Blog Archive

Monday, May 21, 2018

வாழ்க்கையின் குரல் 3

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 பணம் தீரத் தீர ,சுந்தரத்தின்  மன நிலை கோபத்திற்கு மாறியது.
மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது.

சந்திராவை நச்சரித்துப் பணம் கேட்ட நிலையில் அண்ணனை அணுகினாள்.

அண்ணனின் கோபத்துக்கும் அண்ணியின்
ஏளனப் பார்வைக்கும் ஆளானதுதான் மிச்சம்.
 திரும்பும்போதும்  வீடு கையில் நிற்குமா
இல்லை அதையும் விற்று விடுவானா என்கிற அச்சம் , குழம்பி இருந்த மன நிலையில் தோன்றியது.
பசுமை சூழ இருந்த வயல் வெளிகளில் பெற்றோருடனும்
  அண்ணனுடனும்  சென்று மகிழ்ந்த நாட்கள்
நினைவில் வந்து போயின.

அண்ணா மிக நல்லவன் தான். அவனிடமும் சுந்தரம்  கடன் எக்கச்சக்கமாக வாங்கித்
திருப்பிக் கொடுக்கவில்லை. யாருக்கும் கோபம் வரத்தானே செய்யும்.

வீட்டுக்குத் திரும்பியதும், சந்திரா செய்த முதல் வேலை, பீரோ லாக்கரைத் திறந்து
வீட்டுப் பட்டாவை எடுத்தது தான்.
 இருவர் பெயரிலும் இருந்த அந்த பத்திரத்தை
உடனடியாகப்  பக்கதிலிருந்த தோழியின் வீட்டுக்குக் கொண்டு போய்
வைத்ததும் மனம் நிம்மதி பெற்றது.
அடுத்த நாள் வேலைக்குச் செல்ல எல்லா ஏற்பாடுகளையும்,
பெண்களின் உடைகளைச் சீர் செய்வதிலும் மாலை
நேரம் வரை சென்றது.

எங்கோ சுற்றிப் பணமும் கிடைக்காமல் திரும்பினான் சுந்தரம்.

களையாகக் கம்பீரமாக இருந்த கணவ்னின் முகம் இப்படி வெறி
பிடித்துக் காட்சி அளிக்கும் கோலம் அவளை  வருத்தியது.
 காப்பி, டிபன் சாப்பிடுகிறீர்களா என்று மென்மையாகக் கேட்டாள்.

திரும்பியவனின் முகத்தில் தெரிந்த ரத்தக் காயம்  அவளைத் திடுக்கிட வைத்தது.
என்ன ஆச்சு ,காயம் பட்டிருக்கிறதே சுந்தரம்
என்று பக்கத்தில் நெருங்கியவளைப் பார்வையாலெயே
நிறுத்தினான்.
காசில்லாமல் கடனுக்கு சீட்டாடினால், இதுதான் கிடைக்கும்.

இதோ அந்தக் காசி இங்கே வரப் போகிறான். இருபதாயிரத்துக்கு
வழி செய்து கொள். இல்லை என்ன பதில் சொல்வியோ உன் சாமர்த்தியம் என்ற படி
அப்படியே விரைந்து வெளியேறினான்.

சந்திராவுக்குத் தலை சுற்றியது. வீடு வரை வந்துவிட்டதா இந்தப் பாவம்.
புதிதாக ரௌடிகள் கூட்டம் எல்லாம் வீட்டிற்கு
வரப் போகிறதா என்றெல்லாம் எண்ணங்கள் ஓடின.

பெண்கள் இருவரையும் அழைத்து , பக்கத்து வீட்டில் இருக்கும்படிச் சொல்லி அனுப்பி வைத்தாள்.
உள்ளே சுவாமி சன்னிதிக்குச் சென்று விளக்கேற்றி
தைரியமும் நிதானமும் கொடுக்க வேண்டினாள்.

ஏழு மணி போல வாசல் மணி ஒலித்தது.
 தன்னைச் சீர் செய்து கொண்டு நிதானமாகக் கதவைத் திறந்து
அங்கு  நின்ற உருவத்தைப் பார்த்தாள்.
 நினைத்த மாதிரி ரௌடி யாரும் அங்கு நிற்கவில்லை.
 வெகு கச்சிதமாக உடை அணிந்த உருவம் தான் தெரிந்தது.
யார் என்ன வேண்டும் என்று கேட்டவளைப்
புன்னகையோடு பார்த்த அந்த மனிதனைக் குழப்பமாகப் பார்த்தாள்.

விஸ்வனாதன். கல்லூரித் தோழன். அடடா உள்ள வா. எங்கே
இப்படி .உன்னைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு.

என்றவளைப் பின் தொடர்ந்து  சோஃபாவில் உட்கார்ந்து
 சுந்தரம் எங்கே என்று கேட்டான்.
வெளிவேலையாகப் போயிருக்கிறார்.  நீ ஏதாவது பழச்சாறு ஏதாவது
சாப்பிடுகிறாயா. எப்போது சென்னை வந்தாய்.
ஜம்ஷெட்பூரில் இருந்தாய் இல்லையா.

ஒருமணி நேரத்துக்கு
முன்னால் கிளப்பில் பார்த்தேனே, பணம் எடுத்துண்டு
வரேன்னு கிளம்பி வந்தானே. உன் கிட்ட கொடுத்துட்டுப் போனானா.

கலக்கம் குடி கொண்டது சந்திராவின் முகத்தில். தொடருவோம் நல்லதை
நோக்கி நகருவோம்.
Add caption

9 comments:

ஸ்ரீராம். said...

சங்கடமான கணங்கள்.

Geetha Sambasivam said...

வேதனை தான்! தொடரக் காத்திருக்கேன்.

கோமதி அரசு said...

சந்திராவின் நண்பருக்குதான் பணம் கொடுக்க வேண்டுமா?
அப்போ ஏதாவது திருப்பம் (நல்ல வழி கிடைக்கும்) ஏற்படும் கதையில் .
நம்பிக்கையோடு காத்து இருக்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

என்ன இது.... கலக்கமான சம்பவங்களைப் பகிர்கிறீர்களே... ரொம்ப பகீர் என்று இருக்கிறது. தவறு செய்வது இயல்புதான். ஆனால் நம்ம தவறு எந்தக் காரணம் கொண்டும் அதற்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் மனைவியையோ, குழந்தைகளையோ பெற்றோர்களையோ பாதிக்காமல் இருக்கணும். பாதிக்கச் செய்தால், அவர் மனிதனில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், சங்கடங்கள் விலகவே கடவுளை நம்புவோம்.

வல்லிசிம்ஹன் said...

வேதனைகள் தீர்ந்துவிடும் கீதா. எதற்குமே ஒரு முடிவு உண்டு.

வல்லிசிம்ஹன் said...

ஒரு நல்லது நடக்க சில துன்பங்களைச் சந்திக்கணும் கோமதி மா. வாழ்க்கையின் விதிமுறை அதுதானே.
நணபர் இருவருக்குமே பழக்கமானவர். நன்மை வரும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெ.த, சூது ஒருவனைக் கட்டிப் போட்டால்
அவன் மனம் வேறு எதையும் லட்சியம் செய்யவில்லை.

ஆனால் தப்பி வெளியே ஓடும் கோழையாக்கி விட்டது பார்த்தீர்களா.
நல்ல படித்த நற்குடும்பத்தைச் சேர்ந்த மனிதனுக்கே இந்தக் கதி.
கவலைப் படாதீர்கள்.

இப்பொழுது நலமாகவே இருக்கிறார்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: கலங்கச் செய்துவிட்டது வல்லிம்மா. சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன் நிஜத்தில் நடப்பதை சினிமாவாக எடுக்கிறார்களா இல்லை சினிமா நிஜமாகிறதா என்று

கீதா: என்ன சொல்ல என்று தெரியவில்லை அம்மா. என்னென்னவோ எண்ணங்கள்...