்களை பதிந்தது அவள் அருளால்.

வரும் போகியும்,பொங்கலும்,கணுப்பொங்கலும் நன்றே நிறைவேற 
அவளே அருள்வாள்.

திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள்வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார்
பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும்பூதூர்
மாமுனிக்குப் பின்னானாள் வாழியே/
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கேற்கண்ணி உகந்துரைத்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி  வளனாடு வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.//

ஸ்ரீ ரங்கமன்னார் கோதை திருவடிகளே சரணம்.
ஸ்ரீராமானுஜர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் திருவடிகளே சரணம்.
சகல ஆச்சார்யர்கள் திருவடிகளுக்கும் சரணம்
சொல்லி இம்மார்கழி இனிதே நிறைவேற வைத்த
கோதை நாச்சியாருக்குப் பல்லாண்டு சொல்கிறேன்.
சரணம் சரணம் சரணம்.

Image result for sRI ANDAL RANGAMANNAR