Blog Archive

Thursday, November 09, 2017

ஸ்ரீவில்லிபுத்தூர் கதை அம்மா அப்பா 3ஆம் பகுதி. +++

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  ஸ்ரீவில்லிபுத்தூர்  கதை அம்மா அப்பா 4 ஆம் பகுதி.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆண்டாள், ரங்கமன்னார் அவர்களின் அழகுத் தேர்,
தாழம்பூ வைத்துப் பின்னல் ,கோலாட்ட ஜவந்தரை,

மார்கழிக் கோலங்கள்,அவற்றில் பூக்கள் சட்டென்று
வந்து போகும் நினைவுகள். அழகான பெரிய வீடு. மெழுகப்பட்ட திண்ணை. அதன் மேல் போடப்பட்ட கூரை. எப்பாவாவது பெய்யும் மழையில்
திண்ணையில் உட்கார்ந்து கைகளை  அளைந்து காகிதக் கப்பல்
விட்ட நாட்கள்.
திண்ணையைக் கடந்ததும் பெரிய கூடம். தொங்கும் தூளி. அதில் சின்னத் தம்பி ரங்கன்.
கூடவே அபாகஸ் பொருத்தப்பட்ட குட்டி நாற்காலி ஊஞ்சல், அதில் பெரிய தம்பி,.....
எனக்காக
மாமா வாங்கி வந்த அழகான நீல வர்ணக் குதிரை.

கூடத்தின் முனையில் சமையல் அறை. அதைக் கடந்து முற்றம்.
அந்தச் சுற்றில் ஒரு கிணறும் //தண்ணீர் இல்லாத கிணறு//
வென்னீர் அடுப்பு, அம்மா  கண் மை, சாந்து செய்யும் இடம்.
அப்புறமாக வரும் கொல்லைப் புறம். அங்கேயும் ஒரு கிணறு.

அப்பா ஆபீசிலிருந்து நல்ல தண்ணிர் கொண்டு வரும் ஆயிரத்தான்.
அதென்ன பெயர் என்று தெரியாமலேயே, கூப்பிடுவேன். அப்பா
பிறகு சொன்னார் அது பெருமாள் பேரம்மா. சஹஸ்ர நாமம் மாதிரி...
ஓஹோ  என்று கேட்டுக் கொண்டேன்.
ஆயிரத்தானுக்கும் தம்பி முரளியை மிகவும் பிடிக்கும். குட்டி சைக்கிளில் அவன் உட்கார்ந்து ஓட்ட,
பின்னாலெயே போய் வருவார்.
அப்பா தினம் டென்னிஸ் விளையாடும் இடத்துக்குப் போய் வருவார்கள்.

விடுமுறை நாள் ஒன்றில்,
 சாலையைக் கடக்கும் போது ஒரு சைக்கிள் என் மேல் ஏறியதும் இங்க தான்.
அந்தத் தழும்பு இன்னும் இருக்கிறது.
முதுகில் சைக்கிள் ஏறி இறங்கி, அந்த மனிதர் பயந்து ஓடிவிட்டார்.
தலையிலும் உடையிலும் மண்ணும் கோலமுமாக நான் உள்ளே நுழைந்ததும்
குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்த அம்மவுக்கு முதலில் வந்தது கோபமே.
 உன்னை யாரு ரோட்டுக்குப் போகச்சொன்னார்கள்
என்று பளிச்சுனு முதுகிலேயே  ஓர் அறை. பிறகுதான் ரத்தக் கறையைப் பார்த்தார்.

முகம் சிவந்து அம்மா அழுவதைப் பார்த்து நான் அழ,அம்மணி வந்து என்னை வைத்தியரிடம் அழைத்துப் போக ,காயம் ஆற இரண்டு வாரங்கள் ஆனது.
வெகு வருடங்கள் கழித்து ,அம்மாவிடம் கேலி காட்டிக் கொண்டே இருப்பேன்.
சும்மா இரு. தெரியாமல் அடித்துவிட்டேன் என்று சொல்வார்.
சரியான ட்ரம்ப் கார்ட்.அம்மாவை மடக்க.
Add caption
Add caption

19 comments:

ஸ்ரீராம். said...

இனிய நினைவுகள். வீட்டின் வர்ணனையிழந்த வீடுகண்முன்னே. நீங்கள் ஆயிரத்தான் என்று சொல்லியிருப்பது போல என் அப்பா அலுவலகத்திலும் ஒரு விநோதப் பெயர் உண்டு. பதினெட்டு!

Geetha Sambasivam said...

