Blog Archive

Monday, June 29, 2015

தாத்தா பேரன் ஒற்றுமை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
1977இல்  தன்னுடைய  சொந்த   வொர்க்ஷாப் ஆரம்பித்தார். சிங்கம்
அவரது பலமே   அவரது  கஸ்டமர்கள் தான். இப்பொழுது இருக்கும் இடத்தில்தான்
 நல்ல   ஸ்திரமான உயரக் கொட்டகை  போட்டு  நான்கு  வண்டிகள்
நிற்கும் அளவிற்கு  தரையெல்லாம் கெட்டித்து ஆரம்பித்தாகி விட்டது.

அப்போது வீட்டில் மாமனார்,மாமியார்,பாட்டி,எங்கள் குடும்பம்  எல்லாம் ஒரே  சுறு சுறு என்றிருக்கும்.
வந்தவர்கள் போகிறவர்கள், தொழிலாளிகள்,  உறவினர்கள்
என்று  கலகலப்பு.

வீட்டில் எங்கள் சமையலறை தனி. காப்பி டீ, வெங்காயம்,முருங்கை
இதெல்லாம் சமைக்கத் தனி அடுப்புகள்.

மெயின் சமையலறையில்  பெரியவர்களுக்கான சமையல்.
 எப்படி இவ்வளவு வேலைகளையும் சமாளித்தோம்  என்று இப்போது
மலைப்பாக இருக்கிறது.
இதன் நடுவே அரிசி புடைப்பது,பயறு திரிப்பது, என்று ஆட்களும் நானும் மாமியாரும்
செய்து கொண்டே இருப்போம்..
திரட்டிப்பால் செய்வதானால் பத்துலிட்டர் பாலாவது  பெரிய அரிக்கஞ்சட்டியில்
ஏற்றப் படும்.
அதே போல  நிலக்கடலை வந்து இறங்குனதுதான்  தாமதம்.

பாட்டி வந்துவிடுவார். எல்லோருக்கும் கொடுத்தனுப்பியது போக வீட்டுக்கு வேண்டும் என்கிறது

பெரிய பித்தளை  சம்புடங்களில்  அடைக்கப் படும்.
 அடுத்த  நாள்  எழுந்திருக்கும் போதே  வெல்ல வாசனை வரும்.
சமையல் செய்பவர்  நிலக்கடலை வறுத்துவைக்க மாமியார்
  வெல்லம் பதம் பார்த்துக் கொண்டிருப்பார்., சரியான பதம் வந்ததும்
வேர்க்கடலையை அதில் கொட்டி கிளற ஆரம்பிப்பார்.
அரைமணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும். அத்தனை பெரிய பாத்திரத்தை இறக்க உதவிக்கு ஆள் வந்ததும் தாம்பாளங்க்களில் கொட்டி சிக்கி    வகுந்து வைக்கப் பட்டப் படும்.  கொஞ்சம்  கடலை உருண்டைகளும் பிடித்து வைக்கப் படும். வீடே ஏலக்காய்
வாசனையில் மிதக்கும்.
இதெல்லாம் என்மனத்தில் ஓடின.காரணம் பேரன்   கட்டமைத்த
 சோஃபா கம் பெட்  தான். டே பெட் என்று சொல்வதை , பெரிய பையன் எனக்காக  வாங்கி வைத்துவிட்டுப் போனான்..
தாத்தா செய்வது போலவே அதன் கூடவே வந்த மானுவலைப் பார்த்து, அழகாக  செட் செய்துவிட்டான்.
அரை மணி  நேரத்தில் முடித்து விட்டான். பதினாறு வயதில் செய்யக் கூடிய வேலைதான்.. இருந்தும் எனக்கு
எங்க வீட்டுக்காரர்  நினைவுதான் வந்தது..அவரைப் போலவே
 இவனும் வாழ்வில் முன்னேற வேண்டும். தைரியம், நேர்மை,விடாமுயற்சி எல்லாம்
சேர்ந்து வெற்றி  பெற வேண்டும்.

Tuesday, June 23, 2015

நாங்கள் வாழ்கிறோம்


இந்தத் தம்பதியரை
 பாரீஸ்  நகரின் வெற்றி வளைவு+  நினைவு ஸ்தலம்
  ..அதன் உச்சியில் சந்தித்தோம்.
அன்று வெய்யிலின் அளவு அதிகமாக இருந்தது.
ஐரோப்பியர்களுக்கு அந்த வெயில் உற்சாகத்தைத்தான் கொடுத்தது.
எங்களுக்கு  தாகம் தாகம் தாகம்.

சின்னப் பயலுடன் மருமகள் கீழே தங்கி விட்டால். பேத்தியும் மகன்,சிங்கம் ,நான்   லிஃப்டில்
  ஏறி  மேலே வந்துவிட்டோம்.

எங்களுடன் வந்த இந்த வயதான (!)  தம்பதியரின் உற்சாகம்   மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுத்தது.

எங்களை அறிமுகம் செய்துகொண்டோம்.
  பிரெஞ்ச்  பெயர்கள் இரண்டு காதில் விழுந்தன.
புரிந்த மாதிரி தலையாட்டிக் கொண்டோம்.

குடும்பத்துடன் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா  என்று கேட்டார்கள்.
ஆமாம் என்றதும்  நாங்கள் இந்தியா வந்திருக்கிறோம்.

உஷ்ணம் தாங்கவில்லை. டெல்லி,தாஜ்மகால்,ஜெய்ப்பூர்
  பார்த்துவிட்டு வந்தோம்.
உங்கள் குடும்பமும்   இங்கே பாரீசில் இருக்கிறதா என்றதற்கு,
இல்லை என்று தலையசைத்தார்கள்.
எங்கள் மகன்  கென்யாவில்    அந்த ஊர்ப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு இருக்கிறான்.

நாங்கள் அருகில் மூல்ஹௌஸ்  நகரில் இருக்கிறோம்.
 உடலில் வலு இருக்கும்போது   கலைகளின்
   தலைநகரமான பாரீசுக்கு வருவது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இரண்டு    வாரங்களாவது

 இங்கே இருப்போம். ஹோட்டல் விடுதி செலவெல்லாம் கிடையாது. சிநேகிதர்கள் வீட்டில் இருந்தபடி
 ஊர் சுற்றுவோம்.  என்றனர்.

முற்காலத்தில் நம் ஊரும் இப்படித்தானே இருந்தது.
ஒரு அத்தை, மாமா பெரியப்பா சித்தப்பா என்று யாராவது வருவார்கள், இருப்பார்கள். நாமும் அவர்கள் வீட்டில் போய்த் தங்குவோம்.

போன வருடம்  ஷான்
ஒரு  அறுவை சிகித்சை மேற்கொள்ள வேண்டி வந்தது. அதனால் வரமுடியவில்லை. அதை ஈடு கட்ட   இந்தத் தடவை மேலும் சில நாட்கள் இருப்போம் என்று அந்த அம்மா மகிழ்ச்சியோடு சொன்னார்.
எதோ இருதய சம்பந்தமான சிகித்சை என்பது  மட்டும் தெரிந்தது.

அவர் அதற்குள் குறுக்கிட்டு இதோ இவளும் மூட்டு அறுவை சிகித்சை செய்து கொண்டாள். வாக்கர்  வைத்துக் கொண்டாவது வருவேன் என்று பிடிவாதம் பிடித்து வந்துவிட்டாள்    என்று பெருமையாகச் சொன்னார்.

என் கால் வலியையும்  அதற்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதையும் எண்ணிப் பெருமூச்சு விட்டேன்.:(
மனம் மார்க்கம் என்று யோசனை எங்கியோ போனது!!








எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Sunday, June 21, 2015

இனிய தந்தையர தின வாழத்துகளனைத்துத்தந்தையருக்குமே

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பெரியாழ்வருக்கு  நிகர்  அருமை. பெண்ணைப் பிரிய மனமில்லாத அன்பு.  அப்பா என்று அழைப்பதற்குள், குரல் நன்றாக இல்லையே,
பிரச்சினையாம்மா.
நான் வரட்டுமா. என்று வந்துவிடுவார்.
குரல் வைத்தே பெண்ணின்  உளனிலையைப் புரிந்து கொள்வதில் அம்மாவை மிஞ்சிவிடுவார்.

அப்பாவுக்கு  அடுத்து என்னை அரவணைத்ததும்  என் சிங்கமும் ,
தம்பிகளும் தான்.
இவர்களும் எனக்குத் தந்தை ஸ்தானத்தைப் பூர்த்தி செய்தவர்கள்.
இப்போது பெற்ற  பிள்ளைகள் அம்மாவைப் பார்த்துக் கொள்கிறார்கள்.
இறைவனை வேண்டுவதெல்லாம்
இவர்கள் அனைவரும்  மிக உறுதியான ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்பது ஒன்றுதான்.

Wednesday, June 10, 2015

பயணம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மூன்று  பெட்டிகள்   அளவுடன் தயார். மாகாளிக் கிழங்கு,ஆவக்காய்,
தார்ந்டன் சாக்கலட்ஸ் , எடின்பரோ  பிஸ்கட்ஸ்.  எல்லாம்தான்  வெயிட்
மகனார்  எம்மா   இவ்வளவு  மூட்டை  உனக்கு. என்கிறான். ஒரு வருஷம் கிளம்பி அடுத்த வருஷம் ஊருக்குப் போகிறேன். நடுவில குளிர் வெயிலுக்கான உடைகள்
காலுறை,கையுறை,தடி ஜாக்கெட், ஓவர் கோட்  எல்லாம் வேண்டி  இருக்கேப்பா. என்றேன்.

அடுத்த நான்கு   மாதத்திற்கான மருந்துகள்
ஒரே ஒரு பிரார்த்தனை. போன வருடம்   வந்தது போல
சூறைக் காற்றெல்லாம்  அடிக்காமல் இருக்கணும். கொஞ்சம்
பைத்தியக் கார வேண்டுதல் தான்.
தாங்கும் சக்தி விட்டுப் போச்சு.

வருகிறேன் மக்களே . மீண்டும் பார்க்கலாம்.

Wednesday, June 03, 2015

சங்கடமான கனம் .

