About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, February 21, 2015

எங்க வீட்டு ஆவக்காய்...மீள் பதிவு
ஆவக்காய் போட்டாச்சு.
எண்ணெய் அபிஷெகம் தான் பாக்கி.
புதிதா இன்னோரு பீங்கான் ஜாடியும் வாங்க வேண்டும்.
ஒரு பையனுக்கு கடுகெண்ணெய் கலந்த ஊறுகாய் மேல் மோகம்.அப்பா மாதிரி.
இன்னொருவருக்கு
எண்ணெய் வேண்டாம், உப்பு,காரம் எல்லாம் மிதம். அதுக்கப்புறமும் அந்தத் துண்டை அலம்பிவிட்டுச் சாப்பிடுவார்:)
பொண்ணுக்குக் கொண்டைக்கடலை கட்டாயம் போட்டிருக்கணும்.

அதனால் தங்கத்தைச் செயினாவும்,நெக்லஸாவும் ,அட்டிகையாவும் போட்டுக்கிற மாதிரி
மாங்காயை விதவிதமாச் செய்தாச்சு.
போட்டபிறகு எப்படி செய்தேன்னு சொல்லணும் இல்லையா.....
மாங்காய்களைத் துண்டு போட்டு வெள்ளைதுணியில் உலற வைக்கணும்,.
எங்கவீட்டு வெள்ளைத்துண்டு காணாமப் போய்விட்டது.
அதனால் கட்டம் போட்டத் துண்டுல உலத்தியாச்சு.
அப்புறம் அந்தத் துண்டுகளை(மாங்காயைச் சொல்றேன்பா)
அரைப்படில அளந்துக்கணும்.(சின்னப்படி)
ஒரு அரைப்படி துண்டுகளுக்கு
வேண்டியது 300 கிராம் கல்லுப்பு
வறுத்து அரைத்த சிவப்பு மிளகாய்ப் பொடி 300கிராம்
பச்சையாய் அரைத்த கடுகுப் பொடி 300 கிராம்.
மெந்தியம் வறுத்து அரைத்தது 3 தேக்கரண்டி.
மஞ்சள் பொடி 200கிராம்
கொண்டைக்கடலை 100கிராம்.
ஒரு பெரிய தாம்பாளம் ஒன்று எடுத்துக் கொண்டு ஒரு கைப்பிடி மாங்காய் ஒரு பிடி இந்தப் பொடிகலவை என்று எல்லா மாங்காய்த்துண்டுகளையும் கலக்கவேண்டும்.
கைபடாமல்  பெரிய  மரக்கரண்டியால்    ஒரு பெரிய ஜாடியில்  சேர்க்கவேண்டும்.
அதுக்கு முன்னாலே அந்த ஜாடி சுத்தமா இருக்கான்னு தெரிஞ்சுக்கணும்.
இல்லாட்டா கடைசி நேரத்தில,
திடிர்ர்னு எட்டுக்கால் பூச்சி எட்டிப் பார்க்கும்:)
அப்புறமா ஒரு கிழிஞ்ச வேஷ்டித் துண்டை(வேஷ்டியை யார் கிழிய விடுவார்கள்.)
பழசுதானேன்னு சொல்லி பீரோவிலிருந்து உருவிக் கொள்ள வேண்டியதுதான்:)
அதை ஜாடியோட கழுத்தில்   அரபு நாட்டு ஷேக்கோட தலைஅலங்காரம் (சிவாஜி சிவந்த மண்ணில்  பட்டத்து ராணி பாட்டுக்கு  வருவாரே)போல சுத்திவிட்டு மூட வேண்டியதுதான்.
மூன்று நாட்கள் கழித்துப் பார்த்தால் கொஞ்சம் தளர்ந்து விட்டிருக்கும்.
அப்போது நல்ல எண்ணெயை அப்படியே கலந்து விடலாம். அவரவர் இஷ்டம்.
சில பேர் தேவைக்கேத்தது போல அவ்வப்போது எண்ணெய் கலந்து கொள்வார்கள்.

