About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, April 04, 2017

மறக்க முடியாத சிலர்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

களக்காட்டம்மை
++++++++++++++++++++
   நாங்கள் சென்னையில்  பாட்டி வீட்டுக்கு வரும்போதெல்லாம்
நான் எதிர்பார்ப்பது எதிர் வீட்டுக்கு வருகை தரும் விருந்தாளியான
களக்காட்டம்மை.
 ஒரு  சிரித்த முகத்தோடு,தன் கஷ்டங்கள் எத்தனையோ இருந்தாலும்
அதைப் பற்றி  முகத்தில் ஒரு துளி கூடக் காண்பிக்காமல்
கதைகள்  சொல்வார்.
 எதிர்வீடு  என்பது பெரிய குடும்பத்தைக் கொண்டது. அப்பா
ஒரு ஹோட்டல் வைத்து நடத்திக் கொண்டிருந்தார்.
மனைவி சிறிது நோயாளி.

வரிசையாகக் குழந்தைகள்  பெற்றதால் வந்த களைப்பு அது.
இந்தச்  சிரமமான நேரங்களில் களக்காட்டம்மை வந்து உதவி செய்வார்.
பெரிய பையன் கல்லூரியிலும் ,கடைசிப் பையன் ஒன்றாம் வகுப்பிலும்
 இருந்ததாக நினைப்பு. நடுவில் மூன்று பெண்கள்.. பாப்பா,தைலா,லக்ஷ்மி.  கையில் இரண்டு புடவைகள். தலை தோட்ட துண்டு  என்று  சிறிய பையில்  வைத்து  கூடவே  குழந்தைகளுக்கான  முறுக்கு, தட்டை  என்று ஏதாவது.  சூளையிலிருந்து வருவதால் சூளையம்மை  என்றும் கூப்பிடுவார்கள்.      அவரிடம் மிகப் பிடித்த   விஷயம் அவர்  இந்த   மடி, ஆசாரம்  எல்லாம் பார்க்க  மாட்டார்.   எப்பொழுது வேணுமானாலும் அருகில் போகலாம் . கதை கேட்கலாம். அவருடைய ஊரில் நடந்த திருமணம், மறைந்த தன் கணவர், ஊரின் செழிப்பு  என்று  ஏகப்பட்ட   கதைகள் அவரிடம் கேட்கலாம். எந்த   வீட்டில் அப்பளம் ,வடாம்  இடுவதாக இருந்தாலும் முதல் அழைப்பு அம்மைக்கு தான். அங்கே  நாங்களும் போய் விடுவோம்.  எண்ணி வைக்கப் பட்ட அப்பள  உருண்டைகள எங்கள எல்லோருக்கும் அளவோடு கிடைக்கும்.  மொட்டை  மாடியில் அப்பளம் உலர்த்த,  அதைத் திருப்பிப் போட, காகம் கொத்தாமல்  குடை  பிடித்துக் காவல் இருக்க  இந்த வேலைகளை  செய்ய எங்கள் பட்டாளத்தின் உதவி  அவர்களுக்கு வேண்டி இருந்தது.                      


வேலை முடியும்  நேரம்  அம்மையும் மற்றவர்களும்  வந்து விடுவார்கள். சொளகு, முறம்   இவைகளில் அப்பளங்களும், வேஷ்டியில் மடித்து வடாம் வற்றல் களும் கீழே  இறங்க,
நாங்களும் களக்காட்டம்மையோடு   வீட்டுக்கு வந்துவிடுவோம்.  ஒருவரும் அவரவர் வீட்டுக்குப்  போகமாட்டோம்.

அம்மை கையால்  வேகவைத்த நேந்திரம் பழம், புட்டு எல்லாம் கிடைக்கும். குறைந்த வெளிச்சமே இருக்கும் சமையல் அறையில் கிட்டத்தட்ட 10 குழந்தைகளுக்கு  பசி தணித்துவிடுவார்.

