Blog Archive

Friday, September 06, 2013

பேசாத மௌனங்கள்








''ரு'' இந்த எழுத்து நினைவுகளைதிருப்பி விட்டது.
அந்த எழுத்து என் அம்மா வழிப்பாட்டியின் முதல் எழுத்து. ருக்குமணியின் ரு:)
பெண்ணின்வீட்டு அலங்காரப் பொருட்களைத் துடைத்து,அடுக்கிக் கொண்டு வைத்துக் கொண்டிருக்கும்போது, இந்த ருவும் என்னைப் பார்த்தது. ரு பொறிக்கப்பட்ட பொருள் ஒரு பித்தளையாலான விளையாட்டுத் தேங்காய்.
கல்யாணங்களில் பெண்ணுக்குச் சீராக தரப்படும் மணைகள்,குடம்,விளக்குகள்,அண்டாக்கள் இவைகளோடு இந்த பித்தளைத் தேங்காயும் வருமாம்.,
ஒரு மங்கலப் பொருளாக.
அழகான உருண்ட,மூன்றுபாகமாகப் பிரிந்திருக்கும். குடுமி ஒன்றுதான் கிடையாது. மூன்று கண்கள் உண்டு தேங்காய் போலவே.
அது
என் அம்மாவுக்குக் கொடுக்கப்பட்டு என்னிடம் வந்து, இப்போது சிகாகோ ஷெல்ஃபில் உட்கார்ந்திருக்கிறது.
அது எந்தத் திருநெல்வேலிக் கடையில் செய்தார்களொ.
எனக்கு அதெல்லாம் கூட மனதை நெருடவில்லை.
இங்கே பொழுது ஆரம்பிப்பது போலவே,என் சீனிம்மாவும் பொழுதும் ஆரம்பிக்கும்.
எனக்கு டேஸ்ட்மாஸ்டர்'ஸ்
சாய்ஸ் காப்பி.

அவளுக்கு வறுத்து அரைத்த காப்பிப் பொடியை அழகான வெள்ளி ஃபில்டரில் போட்டு காப்பி இறக்கணும்.
ஆசாரமான குடும்பம்.
அதனால் காப்பிக்குத் தனி இடம்.
கீழே கரியடுப்பில் கெட்டிலில் வென்னீர் கொதிக்கும்.
அதற்குப் பக்கம் மேலே மேடையில் சாணி போட்டு மெழுகிய அடுப்புகள் நான்கு இருக்கும்.
 அரிசி மாவுக் கோலம் போட்டு அந்த மங்கலான் பல்பு வெளிச்சத்திலும் பளிச்சென்று வைத்திருப்பாள்.
அந்த நாலரை மணிக்கு அவள் எழுந்திருக்கும் போதே, அவள் புடவையைப் பிடித்த வண்ணம் உட்கார்ந்து இருந்தது நினைவிருக்கிறது.

என்க்கெனத் தனியாக் ஒரு மரப்பலகையைப் போட்டு உட்கார வைத்துக் கதைகள் சொல்லியபடி வேலைகளை ஆரம்பிப்பாள். அப்போதெல்லாம்,
அதிகாலை நான்கு மணிக்கு புரசவாக்கம் பக்கம் நல்ல தண்ணிர் குழாயில் வரும்
அது வீட்டுக்குள் இருக்கும் குழாய்.
அது முதலில் திறக்கும் போது காற்றோடு சத்தம் வரும்.
சீனிம்மா பாத்திரங்களை அடுக்காக எடுத்து வைப்பார்.
ஒரு உயரத்திண்ணையில் ''அம்மி ''பொருத்தப் பட்டிருக்கும். அதன் மேல் ஒரு சிமெண்ட் தொட்டி.
அதை மூட ஒரு பெரிய தாம்பாளம்.
குழாயில் தண்ணீர் வர ஆரம்பித்ததும் பளபளவென்று துலக்கிவைத்த பெரிய சொம்பு வழியாக தண்ணீரை நிரப்பி எடுத்துத் தொட்டியில் கொட்டுவார்.
வரிசையாகஇருக்கும் துலக்கப்பட்ட அண்டாக்கள் நிறைந்ததும்,
முதல் நாள் அழுக்கான பாத்திரங்களைத் தேய்க்கும் வேலை ஆரம்பிக்கும்.