மிச்சமிருக்கும் மாங்காய்த் துண்டுகளை வெய்யிலில் உலர்த்தி , மெந்திய மாங்காயும் போடலாம். அடர் மாங்காய் என்று இதற்குப் பெயர்.

உப்பு,மெந்தியம்(ஒரு தேக்கரண்டி),கடுகு,மிளகாய்,பெருங்காயம்  எல்லாவற்றையும்
வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு
பொடித்துக் கொள்ளவேண்டும்.

அதே வாணலியில் எண்ணெய்  தாராளமாகவிட்டு
அது நன்றாக  கொதித்ததும்,
உலர்த்தின  மாங்காய்த்துண்டுகளைப்  போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
மாங்காய் கொஞ்சம் வெந்ததும்  வறுத்த பொடியைத் தூவி  அடுப்பை அணைத்துவிடவேண்டும்.
கொஞ்ச நேரத்தில் எண்ணெய் மேலே   வந்துவிடும்.
ஆறின ஊறுகாயை நல்ல ஜாடியில் போட்டு வேடு கட்டி வைத்துவிடலாம்.


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

48 comments:

வல்லிசிம்ஹன் said...

டிஸ்கி.

எங்க வீட்டில சாறு நிறைய வேணும் ஊறுகாய்க்கு. அப்பத்தானே ஆவக்காய்ச் சாதம் சாப்பிட முடியும்.
அதனால் உங்களுக்கு இந்த அளவு அதிகமாகத் தெரிந்தால் குறைத்துக் கொள்ளவும்:)

துளசி கோபால் said...

ஒரு ஜாடி மாங்காய் ஊறுகாய் பார்ஸேல்....
கோபாலுக்கு ரொம்பப் பிடிக்கும்.

கொண்டைக்கடலை எப்போ போடணுமுன்னு சொல்லலையே.....

கீதா சாம்பசிவம் said...

சரியாப் போச்சு ஆவக்காய்ச் சாதமா? கொண்டைக்கடலையைக் கொஞ்சம் ஊற வைச்சு வடிகட்டியும் சேர்க்கலாம், உடனே உப்பு, காரம் பிடிக்கும், வீணாய்ப் போகிறதில்லை. கறுப்பு கொ.க.வை விட, வெள்ளைக் கொ.க. தான் நல்லா இருக்கு. கொ.க. மட்டுமே தனியா ஊறுகாய் போடலாம். வாழ்த்துகள் ஊறுகாய்க்கு.

புதுகைத் தென்றல் said...

அடுத்தவாரம்தான் ஆவக்காய் போடப்போறேன் வல்லிம்மா.

அத்தோட ஆந்திராதக்காளி ஊறுகாயும் போட்டு வைப்பேன்.

வெள்ளரிக்காயிலும் ஆவக்காய்(தோச ஆவக்காய) அதுவும் என் ஷ்பெஷாலிட்டி.

வல்லிசிம்ஹன் said...

இதோ சேர்த்திட்டேன் கொ.கடலையை.

கோபாலுக்கு எடுத்து வைத்துவிடுகிறேன். இந்தப் பக்கம் வந்தா சொல்லுங்க. கொடுத்திடலா,ம்:)
உங்க பாட்டி ஆவக்காய் போடுவாங்கன்னு சொன்ன மாதிரி நினைவு??

வல்லிசிம்ஹன் said...

கீதா, கொ.கடலையை முதல் நாளே ஊற வச்சிட்டேன்.
சொல்லத்தான் விட்டுப்போச்சு:(

கொ.க ஊறுகாயா!!!! சொல்லுங்கப்பா ப்ளீஸ்.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

வெள்ளரிக்காய் ஆவக்காயா. எலுமிச்சை கேள்விப்பட்டு இருக்கேன். வெள்ளரி தாங்குமாப்பா காரத்தை!!!