நல்லா இருக்கு இனிய நினைவுகள். இந்த சைக்கிளில் அடிபட்டுக் கொண்ட விஷயம் முன்னாடி சொல்லியதில்லை! இப்போத் தான் சொல்றீங்க! :) ஶ்ரீவில்லிபுத்தூர் வீட்டு வர்ணனையும் நினைவுகளில் இருந்து கோர்க்கப்பட்டது அழகாய் இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், முதல் ஆறு வயதில் சிலவை அழுந்தப் பதிந்தன.
முன்பே வேறு பதிவில் வேறு வகையில் பதிந்திருந்தேன். இன்று
அந்த வீட்டைப் பற்றி எழுதியே ஆகணும்னு தோன்றியது. நன்றி ராஜா.

ஸ்ரீராம். said...

// வர்ணனையிழந்த //

"வர்ணனையில் அந்த" என்னும் வார்த்தை ஸ்பேஸ் பார் வேலை செய்யாததால் இப்படி வந்துவிட்டது!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, அப்போது ,
வேறு வித நினைவுகள். இன்று அகஸ்மாத்தாக பழைய தழும்பில்
அலமாரிக் கதவில் இடித்துக் கொண்டேன்.
அத்தேரி மாக் என்று அதையும் எழுதிவிட்டேன் மா.

வல்லிசிம்ஹன் said...

புரிந்து கொண்டேன் ஸ்ரீராம். என் மடிக்கணினி
இன்னும் காலை வாரிவிடும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தாழம்பூ வைத்த கூந்தல். அப்பப்பா என்ன ரசனை.

நெல்லைத் தமிழன் said...

கோலாட்ட ஜவந்தரை, - புரியவில்லை.

அந்தக் கால நினைவுகளை அப்படியே கொண்டுவருகிறீர்கள் (அபாகஸ் நாற்காலி உட்பட).

பெற்றோர்களும் மற்றவர்களும் உயிரோடு இருந்து, அல்லது அவர்கள் நினைவு நாட்களிலாவது நம்மிடம் நேரில் வந்து நாம் எப்படி இருக்கிறோம், நம் வாழ்க்கை எப்படிப்போகிறது என்பதை அறிந்துகொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நான் நினைப்பது உண்டு.

உங்கள் படமும், உங்கள் அம்மாவின் படமும் பார்த்தேன்.

பூ விழி said...

வர்ணனையுடன் கோர்க்கப்டும் நினைவுகள் படிக்கச் சுவாரசியம் கொடுக்கிறது ட்ரம்ப் கார்ட்ஹா ஹா அடி பட்டவுடன் முதலில் கோபம் தான் வரும் நானும் அப்படித்தான்

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் திரு. ஜம்புலிங்கம். பூக்காரர் கொண்டுவரும்போதே
வாசனை உடலெங்கும் நுழைந்து விடும். அம்மா அந்தக் கட்டைப் பிரித்து அளவாக ஓரம் கத்திரித்து, கைகள் நோக என் பின்னலில் வைத்துப் பின்னிவிடுவார்.
கழுத்தில் குத்தினாலும் எடுக்கவே மாட்டேன். அடுத்த நாள் சாயந்திரம் தாழம்பூ
வாடின பிறகே எடுக்க விடுவேன். இப்பொழுது சென்னையில் அது போலக் கிடைப்பதில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன் , பொங்கலோடு ஒட்டி வரும் என்று நினைக்கிறேன்.
குட்டிப் பெண்கள் சேர்ந்து கூடை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாகப் போய் அரிசி சேர்ப்போம்.
நானும் கூடவே போய்க் கோலாட்டம் ஆடிக் கொண்டு வந்தது நினைவிருக்கு. எங்களில் பெரிய பெண் ஒவ்வொரு வீடு முன்னாலும் நின்று கோலாட்ட ஜவந்தரை என்று சொல்வதும் நினைவிருக்கிறது. அந்த அரிசியை என்ன செய்தோம் என்று யோசிக்கிறேன்.
அபாகஸ் நாற்காலி ஒரு ஸ்ப்ரிங்க் ல மாட்டித் தொங்க விட்டிருக்கும். கீழே மேலே
போய் வருவது ஜாலி.
அச்சோ, நினைவு நாளில் எல்லோரும் வந்து போனா சொல்ல மறந்த விஷயங்களைச்
சொல்லிடலாமே. லவ் யூ ஆல்னு சொல்லலாம். எவ்வளவு நல்ல யோசனை உங்களுக்கு
ராஜா. இந்த நிகழ்வுகளில் வந்த ஒருவரும் இப்போது இல்லை.
இந்தப் பேரன்,பேத்திகளைப் பார்த்தால் பூரித்துப் போவார்கள்.
எல்லோரும் நன்றாக இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அம்மாவை டீஸ் செய்ய ரொம்பப் பிடிக்கும் பூவிழி.
ரொம்ப அப்பாவி.
எங்க வீட்டுச் சின்னவன் விஷமம் நிறையச் செய்வான். என்னிடம் வாங்கி இருக்கிறான். இப்பவும் சொல்லிக் காட்டுவான்.

