Blog Archive

Friday, October 12, 2018

என்னுயிர் நின்னதன்றோ....

Vallisimhan  எங்கள் ப்ளாக்  குழும  படத்துக்கான கதை.
1996.
     எழும்பூர் ப்ளாட்ஃபார்மில்  ராமேஸ்வரம்  எக்ஸ்ப்ரஸ் பெருமூச்சு விட்டுக்
கொண்டு காத்திருந்தது. பயணிப்பவர்களும் ,அவர்களுக்கு விடை கொடுக்க வந்தவர்களும் கலந்து
உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருந்தனர்.
புதுமணத்தம்பதியினர் ,அவர்களுக்குப் புத்திமதி சொல்லும் பெரியவர்கள் என்று ஒரு கம்பார்ட்மெண்டில் நின்று கொண்டிருந்தனர்.

பெண்ணின் அப்பாவும் அம்மாவும் மகளிடம் கண்கள் கலங்க ஏதோ பேச அவள் அவர்களைச் சிரித்து வழி அனுப்பிக் கொண்டிருந்தாள்.
பையனின் பெற்றோர் ஏற்கனவே தங்களுக்கான  இடத்தில்
உட்கார்ந்து கொண்டு வந்த பொருட்களை ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தனர்.

கல்யாணப்பாயும் ,குடையும்,பத்திரமாக வைத்தீர்களா
 என்று கேட்டு நிமிர்ந்த
ஜானகியின் முகம் பல நாட்கள் அலைச்சலில் வாடி இருந்தது.
ராகவன் அவள் கைகளைப் பிடித்து உட்கார வைத்தார்,.
நம்ம நாட்கள் மாதிரி இல்லம இப்போ.
.புதுக்கோட்டை போனதும் மாடி அறையில் பீரோ மேல் ஏறப்போகிறது.
நான் பத்திரமாப் பாத்துக்கறேன்.
நீ உன் தம்பிகள் மனைவியருக்கு பைபை சொல்லு. என்றார்
புன்முறுவலோடு.
ஜன்னலோரம் சென்று தம்பி மனைவிகளை ஆதரவுடன்
பார்த்தாள். நீங்கள் இல்லாவிட்டால் ரொம்ப சிரமப் பட்டிருப்பேன்.
டேய் உங்களையும் சேர்த்து தான் சொல்கிறேன்.
மாமாக்கள் பலசாலிகளாக மாப்பிள்ளைப் பையனைத் தூக்கி மாலை மாற்ற வைத்தீர்களே
என் கண்ணே பட்டிருக்கும் டா.
ஆமாம் இந்த 27 வயசுக் காளையைத் தூக்குவதற்குள்
எங்கள் முதுகு பிடித்துக் கொண்டது பாரு. 52 வயதுப் பெரிய தம்பியும், 48 வயது
சின்னத்தம்பியும் ஒருவர் மேல் ஒரு வர் சாய்ந்து கொண்டது சிரிப்பாக வந்தது.

போறும்டா கோமாளித்தனம்.
இதோ விசில் கொடுத்துட்டான் . அகத்துக்குப் போகும் வழியைப் பாருங்கோ.

இந்தாத்து கடைசிக் கல்யாணத்தையும் நன்றாக நடத்திக் கொடுத்தீர்கள்.
இந்தா இந்தா அத்திம்பேரோட 59 வயது பூர்த்திக்கு சாந்தி செய்யணும்   மறந்திட்டியா.
இதோ மாசி மாதம் உத்ராடம் வந்துண்டே இருக்கு.

