About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, August 21, 2014

இன்னுமொரு கொசு வர்த்திநாம் எதிர்பார்க்காத போது பொக்கிஷங்கள் நம் கையில் அகப் படும்.
எப்போதும் எதையாவது தேடாவிட்டால் எனக்கு அன்றையப் பொழுது சரியாகப் போகவில்லை என்று அர்த்தம்:)

எதையோ தேடப் போவேன் எதுவோ அகப்படும்,.
அதுவும் போன மாதம் தேடின பொருளாக இருக்கும். அப்படி ஒரு அவஸ்தைப் பட்டோமே இங்க இருக்கே என்னும் முணுமுணுப்போடு அதை மீண்டும் பத்திரமான(மறுபடியும் தேடும் விதமாக) இடத்தில் வைத்துவிடுவேன்:)

போன வாரத்தில் தேடிய விஷயம் என் மருத்துவர் எழுதிக் கொடுத்த என்னைப் பற்றியும் என் உடல் நலம் பற்றியுமான
குறிப்புகள் கொண்ட புத்தகம்.

அதை நான்கு நாட்கள் தேடிக் கொண்டிருந்தேன். இணையம் வர நேரமில்லை, தொலைபேசியில் யார் பேசினாலும் அவர்களிடம் புலம்பல்கள்,
இரண்டு நாட்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தொலைபேசியில் கூப்பிடுவதையே நிறுத்திவிட்டார்கள்.:))
கோவில் பைகள், துணிக்கடைப் பைகள், அங்காடிப் பைகள் ....எல்லாம் வித விதமான பொருட்களை உள்ளடக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
அப்படி ஒரு பையில் வைத்ததுதான் பழைய கடிதங்கள்.

ஒரே ஒரு வருடக் கல்லூரி வாழ்க்கையில் கிடைத்த தோழிகளின் கடிதங்கள் வர்ணம் மாறி, எண்ணம் மாறாமல் 17 வயதுப் பெண்கள் அப்போது கடந்து கொண்டிருந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு
கிடைத்தது.

ஏதோ ஒன்றைத் தொலைத்துவிட்டு, ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொண்டோம் என்பதை உணர்த்திய கடிதம் ஒன்றை வாசித்தேன்.
இதோ அந்த 1965 அக்டோபர் மாதம் எழுதப் பட்ட கடிதம்.
நாற்பத்து நாலு வருடங்களுக்குப் பிறகு கூட என்னை வசீகரித்த வரிகள்.
எழுதியவர் மல்லிகா என்கிற மாலு,.
*******************************************************************************

அன்பு ரேவா,
எனக்குத்தான் இத்தனை நாட்களாகக் கடிதம் எழுத நேரம் இல்லை. உனக்குமா.

இல்லையாகில் நான் , கடிதம் எழுதினால் ,பதில் கடிதம் போட்டால் போதும் என்கிற எண்ணமா.அவ்வளவுதான் நம் நட்பா.
கடந்த ஒரு மாதத்தில் கடந்த ஒரு வருடத்தை எப்படி உன்னால் மறக்க முடிந்தது?
(just for reply sake if you want to write to me ., pl give up that idea.)
பொழுது போவதற்காகக் கடிதம் எழுதுபவள் நானில்லை.
எனக்கென்று ஏற்பட்ட வாழ்க்கையில் உண்டான கஷ்ட நஷ்டங்களை அறிவாய்.
உன் கடிதம் வந்து பத்து நாட்கள் ஆகின்றன. நீ பசுமலைக்குப் போய்விட்டாய் என்று தெரிந்தது. அதற்கப்புறம் எவ்வளவு விஷயங்கள் நடந்தது உனக்குத் தெரியுமா.
தம்பி கண்ணனுக்கு பொன்னுக்கு வீங்கி,
தங்கை ஜானி(ஜானகி)க்கு ஹார்ட் வீக்காம். தினம் என்ஜெக்ஷன் (ஊசி) போட்டுக் கொள்கிறாள் .
என் தலையோ வலிப்பதற்காகவே பிறவி எடுத்தது போலிருக்கிறது.
இத்தனைக்கும் நடுவில் நன் படிப்பேனா, ஆஸ்பத்திரிக்குப் போவேனா
,சமைப்பேனா நீயே சொல். உனக்குக் கடிதம் எழுத எனக்கு ஏது நேரம்!!
இதற்கிடையில் எனக்கொரு மகன் பிறந்தான்.
முழிக்காதே.
என் அக்காவிற்குப் பிறந்தால் என் மகன் தானே!!
பட்டுவிற்குப் பிறந்த மகன் அழகுச் செல்வம். அவனையும் அவன் அம்மாவையும் அவள் புக்ககத்தில் விட்டு வந்தோம்.

நீ கல்லூரியில் இல்லாதது எனக்குத் தான் நஷ்டம். நம் குரூப் சிதறிவிட்டது. ராஜேஸ்வரி ஒரு பக்கம் ,நான் வேறு கிளையில் படிக்கிறேன். கிரிஜா இன்னோரு கிளை.

ஒரே கல்லூரியில் இருந்தும் , நாங்கள் எப்பவாவது பார்த்துக் கொள்வது ஆர்ட்ஸ் காலேஜ் பஸ் நிறுத்தத்தில்தான்.
ஹை!! பை!! சீ யூ என்று போய்விடுகிறது.

எது நம் நட்பைப் பிரித்தது என்று கூடத் தெரியவில்லை.
போகட்டும் நீ மேற்கொண்டு என்ன செய்வதாக இருக்கிறாய்.

நிறையப் படி. கல்லூரிக்குப் போகவில்லையே என்று வருத்தப் படாதே.

இப்போது பி.யூ.சி யில் சேர்ந்திருக்கும் பெண்கள் நம்மைப் போல இல்லை.
ஒரே வண்ணமய நாகரீகப் பட்டாம்பூச்சிகள் போல இருக்கிறார்கள்.
எனக்கு வயதாகி விட்டதோ:))

உன் விவரங்களை எழுது. அம்மா அப்பாவுக்கு நமஸ்காரங்கள்.
தம்பி மதுரையில் பி.யு.சி சேர்ந்துவிட்டானா.
சின்னத்தம்பி என்ன படிக்கிறான்.

எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
இப்படிக்கு,
உன் அன்புத்தோழி, மாலு.
11/10/65
சென்னை.
பி.கு.
எப்படி என் தமிழ்க் கடிதம். அசத்திவிட்டேனா????
உனக்காகத் தமிழில் எழுதினேன்.(இங்கே கொஞ்சம் சிரித்துக் கொள்) .
*****************************************************************************
என் குறிப்பு.
இவள் கடிதம் எழுதி இருபது நாட்களில் என் வாழ்க்கை திசை திரும்பியதும் கதை.:) அதுவும் ஒரு கடிதம் வழியாகத்தான்.!!!


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
Post a Comment