Tuesday, May 01, 2018

மதுரையில் ஒரு சித்திரை 1955

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

மதியம் சாப்பாடும் முடிந்தது.  பாட்டிக்குக் கொஞ்ச நேரம் அசதி தீரப் படுத்துக் கொள்ளவேண்டும்.
தாத்தாவும் தூங்க நானும் முரளியும் ட்ரேட் என்று சொல்லப் படும் இப்போதைய
மோனோபோலியை  விளையாட ஆரம்பித்தோம்.

இன்னோரு சித்தப்பாவின் குழந்தைகள் கண்ணனும்,ஸ்ரீதரனும்
வந்தார்கள். சத்தம் இல்லாமல் வெளியே சென்று
ஓடிப்பிடித்து விளையாடப் போனோம்.

அதற்குள் தாத்தா வெளியே வரவும்,அவர்கள் ஓடிவிட்டார்கள்.

தாத்தா வந்ததும், பின்னாடியே பாட்டியும்
அவருக்காகத் தயாரித்த சுக்குக் காப்பியுடன் வந்தார்.

நீயும் சாப்பிடறியா ஆண்டா. பானகம் மாதிரி இருக்கும் என்று சிரித்தார்
பாட்டி.
குழந்தைக்கு கோக்கோ கொடும்மா.

சதைங்கிறதே காணமே. யார் இப்படி ஒல்லியா இருப்பா நம்மாத்தில.
உன்னைக் கொள்ளலியே என்று கேலி செய்தார்.

உங்கள்ட்ட ஒரு விஷயம் சொல்லணும்னதும்
தாத்தா அலெர்ட் ஆகிட்டார்.
என்ன டவுனுக்குப் போகணுமா. கால் தரிக்காதே உனக்கு
வாரத்துக்கு  இரண்டு தடவையாவது தங்கைகளைப் பார்த்து ஊர் வம்பு
கேட்கணும்.

வானத்த்தைப் பார். மேற்கே மின்னல் தட்டறது.
மழைல மாட்டிக்காம வருவியா என்றார்.
மதுரை  கோடை மழை தெரியாதா.  உருட்டி மிரட்டும்.  தூறலோடு போய்விடும்
என்றார் பாட்டி.
சரி உன்பாடு . இந்த வாலும்   உன்னோடு வரதா என்னைக் காட்டினார்.
ஆமாம் புது மண்டபத்துக்குப் போகணும், ,அதுக்கு முன்னால் சந்தையில்
 கொஞ்சம் காய்கறிகளும் மாங்காயும் வாங்கணும் என்றார்.

சரி மணி 3 ஆறது. 7 மணிக்குள் வந்துடு என்று அனுப்பினார்.
 பாட்டியும் அழகாக அரக்குப் பட்டுப் புடவை கட்டிக் கொண்டு எனக்கும்
ஒரு எம் எஸ் ப்ளூ பட்டுப்பாவாடை கொடுத்தார்.
 ஏது பாட்டி இது என்றதும்  ,போன வருஷம் அக்கா அகத்தில் உனக்காக
கொடுத்தார்.
நானும் தைத்து வைத்தேன். கச்சிதமா இருக்கே என்று ஒரு பட்டு சட்டையும் கொடுத்தார்.

புது மண்டபத்தில் உனக்கு கழுத்துக்கு மாலை வாங்கித்தர்கிறேன், என்று
தனக்கான பஸ்பாசை எடுத்துக் கொண்டு

வந்தார்.
முரளியும் தாத்தாவும்  ஏதோ   ஸ்லோகம் கற்பதில் இருந்தார்கள்.

பழங்கானத்து  வாசல் கேட்டைத்தாண்டி, சொர்ணாம்பிகா பஸ்கள் நிறுத்தும் இடத்தைக் கடந்து
பஸ் ஸ்டாப்புக்கு வந்தோம்.
 அப்போது டிவிஎஸ் சில் வேலை செய்பவர்களின் குடும்பத்துக்கு
 பஸ்பாஸ் கொடுத்து விடுவார்கள். இலவச சவாரிதான்.

5 ஆம் நம்பர் பஸ் வந்ததும் இருவரும் ஏறிக்கொண்டு 
பாட்டி இறங்கச் சொன்ன இடத்தில் இறங்கிக் கொண்டோம்.
பாட்டியின் தங்கைகள்
அம்மும்மா, ரங்கம்மாவும் வக்கீல் புதுத் தெருவிலோ ,,,,
Add caption
இல்லை நாயக்கர் புதுத்தெருவோ.
இருந்தார்கள்.

அதற்கு எதிர் வரிசையில் என் அம்மாவின் உறவினர்கள், மங்கை,தேசி, சீவுப் பாட்டி எல்லாரும் இருந்தார்கள்.
இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தாமிரபரணி ஆத்தங்கரை வந்தது போலத்தான்.
அம்முச்சித்தி  ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டது என் அம்மாவின்
பெரியம்மா பையன். ராகவன்.
தன் மனைவி ஜானகியை அழைத்து// எங்க சேச்சிப் பாப்பா பொண்ணு வந்திருக்கா பாரு.
பஜ்ஜி கொண்டு வா பார்க்கலாம்// என்றார்.
 நான் பாட்டியைப் பார்த்துக் கொண்டேன். பாட்டி சிரித்துக் கொண்டே தலை அசைத்தார்.
ஊஞ்சலில் உட்கார்ந்து ரசித்து முடித்தேன் பஜ்ஜிகளை.
  எங்க பயணம் ,பெரியம்மா என்றார்.
புதுமண்டபத்துல திருவிழாவுக்கு  வளையல், முத்து மாலை எல்லாம் வந்திருக்குமே.
இவளுக்கு வாங்கணும்,
எனக்குப் புது வாணலியும் வாங்கணும் என்றார் பாட்டி.
 எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு பஸ்ஸில எப்படிப் போவாய் பெரியம்மா. தேசியோட காரை எடுத்துண்டு வரேன்  என்று அப்படியே கிளம்பினார் மாமா. தொடரும்