அந்த வெள்ளைச் சுருட்டமுடியும் ,கழுத்தின் அடியில் பம்மென்று  முடியப்பட்ட  கூ ந்தலும் வெகு அழகாக இருக்கும்.

நிதானமாகக் குளித்து குருவாயூரப்பன் படைத்து முன் விளக்கேற்றி. வணங்கும் பொது நாங்கள் வெளியே விளையாடப்  போவோம்.

இரவு இந்தப் பாட்டி வீட்டு முற்றத்தில்  அனைவருக்கும்
பெரிய கற்சட்டியில்  பிசையப்  பட்ட குழம்பு சாதமும்  சுட்ட அப்பளமும் உண்டு.
அது மாயமான வுடன் கெட்டி மோர் விட்டுப் பிசைந்த சாதம்
மாவடு, சாறு என்று தனித்தனியாக வாழைப்பூ  இதழில்
பாட்டி கொடுப்பார். அமிர்தமான கோடை நாட்கள்.

ஒருநாள் மதியம் அனைவருக்கும்  உணவு கொடுத்துவிட்டு
தலைக் கோசரக் கட்டையில் ஈரத்தலையை உலர்த்தியபடி இருந்த   அம்மைக்கு, நெஞ்சுக்குத்தும் வழியும். முதல் நாள் அப்பள மாவு இடிக்கும் போதே  நிறைய வியர்த்துக் கொட்டியதாம் .
 உடனே  ஆச்சார்யா டாக்டர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று  ஜிஹெச்சிலும் சேர்த்தாச்சு.

எங்களுக்கெல்லாம் ஒரே பயமாக இருந்தது.
யாருக்கும் ஒன்றும்   செய்யத் தோன்றவில்லை.

ஆனால் நல்ல வேலையாக அம்மைக்கு ஒன்றும் ஆகவில்லை.  20 நாட்கள் கழித்து வீட்டுக்கு ஆம்புலன்சில் வந்துவிட்டார்.
பழைய குண்டுக்கு காட்டுது தேகம் மெலிந்து
 களைப்புடன் வந்தவர் முகத்தில் சிரிப்பு மட்டும் மாறவில்லை.
நாங்களும் அவரோட அதிகமாகப் பேச முடியவில்லை.

தான் சூளைக்குத் திரும்புவதாகவும்,களக்காட்டுக்கே
  ரயிலில்  சென்று விடுவதாகவும் பாட்டியிடம் சொன்னாராம்.

அதற்குள்  எங்கள் விடுமுறை நாட்களும் முடிந்ததால்.
நாங்களும் கிளம்பினோம்.
களக்காட்டம்மையைப் பிறகு பார்க்கவில்லை.

நான்கைந்து ஆண்டுகளில் என் திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது அவருக்கும் கடிதம் எழுதி போட்டேன்.
ஆசைகளுடன் 25 ரூபாய்ப் பணமும் மணி ஆர்டரில் வந்தது.
15 comments:

'நெல்லைத் தமிழன் said...

சென்னையிலும் அந்தக் காலத்தில் 'கிராமத்தில்' இருப்பதுபோல அண்டை அயலார்களுடன் நட்பும், அப்பளாம், வடாம் நிறையபேர் சேர்ந்து இடுவது இதெல்லாம் உண்டா? 'களக்காடு' என்ற (திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த)ஊரிலிருந்து வந்தவரா அவர்கள்? இந்த மாதிரி, ஊரிலேயே நட்புடன் எல்லாக் குடும்பங்களும் இருப்பதெல்லாம், கல்லிடைக்குறிச்சி போன்ற கிராமங்களிலேயே இன்றளவும் இருக்கா என்பதே சந்தேகம்...

ஸ்ரீராம். said...

நல்லதொரு இனிய அன்பான கேரக்டர் அறிமுகம். நல்ல நினைவோடை.

Angelin said...

சிறு வயது நினைவுகள் அருமை . நெஞ்சில் நீக்கமற இடம் பிடித்துவிட்டார் களகாட்டம்மை ..

வல்லிசிம்ஹன் said...