அப்ப நீங்களும் பதிவிடணும். எல்லாரும் ஒரே மாதிரி போட மாட்டோமே.

ரெண்டு பதிவா போடுங்க. பொண்ணுக்கு அனுப்பி வைப்பேன்:)
நன்றிம்மா.

மிஸஸ்.தேவ் said...

எல்லாரும் விதம் விதமா ஊறுகாய் போடுவிங்க போல இருக்கே?! இப்போலாம் எங்க வீட்லகடைல விக்கற மதர்ஸ் ரெசிப்பி ஊறுகாய் தான் ,

ஊர்ல பாட்டி நார்த்தங்காய் ,எலுமிச்சை,நெல்லிக்காய் ,நாட்டுத் தக்காளின்னு ஊறுகாய் போட்டதை வேடிக்கை பார்த்திருக்கேன்,பாட்டி கைப் பக்குவம் மாதிரி எனக்கெல்லாம் வருமான்னு ஒரு தரம் கூட ஊறுகாய் போட ட்ரை பண்ணி பார்த்ததே இல்லை.

உங்க ஆவக்காய் ஸ்பெசல் சூப்பரா இருக்கு .

ராமலக்ஷ்மி said...

வெயில் நேரம்.

தயிர் சாதம்.

கூடவே ஆவக்காய் ஊறுகாயும் இருந்து விட்டால்...

செய்து பார்த்து விடுகிறேன்.

நன்றி வல்லிம்மா!

புதுகைத் தென்றல் said...

http://tamilmeal.blogspot.com/2009/04/blog-post_23.html

வெள்ளரிக்காய் ஊறுகாய் பதிவு போட்டாச்சு வல்லிம்மா.

:)))

சுல்தான் said...

"தமிழர்கள் புளியும் உப்பும் காரமுமாய் உணவில் பெய்து தின்கிறீர்களே" என்று கேட்டால் "அப்படியெல்லாம் இல்லையே" என்று பல முறை மறுத்திருக்கிறேன். என்றாவது செய்து இருக்க வேண்டும் அல்லது செய்யும் போது பக்கத்தில் இருந்தாவது பார்த்திருக்க வேண்டும். சும்மா சாப்பிட மட்டும் பார்க்கிற எனக்கு என்ன தெரியும்?

ஒரு அரைப்படி மாங்காய் துண்டுகளுக்கு (300 கிராம் வரும்),
300 கிராம் உப்பும், 300கிராம் வறுத்த சிவப்பு மிளகாய்ப் பொடியுமா!

இப்படித்தான் இந்த ஊறுகாய் எல்லாம் செய்கிறார்களா??
அப்படி ஒன்றும் பிரமாதமாய் காரமாய் தெரியவில்லையே !! :)

வல்லிசிம்ஹன் said...

தென்றல் படிக்கறேன் பா.. ரொம்ப நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா மிஸஸ் தேவ்.
ஒரே ஒரு மாங்காய்,நறுக்கி கடுகுப்பொடி,மஞ்சப்பொடி, மிளகாய்ப்பொடி,உப்புப் பொடி எல்லாம்
ஒரு டீஸ்பூன் அளவு
கலந்து செய்து பாருங்க.
நல்லெண்ணெயும் கலந்துக்கோங்க.
நல்லாவே இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி.

செய்துடுங்க.ஆனா அளவோட சாப்பிடுங்க.:)
நல்லபடி ஊறுகாய் வரட்டும். நல்ல புளிப்பு மாங்காய் வேணும்பா.

வல்லிசிம்ஹன் said...