ஜானகி சட்டென்று உணர்ச்சி வசப்பட்டவளாக
எல்லாம் உச்சிப் பிள்ளையார் கருணையில் நன்னா நடக்கணும்.
 நீங்க தேவையான ரெஸ்ட் எடுத்துண்டு தை மாசக் கடைசியில் வந்துடுங்கோ
என்றாள்.
 நடுவுலயும் வருவோம் ஏண்டா புது மாப்பிள்ளை .......வரலாம் இல்லையா
என்று  கோவிந்தனை ச் சீண்டினார்கள்.
வாங்கோ மாமா ஆல்வேஸ் வெல்கம்
என்றபடி தன் மனைவியை அழைத்தபடி அடுத்த கம்பார்ட்மெண்டில்
ஏறிக் கொண்டான்.
வண்டி வேகம் பிடிக்க , மெதுவாக வந்து அமர்ந்து கொண்டாள்
ஜானகி.
 இந்த வண்டி கொஞ்சம் எட்டு மணிவாக்கில்  இருக்கக் கூடாதோ
இந்தப் பசங்க திருவான்மியூர் போணுமே என்று கவலைப் பட்டாள்.இதப் பாரு அவர்களைப் பார்த்துக் கொள்ள உங்க அம்மா அப்பா இருக்கிறார்கள். 7 வருடங்கள் முன்னாடி பொறந்துட்டதனால  நீ அந்த வேலையைய் எடுத்துக் கொள்ளாதே.
நல்ல வேளையா இரண்டு லோயர் பர்த் கிடைத்திருக்கு.

என்றபடி ஜானகி படுத்துக் கொள்ள ஏற்பாடு செய்தார்.
பால் சாப்பிடுங்கோ என்றபடி ஃப்ளாஸ்கிலிருந்து , டம்ப்ளரில் விட்டுக் கொடுக்க, அவரும் நீயும் சாப்பிட்டுக்கோ. இந்த ரயில் சத்தத்தில்
தூக்கம் எங்க  வரப் போறது என்றபடி தன்னிடத்தில் படுத்துக் கொண்டார்.

உண்மையாகவே தூக்கம் வரவில்லை.
ஜானுவோ படுத்ததுதான் தெரியும் அசந்துவிட்டாள்.

இரண்டு பெண்கள் கல்யாணத்துக்கு அவளுடைய அக்காக்கள் இருந்து உதவீ செய்தனர்.
காலத்தின் கோலம் அவர்களை ஏதோ நோயின் பெயரில் அழைத்துக்
கொண்டுவிட்டது.
மூன்றாவது பையனின் மணம் திருச்சியில் நடந்தது.
அவனுக்கு அங்கேயே வேலை. புதுக்கோட்டைக்கு
வரப் போக இருப்பான்.
நான்காவதுதான்  இந்த கோவிந்தன்.
பெண்கள் மும்பையிலும் தில்லியிலும் இருந்தனர்.
திருமணம்  பள்ளிக்கூட நாட்களில் இருந்ததால்
அவர்கள் மட்டும் வந்து போனார்கள். மாப்பிள்ளைகள்
வரவில்லை என்று ஜானகிக்குக் குறைதான்.

இதே ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ்ஸில் முதன் முதலில்
ரகசியமாக ஜானகியைப் பார்த்தது நினைவுக்கு வந்தது.
பெண்பார்த்த அன்று ஜானகியைப் பார்த்தது போதவில்லை அவருக்கு.

அப்போது ஜானுவின் அப்பா அம்மா கும்பகோணத்தில் இருந்தார்கள்.
இவர்களும் இதே வண்டியில் கிளம்புகிறார்கள்
என்று தெரிந்தே  அம்மாவின் வேண்டுகோளையும் மீறி
இந்த வண்டியில் டிக்கெட் வாங்கி வந்தார்.
ஜன்னலோரம் பாவாடை தாவணி அணிந்து உட்கார்ந்திருந்த
ஜானுவையும் பார்த்துவிட்டார்.
மனம் ஜிவ்வென்று பறக்க நிதானமாக அந்தப் பக்கம் நடந்தார்.
அவர் நினைத்தபடி ஜானுவும் அவரைப் பார்த்துத் திகைத்தது தெரிந்தது.
படபடப்புடன் தலையை உள்ளே இழுத்து அம்மாவை எழுப்புவதையும் அந்த வெற்றிலைப் பாக்குக் கடையின் பக்கத்தில் இருந்து பார்த்தார்.
சின்னப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறோமோ
என்ற கவலை வந்து விட்டது.
ஒன்பது வயது வித்தியாசம். .ஜானு அப்பாவுக்கும் கும்பகோணம் பக்கம்
பந்தல்குடி கிராமம்.