பழைய சணல், தேங்காய் நார் ,ஒரு மரத்தட்டில்.
இன்னோரு மரத்தட்டில் புளியும் உப்பும்,புது மணல்,அரப்புப் பொடி.

ஒரு கலவையான வாசனை தூக்கும்.

நான்கு மணிக்கு ஆரம்பித்த ஏழுமணி அளவில்  நின்றுவிடும். அதற்குள்
குளித்து, கடவுள் நமஸ்காரம் செய்து அம்மா(என் பாட்டி)வுக்குச் சமையலில் உதவி செய்ய வந்து விடுவார்கள்.
பெரியமாமா காய்கறி நறுக்குவார்.
அடுத்த மாமா  அன்வர் ஸ்டோருக்குப் போய் என்ன வாங்கிவர என்று ஒரு லிஸ்ட் எடுப்பார்.
அவரே ஃபண்ட் ஆஃபீஸ் வேலையும் பார்ப்பார். அதாவது பணம் எடுப்பது கட்டுவது.
அடுத்தமாமா சைக்கிளைத் துடைத்து விட்டுக் காய்கறி வாங்கி வரப் போவார்.
கடைசிமாமா.
ஒருவருக்குப் பாரி&;கோ வில் வேலை. அடுத்தவருக்கு தந்தி  அலுவலகம்,
மூன்றாவது மாமா விவேகானந்தா  கல்லூரி,

சின்ன மாமா கல்லூரியில் அடியெடுக்கக் காத்திருப்பவர். கிரிக்கெட் ரசிகர்.

இதற்குள்  இரு மண் பூசின அடுப்புகளிலும் வெண்கலப்பானையும் ,கொடி அடுப்பில் பருப்பும் வேக ஆரம்பித்திருக்கும்.

சீனிம்மா கொடுக்கும் கழுநீர் எல்லாவற்றையும் சிந்தாமல் ஒரு பக்கெட்டில் கொட்டிவைத்தால் அது பசு மாட்டின் தாகத்துக்குத் தீர்வாய் இருக்கும்.
பாட்டியின் ஆசாரத்துக்குச் சாணி மிகவும் அவசியம்:)
வாசல் தெளிக்க, சாப்பிட்ட இடத்தில் சுத்தம் செய்ய.  இத்யாதி வேலைகளுக்கு.
ஆண்டா !!அந்த சாணியை  என்று ஆரம்பிக்கும் முன் ஓடிவிடுவேன் பக்கத்துவீட்டுக்கு:)

அங்கே  விகடனில் வேலை செய்து கொண்டிருந்த மாமா அப்பொதுதான்
 சிவ பூஜையை முடித்துக் கொண்டிருப்பார். பிச்சு மாமி அன்னம் நெய் என்று வரிசையாக வைப்பார்.
ஆரத்திகாட்டும்போது அங்கெ இருக்கிற ஸ்வாமிகளுக்கும் எங்கள் வீட்டு சாமிகளுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பேன்.
குளிச்சியோடி பொண்ணே? என்றவாறு  மணி மாமா சிரிப்பார்.
நேத்திக்கே குளிச்சுட்டேன் மாமா. என்று நானும் சிரிப்பேன்.
பிச்சு!!! குழந்தைக்கு பேரீச்சம்பழம் கொடு. குச்சியாட்டம் இருக்கு பாரு.
இதொ  அண்ணா என்றவாறு அந்த அம்மாவும் கொடுப்பார். மெல்ல வாசலுக்கு வந்து எட்டிப் பார்ப்பேன். அங்கே  சுத்தம் செய்யும் வேலை முடிந்திருக்கும்:)

அம்மா(என்)வுக்கு லேசாகக் கோபம் வரும். வேலையெல்லாம் கத்துக்க வேண்டாமா.  கதைப் புத்தகத்தைக் கையில் எடுத்து மணிக்கணக்கில ஜன்னல்ல உட்காரத் தெரிகிறது. இடுப்பு வளைஞ்சு வேலை செய்தால்தான்
உடல் சொன்ன பேச்சைக் கேட்கும்.
வந்தது வந்தே  இங்க எல்லாம்  பெருக்கிச் சுத்தம் செய்யணும் . திருப்பி ஓடுகிற வழக்கம் எல்லாம் வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்வார்.
அது பூந்துடப்பம்மா. முள்ளு முள்ளாக் குத்தும்  என்பேன்.
ஒண்ணும் வலிக்காது,முதலில் தரையில் புரளுகிற பாவாடையைஏத்திக் கட்டிக்கோ. வேலை தானே வரும்.