சுல்தான்,

கடுகுப் பொடியை விட்டுட்டீங்களே.
அந்த 300கிராம்தான் அளவு.
எல்லாமே ஒரே அளவு.
மாங்காய்,கடுகுப்பொடி,உப்பு,மி.பொடி எல்லாம் ஒரே அளவிருக்கணும்.
அதிக காரம் போட்ட்டால் நாளாவட்டத்தில
அது தனியாத் தெரியும்.என் அனுபவம்:))
நான் துபாய் வரும்போது சுல்தானுக்குப் போட்டுத் தரேன்.
காரமா இல்லையான்னு சொல்லுங்கோ.:)

திவா said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
//அதுக்கப்புறமும் அந்தத் துண்டை அலம்பிவிட்டுச் சாப்பிடுவார்:)//
அப்ப கூட எனக்கு தாங்காது. பாத்தாலே போதும் கண்ணுலேந்து ஜலம் வந்துடும்!
:-))

வல்லிசிம்ஹன் said...

மஹா சாத்வீகம். அதான் வாசுதேவனுக்கு காரம் ஒத்துக்க வில்லை.

மாமி பாடு கஷ்டம்தான்:)

ஆயில்யன் said...

எனக்கும் ஒரு கடுக்கெண்ணெய் டைப் ஊறுகாய் பார்சல்யேய்ய்ய்ய்ய் :)))

மதுரையம்பதி said...

மாதா ஊட்டாத சாதத்தை மாங்காய் ஊட்டிவிடுமாம்....

2 கிலோ மாங்காய் வாங்கி கட் பண்ணிக் கொடுத்தேன் போன வாரம். கிட்டத்தட்ட இதே முறையில் தான் கிழியாதே வேஷ்டியை பரிமுதல் செய்து, கட் பண்ணின துண்டுகளை உலர்த்தியது என்று சிலவற்றை அம்மா செய்யும் போது கவனித்தேன்..:-)

ஊறுகாய் ரெடி, ஆனா 2 துண்டு போட்டுக்கொண்டதே போதும் என்று சொல்லிடுத்து வயிறு.... :-)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் :)

ஆயில்யன் சார் முன்னாடி அனுப்பினதை எல்லாம் வாங்கிக்கலையாமே.
சரி பார்சல் அனுப்பறேன்பா. :)

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா மௌலி.
அதெல்லாம் அந்தக் காலம்.
இப்ப அம்மாவே கொடுத்தாலும் காரம்னா ஓடும் பிள்ளைகளே அதிகம்.:)

அம்மா ஊறுகாய் போடும் காட்சியைக் கொடுத்துவிட்டீர்கள்.

goma said...

வ.சிம்ஹன் வீட்டு ஆவக்காய், இன்று உப்பில் ஊறுது .....,
அதைப் பாக்க பாக்க
எனக்கு இப்போ பசி எடுக்குது.

வல்லிசிம்ஹன் said...

வருதுப்பா வருதுப்பா ஆ.காய் வருதுப்பா..
கோமா பசி தீர்க்கவே
சுருக்'னு வருதுபா:)

அமுதா said...

ம்... சூப்பரா இருக்கு தயிர்ச்சோறோட சேர்த்து நினைச்சு பார்த்தாள். வீட்ல கூட மாமரம் காய் விட்டிருந்தது.. பேசாமல் ஊறுகாய் ஆக்கிட வேண்டியத்து தான்...

நானானி said...

இந்த ஆவக்காய் போடுற சமாச்சாரமெல்லாம் நமக்கு ஒத்து வராது. ஓரிஜினல் ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய் போட்டு எனக்கு கொண்டு வருவாள், அண்ணன் மகள்.

ஊறுகாயே தொட்டுக்கத்தான். அதிலும் ஆவக்காய் தொட்டுக்கோ தொடச்சிக்கோதான்.

அந்த கிரேவியை சூடு சாதத்தில் போட்டு நெய் விட்டு சாப்பிட்டால்....ம்ம்ம்ம்ம்! ஆனால் எப்பவாவதுதான். மருமகள் வீட்டில் முதலில் இதை சாப்பிட்டுவிட்டுத்தான் மற்ற குழம்பு, ரசமெல்லாம்.

