Blog Archive

Saturday, October 13, 2018

நவராத்திரியும் நாங்களும்...2

Vallisimhan
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.
    நவராத்திரி பழையது, நவராத்திரி புதியது என்றெல்லாம்
எழுதிவைத்திருந்த பதிவு, ஒரு படத்தை எடுக்க  பதிவே போய் விட்டது. 
இதெல்லாம் பெரிய சோகம் இல்லை.

அன்று எழுதும்போது இருந்த  கருத்துகள் அடுத்த மணி நேரத்தில் கூட நினைவில் வருவதில்லை.
பாசிங்க் க்ளௌட்ஸ்  மாதிரி போயே போயிந்தி.

பரவாயில்லை. இளவயது நினைவுகளுக்கு அழிவேது.
திருமங்கலம் அழகிய கிராமமும் இல்லை நகரமும் இல்லை. 
இடைப்பட்ட தாலுக்கா.
 ஒரே ஒரு அக்ரஹாரம். அதில் இரு வரிசையிலும் தெலுங்கு,தமிழ்,கன்னட,பாலக்காடு, கும்பகோணம்,திருனெல்வேலியைச்  சேர்ந்தவர்களூம், ,குடிசைத் தொழிலாக தீக்குச்சி அடுக்கும்
நாங்கைந்து குடும்பங்களும், மீனாட்சி அம்மன் கோவிலும், 
 ராதே கிருஷ்ணா பஜன் மண்டலி, ஒரு சத்திரம், ஒரு சின்ன ஆறு,அதற்கப்புறமாக 
ஒரு இபி மின் மண்டல ப்ளாண்ட்,
கடைசியில் ஒரு சமரசம் உலாவும் இடம்.

என் தோழிகளில் எல்லா வகையினரும் உண்டு.
 எலிசபெத் ரெஜினால்ட், ஆசியா, பத்து என்கிற பத்மா,ரஜினி கங்காதரன்
என்று இனிமையான நண்பிகள்.
நவராத்திரி வந்ததும்,
 அனைவர் வீட்டுக்கும் சென்று அழைப்பது என் வேலை.

அந்த வருடம் திருமணமான மாமா வாங்கிக் கொடுத்த மிளகாய்ப்பழ  வண்ணப் பட்டுப் பாவாடை,
பச்சை வெல்வெட் சட்டை எல்லாவற்றையும் காண்பிக்கணுமே.

குங்குமம் கொடுத்து மாமி எங்களகத்தில் கொலு வச்சிருக்கு,
நீங்க எல்லாம் வெற்றிலை பாக்கு,மஞ்சள் குங்குமம் வாங்கிக் கொள்ள வரணும் என்று அம்மா சொன்னதை  அப்படியே ஒப்பிப்பேன்.

சில அம்மாக்கள் வருவார்கள் சில பேர் மாட்டார்கள்.
நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. தெரு முழுக்க வைத்திருக்கும் கொலுக்களை பார்க்கவேண்டும். சின்ன கொலுவென்றால் நம்ம கொலு பெரிசுன்னு 
நினைத்துக் கொள்ளணும். பத்து வீட்டில் பதினோரு படிகள் வைப்பார்கள்.

அவளுக்கு நான்கு அக்காக்கள். அதனால் கொலுவும் பெரிசு. கும்மோணத்தில்
இருந்து வேற வரும்..
பரவாயில்லை. நம்ம அப்பாதான் டிஷ்யு பேப்பர் கலர் கலராக வளையம் பின்னிக் கட்டி இருக்கிறார்.
அம்மா க்ரோஷா  ரோஜாக்களாக கொலுப்படிகளுக்குப் பின்னால் தொங்க விட்டிருக்கிறார்.
பாட்டி கிட்ட சொல்லிப்
புது மண்டபத்திலிருந்து யானை, மீனாகஷி, பார்க் செட் எல்லாம் சித்தப்பா கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். கவலையே இல்லைன்னு பத்து அம்மாவிடம் அரட்டை அடிப்பேன்.
உனக்கென்னடிம்மா, காதுக்கு ஜிமிக்கி, பட்டுக் குஞ்சலம் என்று அலங்காரம் பண்ண உங்க அம்மாவுக்கு நேரம் இருக்கு.
நான் பாரு, தளிகை உள்ளுலயே இருக்கேன் என்று சிரிப்பார் அந்த மாமி. மிகவும் நல்லவர்.
பத்துவின் அண்ணா நச்சுவும் வண்ண பல்புகளால் அலங்காரம் செய்வார்.
உங்க கொலுதான் பெஸ்ட் மாமி என்ற பிறகு பாடச் சொல்வார்.

அன்று பள்ளிப் ப்ரேயரில் ஒலித்த தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே
என்று முழுவதும் பாடி முடித்தேன்.
பத்து முதற்கொண்டு பத்து அப்பா வரை சிரித்து முடித்தார்கள்.
ஒரு வரவீணா பாடக் கூடாதாடி என்று கடிந்தாள் பத்து.
மறந்து போச்சுடி. நாளைக்கு பாடறேன் என்று சொல்லிவிட்டு அவர்கள் வீட்டு சுண்டலை ரசித்துவிட்டு,பக்கத்துவீட்டுகு
போனோம். அது மாது என்கிற மாதவன் வீடு. வாசலில் இருந்து பின் பக்கம் வரை இருளோன்னு
இருக்கும்.

மாமிக்கு வெளிச்சமே ஆகாது. மைக்ரெய்ன்.

மாது எங்கள் ட்ரேட் பார்ட்னர்.
என்னடா கொலு இல்லையா என்றால் இந்த வருஷம் இல்லை.
சுண்டல் கேட்டா கொடுப்பியா என்பான்.
எங்க வீட்டுக்கு வா என்று சொல்லி,அடுத்த வீட்டுக்குப் போவோம்.
பத்து நாள் கொண்டாட்டம் இப்படித்தான் இருக்கும்..
சின்னத்தம்பி ரங்கன் சுண்டலுக்காக என்னுடன் வருவான்.
சந்தோஷ வாழ்க்கை. அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.
தாயே  மீனாக்ஷி  காப்பாத்து.

No comments: