Blog Archive

Thursday, August 21, 2014

இன்னுமொரு கொசு வர்த்தி



நாம் எதிர்பார்க்காத போது பொக்கிஷங்கள் நம் கையில் அகப் படும்.
எப்போதும் எதையாவது தேடாவிட்டால் எனக்கு அன்றையப் பொழுது சரியாகப் போகவில்லை என்று அர்த்தம்:)

எதையோ தேடப் போவேன் எதுவோ அகப்படும்,.
அதுவும் போன மாதம் தேடின பொருளாக இருக்கும். அப்படி ஒரு அவஸ்தைப் பட்டோமே இங்க இருக்கே என்னும் முணுமுணுப்போடு அதை மீண்டும் பத்திரமான(மறுபடியும் தேடும் விதமாக) இடத்தில் வைத்துவிடுவேன்:)

போன வாரத்தில் தேடிய விஷயம் என் மருத்துவர் எழுதிக் கொடுத்த என்னைப் பற்றியும் என் உடல் நலம் பற்றியுமான
குறிப்புகள் கொண்ட புத்தகம்.

அதை நான்கு நாட்கள் தேடிக் கொண்டிருந்தேன். இணையம் வர நேரமில்லை, தொலைபேசியில் யார் பேசினாலும் அவர்களிடம் புலம்பல்கள்,
இரண்டு நாட்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தொலைபேசியில் கூப்பிடுவதையே நிறுத்திவிட்டார்கள்.:))
கோவில் பைகள், துணிக்கடைப் பைகள், அங்காடிப் பைகள் ....எல்லாம் வித விதமான பொருட்களை உள்ளடக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
அப்படி ஒரு பையில் வைத்ததுதான் பழைய கடிதங்கள்.

ஒரே ஒரு வருடக் கல்லூரி வாழ்க்கையில் கிடைத்த தோழிகளின் கடிதங்கள் வர்ணம் மாறி, எண்ணம் மாறாமல் 17 வயதுப் பெண்கள் அப்போது கடந்து கொண்டிருந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு
கிடைத்தது.

ஏதோ ஒன்றைத் தொலைத்துவிட்டு, ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொண்டோம் என்பதை உணர்த்திய கடிதம் ஒன்றை வாசித்தேன்.
இதோ அந்த 1965 அக்டோபர் மாதம் எழுதப் பட்ட கடிதம்.
நாற்பத்து நாலு வருடங்களுக்குப் பிறகு கூட என்னை வசீகரித்த வரிகள்.
எழுதியவர் மல்லிகா என்கிற மாலு,.
*******************************************************************************

அன்பு ரேவா,
எனக்குத்தான் இத்தனை நாட்களாகக் கடிதம் எழுத நேரம் இல்லை. உனக்குமா.

இல்லையாகில் நான் , கடிதம் எழுதினால் ,பதில் கடிதம் போட்டால் போதும் என்கிற எண்ணமா.அவ்வளவுதான் நம் நட்பா.
கடந்த ஒரு மாதத்தில் கடந்த ஒரு வருடத்தை எப்படி உன்னால் மறக்க முடிந்தது?
(just for reply sake if you want to write to me ., pl give up that idea.)
பொழுது போவதற்காகக் கடிதம் எழுதுபவள் நானில்லை.
எனக்கென்று ஏற்பட்ட வாழ்க்கையில் உண்டான கஷ்ட நஷ்டங்களை அறிவாய்.
உன் கடிதம் வந்து பத்து நாட்கள் ஆகின்றன. நீ பசுமலைக்குப் போய்விட்டாய் என்று தெரிந்தது. அதற்கப்புறம் எவ்வளவு விஷயங்கள் நடந்தது உனக்குத் தெரியுமா.
தம்பி கண்ணனுக்கு பொன்னுக்கு வீங்கி,
தங்கை ஜானி(ஜானகி)க்கு ஹார்ட் வீக்காம். தினம் என்ஜெக்ஷன் (ஊசி) போட்டுக் கொள்கிறாள் .
என் தலையோ வலிப்பதற்காகவே பிறவி எடுத்தது போலிருக்கிறது.
இத்தனைக்கும் நடுவில் நன் படிப்பேனா, ஆஸ்பத்திரிக்குப் போவேனா
,சமைப்பேனா நீயே சொல். உனக்குக் கடிதம் எழுத எனக்கு ஏது நேரம்!!
இதற்கிடையில் எனக்கொரு மகன் பிறந்தான்.
முழிக்காதே.
என் அக்காவிற்குப் பிறந்தால் என் மகன் தானே!!
பட்டுவிற்குப் பிறந்த மகன் அழகுச் செல்வம். அவனையும் அவன் அம்மாவையும் அவள் புக்ககத்தில் விட்டு வந்தோம்.