தோசக்காய், பச்சைபுளி ஊறுகாய், தக்காளித்தொக்கு(ஆந்திரா ஸ்டைலில்) எல்லாம் பிடிக்கும்

வல்லிசிம்ஹன் said...

அமுதா, சுருக்கச் செய்திடுங்க.
இல்லாட்ட பழமாயீடும். இந்தத் தடவை எங்க வீட்டுக்காயோட்ட பழமும் நல்லா இருக்கு.

திவா said...

//மஹா சாத்வீகம். அதான் வாசுதேவனுக்கு காரம் ஒத்துக்க வில்லை.//
:-))

//மாமி பாடு கஷ்டம்தான்:)//
கஷ்டம் என்ன கஷ்டம்? எனக்கும் சேத்து வெச்சி ஊறுகாய்க்கு சாதம் தொட்டுண்டு சாப்பிடுவாங்க!

கோபிநாத் said...

வல்லிம்மா..அமீரகத்துக்கு ஏற்றுமதி உண்டு தானே!! ;-)

வல்லிசிம்ஹன் said...

வாசுதேவன், மாமிக்குக் கஷ்டம்னு சொன்னாது, உப்பும் உறைப்புமா தனக்குச் சமைக்கணும்,. அப்புறம் காரமில்லாம உங்களுக்குத்தளிகை பண்ணனும்:)

அதைச் சொன்னேன். ஆனால் ஆவக்காய் வந்துட்டாப் பொது சமையல் செய்துட்டு,ஆவக்காயைத் தொட்டுண்டு சாப்பிட்டுடலாம்:)
எங்க வீட்டில் சிங்கம் அப்படித்தான் செய்யறார்.!!!

வல்லிசிம்ஹன் said...

இங்க எங்க வீட்டுக்கு வரவங்களுக்கு மட்டும் தான் உண்டு கோபி.:)
போனாப் போறது,ஐசிஎஸ்ல அனுப்ப முடியுமான்னு பார்க்கறேன்.

சந்தனமுல்லை said...

ஸ்ஸ்ஸ்....பார்க்கவே ஆசையா இருக்கு! :-)

கெக்கே பிக்குணி said...

வல்லியம்மா, வந்துட்டேன் வந்துட்டேன், உங்க வீட்டுக்கு வந்துட்டேன். ஆவக்காய் சாதம் சாப்பிடணும்! (கறுப்பு கொ. கடலையோட வேணுமே, என் பசங்க கொ. கடலைக்கே உங்க வீட்டுக்கு வந்துடுவாங்களே!) .... ஹா, இப்பிடி பண்ணீட்டீங்களே!

வல்லிசிம்ஹன் said...

முல்லை, மாங்காய் கிடைச்சா, அம்மாவை ஊறுகாய்ப் போட்டுக் கொடுக்கச் சொல்லுங்கப்பா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க.
கெ.பி.

க.கொ.கடலை போட்டு இன்னோரு செட் போடலாமா. போற வேகத்தில பத்து பாட்டில் ஊறுகாய் வேணும்போல இருக்கே:)

நானானி said...

உங்க வீட்டு கட்டம் போட்ட துண்டு கூட பிரபலமாயிடுச்சே!!!!

வல்லிசிம்ஹன் said...

நேரிழைத்துண்டு எல்லாம் வெளுத்துக் குழந்தைகளுக்காக உள்ள வச்சு இருக்கேன்பா. அதான் இந்த
கோ ஆப்டெக்ஸ் துண்டு வந்துடுத்து ஊறுகாய்க்கு:)

வடுவூர் குமார் said...

கொண்டைக்கடலை எப்போ போடணுமுன்னு சொல்லலையே.....கோபால் சார் கேட்டவுடனே போடுங்க,முதலிலேயே போட்டு திட்டு வாங்காதீங்க. :-)))))
ஆவக்காய் ஊருகாயை ஆந்திரா வீட்டில் சாப்பிட்டு பார்க்கனும்,பாசம் இல்லாவிட்டாலும் அழவேண்டியிருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் குமார்.