 எ
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


சில நாட்களுக்கு முன் என் தோழியைப் பல வருடங்களுக்கு அப்புறம் சந்தித்தேன்.
ஒரு திருமணத்தில் பார்த்தபோது அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.
எனக்கோ அவளைப் பார்த்ததுமே புரிந்துவிட்டது.
நான் அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, எங்க 64ஆம் வருட பரிசோதனைக் கூட நாட்களை நினைவு படுத்தியதும் தான் சிரித்த வண்ணம் ஒத்துக்கொண்டாள் நான் நான் தான் என்று.
என்னசெய்வது அவள் எதிர்பார்த்தது 48 கேஜி
ஒட்டடைக் குச்சியை.
இப்போது பார்ப்பது கிட்டத்தட்ட ( ம்ஹ்ம்ம்) ஒரு 75 கிலோ பாட்டியை.:)
அவள் மட்டும் ஓரிரண்டு நரை முடியைத் தவிர
அது என்ன 50 கேஜி தாஜ் மகால் ஆகவே இருந்தாள். அவள் என்னை சுற்றிச் சுற்றிப் பார்த்தாள்.
'
கொஞ்சம் அதிர்ச்சி,நிறைய வியப்பு என்று என்னை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். நீ எப்படி இவ்வளவு வெயிட் போட்ட. என்னாச்சு. சாப்பாட்டுப் பிரச்சினையா. சந்தோஷம் அதிகமானா சாப்பாடும் கட்டுப்பாடில்லாம போகும்னு சொல்லுவாங்களே, அதுப்போல
உனக்கும் வாழ்க்கை இனிமையாகப் போயிருக்கும். நீதான் படிக்கிறதை 18 வயசிலியே நிறுத்திட்டியே.???
படிப்ப நிறுத்தினா உடம்பு பெருக்குமா என்ன. கணக்கு சரியாயில்லையே என்று நான் அவளை முறைப்பதை அவள் கண்டு கொள்ளவே இல்லை.
ஷி வாஸ் இன் ஷாக்!!!
பசங்க உண்டா எப்படி இருக்காங்க கல்யாணம் ஆச்சா அவங்களுக்கெல்லாம். பேரன் பேத்திகள் உண்டா என்று அவள் மூச்சு விடாமல் கேட்க எனக்கு மூச்சு வாங்கியது.
பின்னே!
அவள் எறும்பை விட வேகமா நடந்து கொண்டே பேசினால் நான் என் சரீரத்தையும் அழைத்துக் கொண்டு பின்னால் போக வேண்டியது சுலபமான காரியமா.
நாற்காலிகளுக்கு நடுவே படு சுலபமாக அவள் போக, நான் எல்லாருடைய கால்களை இடித்து, பாதங்களை மிதித்து,
அவர்களின் நற நறக் கடிப்பு வார்த்தைகளைக் காதில் போட்டுக் கொள்ளாமல் போனேன்.
ஒருவழியாக நாதஸ்வர இரைச்சலிலிருந்து(!!!) கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தாள்.
'இப்போ சொல்லு. எப்படி இருந்த நீ இப்படி ஆன??
என்ன சொல்லன்னு தெரியாமல் விழித்தேன்.
ஒரு 45 வருஷக் கதையை அவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமா....
தொடரும்( சங்கடங்கள். )












 அடுத்த நாள்  அனு,
அதான் என் பிரம்மாண்ட  சரீரத்தைப் பார்த்துப் பயந்து போய்,என்னை என் உடல் நிலை கண்டு கவலைப் பட்டு ,
கல்யாண சாப்பாட்டில் ஒரு நல்லதை ஒரு பாசந்தி கூட சாப்பிட விடாமல் செய்துவிட்டு
நான் உனக்குப் போன் செய்யறேன்னு பயமுறுத்திவிட்டு வேறு போயிருந்தாளே, அந்த அனு,
 போன் செய்தாள்.:)

ஹேய் ,
நான் சொல்றதைக் கேட்டியானால் நாலே மாசம், உன் எடை குறைந்துவிடும் , கேக்கிறியா என்று நிறுத்தினாள்.
நல்ல நாளிலியே எனக்குக் கேட்கும் சக்தி குறைவு:)
இப்ப வேற ஏகப்பட்ட மருந்து மாத்திரை, கொஞ்சம் சாப்பாட்டுக் குறைப்பு,
அப்போது 12 மணி ..
மதிய சாப்பாட்டுக்குப் போகத்துடிக்கும் கால் களையும் கைகளையும் கட்டுப் படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பாவப்பட்ட மனுஷி கிட்ட,
இப்படி ஒருத்தி அட்வைஸ் ஆரம்பித்தால் கோபம் வருமா வராதா!!!
எனக்கு வரவில்லை. 'ம்ம் சொல்லும்மா. என்றபடி கேட்க ஆரம்பித்தேன்.
புத்திமதி சொல்கிறவர்களுக்கு ஒன்று மட்டும் நினைவில் இருப்பதில்லை.
தனக்கு இருக்கும் அறிவில் பாதியாவது தன் வயதே ஆன தோழிக்கும் இருக்க
 வாய்ப்பு உண்டு என்ற உணர்வுதான் அது.

பள்ளிக்காலத்தில் கணக்குப் பாடத்தில் எப்போதும் எனக்கு அவளுக்கும் போட்டி. இறுதிப் பரிட்சையில் அவளுக்கே முதல் இடம். ஒரு பத்துமார்க் குறைவுதான் எனக்கு.
கவனமே போதாதுடி உனக்குனு அவள் சொல்லும்போது நானும் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டேன்.
பரீட்சை ஹாலில் அளவுக்கு மேல பயத்தால் இருமுவது நானாகத்தான் இருக்கும்.

