Tuesday, April 25, 2017

எங்கள் ப்ளாகிற்கு எழுதிய கதை ஒரு நாள் மயக்கம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மழையும் மந்தாரமாக இருக்கும் வானத்தை ஜன்னல் திரை வழியாகப் பார்த்த சுதாவுக்கு, உற்சாகம்  மனம் சுறுசுறுப்பானது.
குழந்தைகளின் படுக்கை அறையில் எட்டிப்ப் பார்க்கும்போது
இரண்டு பெண்களும் அழகு தேவதைகளைப் போல் ஒரே ரஜாய் அடியில் நல்ல உறக்கம் போட்டுக் கொண்டிருப்பது பார்த்து சந்தோஷப் புன்னகை வந்தது.


அடுத்து கணவனின் படிப்பறைக்கு வந்ததும் ,அவன் கைகளிலிருந்த கண்ணாடி
கிண்ணத்தைப் பார்த்ததும் அவள் மனம் சட்டென்று நின்றது.


அழகான புன்னகையோடு பாசு அவள் கை பிடித்து இழுத்தான். என்ன மழையைப் பார்த்ததும் அம்மாவுக்கு என்ன யோசனை வருது, என்ற கேலிக்குரலோடு அவளை வளைக்க முனைந்தான்.

''கட்டாயம் இந்த யோசனை இல்ல:)


...............................

வெளில போய் இந்த கோவை காற்றை ,சிலுசிலுப்பை அனுபவிக்க ரொம்ப ஆசையா இருக்கு. வாங்களேன்.  ராஜம்மாவிடம் குழந்தைகளை விட்டுவிட்டு ஒரு குட்டி ட்ரைவ் போய் விட்டு வரலாம்.  இல்லாவிட்டால் அதுகளயும் அழைத்துக் கொண்டு மேட்டுப்பாளையம் ரோடில் ஒரு நீள மழை ஊர்வலம் போலாமே என்றாள்.

'கொஞ்சம் வயசு ஆன பிறகு உன்னைக் கல்யாணம் செய்திருக்கணும்.'
யாருக்கு?
'ஏன் உனக்குத்தான் 'என்றவனைப் பார்த்து சிரித்தபடி ,அவன் கையிலிருந்த பானத்தைத் தனிப்படுத்தினாள்.
'சரி இது உள்ள போனால் வண்டி ஓட்ட வேணாம். நானும் குழந்தைகளோடு குட்டித் தூக்கம் போட நீங்களும் கொஞ்சம் தூங்குங்கள்' என்றபடி செல்பவளை யோசனையோடு பார்த்தான் பாசு.
ஏன் இவள் இப்படி இருக்கிறாள்? எல்லாத் திருமணங்களும் குழந்தைகள் பிறந்ததும் தேக்கமடைகின்றதா, இல்லை எனக்கு மட்டுமா இப்படி என்று ஏமாற்றத்தை மறக்க மீண்டும் பாட்டிலைத் தேடினான்.

சற்றே கிறங்கிய நிலையில் தோழனின் வருகையை அறிவித்தது அவனது பெரிய வண்டியின் ஹார்ன் சத்தம்.
ஹேய் பாஸ் ,வாடா வெளில போலாம் 'கெட் யுர் ஃபாமிலி' என்ற சத்ததோடு உள்ளே நுழைந்தான் சுரேஷ்.
சுரேஷ் பாசுவின் அலுவலகத்துக்கு மென்பொருள் சப்ளையர்.  இரண்டு மூன்று வருடப் பழக்கம்.  அவனால் தான் பாசு குடிக்கக் கற்றுக் கொண்டான் என்று சுதாவுக்கு அந்தக் குடும்பத்தை அவ்வளவாகப் பிடிக்காது.
அதுவும் அவர்கள் கல்கத்தாவிலிருந்து நவநாகரீகமாக வந்து இந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசுவது ,அதற்கு பாசுவும் தாளம் போடுவது, எல்லாரும் சேர்ந்து இரவுக் காட்சிகளுக்குப் போய் குழந்தைகளின் தூக்கம் கெடுவது இப்படி நீண்டு கொண்டே போகும் அவள் லிஸ்ட்.
சுரேஷின் மனைவி வட இந்தியப் பெண்.அழகி. விதம் விதமாக சமைக்கத் தெரிந்தவள்.  அடிக்கடி இவர்களை அவர்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார்கள்.
தான் வரவில்லையென்றால் தனக்கு தாழ்வு மனப்பான்மை என்று நினைத்து விடுவார்களே!! சுதாவும் குழந்தைகளை அழைத்துச் செல்வாள்.

அவர்கள் மூவரும் பானங்களோடு இருந்து உரையாட,  பழைய இந்திப் பாடல்களைப் பாடி முடிக்கும்போது,குழந்தைகளைக் கவனித்து அவர்களை உண்ண உறங்க வைப்பாள்.
11 மணி அளவில் 'ஓ ஐ அம் ஃபைன் என்றபடி பாசு கிளம்ப அரவமற்ற வீதிகளில் புகுந்து வீடு வந்து சேருவார்கள்.
 
இதே போல ஒரு சனிக்கிழமை இரவு.  அடுத்த நாள் சுதா பாசு இருவருக்கும் திருமண நாள்.
கோவை ராம் நகர் ஸ்ரீராமனைத் தரிசிக்க இருவரும் யோசித்துவைத்து, முதலில் சுதாவுக்கும் தனக்குமாக உடைகள் எடுத்து வந்தான் பாசு. அவனுடைய அலுவலகமும் அங்கேயே இருந்ததால் சுலபமாக முடிந்தது வேலை. தனக்குப் பிடித்த மாதிரி,ஆரஞ்ச் வண்ண டெர்கோசா பெரிய பூக்களோடு இருந்த புடவையும், ஸ்கைப்ளூ வண்ண லிபர்டி டெரிகாட்  சட்டையும் வாங்கி வண்டியில் வீட்டுக்கு விரைந்தான்.

