Blog Archive

Tuesday, May 08, 2018

ஜானா வேணு கதை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

ஒரு நொடிப் பொழுதில் நடந்து விட்டது.
எப்பொழுதும் போலப் பேத்தியை பள்ளியிலிருந்து வரும்போது
உடன் நடந்து வரும் தோழி மிஸஸ். குப்தா ,வழக்கம் போல ஏதோ ஜோக் சொல்லி சிரிக்க
ஜானா , பாதையில் இருந்த வேரொன்று தடுக்கி,
விழுவதை சமாளிக்கக் கை ஊன்றி விட்டாள்.

உடனே தெரிந்து விட்டது. இது கொஞ்சம் கனமான அடி என்று.
கூடவே வந்து கொண்டிருந்த மற்ற தோழிகள் அவளைத் தாங்கிப்
பிடிக்க, சமாளித்துக் கொண்டு  எழுந்தாலும்
வலது கை மணிக்கட்டு வீங்குவதைப் பீதியுடன் பார்த்தாள்.

ஒய் ஜானா யு ஆர் ஆல்வேஸ் ஃபாலிங்க்.
This is not right. remember last year it took a month to heal your ankle
என்று அவளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்.
 இரண்டாம் வகுப்பில் படிக்கும்  நவி என்ற நவீனா
பாட்டியைப் பார்த்து அழ ஆரம்பித்தது.
அச்சோ அழண்டா மோளே, அம்மை இதோ வந்துடுவாளே என்று
லீலா நாயர் ,குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.

வீட்டுக்கதவைத் திறந்து கொண்டு அனைவரும்
உள்ளே நுழைந்து, முதலுதவியாக
ஃப்ரிட்ஜ் ஐஸ் பெட்டியிலிருந்து ஐஸ் பாக் ஒன்றை அவள் கைமேல்
வைத்தாள் லீலா.
 குடிக்கத் தண்ணீர் கொடுத்தாள்.
சாய் போட்டுத் தரவா. மோளுக்கு என்ன வேணும்.
ரொட்டி ஜாம் செய்து தரேன் என்று நிலமையைச் சமாளித்தாள்.

மருமகள் வர இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கு. வலியோ தாங்கவில்லை.
உலர்ந்த துணிகளை மடிக்க வேண்டும். ரொட்டி, கூட்டு செய்ய வேண்டும்.
கணவர் வேணுவுக்குக் கஞ்சி செய்யணும்.
எண்ணங்கள் ஓட நாற்காலியை விட்டு எழுந்தவள் தலை என்னவோ
செய்ய மீண்டும் உட்கார்ந்து விட்டாள்.
 சத்தம் கேட்டு ,மாடி அறையிலிருந்து இறங்கி வந்தார் வேணு,
ஜானாவைப் பார்த்ததும் அவருக்குப் பதட்டம்.

அங்கிள் பேடியொண்டும் இல்லை. சின்ன அடி.
நான் லேகையை வரச் சொல்லி இருக்கேன்.
நீங்கள்  நவியைப் பார்த்துக் கொள்ளுங்கள்,
 எமெர்ஜென்சியில் கட்டுப் போட்டுக் கொண்டு வந்துவிடுகிறோம்.
அம்மைக்கு ஃப்ராக்ச்சர் ஆகி இருக்கணும். இத்தர வீக்கம்
கண்டேளா, என்றபடி, வாசலுக்கு விரைந்தாள்.
அவளது தோழி பக்கத்து     ரிச்சர்ஸ் ஹாஸ்பிட்டலில் எக்ஸ்ரே பிரிவில் இருந்தாள்.