நீ கல்லூரியில் இல்லாதது எனக்குத் தான் நஷ்டம். நம் குரூப் சிதறிவிட்டது. ராஜேஸ்வரி ஒரு பக்கம் ,நான் வேறு கிளையில் படிக்கிறேன். கிரிஜா இன்னோரு கிளை.

ஒரே கல்லூரியில் இருந்தும் , நாங்கள் எப்பவாவது பார்த்துக் கொள்வது ஆர்ட்ஸ் காலேஜ் பஸ் நிறுத்தத்தில்தான்.
ஹை!! பை!! சீ யூ என்று போய்விடுகிறது.

எது நம் நட்பைப் பிரித்தது என்று கூடத் தெரியவில்லை.
போகட்டும் நீ மேற்கொண்டு என்ன செய்வதாக இருக்கிறாய்.

நிறையப் படி. கல்லூரிக்குப் போகவில்லையே என்று வருத்தப் படாதே.

இப்போது பி.யூ.சி யில் சேர்ந்திருக்கும் பெண்கள் நம்மைப் போல இல்லை.
ஒரே வண்ணமய நாகரீகப் பட்டாம்பூச்சிகள் போல இருக்கிறார்கள்.
எனக்கு வயதாகி விட்டதோ:))

உன் விவரங்களை எழுது. அம்மா அப்பாவுக்கு நமஸ்காரங்கள்.
தம்பி மதுரையில் பி.யு.சி சேர்ந்துவிட்டானா.
சின்னத்தம்பி என்ன படிக்கிறான்.

எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
இப்படிக்கு,
உன் அன்புத்தோழி, மாலு.
11/10/65
சென்னை.
பி.கு.
எப்படி என் தமிழ்க் கடிதம். அசத்திவிட்டேனா????
உனக்காகத் தமிழில் எழுதினேன்.(இங்கே கொஞ்சம் சிரித்துக் கொள்) .
*****************************************************************************
என் குறிப்பு.
இவள் கடிதம் எழுதி இருபது நாட்களில் என் வாழ்க்கை திசை திரும்பியதும் கதை.:) அதுவும் ஒரு கடிதம் வழியாகத்தான்.!!!


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

31 comments:

அபி அப்பா said...

சூபர் வல்லிம்மா! ஆமா இந்த மாலு இப்ப எங்க இருக்காங்க. விசாரிச்சீங்கலா?

மாதேவி said...

"எதையோ தேடப் போவேன் எதுவோ அகப்படும்," அதுவும் நல்லதுதான்.தோழியின் கடிதம் நமக்கும் படிக்கக் கிடைத்ததே.

அன்பான வேண்டுகோள் வைத்தியப் பதிவேடு முக்கியமானதும் கூட ஒரு பைலில் வைத்துக் கொண்டால் எடுப்பதற்கு இலகுவாக இருக்குமே.

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா, அதுதான் மகாப் பெரிய நஷ்டம் என் தோழ்ஹிகளுக்கும் என் வயதுதானே இருக்கும். இந்தச் சென்னையில் தான் இருக்கிறார்களோ. தெரியாது. நானும் ஒவ்வொரு பெண்மணியின் முகத்தைப் பார்க்கும்போது இவள் அவளோ!!

என்று பலமுகத்தைப் பார்ப்பேன். இரண்டு மூன்று தடவை கேட்டு ஏமாந்ததுண்டு

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
உண்மைதான்
ஓ! அந்த ஃபைல் கிடைத்து விட்டதம்மா. அழாகாய் ஒரு கறுப்பு ஃபோல்டரில் ஐந்து வருட சர்க்கரை பற்றிய பதிவுகள்,மற்றதெல்லாம் அடுக்கு அலமாரியில்
இடம் மாறி வைத்து இருக்கிறேன்.
வைத்த இடம் தெரியவில்லையே கண்ணே ஏன்னு பாடிக் கிட்டே தேடி எடுத்தும் விட்டேன்.
இது இல்லாமல் மருத்துவரையும் பார்க்க முடியாதேம்மா. அவங்க ,பரிகாசம் செய்ய மாட்டாங்களா.
நன்றிம்மா. இனிக் கவனமா இருப்பேன்.
.

Jayashree said...

Gilbert Chesterton ஓட "What I found in my pocket" மாதிரி எனக்குத்தான் சாமான்கள் கிடைக்கும்னு நினைத்தேன்.so company யும் இருக்கு!!ஆனா அது எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கறது !! இல்லை? அதெல்லம் திரும்பி வரலையேன்னு எவ்வளவு ஏக்கமா இருக்கு சில சமயம். Enjoy the letter:))

துளசி கோபால் said...

