Thursday, May 03, 2018

மதுரையில் ஒரு சித்திரை 1955 3

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  மாமா வண்டியைக் கொண்டுவரும் போது சீவு என்கிற ஸ்ரீவரமங்கைப் பாட்டியும் வந்துவிட்டார்.
என்ன திருவேங்கடம் எங்க்கே பார்வேட்டை கிளம்பிட்டாய்னு கேட்டவாறு.

உனக்கும் எனக்கும் என்னடிம்மா பார்வேட்டை. இந்தக் குட்டி வந்திருக்கு, அதுக்கு ஏதாவது
வாங்கிவிட்டு, மாவடு,மாங்காய் மத்த காய்கறிகள் வாங்கலாமே ந்னு கிளம்பினேன்.
கூட்டத்திலே தன் மருமாள் தொலைஞ்சு போயிடுவாளோன்னு ராகவனுக்கு பயம். உங்க காரை எடுத்து வந்துவிட்டான்.// என்றார் பாட்டி.

போறதுதான் போற, எனக்கும் குங்குமம்,தாழம்பூ  ,வெத்திலை எல்லாம் வாங்கிண்டு வா என்றார் சீவுப் பாட்டி.
என்ன விசேஷம்டி அம்மா  உங்க அகத்துல//

நாட்டுப்பெண்ணுக்கு 5 ஆம் மாசம்.
அவ அம்மா நாச்சி வந்திருக்கா. ஏதோ பொன்னுக்குப் பின்னல்ல தாழம்பூ தைக்கணும் .மருதாணி இடணும்னு உட்கார்ந்திருக்கா.

யாரு நாச்சிப் பெரியம்மா வான்னு நானும் ஆவலோடு கேட்டேன்.
ஆமாம் என்ற ராகவன் மாமா,வரும்போது  அம்மாவைப் பார்க்கலாம் என்றார்.
எனக்கு மனம் பூராவும் சந்தோஷம்.

என் இன்னோரு பாட்டி சீனிம்மாவின் அக்கா இந்த நாச்சியார் பெரியம்மா.
5 அடிதான் . முகம் கை கால் எல்லாம் மஞ்சள்
நீட்ட ஸ்ரீசூரணம்  பளிச்சென்று பிரகாசிக்கும்.
அந்த சின்ன உடம்பை எப்படித்தான் ஒன்பது கஜத்தால் சுற்றிக் கொள்வாரோ.
ஒடுங்கின கைகள் என் கைகளைப் பிடித்துக் கொள்வது இன்னும் நினைவில் இருக்கிறது.
 வயிற்று வலித் தொந்தரவால் சுருங்கின முகம் எங்களை எல்லாம் பார்த்தாலே விகசிக்கும்.

பெரியம்மாவுக்குப் பெரிய சம்சாரம்.
மணி மாமா முதல்,பிறகு கிச்சன்,ராஜி,மங்கை இப்படிப் போகும்
ராகவ மாமாவைத்தான் அம்மு சித்திக்குக் கொடுத்துவிட்டார்கள்.

பெரியம்மாவின் கணவர் வரதா அத்திம்பேர் . முரட்டு மனிதர்.
 எங்கயோ போய்விட்டேன். புது மண்டபத்தை அடையவும் மழை வரவும்
சரியாக இருந்தது. உருட்டல் மிரட்டல் அதிகமாகவே , நான் வளையல் கடை உள்ளே போய் உட்கார்ந்து விட்டேன்.
பாட்டிக்கு என் பயம் தெரியும், நீ இரு. நாங்கள் போய் மற்ற சமாசாரம் வாங்கி
வருகிறோம் என்று சென்றார்கள். மண்டபக்கடைகள்  முடியும் இடத்தில்
பந்தலுக்கு அடியில் பாட்டி வழக்கமாக காய்கறி வாங்கும் இடத்தில் இரண்டு
கித்தான் பையில் மாவடு, மாங்காய்,கீரை,வாழை, சேம்பு,புடலங்காய்
கத்திரிக்காய், எல்லாம் வாங்கிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் வாணலிகள்
விற்கும் கடைக்கு வந்தார்கள் . ஒரு மண் அடுப்பும் வாங்கிக் கொண்டார் பாட்டி.

அதுவரை வளையல் கடை அம்மாவின் மகள் ,மகன் வீடு எல்லா வம்புகளையும் கேட்டுக் கொண்டேன்.
என்ன சமையல் வரைக்கும் வந்துவிட்டோம் .
இவர்களூம் வந்துவிட்டார்கள்.
என்ன பேத்தி வாயடிக்கிறாளா என்ற படி வந்த  பாட்டி
Add caption
 எங்கள் வீட்டில் இருக்கும்
 எல்லோருக்கும் வளையல்கள்,
வாங்கினார். ஒரு மஞ்சள் வண்ணப் பையில் அந்த அம்மா கொடுத்ததைப்
பத்திரமாகக் கையில் பிடித்தபடி, வண்ண வண்ணப் பாசிகள் கோர்த்த மாலையைக் கழுத்தில் போட்டுக் கொண்டு,   மழையில் நனைந்திருந்த தளங்களைக்
கடந்து வண்டியை வந்தடைந்தோம்.
மழை நின்று சிறிய தூறலாகி இருந்தது.
மல்லிப்பூ பந்துகள் பக்கம் போனதும் பாட்டிக்குத் தாழம்பு நினைவு வந்தது.
அதையும், மல்லிப்பூ பந்துகளையும் வாங்கிக் கொண்டு சீவுப் பாட்டி வீட்டுக்கு வந்தோம்.

இன்று இங்கே மழை மிரட்டுகிறது. நாளை பார்க்கலாம். தொடரும்.