கோமதி அரசு said...

நினைவுகளின் பகிர்வு மிக அருமை.
படங்கள் மிக அழகு.
எங்கள் சொந்தக்கார பெண் பேர் ஆயிரம்.
அம்மாவின் முகம் என்றும் மனதில் .

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
எத்தனை அழகான தமிழ்ப் பெயர்கள் வைத்திருக்கிறார்கள்.
அருமைதான். அம்மாக்கள் எப்பவும் அழகு.

Geetha Sambasivam said...

நெ.த. கோலாட்ட ஜாத்திரையைத் தான் ஜவந்திரைனு சொல்றாங்கனு நினைக்கிறேன். கோலாட்டம் ஆடிக் கொண்டே வீதிகளில் ஊர்வலமாகப் போய் வீடு வீடாக அரிசி சேகரிப்பார்கள். அப்புறமாக் கோயிலில் கொடுப்பாங்களோனு நினைவு! ஒரு நாள் இந்த ஜாத்திரையில் கலந்துண்டா உடனே எனக்கு உடம்புக்கு வந்துடும். அப்பா அனுப்பவே மாட்டார். ஆதலால் முழுசாகத் தெரியலை! :) மதுரையில் முன்னெல்லாம் மீனாக்ஷி கோயிலில் கோலாட்டத் திருவிழா பெரிசா நடக்கும்!

Geetha Sambasivam said...

ஏதோ பாட்டு வரும். கோலே என ஆரம்பித்து! ஆனால் நாங்க பள்ளியில் பாரதி பாடல்களுக்கு ஆடி இருக்கோம்.

வல்லிசிம்ஹன் said...

கோலாட்டம் ஆடியது நினைவில் இருக்கு. பாடல் நினைவில் இல்லை. கீதாமா.
தெரியாத பாடல். பெரியவர்களும் சிறு பெண்களும் கலந்து கொள்வார்கள். நாம் யார் வீட்டுக்குப் போறோமோ அந்த வீட்டுப் பெண்களும் சேர்ந்து கொள்வார்கள். நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

Thulasidharan V Thillaiakathu said...

என்ன் இனிய நினைவுகள்! அம்மா! எனக்கும் என் கிராமத்து நினைவுகள் வருகின்றன. தேனி அருகில் மிக மிகச் சிறிய கிராமம். நீங்களும் உங்கள் நினைவுகளை இப்படிப் பதிவது மிகவும் சிறப்பு!!! தொடர்கிறோம்.

கீதா: வல்லிம்மா! ஆமாம் திண்ணை அதன் மேலிருக்கும் ஓடு வழி மழை நீர் கொட்ட்டும் போது அந்த அழகு இருக்கே சொல்லி முடியாது!!! ஏதோ கண்ணாடி முத்தினால் செய்யப்பட்ட அலங்காரத் திரை விரித்தார் போல் அப்படியொரு அழகு!! நான் கை வைத்து அளைந்து விளையாடுவது வழக்கம். திண்ணைக்கு அப்புறம் நடை என்று சொல்லபப்டும் இடம்..அப்புரம் சிறிய கூடம் என்று கிராமத்துச் சிறுவயது நினைவு...அபாகஸ் நாற்காலி, அபாகஸ் ஸ்லேட்டு, அபாக்கஸ் ஜன்னல் கூட மட்டுமல்ல முற்றத்துக் கதவில் நடுவில் இருக்கும் சின்ன ஜன்னல் அதில் கூட பெரிய பாசிகள் இருக்கும் அபாக்கஸ் போல்..அருமை...

ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றதுண்டு ஆண்டாள் அவ்வளவு அழகு!!! கூடவே பால்கோவா நினைவும் வருகிறது. இப்போது அதன் சுவை மாறியுள்ளது போல் உள்ளது...வல்லிம்மா தொடர்கிறோம் உங்கள் அருமையான நினைவுகளை

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் வல்லிம்மா சொல்லியிருக்கும் ஆயிரத்தான் போல நீங்கள் சொல்லியிருக்கும் பதினெட்டு போல பத்து - இது பத்மநாபனின் ஷார்ட் பெயர் அல்ல - bh ஒலி அல்லாமல் ப ஒலி தான்...10 அவர் எதற்கெடுத்தாலும் இது பத்து அது பத்து என்று சொல்லி அவரது பெயரே பத்து என்றாகிவிட்டது. அவரும் தன்னை பத்து என்றுதான் சொல்லிக் கொள்வார்!!!அது போல் நிறைய பெயர்கள் வியப்பாக இருக்கும்!

கீதா