ஜானுவின் வற்புறுத்தலுக்கு இணங்கி, அவள் தந்தை உப்பிலி
ப்ளாட்ஃபார்மில் இறங்குவது தெரிந்தது.
சட்டென்று எதிர்பக்கம் உலாவுவது போலப் போய்த் திரும்பவும்
வருங்கால மாமனார் முகம் எல்லாம் புன்னகையுடன்
தன்னை எதிர்கொள்ளவும் சரியாக இருந்தது.

நீங்களா நாங்களூம் விசாரணை முடிந்ததும்.
ஜானுவின் கலவரம்+சந்தோஷக் கண்கள் கண்ணில் தெரிந்தன.
நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள் மாமா. நான் புதுக் கோட்டையில் இறங்கணும்.

அம்மாவிடம் சொல்கிறேன் என்றபடி இவர்கள் இருந்த கம்பார்ட்மெண்டைத் தாண்டி
அடுத்ததில் ஏறிக் கொண்டதும் நினைவுக்கு வரச் சிரிப்பு வந்தது அவருக்கு.

ஜானு அவர் மகிழ்ச்சியக் காணவில்லை. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் அதெ
செங்கல்பட்டு ஜங்க்ஷன் வந்தது.
மேலும் இருவர் இவர்கள் இடத்திற்கு வந்தனர்.
அந்தப் பெண்கர்ப்பிணி என்று தெரிந்தது.
ராகவன் உடனே எழுந்து இங்கே உட்காரம்மா.
நான் சமாளித்துக் கொள்கிறேன் என்றார்.

ஜானு. கொஞ்சம் நகர்ந்து கொள்ளுமா. நானும் இங்கேயே
உட்கார்ந்துக்கிறேன் என்றவர் சொன்னதைக் கேட்டு கண் விழித்த ஜானு,
 நிலைமையைப் புரிந்து கொண்டாள்.
ஓ செங்கல்பட்டு வந்துவிட்டதா என்றபடி  மனதில் பூத்தப் பழைய நினைவுகள்
புது உற்சாகம் கொடுக்க எழுந்து உட்கார்ந்து
எதிரில் இருப்பவர்களிடம்
பேசத் தொடங்கினாள்.......
அந்த நேரத்தில் ராகவனுக்குக் கண்கள் சொக்கி உறக்கம் வந்தது,.
தான் ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டு அவரைப் படுத்துக்கச் சொன்னாள்
ஜானகி.

அவரும் தூங்க, வெளியே  மங்கலாகத் தெரியும் நிலவை
கண்கொட்டாமல் பார்த்தபடி,பழைய நினைவுகளில்.ஆழ்ந்தாள் ஜானு.
43 வருடங்கள் எங்கே போயின.

எத்தனை ஏற்றம் இறக்கம்.
பெண்கள் திருமணங்கள்,மூன்றாவது மகன் சக்கிரபாணி திருமணம்
இதோ கோவிந்தன் மைதிலி திருமணம்.

புதுக்கோட்டையில் தொழிற்கூடம் ஒன்று நிறுவி,
ஆட்டோமொபைல்  உதிரி பாகங்கள் செய்து விற்பனை செய்து வந்தார்.
இப்போது கோவிந்தனும் அவருடன் சேர்ந்து பங்குதாரர்
ஆனதில் அவரது வேலைப் பளு மிகக் குறைந்திருந்தது.
இருந்தும்  தொழிலில் அலைச்சல் மிகுதியால்
உடல் அலுப்பு கூடி இருந்தது.

