Blog Archive

Saturday, January 13, 2018

மார்கழி 29ஆம் நாள், முப்பதாம் நாள் வாழி கோதை நாமம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
 29 ஆம்  பாசுரம். மிக முக்கியம் ஆனதும் கூட.
ஆண்டாள் திருவடிகளே  சரணம்.

பின் வரும் இரு பாடல்களும் தினசரிப் பூஜையில்  சாற்றுமுறைப் பாடல்களாகப்  பாடப்படும் எல்லோர்வீட்டிலும்.வைஷ்ணவ சம்பிரதாய முறைப்படி.
 எத்தனை ஏற்றம் ஆண்டாளின்  வார்த்தைகளுக்குத்தான்!!!
.பெண்ணாகப் பிறந்து தெய்வ அம்சமாக   இருந்தாலும் மனிதப் பிறவிக்கான அத்தனை   முயற்சிகளையும் செய்து,பக்தி வழியில் தானும் ஆட்பட்டு,கண்ணனையும் ஆட்படுத்தினாள்.
அவன்  அவளிடம்  தன்னைச் சிறை கொடுத்தான். அவள் அன்பில் பூத்த பாசுரங்களைப் பாமாலையாகச் சூடிக் கொண்டான்.
எத்தனை  தடவை அவள் சரித்திரத்தைப் படித்தாலும் கேட்டாலும் இந்த அற்புதம்   மெய்சிலிர்க்கவைக்கிறது.

மானிடர்க்கு வாழ்க்கைப் படமாட்டேன் என்ற திண்ணத்தோடு அரங்கனுடன் ஒன்றிய  மங்கை.
என்னிடம் இருக்கும் சொல்ப அறிவையும் புரிதலையும் வைத்துக் கொண்டு இந்த மார்கழி மாதத்தை
கோதையையும் கண்ணனையும்,வடபத்ர சாயியையும்,வேங்கடவனையும்,ஸ்ரீரங்கராஜனையும்
வழிபட வைத்தவளும் அவளே.

இதோ 29ஆம் பாடல்

சிற்றஞ்சிறுகாலே  வந்துன்னைச் சேவித்து  உந்தன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும்  குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றை பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் உந்தன்னோடு
உற்றோமே ஆவோம்  உனக்கெ நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர்  எம்பாவாய்!!
***********************************************************
30ஆம் பாசுரம்

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார்  சென்றிரைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்டெரியல்   பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பான் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்  எம்பாவாய்!!!
*******************************************************

ஹே மாதவா  பிரம்மமுஹூர்த்தம் எனப்படும் சின்னஞ்சிறு காலையில்
எழுந்து தூய்மையாகி  உன்னைச் சேவிக்கிறோம். சேவித்து உன்னிடம் விண்ணப்பிக்கும் வார்த்தைகளைக் கொஞ்சம் கேட்டருள்வாய்.

உன் பொன்னாலான தாமரையடிகளில் சேவித்து  வணங்கி இந்தப் பாசுரங்களைப் பாடும் பெருமை பெற்றோம்.
நாங்கள் ஆய்க்குலப் பெண்கள்.இடம் வலம் அறியாதவர்கள் .
எங்கள் நாயகனான நீ  எங்கள் குற்றங்களைப் பெரிதாக க் கொள்ளாமல்
உனக்குச் சேவகம் செய்யும்  புண்ணியத்தைக் கொடுத்தருளவேண்டும்.

இந்த வரத்தை மட்டும் நீ எங்களுக்கு அருளிவிட்டால் இன்னும் வரப் போகும் ஏழேழு பிறவிகளிலும்  உந்தன்னோடு   உற்றவராய் உன் அன்பிறு உரித்தானவர்களாக இன்புற்று இருப்போம்.
உன் பாத சேவை செய்யும்  பாக்கியம் பெற்றவர்களாவோம்.

மற்றபடி எங்களை வருத்தக்கூடிய ஆசாபாசங்களை விலக்கி உன் சரணே திண் சரண் என்று இருக்க நீயேதான் அருளவேண்டும்.**
*******************************************************************
இதுவரைத் தன்னையும் தோழியரையும்  ஆய்ப்பாடிக் கோபியராகவே நினைத்து கண்ணனைத் தொழுது நின்று   பிரார்த்தனை செய்த ஆண்டாள் எனும் நம் கோதை,
இந்தக் கடைசிப் பாசுரத்தில் திருப்பாவை நோன்பின் மகிமையையும்
அதன் பலன்களையும்  உருகி உருகி  விவரிக்கிறாள்.