ஹைய்யோ.......... என்ன மாதிரி எழுதிட்டா இந்த மாலு!!!!!


எனக்கும் தினம் ஒரு மணி நேரம் தேடும் வேலைக்குன்னே ஒதுக்கிவச்சாகணும்.

ச்சும்மா கராஜ்லே போய் நின்னு தேடணும். என்னத்தைன்னு தெரியாது...ஆனால் தேடிண்டு இருப்பேன்:-)

Jayashree said...

கேட்க மறந்துவிட்டேன். ஆமா! இந்த மொக்கை, கொசுவத்தி, கடாய்கிறது,பீலாவறது க்கெல்லம் என்ன அர்த்தம் please?

Geetha Sambasivam said...

அருமையான கடிதம், ஹிஹி, 65-ம் வருஷமா?? பள்ளியிலே படிச்சிட்டு இருந்தேன். :D

நம் சம்பந்தப் பட்ட குறிப்புக்களை எளிதாய் எடுக்கிறாப்போல் புடைவை அலமாரியிலோ, அல்லது கப் போர்ட் மேலேயோ ஒரு போல்டரில் போட்டு வச்சுட்டால் எடுக்க எளிதாய் இருக்குமே! புடைவை அலமாரின்னா அடிக்கடி திறப்போம். அதனால் தொலைய சான்ஸ் இல்லை. இதைத் தவிரவும் வெளியே போனால் கைப்பையிலேயும் ஒரு குறிப்பை வச்சுக்க வேண்டி இருக்கு. வேறே தொந்திரவுகளுக்காக வேறே மருத்துவரைப் பார்த்தாலும் எல்லாத்தையும் தூக்கிண்டு போகணும்! :)))))))

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, உங்களுக்காகவே போட்டிருக்காங்களோ துளசி,

செய்யும் வேலையில் கவனம் வேணும்" அப்படினு பதிவு??? :)))))))))))))) போற போக்கிலே ஏதோ நம்மாலானது! :D

ambi said...

// முழிக்காதே. //

ஹிஹி, அப்பவே இதே முழி தானா? :p

கவலப்படாதீங்க, ரேவாக்கு ஒரு பிளாக் இருக்கற மாதிரி மாலுவுக்கும் ஒரு பிளாக் இருக்கும். அங்க இதே மாதிரி உங்க பதில் கடிதம் வந்தா கப்புனு பிடிச்சிரலாம். :))

வல்லிசிம்ஹன் said...

ஆஹா !அம்பி.சூர்யா சென்னையிலும் நீங்கள் பங்களூருவிலும் இருப்பதாக அறிந்தேன். பேச ஆரம்பித்திருப்பான்.
வளுக்கு ப்ளாக் இருந்தாலும் ஆங்கிலத்தில் ஏதாவது ஷேக்ஸ்பியர் மாதிரி எழுதுவா,.
உங்க எண்ணம் பலிக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க வங்க. கீதா! என்னது இது துளசியைச் சீண்டியாறது. :)
நிங்க அவங்க எல்லாம் ஒரே வயசு .மறதியும் எல்லாருக்கும் வரதுதானே.
நம் வீட்டில் என்ன சிரமம் தெரியுமா.
மகன் வந்தால் அம்மா ஃபைல். அப்பா ஃபைல் எல்லாத்தையும் ஆடிட்டர் மாதிரி செக் பண்ணுவான். அதை மாதிரிச் செக் செய்துட்டு,
அபிப்பிராயம் சொல்லிட்டு, தன்னோட இடத்தில வச்சிடுவான்.
இதுவும் பத்ரமா என்புடவைகளுக்கு நடுவில் காட்ரேஜில் இருந்தது:)))

வல்லிசிம்ஹன் said...

துளசி , நான் ,உங்களை அப்படி விஷுவலைஸ் செய்து பார்த்தேன்:)
அப்பவும் எந்தப் பதிவில இதை எழுதலாம்னு நீங்க யோசித்த மாதிரி தென் பட்டது.
உங்க பதிவில குரங்கிகள் அட்டகாசம் தாங்க முடியலையாமே;0)hAIYO thulasi:))))

வல்லிசிம்ஹன் said...

Sure Jayashree.
I found these letters in the last shelf aalong with my tidbits.
I am glad I did not throw rhem away. I have oodles of mails now with,.
ammaa.appaa,thambi,paatti all have written tome. somehhow after reading it is tough to come back.like travelling in Timemachine!