இது நடந்தது 60 வருடங்கள் முன்னால் நெல்லைத்தமிழன். அப்போது, உற்றார்,உறவினர் ,அக்கம்பக்கம் எல்லாம் சொந்தம் தான். என் பாட்டிக்கு 37 வயதில் தாத்தா இறைவனடி
அடைந்தார். அதற்குப் பிறகு எல்லோரும் பாட்டிக்கு ஆறுதலாக இருந்ததே
பாட்டியின் நிம்மதிக்குக் காரணம்.
களக்காட்டிலிருந்து வந்தவர் தான் அந்த அம்மா. முக்கால்வாசி
திருனெல்வேலிக்காரகள்,கீழ நத்தத்து
மக்கள் எல்லாம் வரப் போக இருந்தார்கள். நிலம் வேறு அங்கு இருந்தது.
நிச்சயம் ஒரு பொற்காலம்தான்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். ட்ராஃப்ட் ல இருந்த பதிவெல்லாம் எழுத வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஹலோ ஏஞ்சல். மிக நன்றிராஜா. வாசித்து கருத்தும் சொன்னதற்கு.
ஆமாம் .
எத்தனையோ நல்லவர்கள் நம் வாழ்வை வளமாக்கி வழி காட்டியவர்கள்.
நினைவில் இருக்கும்போதே எழுதிவிடவேண்டாம்.

வல்லிசிம்ஹன் said...

vEndum enRu padikkavum Angel.

'நெல்லைத் தமிழன் said...

உங்கள் பெற்றோர் திருமணம் கீழநத்தத்தில் 1945ல் நடந்ததாக எழுதியிருந்த ஞாபகம். எங்கள் பெற்றோர் திருமணம் அங்குதான் 1963ல் நிகழ்ந்தது. நீங்கள் எழுதியுள்ள காலகட்டம் 65-70ஆ? அப்போ 65-70கள்ல, சென்னை இன்னும் கிராமமாகத்தான் இருந்திருக்கும் (பல இடங்களில்)

வல்லிசிம்ஹன் said...

பெற்றோர்கள் திருமணம் 1943 நெல்லைத்தமிழன்.
இந்த சம்பவங்கள் எல்லாம் 56 டு 61 மா. பேபி டாக்சி, பெர்ர்ரிய டாக்சி எல்லாம்
எக்மோர் ஸ்டேஷனுக்குள் வந்து நாம் ஏறிக் கொண்ட காலம்.
அம்மாவை விசாரித்ததாகச் சொல்லவும். 70s la Maarittathu maa.

வெங்கட் நாகராஜ் said...

இனியதொரு மனுஷியின் அறிமுகம்.....

நினைவலைகள்... இப்படியான மனிதர்களால் தான் இன்னமும் தேசத்தில் கொஞ்சமாவது பாசம் நிலைத்திருக்கிறது.

Chellappa Yagyaswamy said...

மனிதர்கள் மீது அன்பும் கருணையும் அனுதாபமும் மரியாதையும் கொண்ட மனிதர்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றி அல்லவா நீங்கள் எழுதுகிறீர்கள்!

-இராய செல்லப்பா (சுற்றுப்பயணத்தில்) நியூ ஆர்லியன்ஸ்

Geetha Sambasivam said...

இந்தப் பதிவை முகநூலில் படிச்ச நினைவு இருக்கு! :)

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி வெங்கட். விடாமல் அம்மாவுக்கு நன்மை செய்கிறீர்கள். நன்றாக இருக்கணும்.
She was a generous lady.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் திரு செல்லப்பா. இப்போதும் நல்ல மனிதர்கள் இல்லாமல் இல்லை. அவர்களுக்கு நேரம் இல்லை நேசம் காட்ட. அதுதான் நான் பழைய காலத்துக்குப் போய்விடுகிறேன்>]]]

வல்லிசிம்ஹன் said...

சரிதான் கீதா. இங்கே பதிந்து விட்டு அங்கே பதிகிறேன்.
வாசிப்பவர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். இல்லையா.