அடுத்த லீவுக்காவது அம்மாவைத் திருமங்கலத்திலியே விட்டுவிட்டு வந்துடணும்.''என்று முணு மூணுத்தபடி பருக்கிக் குப்பையை முறத்தில் எடுத்து அதற்கு உண்டான கூடையில் போடுவேன்.
குளிச்சு,சாப்பிட்ட பிறகு  எங்கவேணா விளையாடப் போ.
தெருவுக்குப் போகக் கூடாது.
இதற்குள் ஜமா கூடி இருக்குமே கனகா,கமலா,சுந்தரா,பூர்ணிமா எல்லோரும் புளியங்கொட்டை,பல்லாங்குழி சகிதம் மாடிவீட்டில் கூடி இருப்பார்களே என்று நினைத்தபடி,ஒரு அவசரக் குளியல்.
பாவாடை சட்டை போட்டதும், அம்மா கையில் காந்தரிடைன் எண்ணெய் வசமாய்   வந்து உட்கரும்.

ம்ம் உட்காரு.!
ரிப்பன் எங்க.
தெரியல.
சரி பரவாயில்லை
இன்னிக்குக் கம்பளி நூல் தான் உனக்கு.
ஐய்ய வேண்டாம்மா. புது ரிப்பன் கொடும்மா. எல்லாரும் கேலி செய்வா.
அதையும் தொலைச்சுடுவே  என்றபடி நா சூக்காய்  அழகாகப் பின்னி நூலயும் கட்டி முடிந்து விடுவார். முதல்  நாள் எடுத்துவைத்திருந்த கதம்ப சரத்தைப்
பந்தாக  வளைத்து   பாந்தமாக வைத்ததும்,
சாப்பிடப் போ.
அம்மாவின் குரலில் சிரிப்புத் தெரிவதாகச் சந்தேகம் வரும்:)
முன்னுச்சு வாரிண்டு போ என்று ரெண்டு தட்டு நெற்றியில்.

சீனிம்மாவிடம் புகார் கொடுத்தபின் மணக்க மணக்க சாப்பாடு முடித்துக் கழுவிய கை காயும் முன் பறந்துவிடுவேன்.
பிடித்த பீட்ரூட்  கறியும் கத்திரிக்காய்க் குழம்பும் என்று சமையல் அறைக்கு நகர்த்துவார் அம்மா. முந்தைய பதிவுக்கு இந்த ருக்மணி அம்மா தான் காரன் கர்த்தா. அவளால் அடைந்த  நன்மைகளுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது.
அவளது  கடைசி நாட்களிலும் சிரிப் பை  மறக்கவில்லை.
 ரெய்க்கி கற்றுக் கொண்ட புதிது   அவளுக்கு சிகித்சையாகத் தரும்போது, என் கைகளைப் பிடித்துக் கொண்டு நீ அன்பாப் பிடிச்சுக்கறதெ எனக்கு மருந்து என்பாள்.  என்னை விட்டு  என்றுமே அகலாதவர்கள் என்று நினைத்தவர்களூள் அவளும் ஒருத்தி .




23 comments:

ஆயில்யன் said...

கொசுவர்த்தி அதுவும் பாட்டி பற்றி,படிக்க்கும்போது,வளர்த்த காலத்தில் எம்முடன் இருந்து நாங்கள் நல்ல நிலையில் வாழும் காலம் ஆரம்பிக்கும்போது, எங்களை விட்டு பிரிந்த எங்கள் பாட்டியின் ஞாபகமும் கூட வருகிறது!