பாலராஜன்கீதா said...

//அந்த ஃபைல் கிடைத்து விட்டதம்மா. அழாகாய் ஒரு கறுப்பு ஃபோல்டரில் ஐந்து வருட சர்க்கரை பற்றிய பதிவுகள்,மற்றதெல்லாம் அடுக்கு அலமாரியில்
இடம் மாறி வைத்து இருக்கிறேன்//
file - life என்ற இருகோடுகள் மற்றும் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத என்ற திருவருட்செல்வர் கொசுவத்தி நினைவு வந்தது.

பாலராஜன்கீதா said...

/இவள் கடிதம் எழுதி இருபது நாட்களில் என் வாழ்க்கை திசை திரும்பியதும் கதை.:) அதுவும் ஒரு கடிதம் வழியாகத்தான்.!!!//
உங்கள் திருமணமா ?
:-)

வல்லிசிம்ஹன் said...

ஜயஷ்ரீ, கொசுவத்தி=மலரும் நினைவுகள்.
கலாய்க்கறது=டபாய்க்கிறது, ஃபீலாகிறது=உணர்ச்சி வசப்படறது.
பீலா விடறது=ரீல் விடறது:)
புரிஞ்சுதா.எல்லாம் கிண்டல் வார்த்தைகள்.

துளசி கோபால் said...

அந்தக் 'கொசுவத்தி' காப்பிரைட் என்னிடம் இருக்கு என்பதை இங்கு 'தெளிவுபடுத்தி'க் கொள்கின்றேன், தெலுசா? :-))))

வல்லிசிம்ஹன் said...

அடடா! வரணும் பாலராஜன் கீதா.
அதுக்காகத்தான் என் ஸ்டேடஸ் மெசஜ், இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடத்தத் தேடின்னு வச்சிருக்கிறேன்:)
தேடுவதே வாழ்வு இல்லையா.
எனக்கும் இரு கோடுகள் படத்தில் அந்த சீன் ரொம்பப் பிடிக்கும்.

நீங்கள் சொன்னது போலவே தான் நடந்தது. அக்டோபர் 31 திருமணம் நிச்சயிக்கப் பட்டது.
எல்லாக் கதையும் முன்னாடியே எழுதிட்டேன்:)

வல்லிசிம்ஹன் said...

இதனால் பதிவுலக அன்பர் அனைவர்க்கும் தெரிவித்துக் கொள்வது
என்னவென்றால் ,
நம்ம துளசி தங்கச்சிதான் முதல்ல கொசுவத்திங்கற வார்த்தையை
நாலஞ்சு வருஷங்களுக்கு முன்னயே
கண்டு பிடிச்சு, பாடண்ட் ரைட்ஸ் எல்லாம் வாங்கிடுச்சு.
வத்தியை ஏத்தணும்னா முதல்ல துளசிக்கு
சூடம் ,கற்பூரம்,சாம்பிராணி காமிச்சுட்டுத் தான் ஏத்தணும். நல்லாக் கேட்டுக்குங்க:))))

Kavinaya said...

அச்சோ! என்ன ஒரு அழகான கடிதம்! உங்க தோழி சூப்பரா எழுதியிருக்காங்க அம்மா. கொசுவத்தியே (நன்றி: துளசிம்மா) மணக்குதே :)

நீங்க தேடுவதெல்லாம் உடனே கிடைக்க வாழ்த்துகள் வல்லிம்மா!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கவிநயா.
நாங்க ஒரு 6 பேர் எதிராஜில் சேரும்போதே நண்பர்கள் ஆகிவிட்டோம்.
மாலு,ஜார்ஜ் டவுன், ராஜேஸ்வரி திருவல்லிக்கேணி, கிரிஜா சூளைமேடு, பிரேமா பெரம்பூர்,நான் புரசைவாக்கம். ஜெயந்தி நுங்கம்பாக்கம்.
உண்மையான சினேகிதிகளாக இருந்தோம். எனக்குப் பிறகு அவர்கள் பட்டப் படிப்பு சேர்ந்து முடித்தார்கள்.
திருமணம் ஆனதால் வேறு மாவட்டத்துக்கு நான் போய்விட்டேன். சென்னை வந்தும் அவ்வப்போது நினைப்பேன்.
ஆனால் பழைய உந்துதல் இல்லை.:(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தேடறது உங்களுக்கும் தொழிலா சரிதான் :)

அப்பறம் இந்த மாலு கடிதம் படிச்சு எனக்கும் துளசி மாதிரியே என்னம்மா எழுதிட்டாங்கன்னு தோணுச்சு.. அட்டகாசமான ரைட்டிங்க்.. நீங்க அந்த வயதுக்கே போயிருந்திருப்பீங்க..இந்த பதிவு எழுதும் போது கூட அந்த வயதோடயே எழுதி இருப்பீங்கன்னு தோணுது.. :)

வல்லிசிம்ஹன் said...

