Wednesday, July 04, 2018

1400ஆவது பதிவு. கங்கை நதி ஓரம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 அடுத்த நாள் ,பொழுது விடிந்ததும் குளியல்,எல்லாம் முடித்து
 புதிய உடைகளை உடுத்துக் கொண்டு, காலைப் பலகாரமான
இட்லி, பால்,காப்பி ,டீ என்று முடித்துக் கொண்டனர்.

தாங்கள் தங்கும் விடுதியிலேயே லக்ஷ்மி நாராயணனையும் தங்கும்படி கேட்டுக் கொண்டார்
வாசு.
அவர்கள் தங்கள் குழுவிலிருந்து
பிரிய முதலில் தயங்கினாலும் நட்பிற்காக ஒத்துக் கொண்டார்.
வஞ்சுமாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி.
திரு .நாராயணனின் உதவி தேவைப்படும் என்று தோன்றியது.
வாசுவுக்குக் கிரியைய்களில் அவ்வளவு  விஷயம் தெரியாது.
நாராயணனோ சம்ப்ரதாயங்கள் அனைத்தும் அறிந்து
வைத்திருந்தார்.

12 மணி அளவில் மதிய உணவும் வந்தது.மணக்க மணக்க சாம்பார் சாதம்,
பொரித்த வடகம், உ.கிழங்கு கறி என்று அமர்க்களமாகக் கொண்டு வைத்தார்.
அதைத்தவிர  ஒரு கூஜா நிறைய பாயசம், வாழை இலைகளில் கட்டிய தயிர் சாதம், மாங்காய் ஊறுகாயோடு கொண்டு வந்து வைத்தார்.

இல்லை இது ரயில்வே செலவில்லை வெங்கட் ராமன் சீர்.
உங்க பயணம் ஆரோக்கியமாகத் தொடங்கி அதே போலப் பூர்த்தி செய்யணும்னு காசி விஸ்வனாதனிடம் வேண்டிக்கொண்டு கொடுக்கிறேன் என்றார்.

பெங்களூரு வந்ததும் உங்களை வந்து பார்க்கிறேன்.
என்றபடி விடை பெற்றார். எத்தனை நறுவிசா, மரியாதையாகப் பேசுகிறார்.

உண்மையில் அந்த விடுதி உணவு பற்றி எனக்குக் கவலைதான் என்றார் வஞ்சுமா.
 அங்கேயும் தமிழ் சமையல் காரர் உண்டு. செட்டினாட்டு அரசர் விடுதியில் நம்
உணவுக்கு குறைவு இல்லை .உனக்குக் கவலை வேண்டாம் வஞ்சு என்று ஆதரவாகச் சொன்னார்.வாசு.

தன் பெற்றோர்கள் குடும்பத்தோடு ஒரு ரயிலில் சலூன் எனப்படும்
பிரத்தியேக வண்டியில் ஆசாரம் கெடாமல் சென்னையிலிருந்து
பத்ரினாத் வரை போய் வந்து சொன்னதேல்லாம் வஞ்சுமாவுக்கு நினைவு
வந்தது.
தாத்தா ஜட்ஜ் ஆக இருக்கும் போது அரசாங்க அலுவலாக தில்லி செல்ல அந்த
1930ஆம் வருடம் பாட்டி பயணம் செய்த கதை.
கோதாவரி ஆற்றங்கரையில் , அடுப்பு மூட்டி, பங்களூர் கத்திரிக்காய் கூட்டு
செய்ததைஎல்லாம்  பாட்டீ சொல்ல ,காலடியில் உட்கார்ந்து
 கேட்ட நினைவு பசுமையாக இருந்தது.
லக்ஷ்மிமாவும் தன் அம்மா,அப்பா எல்லோரும் சென்று வந்ததை
வர்ணித்தார். முந்தைய நாட்களில் ஆறு மாதம் கூட ஆகுமாம் காசி சென்று வர,.
யார் கண்டா நம் குழந்தைகள் இரண்டே நாளில் சென்று வருவார்களாக இருக்கும்
என்று யோசித்து சிரித்துக் கொண்டார்கள்.
வாராணசி நிலையம் வந்ததை  அவர்கள் இருந்த ரயில்வே கார்ட் சொன்னார்.

நீங்கள் இறங்குங்கள் நாங்கள் பெட்டி படுக்கை கொண்டு வருகிறோம்
என்றார் வாசு.
 அதற்கு அவசியம் இல்லாமல் விடுதியிலிருந்த வந்த
நடேசன் அவர்களுக்கு வரவேற்பு சொல்லி அழைத்துச் சென்றார்.

விடுதியின் வண்டி சௌகர்யமாக இருந்தது. வெய்யில்
உரைக்கத்தான் செய்தது. அண்ணாமலை பவனம் பிரம்மாண்டமாய்
இருந்தது.
 இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகள் விசாலமாக இருந்தன.
ஜன்னலைத் திறந்த வஞ்சுமாவுக்கும் லக்ஷ்மிக்கும் கங்கையின் படிகளும்
அதன் விஸ்தாரமான கரைகளும் கண்ணில் பட்டன.

வஞ்சுமா உணர்ச்சி மிகுதியில் லக்ஷ்மி மாவை அணைத்துக் கொண்டாள்,
எனக்கு ஒரு நல்ல தோழி கிடைத்திருக்கிறாள்.
இந்தக் கங்கை அம்மாவுக்காக எத்தனை நாள் தவம் இருந்தேன்
என்றவர் கண்களில் நீர்.
வாசு அருகில் வந்து அணைத்துக் கொண்டார். மூன்று நாட்களோ
 ஒரு வாரமோ நீ சொல்லும் வரை நாம் நகரப் போவதில்லை
 என்று மென்மையாகச் சொன்னார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++
நண்பர்களே, தோழிகளே இந்தப் பதிவு நாச்சியாரின் 1400
ஆவது பதிவு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 என் சக
பதிவர்கள் எழுதின அளவில் இது மிகவும் குறைவுதான்.
எனக்கு ஒரு மகிழ்ச்சி .இவ்வளவாவது எழுத முடிந்ததே என்று.
உங்களது ஆதரவுதான் என் பதிவின் எழுத்தின் வளர்ச்சிக்குக் காரணம்.