திருப்பாற்கடலைக் கடைந்த கோவிந்தனை,கேசவனை,மாதவனைத் தேடிச் சென்று இந்த அழகிய திருவில்லிபுத்தூர்ப் பெண்கள் நோற்ற நோம்பின் மகிமையை என்ன சொல்வது!!
அவனை இறைஞ்சி,சேவித்து  பரிசுப் பொருளாகத் தீராத,அழியாத
அவன் பாத சேவகத்தைக் கேட்டுப் பெற்றோம்.
இவ்வாறு  பாடிய பாவையோ அழகிய  பெரிய   மாலையைச் சூடிய பொற்கொடி  கோதை நாச்சியார்.
பட்டர்பிரான்  ஸ்ரீ விஷ்ணு சித்தரின்   குலப்பாவை.அவர் பெற்ற செல்வம்,
இந்தப் பாடலில் தன் தகப்பனாரையும் மாலையில் சேர்த்துக் கொள்கிறாள்.
அவர் சொன்ன பிரபந்தங்களை கேட்டு வளர்ந்தவள் அல்லவோ.
அவள் சொன்ன  சங்கத்தமிழ்ப் பாடல்கள் முப்பதையும் தப்பாமல்
பாடுபவர்கள், செவ்வரியோடிய கண்களால் அருளுபவன் திருமால்,
நான்கு  கரங்களில் சங்கம் சக்கரம்,சார்ங்கம்,நந்தகம்,தாமரை என்ற் வன்மை மென்மை கலந்த ஆயுதங்களையும் அருளை வழங்கும் அபயக் கரங்களோடு காட்சி தருபவன்.

அவன்  எப்பொழுதும் நம்மைக் காப்பான்.
அவனை நாம் மறந்தாலும் அவன் நம்மை மறக்கமாட்டான்.
அன்று சொன்னாளே ஆண்டாள். .அவள் சொன்ன வார்த்தையை
நான் மறப்பேனா.
நானே மறந்தாலும் அவள் என்னை மறக்க விடுவளோ.
என் இருதயத்தில் வசிப்பவள்.ஒரு சிறிய புருவ அசைப்பினாலேயே
என்னை அணைத்துப் பக்தர்கள் அடியவர்கள் பக்கம் திருப்பிவிடுவாள். நான் என்றும்  அடியவர்களைக் காப்பேன் என்று அவளுக்கும்
வாக்களிக்கிறான்.
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவோம்.

திருவாடிப் பூரத்துச் ஜகத்துஉதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள்  வாழியே
பெரியாழ்வார்   பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தாள்  வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருவல்லி வளநாடு வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!!!!!!

ஸ்ரீவிஷ்ணு சித்தர் பாதங்களில் சரண்.
ஸ்ரீராமானுஜ  முனியின் பாதங்களிலும் சரண்.

தீப மங்கள ஜோதியாய்  நம்மை எப்பொழுதும்
நமக்குப் பகவானை அடைய  வழிகாட்டும் எம் தோழியே
ஆண்டாளே  மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறேன்.
தாயே சரணம். அன்புடை மணவாளனோடு மகிழ்ந்திருப்பாய்
எங்கள் கோதையே நீ!






6 comments:

ஸ்ரீராம். said...

__/\__

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பாசுரங்களைப் படித்தேன். மனம் நிறைவானது.

நெல்லைத் தமிழன் said...

ஆமாம் வல்லிம்மா. அந்த அத்யந்த பக்தி நமக்கெல்லாம் சிறிதளவேனும் வந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும். ம்... அதுக்கு எத்தனை பிறவியோ.

நீங்கள் சொல்லியிருப்பதுபோல், தினமும் சிற்றஞ்சிறுகாலே, வங்கக் கடல் கடைந்த - இரண்டையும் என் தினசரி வழிபாட்டில் சொல்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். தொடர்ந்து வந்ததற்கு மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் திரு ஜம்புலிங்கம் ஐயா, எத்தனையோ வேலைகளுக்கு நடுவெ
இந்தப் பதிவுக்கும் வந்தது எனக்கு மிகப் பெருமை. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன்.,எத்தனையோ விஷயங்கள்
நம்மை அலைக்கழிக்கின்றன.
அவளிடம் மாறாத பக்தி ஒன்று மட்டும் இருந்தால் நிறைய
எதிர்ப்புகளைச் சமாளிக்கலாம்.
அவ்ள கருணையின் மகிமையில் நாம் வாழ்ந்திருப்போம்.