தெருமுனை திரும்பும் போதே சுரேஷின் வண்டியைப் பார்த்ததும் மனம் திக் என்றது.
நண்பனைக் காண்பதில் சந்தோஷம் என்றாலும் ,சுதாவின் அதிருப்தியை 
இன்று சம்பாதிக்க வேண்டாமே எனும் யோசனை முன் நின்றது.
வண்டியை நிறுத்தியதும் சுரேஷின் சிறுவர்களும், தன் மழலைகளும் ஆடும் ஆட்டத்தைக் கண்டு மனமகிழ்ச்சியோடு உள்ளே நுழைந்தான்.

முகம்,மனம் நிறைந்த காதலோடு கணவனையும் அவன் கைகளில் இருந்த பைகளையும் எதிர்கொண்டாள் சுதா. அடிக்குரலில் அவர்களைச் சீக்கிரம் அனுப்பிவையுங்கள் என்ற வேண்டுகோளோடு.
ஹ்ம்ம். நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே.
சுருக்கமாகச் சொல்லப் போனால் விபரீதமாக முடிந்தது.
இரண்டு மூன்று மடக்கு விஸ்கி உள்ளே போனதும் , எல்லோருக்கும் குஷி பிறந்து
பாடல்கள் ஆரம்பிக்க ,சுதா மணியைப் பார்த்தாள் 9 ஆகி இருந்தது.
கண்வனின் அருகில் நின்று தோசை தட்டில் தோசையைப் போட்ட வண்ணம், சீக்கிரம் ஆகட்டும் என்று கிசுகிசுத்தாள்.
சுரேஷின் மனைவி பலமாகச் சிரித்தபடி  நோ சீக்ரெட்ஸ் நவ் என்று பாசுவின் அந்தப்பக்கம் நின்று அவன் தோள் மேல் கைவைத்தாள்.
அவன் அதை உணர்ந்தானோ இல்லையோ, அவன் கை தன்னிச்சையாக அவளை வளைத்தது.  சுதாவின் வயிற்றில் இடி இறங்கியது போல ஒரு உணர்வு.

சரேலென்று கொந்தளிப்போடு கையிலிருந்த பீங்கான் தட்டை விட்டெறிந்தாள்..சுக்கு நூறாக உடைந்த தட்டை வெறித்தவள்,
தன் பெண்களை அழைத்துக் கொண்டு படுக்கை அறைக்குள் சென்று கதவை சத்தமில்லாமல் சாத்தினாள்.
கொஞ்ச நேரத்தில் சுரேஷ் வண்டி புறப்படும் சத்தமும், பாசு தன் அறைக்குள் செல்லும் சத்தமும் கேட்க. குழந்தைகள் உறங்கும் வரை தட்டிக் கொடுத்தவள் ,அழுத கண்களோடு உறங்கச் சென்றாள்.
காலை எழுந்தவள் கலக்கத்தைக் களைந்துவிட்டுக் கடவுளிடம் விளக்கேற்றி நிம்மதி வேண்டினாள்.
யந்திரத்தனமாக டோஸ்ட் செய்து, தோசை எல்லாம் வார்த்து, ஆரஞ் கிசான் கலந்து மூவருக்கும் சாப்பாட்டு மேஜையில் வைத்துவிட்டு, தன் துளசி, மல்லி என்று செடிகளொடு நேரம் கழித்தாள்.
பின்னால் பாசு வரும் சத்தம் கேட்டதும் தோசை வைத்திருக்கிறேன்.  குழந்தைகளோடு சாப்பிடுங்கள். நான் கோவில் போகவேண்டும் என்று திரும்பினாள்.

அழகான பாசுவின் முகம் சிவந்த கண்களோடு தன்னைப் பார்ப்பதும் தெரிய கண்ணில் தயாராக இருந்த துளிகள் கீழே சிந்தின.
 

சுதா மா. ஸாரி. ஐ டிட் நாட் know what came over me.  நாம் அனைவரும் கோவிலுக்குப் போகலாம். பத்துவருடம் முன் நாம் சேர்ந்த சிறந்த தினம் இல்லையா.
ஆமாம் ஆனால் அந்தப் புனிதம் இருக்கிறதா தெரியவில்லை.
நான் திருச்சி போய் வருகிறேன். எனக்கு அகிலாண்டேஸ்வரியிடம் முறையிட ஆசை என்று கலங்கிய மனைவியின் கரங்களைப் பிடித்தான் பாசு.

நீ போனால் நானும் வருவேன்.  எனக்கும் அவளிடம் கேட்கவேண்டும் என் மனைவி ஏன் என்னிடம் நெருங்க மறுக்கிறாள் என்று.
 மது அரக்கனை அழித்த மாதவன் கிடைத்தால் இந்த லக்ஷ்மியும் பாசுவிடம் வருவாள் என்கிற பதில் சட்டென்று வந்தது.
அன்று ராமர் கோவிலில் இருவரும் தரிசனம் செய்யும் போது மங்கையும் மணாளனும் சேர்ந்திருக்க மது வேண்டாம் என்கிற கையெழுத்திடாத ஒப்பந்தம் நிறைவேறியது.
மது இல்லாத புது இரவு வந்தது.