About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, April 21, 2018

அப்பாவுடன் பயணம் 1991 பாகம் 5

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 நான் மெதுவே அம்மாவுடன் ஏற,அப்பா விரைந்தார்  வரதராஜப் பெருமாளைத் தரிசிக்க.
கைகளில் கற்கண்டும் திராட்சையும். தேங்காய் வாங்கும் வழக்கம்
கிடையாது. தாத்தாவின் அறிவுரை அதுதான்.
தேங்காய் உடைத்து அது அழுகலாக இருந்து , மனம் வருந்தி இருக்க வேண்டும்

அப்பா எந்தக் கோவிலுக்குப் போனாலும், மலர்களும்,கற்கண்டு,காய்ந்த திராட்சைகளுமே
கொண்டு போவார்.
உண்டியலில் சேர்க்கவும், கோவிலில் வருடாந்திர அர்ச்சனை ஏற்பாடு செய்யவும் கொண்டு வந்த பணத்தையும் தான் அன்று செலவுக்குக் கொஞ்சம் பிரித்துக் கொடுத்தார்.

வீட்டு உறுப்பினர்கள் எல்லோர் பெயரிலயும் அர்ச்சனைகள் செய்வதை
வழக்கமாகக் கொண்டிருந்தார்..
பெருமாளின் அழகைத்தான் வர்ணிக்க முடியுமா. என் மாமியாரைத்தான் நினைத்துக் கொண்டேன், கனகாம்பரம் மாலை, கதம்ப மாலை இரண்டையும் வீட்டுப் பூஜையில் இருக்கும் வரதராஜர் படத்திற்குத் தவறாமல் சார்த்தி மகிழ்வார்.
அவரை மாதிரி அழகு கிடையாது என்று சொல்லிச் சொல்லி மகிழ்வார்.

அப்பாவும் சன்னிதியில் நின்று ஸ்ரீ தேசிகரின் ஸ்லோகங்களைச் சொல்லிக் கொடுத்தார்.
அப்பாவுக்குக் கிடைத்த மாலை மரியாதைகளைக் கண்டு அம்மாவுக்கு
அளவிட முடியாத சந்தோஷம்.
இப்படித்தான் பிறந்த நாள் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
வெளியே வந்து பெருந்தேவி தாயார் சன்னிதிகளுக்கு வந்தோம்.
அங்கேயும் அர்ச்சனைகள் செய்து தாயாருக்கான ஸ்ரீஸ்துதியை அம்மா சொல்ல, கை நிறைய புஷ்பங்களையும், மஞ்சள்,சந்தனம் எல்லாம் பெற்றுக் கொண்டு வாசலுக்கு வந்தோம்.
  நேரம் ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது.
மற்றவர்களொடு  வண்டியும் வந்தது.
 மருமகள்கள் இருவரும் பெண்ணிற்கும் ,எனக்கும்,தங்களுக்கும்
ஒரே மாதிரி போச்சம்பள்ளி ஆரஞ்சும் பச்சையும் கலந்த வண்ணத்தில் எடுத்து வந்திருந்தனர்.
 அகிலா மாமிக்கும் ,அம்மாவுக்கும் ஒன்பது கஜத்தில் நல்ல சுங்கடிப் புடவைகள்.
மாமா அப்பா இருவருக்கும் மயில்கண் வேஷ்டிகள்.
குட்டிப் பேத்திக்கு ஃப்ராக், மற்ற எல்லோருக்கும் நல்ல டி ஷர்ட்கள்.
வண்டியில் ஏறிக் கொண்டு வைகுந்தம் மாமா வீட்டுக்கு வந்தோம்.
அவர் மகனும் ,மருமகளும் வேலை முடிந்து வந்திருந்தார்கள்.

அதற்குப் பிறகு உற்சாகத்துக்குக் குறைவே இல்லை.
அம்மா,அகிலா மாமி,மருமகள்கள் எல்லாரும்  சமையலறையில்
புகுந்து  ஒருமணி நேரத்தில் கேசரி, சப்பாத்தி,பூரி , தொட்டுக்கொள்ள கூட்டு என்று ஜமாய்த்தார்கள்.
நாங்கள் கொண்டு போயிருந்த உணவுகளும் சேர்ந்து ,மாமாவின் வீட்டு முற்றம் நிறைந்தது.

