Blog Archive

Friday, August 31, 2018

முதுமை சுதந்திரம்.....

Vallisimhan

சுதந்திரம் என்பது கொடுத்து வருவதா. நாமாக எடுத்துக் கொள்வதா.
பெரியவர்கள் இருக்கும் வீட்டில்
மருமகள்களுக்கெல்லாம் சீக்கிரம் சுதந்திரம் என்கிற வார்த்தையை

உபயோகிக்க முடியாது.
பெரியவர்கள் காலையிலிருந்தே ஒரு திட்டம் போட்டு வைத்திருப்பார்கள். அது கோவிலாக இருக்கலாம், உறவினர்கள் வருகையாக இருக்கலாம்,

நம் குழந்தைகளின் பள்ளி விஷயமாக இருக்கலாம்.
 வைத்தியர் வருகையாக இருக்கலாம்.
எல்லாவற்றையும் யோசித்து நாம் இன்று 75 பைசா தொலைவில்
இருக்கும் பெற்றோரைப் பார்த்துவிட்டு  3 மணிக்குள் திரும்பலாம் என்று ,
யோசித்துப் பாட்டியிடம் பர்மிஷன் வாங்கினால்
, நாளைக்குப் போயேன். அரைமணி நேரத்தில் உன் பெரிய மாமனார் மாமியார்
வருகிறார்கள். அவர்கள் கிளம்ப மதியம் ஆகிடும். 
என்று சொன்னதும் எனக்கு சுருதி இறங்கிவிடும். என் மாமியார் அப்போது கை கொடுக்க நினைப்பார்.
அவள் போகட்டும். அவ அம்மாவுக்குக் கையே தூக்க முடியலையாம்.
என்னன்ன்னு போய்ப் பார்த்து விட்டு வந்துவிடுவாள். நான் இங்கே
பார்த்துக் கொள்கிறேன் என்பார்.

உன்னை நம்ப முடியாது. திடீர்னு தலைவலி வந்தால் கஷ்டம்.
நாளைக்குப் போகட்டுமே என்பார்  பாட்டி.

முடிந்தது அன்றைய உரையாடல். ஒரு மணிக்குப் பாட்டிக்குக் காப்பி
போட்டுக் கொடுக்கவும், விருந்தாளிகள் வரவும்.
அரிசி உப்புமா கிண்டவும் நேரம் போய்விடும்.


எதற்கு இந்த விலாவரிக் கதை என்று தோன்றும்.
எல்லா வீடுகளிலும் நடக்கும் விஷயம் தானே.

 ஆனால் 28 வயதில் இதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு இல்லை.
எதிர்த்துப் பேச பெற்றோர் கற்றுத்தரவும் இல்லை.

மீண்டும் 1989க்கு வருவோம்.  7 வருடங்கள் கழித்து மகள் திருமணம்.
அவள் அப்பா காரோட்ட, என் அப்பா வழிகாட்ட  அந்தத் திருமணம் நல்லபடியாக
நடந்தது.

அந்தத் திருமணத்துக்கு, என் ஐந்து வருட சம்பாத்தியமும்
 ஒரு நகையாக அவள் கழுத்தில் ஏறியது.

வரிசையாக வாழ்வின் ஏற்றம் பள்ளம் எல்லாம்
தாண்டிக் கண்விழிக்கையில் 2006 வந்திருந்தது.
இப்பொழுது என்னை இரு என்று சொல்லவும் ஆளில்லை.
போ என்று சொல்லவும் சந்தர்ப்பம் இல்லை.
குழந்தைகள் இருக்குமிடம் உதவி செய்யப் புறப்பட்டோம்

சிங்கம் எங்கும் சென்று வந்துவிடுவார். எனக்கு போகும் இடைத்திலும் வீட்டு சம்பந்தமான வேலைகள் இருக்கும். அன்பினால் செய்ய வேண்டிய
தேவைகள் அவை.
2010லிருந்து இருவருக்குமே வெவ்வெறு சிகித்சைகள்.

தவறேதும் இல்லை. கண்ணியமான சந்தோஷத்துடன் கடந்தது வாழ்க்கை.
2013இல்  சிங்கம் இறைவனடி சேரும் வரை.
பிறகு என் வாழ்க்கை  குழந்தைகள் கையில்.

வரச்சொன்னால் போவேன். அந்த ஊர் விசா முடிந்ததும் வேறு இடம்.
அவர்கள் உலகம் வேறு. என் உலகம் வேறு.
இணையத்தில் புகுந்தததால் 80 சதவிகித விடுதலை.
முன்பு முதுமை வரமா சாபமா என்று ஒரு தொடர் போனது.
\
இப்பொழுது சொல்கிறேன்
முதுமைக்கு உண்டான தளர்வு வந்தாலும் உடல் ஆரோக்கியமும்
மனத்திடமும், கை நிறையப் பணமும், எது நடந்தாலும்
பொறுமை காப்பதும் தெரிந்தால் இது சுதந்திர முதுமையே.
வாழ்க வளமுடன்.

No comments: