About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, May 07, 2018

மதுரையில் ஒரு சித்திரை 1955 5

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  ராமா ராமா என்ற படி படுத்துக் கொள்வது தாத்தாவின் வழக்கம்.
கைகளை நெஞ்சின் மேல் குவித்த வண்ணம், அப்படியே உறங்குவார். புரண்டு படுப்பதோ
அசைவதோ கிடையாது. எப்பொழுதாவது சளித்தொந்தரவு வரும் போது ,
பாட்டி, தவிட்டை வறுத்து மிருதுவான வேஷ்டிக்குள்
வைத்து அருகில் அமர்ந்து மிருதுவாக ஒத்தடம் தருவார்.
தாத்தா ஒழுங்காக மூச்சுவிட ஆரம்பித்ததும் தான்
இறங்கி வந்து படுத்துக் கொள்வார்.

எங்கள்  இருவருக்கும் மிகவும் பயமாக இருக்கும்.
அடுத்த நாள் சுறுசுறுப்பாக எழுந்து விடுவார்.
  குழந்தைகளா எழுந்திருங்கோ. சீக்கிரம் குளித்துவிட்டு
நடக்க வேண்டும்.

அப்புறம் கேட்பானேன். பாட்டி சித்தப்பாவுக்கும் எங்களுக்கும்
உப்புமா  செய்து கொடுப்பார்.
தாத்தா குளித்துப் பஞ்ச கச்சம், வெள்ளை சட்டை ,அங்கவஸ்திரத்தோடு
தயார் ஆகிவிடுவார்.
ஒரு மர ஸ்டூல் தான் தாத்தாவின் சாப்பாட்டு மேஜை.
 அதில் பாட்டி கொண்டு வைக்கும் எந்த உணவையும்
தட்டாமல்  ,வீணாக்காமல் சாப்பிடுவார்.

கூடவே மோரும் உண்டு.
நாங்களும் கிளம்பிவிடுவோம். ஆண்டா, குழந்தை கையைப்
பிடித்துக்கோ, ரோடில் பார்த்து நடக்கணும்.
என்றபடி முன்னாடி போவார். கையில் அழகான கைத்தடி
ஊன்றியபடி தான் நடப்பார்.
காலனியின் வாசலில் தபால் பெட்டி இருக்கும்,
அதில் கறுப்பு சதுரத்தில் ,தபால் எடுக்கப் படும் நேரம்
வைத்திருப்பார்கள்.
நாங்கள் இருவரும் அதைப் படித்து சொல்ல வேண்டும்.
வாக்கிங்க் ஸ்டிக்கை அதன் மேல் தட்டி நேரே படி 7.30 யா 8 மணியா என்றதும்
மீண்டும் பார்ப்போம் 8 மணிதான் தாத்தா என்போம்.
சிரித்தபடி மேலே நடப்பதற்கு முன் , சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு கவரை
தபால் பெட்டிக்குள் அழகாகப் போடச் சொல்வார்..

இது எங்கே போகும் தெரியுமா. அப்பா கிட்ட கேட்க மாட்டீர்களா என்ற படி
 தபாலின் பயணத்தை விளக்குவார்.
தாத்தாவின் பக்கத்திலிருந்து நாங்கள் கற்றது அதிகம்.
பழங்கானத்திலிருந்து பைக்காரா  ஆபீஸ் போகும் வழி மரங்களூம்
 நல்ல சாலையும், வயல் வெளிகளும் நிரம்பி இருக்கும்.
அந்தக் காலை வேளையில் அலுப்பே தெரியாது.

ஒரு சிறிய கட்டிடமாக இருந்தது அப்போது.
அதென்ன பைக்காரான்னு பேரு தாத்தா.
நல்ல தமிழ்ப் பெயர் இருந்திருக்கும் மா. வெள்ளைக்காரன் வாயில் நுழைந்திருக்காது.
திரு நெல்வேலி டின்னவேலி ஆன மாதிரி என்பார்.
தாத்தா உள்ளே நுழைந்ததும், அங்கிருந்த அதிகாரி
பரபரப்பாக வந்தார்.
 என்ன காரியம் சார். . தந்தி அடிக்கணுமா என்று சொன்னபடி தாத்தாவை
உட்கார வைத்தார். நாங்கள் இருவரும் சுற்று முற்றும் பார்த்தோம்.
அப்பாகிட்ட பேச வந்தீர்களா பசங்களா.
.இது சின்ன ஆபீஸ் தான் அடுத்தாப்பில பசுமலையில்
பெரிய கட்டிடம் வரப் போகிறது என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.10 வருடங்களில்
 அங்கே நாங்களே குடிவருவோம் என்றுதான் எதிர்பார்க்கவில்லை.

தந்தி மேஜையின் அருகே உட்கார்ந்த தாத்தா,கட்டுக் கட கடா
அடிக்க ஆரம்பித்தார்.
தந்திக் கட்டை தொடக் கூடாதும்மா. அங்கே வயர் இருக்கு. ஷாக் அடிக்கும் என்றார் தாத்தா.

அவர்கள் எப்படிப் புரிந்து கொள்வார்களோ  எனக்குத் தெரியவில்லை.
வெகு வருடங்கள் கழித்து
பிறகுதானே டெலி ப்ரிண்டர் வந்தது.
 ரங்கன் நீங்க ரெண்டு பேரும் இல்லாமல் படுத்தறானாம்.
உங்க அப்பா சனிக்கிழமை  இங்கே வந்து உங்களை அழைத்துப் போகிறானாம் என்றார்.
எங்களுக்கு ஏமாற்றமாக  இருந்தது.
 ஒரு வாரம் தானா.
தாத்தா எங்களைப் பார்த்ததும் சிரித்துவிட்டார்.
 உங்க அப்பாவுக்கு, தன் அம்மாவுக்கு வேலை நிறைய ஆகிடும்னு யோசிப்பான்.
 அதனால் என்ன
இதோ செப்டம்பரில் லீவு வருமே.அதுக்கு முன்னால் நானும் பாட்டியும்
அங்கே வந்து இருக்கோம்.
டில்லி அத்தை வராளே நாம் எல்லாம் சேர்ந்திருக்கலாம் என்று
சமாதானப் படுத்தினார்.

 எதிர் பக்கம் போய் அடுத்தாற்போல வந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டு
வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
பாட்டி மணக்க மணக்கக் கத்திரிக்காய் தொகையிலும்
கீரைக் குழம்பும், பொரித்த அப்பளமும் செய்து வைத்திருந்தார்.
இன்னிக்கு நாம ரெண்டு பேரும் தோசைக்கு அரைக்கப் போறோம்
 முரளி தாத்தாவோட அவர் அக்கா வீட்டுக்குப் போய் வரட்டும் என்று
சொன்னார். அக்கா வீடு என்றால் பெரிய கார் வரும் என்று தெரியும்.
இருந்தாலும் அரைக்கும்போது
\பாட்டி சொல்லும் கதைகளைக் கேட்கலாமே
என்று சரி சொல்லிவிட்டேன்.....தொடரும் பிறகு முடியும்.


9 comments:

ஸ்ரீராம். said...

// நல்ல தமிழ்ப் பெயர் இருந்திருக்கும் மா. வெள்ளைக்காரன் வாயில் நுழைந்திருக்காது.
திரு நெல்வேலி டின்னவேலி ஆன மாதிரி என்பார்.//

மனைவியோடு சண்டை போட்டு விட்டு வந்து கொண்டிருந்தான் அவன். அப்போது அவன் எதிரே இரண்டு மூண்று வெள்ளைக்காரர்கள் வந்தார்கள். "ஈந்த எடத்துட பேர் என்னா" என்று அந்த இடத்தின் பெயரைக் கேட்டார்கள். ஏற்கெனவே கோபத்தில் இருந்த அவன் எரிச்சலுடன் "பைத்தியக்காரா" என்று திட்டிவிட்டுப் போக, அந்த இடத்தின் பெயர் அதுதான் என்று முடிவு செய்து விட்டார்கள் வெள்ளைக்காரர்கள். அவர்கள் வழக்கப்படி அதை பைக்காரா என்று வைத்துவிட்டார்கள்!!!!