திருப்பதி பீமவிலாஸ் ஊறுகாய் , சாப்பிட மிகவும் சூப்பார்.
அதைவிட விஜயவாடாவில்
எங்களுக்குக் கிடைத்த ஆவக்காய்,ஒரு கை நெய்யோடு கூட சாதம் சாப்பிட முடியவில்லை. அவ்வளவு காரம். விளைவுகளைச் சந்திக்க விருப்பமில்லாமல் நிறுத்தி விட்டோம்:)

மதுரை சரவணன் said...

thanks for sharing... its new to me.

ஷைலஜா said...

ஆவக்காய்னு இந்த மாங்காய்ல போடற ஊறுகாய்க்கு ஏன் பேர்வந்ததுன்னு யோசிச்சேன். (ரொம்ப அவசியம் என்று எனக்கே தோணினாலும்:):) காரம் மணம் குணம் நிறைந்து எல்லோர் ஆர்வத்தையும் தூண்டுவதால் ஆர்வக்காய் ஊறுகாய்தான் ஆவக்காய் ஊறுகாயானதோ?:)
வல்லிமா பதிவு படிக்கறச்சேவே நாக்குல ஜலம்..

அமைதிச்சாரல் said...

ருசியான ஆவக்காய் வல்லிம்மா :-)

ஸ்ரீராம். said...

ஆவக்காய் ஊறுகாய் ...ஸ்...ஸ்...ஆ..காரம் கொஞ்சம் தூக்கலா இருக்குமில்லே...

Geetha Sambasivam said...

இப்போக் கார் மாங்காயிலே போட்டதே இன்னும் தீரலை. பிள்ளைக்குப் பிடிக்கும்னு போட்டு வைச்சது! இந்த அழகிலே மறுபடி மாங்காய் சீசன் வருது! ரங்க்ஸ் கையும், கண்ணும் மாங்காயைப் பார்த்ததுமே வாங்கச் சொல்லும்! யார் சாப்பிடறதுனு தான் தெரியலை! :)))

RAMVI said...

விதவிதமாக ஆவக்காய்? அஹா..

எங்க வீட்டில் எல்லோருக்கும் ஆவக்காய் சாதம் ரொம்ப பிடிக்கும் என்னைத்தவிர....

நானும் ஏறத்தாழ இந்த செய்முறையில்தான் போடுவேன். ஆனால் மிளகாய் வறுக்காமல் வெயிலில் உலர்த்தி அரைத்து விடுவேன். வெந்தியம் பொடி செய்யாமல் முழுவதாக போடுவேன்.

படங்களை பார்க்கும் பொழுதே கெட்டியாக தயிர விட்டு சாதம் பிசைந்து கொண்டு இரண்டு துண்டு ஆவக்காய் தொட்டுண்டு சாப்பிட வேண்டும் போல இருக்கு.....

ஸ்ரீராம். said...

//யார் சாப்பிடறதுனு தான் தெரியலை//

உங்களுக்கு அந்தக் கஷ்டமே வேண்டாம், கீதா மேடம்! நான் இருக்கேன் உங்களுக்கு உதவ... கூரியர்ல அனுப்பினா வேண்டாம்னா சொல்லப் போறேன்?

:P :p

Asiya Omar said...

என்னவொரு ஒரு கைப்பக்குவம்..சூப்பர்.

துளசி கோபால் said...

நாலு வருசமாகியும் ஊறுகாய் கெடாமல் அப்படியே இருக்கே!!!!!

நான் இன்றைக்கு ஆப்பிள் ஆவக்காய் போடலாமுன்னு இருக்கேன்:-)
நிறைய காய்ச்சுக் கீழே கொட்டிண்டு இருக்கு இப்போ!

திண்டுக்கல் தனபாலன் said...

வாவ்... சூப்பர் அம்மா...