அசந்து தூங்கும் கணவரை ஆதுரத்துடன் பார்த்தாள்.
இது போலக் கணவரைத் தன்னுடன் இணைத்த,உப்பிலியப்பனுக்கு
மனம் நிறைந்த நன்றியுடன் கரம் கூப்பினாள்.
இதுவரை பட்ட அலைச்சல் சேர்த்த பணம் போதும். இனி அவரவர்
வாழ்க்கையை அவரவர் கவனித்துக் கொள்வார்கள்.

புதுக்கோட்டை வீடு கட்டின நாட்கள்.
மெதுமெதுவே விரிந்து மாடியில் மூன்று படுக்கும் அறைகளும்
கீழே இரண்டு படுக்கும் அறைகளும்,
கூடம், சமையல் உள் ,பூஜை அறை,  வீட்டைச் சுற்றி வராந்தா.
நல்ல தோட்டம் ,தோட்டத்து வீட்டில்,வீட்டுப் பணியாளர்களும், தோட்டக்காரர்
 இருக்க சிறியவீடும்  என்று செழிப்பாகத்தான் இருந்தது,.

அறந்தாங்கி செல்லும் சாலையில் , அவர்களது தொழிற்கூடத்தை ஒட்டியே
வீடு இருந்ததால் தந்தை மகன் இருவருக்கும் சௌகரியமாகவே இருந்தது.

வண்டி குலுக்கலுடன் நின்றதும்தான் தெரிந்தது , திருச்சி வந்து விட்டது என்று
தெரிந்தது.
சொல்லிவைத்தாற்போல் விழிப்பு வந்தது ராகவனுக்கு.
எதிர் சீட்டில் இருந்த தம்பதியினர் இறங்குவதற்கு தயாராயினர்.
இதோ  இரண்டு மணி நேரத்தில் புதுக்கோட்டை
வந்துவிடும்.  காப்பி வாங்கி வரட்டுமா என்றார் ராகவன். நீங்க சாப்பிட்டு வாங்கோ.
நான் கொஞ்சம் தலை சாய்த்துக் கொள்கிறேன் என்றாள் .
ஆமாம் இறங்கியதும்  வேலை பிடித்துக் கொள்ளும்
நீ போர்த்துக் கொண்டு படுத்துக்கொள் . எதிராப்பில காப்பி விற்கிறான் வாங்கி வருகிறேன் என்று இறங்கினார்.
மகனும் இறங்கி அவர்களை பார்க்க வந்து கொண்டிருந்தான்.
அம்மாவை எழுப்பாதடா. ராத்திரி பூராவும்  முழித்துக் கொண்டு வந்தாள்  என்று சொல்லியபடி காப்பியை வாங்கி கொண்டு வண்டி ஏறினார்.
ஐந்து நிமிடங்களில் வேகம் எடுத்துக் கிளம்பியது வண்டி.
முன்ன மாதிரியா , 7 மணி நேரத்தில் புதுக்கோட்டை வந்து விடுகிறது என்று நினைத்தபடி  அசந்து தூங்கும்   மனைவியைப்  பார்த்தார்.
ஆதரவாக அவள் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு
அவள் தலையைத் தன்  மடியில் ஜாக்கிரதையாக  வைத்துக் கொண்டார்.
கணவனுடைய ஆதரவான செய்கையில்
மனம் மலர்ந்த ஜானு இன்னும் சுருண்டு படுத்து   ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றாள் .

அவள் முதுகில் கை  வைத்து அரவணைத்தபடி அவரும் கண்மூடிக்கொண்டார்
இன்னும் பிறவிகள் எத்தனை வந்தாலும் என் ஜானுவே என் கூட வரவேண்டும்   என்று  பிரார்த்தனை செய்து கொண்டார்.
என்றும்  வாழ்க வளமுடன்.


No comments: