Blog Archive

Tuesday, May 01, 2018

மதுரையில் ஒரு சித்திரை 1955

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

மதியம் சாப்பாடும் முடிந்தது.  பாட்டிக்குக் கொஞ்ச நேரம் அசதி தீரப் படுத்துக் கொள்ளவேண்டும்.
தாத்தாவும் தூங்க நானும் முரளியும் ட்ரேட் என்று சொல்லப் படும் இப்போதைய
மோனோபோலியை  விளையாட ஆரம்பித்தோம்.

இன்னோரு சித்தப்பாவின் குழந்தைகள் கண்ணனும்,ஸ்ரீதரனும்
வந்தார்கள். சத்தம் இல்லாமல் வெளியே சென்று
ஓடிப்பிடித்து விளையாடப் போனோம்.

அதற்குள் தாத்தா வெளியே வரவும்,அவர்கள் ஓடிவிட்டார்கள்.

தாத்தா வந்ததும், பின்னாடியே பாட்டியும்
அவருக்காகத் தயாரித்த சுக்குக் காப்பியுடன் வந்தார்.

நீயும் சாப்பிடறியா ஆண்டா. பானகம் மாதிரி இருக்கும் என்று சிரித்தார்
பாட்டி.
குழந்தைக்கு கோக்கோ கொடும்மா.

சதைங்கிறதே காணமே. யார் இப்படி ஒல்லியா இருப்பா நம்மாத்தில.
உன்னைக் கொள்ளலியே என்று கேலி செய்தார்.

உங்கள்ட்ட ஒரு விஷயம் சொல்லணும்னதும்
தாத்தா அலெர்ட் ஆகிட்டார்.
என்ன டவுனுக்குப் போகணுமா. கால் தரிக்காதே உனக்கு
வாரத்துக்கு  இரண்டு தடவையாவது தங்கைகளைப் பார்த்து ஊர் வம்பு
கேட்கணும்.

வானத்த்தைப் பார். மேற்கே மின்னல் தட்டறது.
மழைல மாட்டிக்காம வருவியா என்றார்.
மதுரை  கோடை மழை தெரியாதா.  உருட்டி மிரட்டும்.  தூறலோடு போய்விடும்
என்றார் பாட்டி.
சரி உன்பாடு . இந்த வாலும்   உன்னோடு வரதா என்னைக் காட்டினார்.
ஆமாம் புது மண்டபத்துக்குப் போகணும், ,அதுக்கு முன்னால் சந்தையில்
 கொஞ்சம் காய்கறிகளும் மாங்காயும் வாங்கணும் என்றார்.

சரி மணி 3 ஆறது. 7 மணிக்குள் வந்துடு என்று அனுப்பினார்.
 பாட்டியும் அழகாக அரக்குப் பட்டுப் புடவை கட்டிக் கொண்டு எனக்கும்
ஒரு எம் எஸ் ப்ளூ பட்டுப்பாவாடை கொடுத்தார்.
 ஏது பாட்டி இது என்றதும்  ,போன வருஷம் அக்கா அகத்தில் உனக்காக
கொடுத்தார்.
நானும் தைத்து வைத்தேன். கச்சிதமா இருக்கே என்று ஒரு பட்டு சட்டையும் கொடுத்தார்.

புது மண்டபத்தில் உனக்கு கழுத்துக்கு மாலை வாங்கித்தர்கிறேன், என்று
தனக்கான பஸ்பாசை எடுத்துக் கொண்டு

வந்தார்.
முரளியும் தாத்தாவும்  ஏதோ   ஸ்லோகம் கற்பதில் இருந்தார்கள்.

பழங்கானத்து  வாசல் கேட்டைத்தாண்டி, சொர்ணாம்பிகா பஸ்கள் நிறுத்தும் இடத்தைக் கடந்து
பஸ் ஸ்டாப்புக்கு வந்தோம்.
 அப்போது டிவிஎஸ் சில் வேலை செய்பவர்களின் குடும்பத்துக்கு
 பஸ்பாஸ் கொடுத்து விடுவார்கள். இலவச சவாரிதான்.

5 ஆம் நம்பர் பஸ் வந்ததும் இருவரும் ஏறிக்கொண்டு 
பாட்டி இறங்கச் சொன்ன இடத்தில் இறங்கிக் கொண்டோம்.
பாட்டியின் தங்கைகள்
அம்மும்மா, ரங்கம்மாவும் வக்கீல் புதுத் தெருவிலோ ,,,,
Add caption
இல்லை நாயக்கர் புதுத்தெருவோ.
இருந்தார்கள்.

அதற்கு எதிர் வரிசையில் என் அம்மாவின் உறவினர்கள், மங்கை,தேசி, சீவுப் பாட்டி எல்லாரும் இருந்தார்கள்.
இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தாமிரபரணி ஆத்தங்கரை வந்தது போலத்தான்.
அம்முச்சித்தி  ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டது என் அம்மாவின்
பெரியம்மா பையன். ராகவன்.
தன் மனைவி ஜானகியை அழைத்து// எங்க சேச்சிப் பாப்பா பொண்ணு வந்திருக்கா பாரு.
பஜ்ஜி கொண்டு வா பார்க்கலாம்// என்றார்.
 நான் பாட்டியைப் பார்த்துக் கொண்டேன். பாட்டி சிரித்துக் கொண்டே தலை அசைத்தார்.
ஊஞ்சலில் உட்கார்ந்து ரசித்து முடித்தேன் பஜ்ஜிகளை.
  எங்க பயணம் ,பெரியம்மா என்றார்.
புதுமண்டபத்துல திருவிழாவுக்கு  வளையல், முத்து மாலை எல்லாம் வந்திருக்குமே.
இவளுக்கு வாங்கணும்,
எனக்குப் புது வாணலியும் வாங்கணும் என்றார் பாட்டி.
 எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு பஸ்ஸில எப்படிப் போவாய் பெரியம்மா. தேசியோட காரை எடுத்துண்டு வரேன்  என்று அப்படியே கிளம்பினார் மாமா. தொடரும்

16 comments:

Geetha Sambasivam said...

ப்ஜ்ஜி சுவை இங்கே வருதே! அருமையான தொடர் மறுபடி! காத்திருக்கேன்.

Geetha Sambasivam said...

சித்திரைத் திருவிழாவுக்குப் புதுசு எல்லாம் போட்டுக் கொண்டாடிய அனுபவங்கள் எனக்கும் இருக்கு! ஆனால் உங்களைப் போல் அழகாய்ச் சொல்லத் தெரியலை! :(

Tamilus said...

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

நன்றி..
Tamil US
www.tamilus.com

கோமதி அரசு said...

அருமையான மலரும் நினைவுகள்.
திருவிழா என்றால் புது வளையல், புது ரிப்பன், புது பாசி மணி மாலை, என்று வாங்கிய நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது.

ஸ்ரீராம். said...

அப்போ என்ன கலரில் ட்ரெஸ் என்பது கூட நினைவிருக்கிறதே... திருவிழாவின் அந்நாளைய சந்தோஷங்கள் இன்று இருக்கும் குழந்தைகளுக்கு இருக்குமா?

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... பஜ்ஜி வாசனை இப்போதும்....

இனிமையான நினைவுகள்.

தொடர்கிறேன்....

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, அதுவும் அந்தக் கால வாழைக்காய் பஜ்ஜி.
அம்மு பாட்டி ஆசாரம் மிக்கவர். உ.கிழங்கெல்லாம் உள்ளே வராது.

கரந்தை ஜெயக்குமார் said...

இனிமையான நினைவுகள்
அடுத்தப் பதிவிற்காகக் காத்திருக்கிறேன் சகோதரியாரே

வல்லிசிம்ஹன் said...

எனக்கு எல்லோரையும் கொண்டாட வேண்டும் என்கிற ஆசைதான் கீதா.
மதுரைப் பாட்டி எப்பொழுதும் சின்னச் சின்ன சர்ப்ரைஸ் வைத்திருப்பார்.
ஒரு நற்பவழ மாலை அப்படித்தான் கிடைத்தது.
இப்போது எங்கே என்று பார்த்தால். அது உருவம் சின்னதாகிவிட்டது. பவழம் இளைக்குமாமே.

வல்லிசிம்ஹன் said...

இந்தப் புதுசு வாங்கும் வழக்கம், சென்னையிலயும் கொண்டாடுவேன் கோமதி மா.
மாடவீதி குறத்திகளுக்கு நான் மிகப் பிடித்த வாடிக்கையாளர். சில நாட்களுக்குப் பிறகு விட்டு விட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

ஓ. ஸ்ரீராம் அந்தப் புது எம் எஸ் ப்ளூ பின்னால் ஒரு கதையே இருக்கு.

சித்தப்பா திருமணம் 1954இல் நடந்தது. எங்களுக்கு பாவாடைகள் வாங்கி வந்தார்கள். எங்கள் என்றால் என் இன்னோரு சித்தப்பா பெண்கள். எனக்கு ப்ளூ மேல ஒரு கண். அப்பா அதை எடுத்து சித்தப்பா பெண்ணுக்குக் கொடுத்துவிட்டார்.
எனக்கு மிளகாய்ப் பழ வர்ணம் கிடைத்தது.

அன்று நான் செய்த அசட்டுத்தனம் தாங்காமல் ,பாட்டி இதை வாங்கி இருக்க வேண்டும்.
மறப்பேனா சொல்லுங்கோ. ஹாஹா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட்.
இதோ திருச்சி போனதும், மெயின் கார்ட் கேட் சாலையில் கிடைக்கும் பெரிய பஜ்ஜியை வாங்கி சாப்பிடுங்கள். பத்மவிலாஸ் இருக்கோ இல்லையோ தெரியாது.

ஸ்ரீராம். said...

// அன்று நான் செய்த அசட்டுத்தனம் தாங்காமல் ,பாட்டி இதை வாங்கி இருக்க வேண்டும்.
மறப்பேனா சொல்லுங்கோ. ஹாஹா. //

அதைச் சொல்லக் கூடாதோ....!!!

வல்லிசிம்ஹன் said...

அதே தான். யாருக்கும் தெரியாமல் ,கிணற்றங்கரையையும் தாண்டி ஒரு மரத்துக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டேன்.
உட்கார்ந்த இடம் எறும்புகள் வீடு.
ஆறேழு இடத்தில் கடி வாங்கின பிறகு வீட்டுக்கு வந்தேன்.
யாரும் என்னைத் தேடவில்லை.
அம்மா மட்டும் பார்த்து நன்றாகத் திட்டினார்.
இத்தனை பொல்லாது பாரு ஆனாலும் அசடு// அவ்வளவுதான்.
பாட்டி மறக்கவில்லை. ஸ்ரீராம். இதுதான் அந்த அசட்டுக் காரியம்.

Thulasidharan V Thillaiakathu said...

எவ்வளவு அழகாக நினைவு வைத்துக் கொண்டு எழுதுகின்றீர்கள். நீங்கள் போட்ட ட்ரெஸ் கூட நினைவில் வைத்துக் கொண்டு. அருமையான பொக்கிஷமான நினைவுகள்!!!

கீதா: வல்லிம்மா ஹையோ வளையல், மாலை ரிப்பன் இல்லாத திருவிழாவா? நானும் சிறு வயதில் எங்கள் ஊர்த் திருவிழா நிறைய எஞ்சாய் செய்திருக்கிறேன். அப்பாவின் அம்மா/பாட்டி வீட்டுக்குப் போனால் அது தனி மவுசு. வாசலிலேயே ரிப்பன் வளையல்காரர் வருவார் பட்டாசாலை அல்லது முன் தாவாரத்துல உட்கார்ந்து எல்லாருக்கும் வளையல் அடுக்குவார். நிறைய நினைவுகள் அம்மா...ரசித்தேன் பாட்டியுடன் நீங்கள் சென்றது என்னவோ நான் என் பாட்டியுடன் சென்றது போல....

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,

வளையல்கார செட்டி அடுக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும் கை வலிக்காமல்
அவர் அடுக்குவது அருமை.
பாட்டி தாத்தா நினைவு வராத நாட்களே இல்லை எனலாம்.
எல்லா இனிய காலங்களைக் கொடுத்த இறைவனுக்கு மனம்
நிறை நன்றியைத்தான் தர முடியும்.