About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, May 17, 2014

சில் என்று சில நினைவுகள் 11

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சென்ற சித்திரை நிலவு  இந்த  வருடம் உபயோகமாகிறது.                                                 இங்கே  மழை மேகங்கள் நிலா அன்னையை மறைத்துவிட்டன.                                        இனி விட்ட இடத்தில் தொடரலாமா................................  குழந்தைக்கு      ஒரு மாதம் பூர்த்தியான நிலையில்    ஒரு சிறு சங்கடம். அதன் குருத்துப் போன்ற கழுத்தில்     சிறிய    கட்டி.   அம்மாவுக்கும் அப்பாவுக்கும்  பூதாகரமான  கவலை. அவர்களின்   முதல்    குழந்தைக்கும் இது போல்த் தலையில் வந்து அது  பிறந்த எட்டே மாதத்தில்  இறைவனடி சேர்ந்தது.                                 நானும்    அம்மா அப்பா சகிதம் சந்தைப்பேட்டைக்கு மீண்டும் மருத்துவரிடம் வந்தோம்.   அவர் எடையைச் சோதித்துவிட்டு ஒரு கிலோ ஏறி இருக்கிறான்.   பரவாயில்லை. சாப்பாடு எப்படி என்றார்.  கூடவே பசும்பால் கொடுங்கள்.  ஆப்டெக்ஸ் மருந்து  குழந்தைகளுக்கு வைட்டமின். அதையும் கொடுக்கலாம். இரவு தூங்குகிறானா     என்றெல்லாம் கேட்டார். இரவு முழுவதும்   விடிவிளக்கையே பார்க்கிறான். பகலில் நன்றாகத் தூங்குகிறான் என்றதும்      சிரித்துவிட்டார். நீ என்ன பண்ணுவே அவனோட  சேர்ந்து விளக்கைப் பார்ப்பியா அம்மா என்றார். இல்லை      காமிக்ஸ் படிப்பேன்    என்றதும்      அவர் திரும்பி என் பெற்றோரைப் பார்த்தார். நாங்கள் தான் பெரிய புத்தகங்களை அவள்    படிக்க வேண்டாம் என்று                                               காமிக்ஸ்  புத்தகங்களை      கொடுத்தோம்.    என்றதும் அவர்    என்னைப் பார்த்து                                           உனக்கும்  ஓய்வு வேண்டும்        அதை நினைவில் வைத்துக் கொள்.    குழந்தையைப் பழக்குவது உன் கையில். அவரிடம் சொல்ல விட்டது என் பாட்டியைப் பற்றி.    பையன் பாட்டி மடியில் தான் முழுநேரமும் இருப்பான். பாட்டிக்கோ இரவுத் தூக்கம் போய் வருடங்கள் பல ஓடியிருந்தன.                                  இந்த  புத்திமதிகள் சொல்லிவிட்டுக் குழந்தையின் கழுத்தை ஆராய்ந்தார்.   கழுத்து எலும்பில்    ஒன்றும் தப்பு இல்லை. ரத்தக் குழாயில்        ஒரு சிறு    அடைப்பு.அதுவும் பயப்படத்தேவையில்லை. பிறக்கும் போது சில குழந்தைகள்      சிரமப்பட்டு வெளியே வரும்போது தலையில்   அழுத்தம் இருக்கும். இவனுக்குப் பெரிய தலை இல்லையாம்மா  என்றார்.ஆமாம் அவன் அப்பா   மாதிரி  என்றேன் பெருமையாக.           ஆங்.பார்த்தியா. தலைகனம் கூடாதுனு     இதுக்குதான் சொல்றது என்று ஜோக்கடித்தார்.  அம்மா அப்பாவுக்கு ரசிக்கவில்லை.                                               தலையில் ரத்தம் அழுத்தம் ஏற்பட்டால் கழுத்தில் சிறிதளவு தங்கிவிட்டது. பயமொன்றும்           இல்லை.ஆயின்மெண்ட் தருகிறேன்     .தடவி வாருங்கள். அடுத்த செக் அப்புக்கு வரும்போது இருக்காது பாருங்கள்.                           நீ நிறைய  சாப்பிடணும். இப்படி 48 கிலோவிலியே  நிற்கக் கூடாது. நிறைய நடக்கணும். அவனுக்கு நிறைய சாப்பிடக் கொடுக்கணும். எப்போது       உன் வீட்டுக்குப் போவே  என்றூ    கேட்டார். நான் எப்போதும் போல் மௌனம். அம்மா  நான்கு    மாதமாவது   போகணும். இன்னும் இவளுக்குப் பழகவில்லை என்றார்.                                                                    இல்லையே  எனக்குச் சேலத்திலிருந்து ஃபோன் வந்ததே. பொங்கலுக்கு வருவதாகவும்  அழைத்துக் கொண்டுபோவதாகவும்         சிம்மு சொன்னாரே. நேற்றுதான்        பேசினேன்.குழந்தையை நன்றாகச் செக்கப் செய்யச் சொல்லி எனக்கு  ஆர்டர்  என்று சிரித்தார்.                                                                           அப்போதுதான் கார்த்திகை  முடிந்திருந்தது.   இவர்கள் கணக்குப் படி   மார்ச்   மாதம் நாங்கள் சேலம்       போனால் போதும்.   சிங்கத்துக்கு அவ்வளவு பொறுமை இருக்குமா தெரிய வில்லை.     சரி சரி என்று தலையாட்டுவார். ஆனால் தான் போன வழியில் தான் போவார். அது எனக்குத் தெரியும்.                                    வீட்டுக்கு வந்து சேலத்துக்கு  அப்பா தொலைபேசிக் குழந்தையின்     சௌக்கியத்தைச் சொன்னார்.              அவர்  சொன்னது ஒரு வியாழக்கிழமை    மதியம்.   மறுநாள்    வெள்ளிக்கிழமை   இரவு    படபட  புல்லட்  பசுமலையை அதிரவைத்துக் கொண்டு வந்துவிட்டது.:))

வசர சமையல் .ரசம்,உ.கிழங்கு வதக்கல், பாயசம் என்று மாப்பிள்ளைக்குப் பாட்டி செய்துவிட்டார். பாட்டியோடு நல்ல  தோஸ்த் பிடித்துக் கொண்டு சிங்கம் தன் வாதத் திறமையை உபயோகிக்கப் பார்த்தார்.             பாட்டியின்  திறமை    அவருக்குத் தெரியாது. நான்கு பிள்ளைகளை வளர்த்தவர் ஆச்சே.        நானே  சேலத்தில் கொண்டு  விடுகிறேன். நீங்கள் கவலையெ    படவேண்டாம். பேரனும் என் பேத்தியும்  கொஞ்சம் தேறட்டும்.    அங்க வந்து உடம்புக்கு ஏதாவது படுத்தினால் உங்களுக்குத் தானே கவலை அதிகம் ஆகும்  என்றெல்லாம் சொல்லிச் சமாதானப் படுத்தினார்!!!!
Post a Comment