அவள் பேப்பருக்கு மேல் பேப்பர் கேட்க
 நான் தண்ணீர் கேட்பதற்குத்தான் அதிகம் எழுந்து நிற்பேன்.
ட்ரிக்னாமெட்ரி என்ற அரக்கன் என்னைக் கைவிட மதிப்பெண்களையும் கோட்டைவிட்டேன்.
அதை இன்னும் அவள் மறக்கவில்லை என்பது அவள் பேச்சிலிருந்து தெரிந்தது.:))
எப்பவுமே கடைசி நிமிடத்தில் நீ பின்வாங்கிவிடுவாய்.அந்த அக்ரெஸிவ்னெஸ் உனக்கு வரவே இல்லையே இவளே.

நான் பாரு, இப்ப இந்த வேலையில் ஓய்வெடுத்த பின்னாலும் கன்சல்டண்டாக இருக்கிறேன்.
நீ கூடக் கவிதை எல்லாம் அப்போ எழுதின மாதிரி எனக்கு லேசா நினைவிருக்கிறது என்றாள்.
ஆமாம் அதெல்லாம் ஒரு காலம் என்று மிகச் சோகக் குரலில் பதில் சொன்னேன்.:)

சே, ரொம்ப வீணாகப் போச்சுப்பா உன் நேரமெல்லாம். எப்படியோ வந்திருக்கலாம் என்று அவள் ஆரம்பித்ததும் அவளை ட்ராக் மாத்த வெயிட் லாஸ் பத்திச் சொல்கிறேன் என்றாயே என்று நினைவு படுத்தினேன்.
ஏதாவது காய்கறி ரெசிப்பி, சர்க்கரை இல்லாத உணவுக் குறிப்புகள் ஏதாவது சொல்லுவாளோ என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்.
ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து
அழகைக் கட்டாயம் வரவழைக்கும், (சிறிது நாளில் தொலைந்து போய் விடும் )
ஒரு நிலையத்தைத் தனக்கு மிகத் தெரிந்த நண்பி நடத்துவதாகச் சொல்லி தள்ளுபடி விலையில் எனக்கு ஒரு டீல் வாங்கித்தருவதாகவும் சொன்னாள்.
நானும் அந்த நிலையத்தைப் பேரனுக்கு தலை முடி வெட்ட அழைத்துப் போகும்போது பார்த்திருக்கிறேன்.
ஓடும் மெஷினும் குலுங்கும் உடல்களுமாக அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை. வருபவர்களின் வண்டிகளே இருபது லட்சம் ரூபாய் (,அந்தக்) கணக்கில் இருந்தது.
பாதிப் பேச்சைக் கோட்டைவிட்ட நிலையில்,
வாசலில் அழைப்பு மணி ஒலிக்க, அவள் சொன்ன எல்லாக் குறிப்புகளையும் பின்பற்றுவதாகச் சொல்லி தொலைபேசியை வைத்தேன்.
இதனால் ஒரு நல்லது நடந்தது. என் தைராய்டு அளவு பரிசோதனைக்குப் போனபோது, வைத்தியரிடம் கேட்ட போது, அவர் எனது இந்தத் திடீர் எடை கூடுதலுக்கு விளக்கம் சொன்னார்.
தைராய்ட் அளவு க்கு அதிகமாக இருப்பதாகவும், இன்னும் வேறு உணவு முறை பின் பற்ற வேண்டும் என்றும் சொன்னார்.
ஒரு வகையில் ஆறுதல்.
ஏதோ பகாசுரி லெவலுக்கு நாம் போக வில்லை.
இதுவும் கடக்கும்னு சமாதானப் படுத்திக்கொண்டு என் கீரையையும் சப்பாத்தியையும் சாப்பிடப் போனேன்:)