மாமி அழகாகப் புது எவர்சில்வர் டின்னர் தட்டுகளை.
முறையாக  வைக்க,அவரவருக்கு வேண்டிய உணவை எடுத்து மகிழ்வாக உண்டோம்.

அப்பாவுக்கும் வைகுண்ட மாமாவுக்கும் வெற்றிலை போட்டுக் கொள்ளும் வழக்கம் உண்டு.
 ரசிக்லால் பாக்கு, சீவல், தளி வெத்திலை என்று கூடத்தில் ஜமக்காளம் விரிக்கப் பட்டு
வைக்கப் பட்டது. அனைவருக்கும் அப்பா,புடவை, சட்டைகளைக் கயில் கொடுத்து வெற்றிலைபாக்குத் தட்டில்
ஆளுக்கு நூறு ரூபாயாகக் கொடுத்தார்.
 அம்மாவும் அப்பாவும் ,மாமாவையும் மாமியையும் வணங்கி
புடவை வேஷ்டியைக் கொடுக்கவும்., என்ன நாராயணா இதெல்லாம் எதற்கு என்றபடி,
அவர்கள் சார்பாக  அம்மா அப்பாவுக்கு புடவை வேஷ்டி வைத்துக் கொடுத்தார்களே
பார்க்கணும்.
ஒரே கைதட்டல் தான்.
கூடம்,வாசல் அறை என்று பெண்கள் படுக்கை விரிக்க,
மொட்டை மாடியில் ஆடவர்கள் படுக்க என்று ஏற்பாடனது.

அடுத்து சென்னைப் பயணம்தான்...தொடரும்.

6 comments:

வெங்கட் நாகராஜ் said...

நண்பர்கள் சந்திப்பு, அரட்டை, கூடி உண்பது என அனைத்தும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். இப்படியெல்லாம் இப்போது நடப்பது ரொம்பவே குறைவு.....

தொடர்கிறேன் மா..

tamilblogs.in திரட்டி said...

தங்கள் பதிவுகளை இங்கும் பகிரலாமே http://tamilblogs.in/

Geetha Sambasivam said...

நல்லதொரு குடும்பம். மிக அழகான நேர்த்தியான விபரங்கள். மனதுக்கு நிறைவு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,
இந்த நட்பு அவர்களது இளமைக் காலத்திலிருந்து
தொடர்ந்தது. அப்பா ரிடயராகும் வரை அவரது ஆஃபீஸ்
நட்புகளுடன் நல்ல தொடர்பில் இருந்தார். பிறகும் அவரை பார்க்க வருபவர்கள்
மாதத்திற்கு இருவராவது இருந்தார்கள்.

எங்களிடம் மிகவும் பிரியம் வைத்திருந்த ஆயிரத்தான் என்னும்
பியூன், அவரது 58ஆவது வயதில் ,அப்பாவைப் பார்க்க
எப்படியோ விலாசம் கண்டுபிடித்துப் பார்க்க தி.நகர் வந்தார்.

20 வயது இளைஞனாக நாங்கள் பார்த்தவர் 1954இல்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து அவர் வாங்கி வந்த பால்கோவாவுக்கு
மதிப்போ அளவோ கிடையாது.
1992 இல் பெண் வயிற்றுப் பேரனோடு அப்பாவைத் தரையில் விழுந்து வணங்கினார்.
அப்பாவும் அம்மாவும் திக்கு முக்காடிப் போனார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அவர்கள் அதற்குப் பிறகும் சென்னை வரும்போதெல்லாம் வீட்டுக்கு
வந்து விட்டுத்தான் போவார்கள்.
பெருமூச்சுதான் வருகிறது. நடந்த அழகான அன்பான விஷயங்களை நினைத்து.
நன்றி கீதா மா.

Thulasidharan V Thillaiakathu said...

குடும்பத்துடன் உறவினர், நண்பர்கள் என்று பயணம் சாப்பாடு என்பது எத்தனை பொக்கிஷமான தருணங்கள் இல்லையா வல்லிம்மா? இப்படியான நினைவுகள் எல்லாம் உங்கள் மனதில் அப்படியே படங்களாய்ப் பதிந்திருக்கிறது என்றால் நீங்கள் அத்தனை ரசித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறோம். அருமையாக..மனதிற்கு இதமாக இருக்கிறது வல்லிம்மா வாசிக்க வாசிக்க. தொடர்கிறோம்
இருவரின் கருத்தும்