 ஜானாவின் அருகில் உட்கார்ந்த வேணு, என்னம்மா  ஆச்சு, நானும் வரட்டுமா
என்று சொல்ல, இல்லை குழந்தை பயப்படுவாள். நீங்கள் குக்கரில்
சாதம் மட்டும் வைத்துவிடுங்கள்.
நான் வந்த பிறகு மற்றதைப் பார்க்கலாம் என்ற மனைவியைப் பார்த்துத் தொண்டை அடைத்துக் கொண்டது.
அவர்களும்  அமெரிக்கா, நியு ஜெர்சி வந்து 7 வருடங்கள் ஆகிறது.
ஒரே மகன் என்பதால்  கோவையில் வீடிருந்தாலும்,
 அவனுக்கு உதவியாக இங்கே வந்துவிட்டார்கள்.
சின்ன நவி பிறந்ததிலிருந்து இங்கே வாசம்.
இப்போது குடி உரிமையும் கிடைத்தாகிவிட்டது.
மாதா மாதம் வரும் சலுகை சம்பளமும் சேர்ந்து கொண்டு வந்தது.
மருமகளின் பெற்றோர்கள் வரும் சமயம், இருவரும்
எல் ஏ வில் இருக்கும் வேணுவின் தங்கை வீட்டிற்குப் போவார்கள்.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கோவை சென்று, மற்ற தெய்வ தலங்களுக்கும் உறவினர் வீட்டுக்கும் போய் வர  இரண்டு மாதங்கள் எடுத்துக் கொள்வார்கள்.
வேணு எண்பது வயதை நெருங்கினாலும் வலுவான உடலமைப்புக் கொண்டவர்.
ஜானா தான் இருவரில் கொஞ்சம் பலவீனம். தைராய்ட் சரியாகாமல் உடல் பருத்து
 வீடுண்டு, வேலைகள் உண்டு என்று பொழுதக் கழித்து விடுவாள்.
யப்ப்  டிவி தான் அவளுக்குப் பொழுது போக்கு.

மருமகளுக்கு எல்லா உதவியும் செய்து அவ்வளவு
பெரிய வீட்டை அழகாக வைத்திருப்பாள்.
இந்த்க் கை முறிவு பின்னடைவுதான். அவர்கள் மருத்துவ மனை போய் வரட்டும்.
நாம் நாளை பார்க்கலாம்.....
Azhakiya   Nambi ThirukkuRungudi
FINDING WAYS.

22 comments:

ஸ்ரீராம். said...

அடடா... பிராக்சரா?

ஜானா, வேணு பற்றிய அறிமுகம் புரிந்தது. தொடரக் காத்திருக்கிறேன்.

Geetha Sambasivam said...

தொடரக் காத்திருக்கேன்.

//ஜானா, வேணு பற்றிய அறிமுகம் புரிந்தது// ????????

KILLERGEE Devakottai said...

மலையாள நடை இரசிக்க வைத்தது.
தொடர்கிறேன் அம்மா.

ஏகாந்தன் ! said...

திருக்குறுங்குடி அழகிய நம்பி பச்சைமாமலைபோல் மேனியாயிருக்கிறாரே!

ஜாவே..தொடர்கதையா?

நெல்லைத் தமிழன் said...

முக்கியமான கட்டத்துல அம்போன்னு விட்டுட்டீங்களே. தொடர்கிறேன்.

"மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும் மன்னு பூணும் நான்கு தோளும் வந்தென்முன்" நிறுத்தியதற்கு மிக்க நன்றி. திருக்குறுங்குடி நம்பியை சேவிக்க அவன் அருள் வேணும். என் அம்மா வழி தாத்தாவின் ஊரல்லவா?

கோமதி அரசு said...

மருத்துவமனை போய் வரட்டும். சின்ன பிராக்சராக இருக்க வேண்டும்.
மருமகளுக்கு உதவி கொண்டு இருந்தால் தானே மகிழ்ச்சியாக இருப்பார் ஜானா?

Anuprem said...

அழகான நடையில் செல்கிறது,,..அம்மா..

ஸ்ரீராம். said...

// ஜானா, வேணு பற்றிய அறிமுகம் புரிந்தது. ???????//

பெரிய அர்த்தம் எல்லாம் இல்லை கீதாக்கா... அவர்கள் வயது, அவர்கள் கடமை, எங்கிருக்கிறார்கள், என்றெல்லாம் அம்மா விளக்கமாகச் சொல்லி இருப்பதால் அப்படிச் சொல்லி இருக்கிறேன். அவ்ளோதான்.