வாங்க முத்துலட்சுமி.
அவள் ஆங்கிலத்தில் புலமை பெற்றவள். எனக்கு எழுதுவதனால்
,அவள் கடிதத்தில் வார்த்தைகளுக்கு டிக்ஷனரியில் அர்த்தம் பார்க்கணும்.
தூத்துக்குடி
பேராசிரியர் அ. ஸ்ரீனிவாசராகவனின் அக்கா மகள்.
சௌகார்பேட்டில் ஒரு குஜராத்திப் பள்ளியில் படித்தவள்.
எத்தனை அன்போ அத்தனை நறுக்குத் தெரித்த மாதிரி வார்த்தைகள் விழும்:)
எங்கே தேடுவேன்னு பாடத்தான் ஆசையாக இருக்கு.

கோமதி அரசு said...

சின்னவர் பெரியவர் என்று வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரும்
வைத்த இடத்தை விட்டு வேறு இடத்தில் தேடுவதும்,ஒன்றை தேடும் போது மற்றது கிடைப்பதும் வாடிக்கை தானே.

//நாம் எதிர்பார்க்காத போது பொக்கிஷங்கள் நம் கையில் அகப்படும்.//
உண்மை.

geethasmbsvm6 said...

//ஆஹா !அம்பி.சூர்யா சென்னையிலும் நீங்கள் பங்களூருவிலும் இருப்பதாக அறிந்தேன். பேச ஆரம்பித்திருப்பான்.//

ஹிஹிஹி, வல்லி, நீங்க மீனாள் போன சோகத்திலே இருந்தீங்களா? அதான் உங்களுக்குத் தெரியலை, அம்பி வஸ்த்ரகலா வாங்கிக் கொடுத்தாச்சு, தெரியுமா? எல்லாம் நம்ம ராமலச்சுமிமிமிமிமிமிமிமி அவங்களோட உதவியினாலே, பின்னாலே அவங்களுக்குக் கிடைக்குமில்ல அதான்!

http://geethasmbsvm6.blogspot.com/2009/11/blog-post_22.html// இங்கே பாருங்க, லிங்க் கொடுக்க நேரமில்லை இப்போ,
ஒரு சின்ன விளம்பரமும் கூட! :D

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கோமதி.
குடும்பம் ஒரே இடத்தில் தங்கினால் தோழிகளைப் பார்ப்பதும் பேசுவதும் சுலபம்.

அப்பாவுக்கும் மாற்றல் வேலை. இவருக்கும் அப்படியே.
திருமண வாழ்க்கை நம்மை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்துவிடுகிறது.
என் மகளுக்கு அப்படியில்லை. அவள் படித்தது ,வேலை பார்த்தது எல்லாம் சென்னையில். இன்னும் பார்க்கப் போனால் அவள் தோழிகளில் பாதிப் பேர் வட அமெரிக்காவில் இருக்கிறார்கள்
நவராத்திரிக்கும், கோவிலிலும் பார்த்துக் கொள்கிறார்கள்.:0) இமெயில் போட்டுக்கொள்ளுகிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அட வஸ்த்ரகலா வந்தாச்சா. நான் பார்க்காம்ப் போயிட்டேனே. நேத்திக்குப் படிச்சுட்டேன்.
புடவைன்னதும் பார்சலுக்காகக் காத்து இருக்கேன். எனக்கு அரக்குல சிவப்பு ஜரி
கை போட்டு வேணும்:)
கீதான்னா கீதாதான். எடுத்த காரியத்தை முடிச்சுட்டீங்களே.

ஸ்ரீராம். said...

இந்தச் சுவையான கடிதத்தை நான் இப்போதுதான் படிக்கிறேன்!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான கடிதம்
கடிதத்தின் ஒவ்வொரு எழுத்திலும் அன்பின் வெளிப்பாடு அற்புதமாய் வெளிப்படுகிறது
நன்றி சகோதரியாரே

வல்லிசிம்ஹன் said...

ஆஹா.அதுக்காகத்தான் மீள் பதிவு ஸ்ரீராம். யாரையாவது சும்மா விடலாமா. ஏற்கனவே எழுதினதைப் பதிவதனால் கைவலி மிச்சம்.வேறு ஏதாவது எழுதப் போய் சோகப்படுவது மிச்சம். நன்றி மா.