Blog Archive

Saturday, September 17, 2016

நேற்றும்இன்றும் நாளையும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++

கணவர் எழுந்துவிட்டார் என்பது , வஞ்சுவுக்குத் தெரிவதே
அவர் பல் தேய்க்கும் சத்தத்தால் தான்.
அவருக்கு தொண்டை பூராவும் சுத்தம் செய்து கபம் எல்லாம் வெளி வந்து, பல் பளிச்சிடும் வரை பலவித கர்ஜனைகள் வெளி வரும்.

சரியாகப் பாலை க் காய்ச்சி முதல் டிகாக்ஷன் இல் தான் காப்பி வேணும் அவருக்கு.
ஆவின் பச்சைப் பாலில் இருந்து இப்பொழுதுதான் 2 பர்செண்டுக்கு வந்திருக்கிறார்கள்.
என்ன செய்வது மாடு வைத்துப் பால் கறந்து வளர்ந்த குடும்பம்.

பிறகு அவர் வேலை அவருக்கு அவள் வேலை அவளுக்கு.   20 வருஷமாக இந்தத் தணிக்க குடித்தனம் பழகி வருகிறது.

அவ்வப் போது வெளி நாட்டிலிருந்து  வரும் பசங்களும் அவர்கள் மனைவிகள் குழந்தைகள்  என்று  வருடத்தில் இரண்டு மூன்று மாதக் கலகலப்புக்கும் பழகிக் கொண்டார்கள்.
மற்ற நேரங்களில் வித விதமாகப் படுத்தும்  நோய்கள் பேரன் பேத்திகளைக் கண்டால் ஓடிவிடும்.

மருமகள்களுக்கு  இந்தக் காலை கர்ஜனைகள் அவ்வளவாக ரசிக்கவில்லை.

மாமாவுக்கு  என் இவ்வளவு சளித்தொந்தரவு என்று நாசூக்காகக் கேட்டுக் கொண்டார்கள்.

தன்  எழுபது வயதில் அதுதான் ஆதார சுருதி என்று அவர்களிடம் விளக்க முடியுமா.

அது ஒரு நாள் கேட்காவிட்டால் தான் மாடி ஏறி, அவர் ஏன்    எழு ந்திருக்கவில்லை என்பதை பார்க்கப் போகும் திகிலை வர்ணிக்க முடியுமா.

இந்தக் கோடையில் அவருக்கு சளி பிடிக்கும் . பிறகு சரியாகிவிடும். நாள் முழுவதும் இருமி   மற்றவர்களைத் துன்பப படுத்துவதில் அவருக்கு விருப்பம் இல்லை. அதுதான் இந்தப் பயிற்சியைக் கற்று வந்திருக்கிறார் என்  பதில் சொல்வாள்.

இதோ இப்போது அவரும் இல்லை. இருமல்,பல் தேய்த்து, சுவர் அதிரும் சத்தம் இல்லை.

மருமகள் கள்  இப்போது அவரவர்  கணவர்களிடம்     புத்திமதி சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
சிரிப்புதான் வருகிறது வஞ்சுவுக்கு. டயரியில் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் ............
புதிய  ஞாயிறே வருக.





12 comments:

நெல்லைத் தமிழன் said...

வாழ்க்கையே ஒரு வட்டம்தான். அப்பா திட்டுவது பிடிக்காத மகன், அவன் அப்பா ஆனபின் அதையே செய்வான். இது எல்லோரும் அனுபவிப்பதுதானே.

வல்லிசிம்ஹன் said...

அதுதான் சொல்ல வந்தேன் நெல்லைத் தமிழன். சில பல
மாறும். அடிப்படை இந்த பட்டம் தான். நன்றி மா. உங்கள் மோர்க்குழம்பு போல் என் அம்மாவும் செய்வார்.

கோமதி அரசு said...

தலைப்பும் கதையும் அருமை.
நடைமுறை இதுதான்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோமதி மா. எதுவும் மாறுவதில்லை. இன்று நான் நாளை நீ என்பதே உண்மை......

Yaathoramani.blogspot.com said...

அது ஒரு நாள் கேட்காவிட்டால் தான் மாடி ஏறி, அவர் ஏன் எழு ந்திருக்கவில்லை என்பதை பார்க்கப் போகும் திகிலை வர்ணிக்க முடியுமா//

இந்த வரிகளைப் படித்து
சட்டெனக் கடக்க முடியவில்லை
அற்புதமாக மிக அனாயாசமாக்
காலம் கடக்கும் பதிவு மனம்கவர்ந்தது
வாழ்த்துக்களுடன்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு திரு .ரமணி,
வாழ்வின் நிதர்சனங்கள் இவைதானே. வயதான பிறகு
வரும் அச்சங்கள்.
நிஜமாகும் உண்மைகள்.
உங்கள் புரிதலுக்கு மிக நன்றி.

Bhanumathy Venkateswaran said...

யதார்த்தத்தை எத்தனை அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்! நிறைய எழுதுங்கள்!

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி பானுமா. நடைமுறையில் பார்ப்பதுதானே.

காமாட்சி said...

வயோதிகம் வரவேற்பு இல்லாவிட்டாலும் நிராகரிக்க முடிவதில்லை. இதுதானே நடைமுறையில் உண்மையாக உள்ளது. அன்புடன்

வெங்கட் நாகராஜ் said...

அருமைம்மா..

ஆதார ஸ்ருதி - அந்த உணர்வினைப் புரிந்து கொள்ள முடிந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு காமாட்சி ,பிறந்ததிலிருந்து வளர்வது வயோதிகத்தை எதிர்பார்த்து தானே.
உணரத்தான் நேரம் ஆகிறது

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வெங்கட். ஒருவருக்கொருவர் துணை என்பது வயதான காலத்தில் தான் மிகத் தேவையாகிறது.. அடிப்படையில் அன்பு விதை தூவியிருந்தால் மட்டுமே
இல்லறம் சிறக்கும்.