:)))

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
தெரிந்த பெயராக இருக்கிறதோ.
முன்பு ஜானு ராகவன் என்று கதை எழுதி இருந்தேன்.
இது அவர்களில்லை. முதியவர்கள்.
சென்னையில் தெரிந்தவர்கள். ஃப்ராக்ச்சர் எல்லாம் சரியாகிடும்.
நடுவில் நடப்பதே ஒரு பாசிடிவ் கதை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
தெரிந்த குடும்பத்தில் நடந்த கதை. இப்போது மீண்டும் மாமியைச் சந்தித்தேன்.
அதுவே கதை.

வல்லிசிம்ஹன் said...

இந்த லீலா நாயர் மிக நல்ல பெண்மணி அனைவருக்கும் உதவியாக
இருப்பவர். தேவகோட்டையாருக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏகாந்தன் , ஒரு சிறு சம்பவம் தான் .என்னால் சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முடியவே இல்லைம்மா. இரண்டு நாட்களில் முடிக்கப் பார்க்கிறேன்.
வருகைக்கு மிக நன்றி.
ஆமாம் வண்ணத்திலியே ஜ்வலிப்பார் எங்கள் அழகிய நம்பி.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் முரளி.
எனக்கு அப்பா வழித் தாத்தா ஊர்.
நிறைய எழுத முடியவில்லை அப்பா.
எழுதாவிட்டால் பித்தம் பிடிக்கிறது. தொடரலாம்.வாழ்க வளமுடன் மா.

வல்லிசிம்ஹன் said...

அதுதான் உண்மை. கோமதி மா...
ஜானாவால் சும்மா இருக்க முடியாது. பிறவியே அப்படி.
என்னைப் பார்த்துக் கேலி செய்வார். மணிக்கணக்கா கம்யூட்டரில் எப்படி உட்கார முடியும் என்று. அது ஆச்சு 10 வருடம்.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அனுராதா பிரேம்குமார்.
நீங்கள் எல்லாம் படிப்பதே எனக்குப் பெருமை.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா கதையில் வரும் ஜா அண்ட் வே கேரக்டர்கள் புரிகிறது.!!!!! உங்கள் வர்ணனைகள் புரிய வைத்தது....

ஒன்றும் இருக்கக் கூடாது என்று திருக்குறுங்குடி நம்பியையும் குறுங்குடி வல்லியையும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். தொடர்கிறோம்

நம்பியைப் பார்த்து ரொம்ப வருஷம் ஆகிவிட்டது.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா நம்ம நம்பி என்ன கம்பீரமா பெரியவரா இருப்பார் இல்ல?!!! பாற்கடல் நம்பியும் தான்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நெல்லை உங்கள் அம்மா வழி தாத்தாவின் ஊரா...எனக்கு என் அப்பா வழி...பாட்டி என் அப்பா பிறந்ததும் திருக்குறுங்குடியில்தான் எனவே டி என்றும் இனிஷியலில் வரும்...வல்லிம்மாவுக்கு அப்பா வழித் தாத்தா ஊர்...அட அட!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா கதை நன்றாக இருக்கிறது. தொடரோ? ஜானுவிற்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று மனம் எண்ணுகிறது வல்லிம்மா தொடர்கிறோம்

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி, ஒரு சின்ன முறிவு பெரிய முறிவைத் தடுத்தது.
ஒன்றும் கவலை இல்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,
அந்த டி யை விடமாட்டார்கள். அப்பா வைத்துக் கொள்ளவில்லை. தன் அப்பா இனிஷியலை மட்டும் வைத்துக் கொண்டார்.
கல்யாண பத்திரிகைகளில்
திருக்குறுங்குடி எஸ்.நாராயணன் என்று போட்டுக்கொள்வார்.
நான் மனதில் நம்பியைப் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நல்லதே நடக்கும் கீதா.
பிரச்சினை இல்லாத வாழ்வேது.

குறுங்குடி என்றோரு அத்தை இருந்தார்.
பெரிய உருவம். மிரட்டல் குரல்.ஹாஹா.