:)))

வல்லிசிம்ஹன் said...

இது நல்ல கதையா இருக்கே ஸ்ரீராம். அவன் என்ன சொல்லி இருப்பான் தெரியுமா அட போய்யா பைத்தாரா ந்னு கத்தி இருப்பான்.
பைத்தாரா பைக்காரா ஆகிட்டது. இது எப்படி ஸ்ரீராம். ஹாஹா.
நன்றி மா. எழுதின உடன் வந்து படித்து ,பின்னூட்டமும் போட்டாச்சு.
ரொம்ப சந்தோஷம் மா.

KILLERGEE Devakottai said...

இன்று எந்த வீட்டில் தாத்தா பாட்டி இருக்கின்றார்கள் ?

பாட்டியின் கதையை ஆவலுடன் கேட்க, நானும்...

Thulasidharan V Thillaiakathu said...

பைக்காரா....முதலில் நான் நினைத்தேன் பைக்காரா ஃபால்ஸ் போற வழியோ? அப்புறம்தான் நினைவுக்கு வந்தது பைக்காரா நீலகிரியாயிற்றே என்று.

நல்ல நினைவுகள். ஏதோ நான் என் தாத்தா பாட்டி கை பிடித்து நடந்தது போன்ற உணர்வு. மெனு சூப்பர்! ரொம்ப ரசித்தேன் வல்லிம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஓ! ஸ்ரீராம் பைக்காரா வுக்கு இப்படி ஒரு கதை இருக்கா ஹா ஹா ஹா ஹா

நல்லாருக்கே கதை...

கீதா

கோமதி அரசு said...

மலரும் நினைவுகள் அருமை.

இன்னிக்கு நாம ரெண்டு பேரும் தோசைக்கு அரைக்கப் போறோம்//

முன்பு இப்படி தான் மாவு அரைப்பைதை சொல்வார்கள் , இப்போது எல்லாம் கிரைண்டர் போடனும் வாஷிங் மிஷின் போடனும் இதே பெரிய வேலையாக போச்சு.

மாமியாரும் நானும் மாவு அரைத்து இருக்கிறோம், ஒருவர் அரைக்க ஒருவர் தள்ளிவிட கதைகள் பேசிக் கொண்டு அருமையான காலங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி , முன்பு மருமகளாக
இருந்தவர்கள் ,இன்று பாட்டியாக இருக்கிறார்கள்.
அதே போலவா என்று சொல்ல முடியாது. மாறுதலான நிலமையில்.
வாழ்க வளமுடன் ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,
தாத்தாவிடம் எந்தக் கேள்வியும் கேட்கலாம். பதில் வைத்திருப்பார்.
நிதானமான கண்டிப்பான மனுஷர்.
ஸ்ரீராம் சொன்னதுதான் சிரிப்பு. எங்க தாத்தா
ஸ்ரீராமா வந்துட்டாரோ என்னவோ. ஹாஹா.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே கோமதி மா. முறுக்கு சுற்ற அழைப்பார். கேலி காட்ட மாட்டார். அம்மாவிடம் கொஞ்சம் கற்றேன் என்றால் இந்தப் பாட்டியிடம் நிறையக் கற்றேன். கறுப்பு உளுந்த் ஊற வைத்து,
அதைக் களைந்து களைந்து ஊற்றி விட்டு ,அவர் செயும் பாங்கே அழகு.

நன்றி மா. எனக்கும் துணியை ஊறவைத்துத் தோய்க்க மிகவும் பிடிக்கும்.
வாழ்க வளமுடன்.