காலை வேளைகளில் தண்ணீர் கொண்டு தண்ணீர் தொட்டியினை நிரப்பும் பணியினை எல்லா பாட்டிகளுமே சிரமமேதும் பாராமல் செய்திருப்பார்கள் போல....!

துளசி கோபால் said...

நேயர் விருப்பம்:

தேங்காயைப் படம் எடுத்துப் போடுங்கப்பா.

கண்ணாலே பார்த்தே ஆகணும்.

இலவசக்கொத்தனார் said...

அடுத்தது ஆரம்பிச்சாச்சா!! நடக்கட்டும்.

ராமலக்ஷ்மி said...

திருமண நலுங்குகளில் இன்றைக்கும் பித்தளைத் தேங்காய் உருட்டி விளையாடுவார்கள் மணமக்கள் ஒரு சடங்காக. திருநெல்வேலி டவுண் கடைகளில் இப்போதும் கிடைக்கின்றன.

//அதிகாலை நான்கு மணிக்கு புரசவாக்கம் பக்கம் நல்ல தண்ணிர் குழாயில் வரும்
அது வீட்டுக்குள் இருக்கும் குழாய்.//

அப்படியே பிடித்து மண் பானையில் ஊற்றிக் குடித்த காலம். சுற்றுச் சூழல் சுகாதாரமாய் இருந்த காலம். இன்று மினரல் அல்லது ப்யூரிஃபையர் மூலம் வராத தண்ணீர் ஒரு வாய் இறக்கிட முடியுமா தொண்டையிலே :(?

ambi said...

ம்ம், என் கொள்ளு பாட்டி நினைவுக்கு வருகிறார்.

ஒரு தொடரும்.. போட்டு இருக்கலாம்.

பொதிகையில் வரும் சில நல்ல நிகழ்ச்சியை அப்படியே ஸ்டாப் பண்ணி தூர்தர்ஷனில் ஒரு அம்மணி நியூஸ் வாசிக்க வந்த உணர்வு எழுந்தது. :)))

வல்லிசிம்ஹன் said...

கொசுவர்த்தி அதுவும் பாட்டி பற்றி,படிக்க்கும்போது,வளர்த்த காலத்தில் எம்முடன் இருந்து நாங்கள் நல்ல நிலையில் வாழும் காலம் ஆரம்பிக்கும்போது, எங்களை விட்டு பிரிந்த எங்கள் பாட்டியின் ஞாபகமும் கூட வருகிறது!// உண்மை.

ஆயில்யன்....
அதான் பாவமாக இருக்கும். எங்கெயோ திண்டுக்கல்லில் படிப்பை முடித்த எனக்கு, இன்னும் ஒரு பட்டம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று என் அம்மாவிடம் கடிதம் மேல் கடிதம் எழுதி வரவழைத்தவர்.

வாழ்க்கையில் குடும்பத்தத் தவிர வேறு யோசிக்கத் தெரியாத பெண்மணி..நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி, நேத்திக்கே போட்டோ எடுத்துட்டேன். வலைல ஏத்த முடியலை. தலைவலி ஆரம்பிச்சுடும்னு நிறுத்திட்டேன். இதோ இப்ப போட்டுடறேன்.
சரியா:)

வல்லிசிம்ஹன் said...

சும்மா இருக்க முடியுமா கொத்ஸ்.

நாம தேமேனு இருந்தாலும்

நடக்கிற விஷயங்கள் எழுதூ எழுதுன்னு கத்துகின்றன:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி, சீனிம்மா நலுங்குத்தேங்காய் என்றுதான் சொல்லுவார்.

மங்கலமா இருக்கும்,பத்திரமா வச்சுக்கோன்னு சொல்லித்தான் கொடுத்தார். அது(என்,...பெண்) குழந்தைகள் விளையாட்டுப் பொட்டிக்குள் போய் இப்பத்தான் வெளி வந்திருக்கு.
கொஞ்சம் நசுங்கியும் விட்டது.
இதுக்காகவாவது நெல்லை போகணும்.குறைந்த விலையாக இருந்தால் தாம்பூலமாக நவராத்திரிக்குக் கொடுக்கலாமே.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ராமலக்ஷ்மி,

அப்ப எல்லாம் தண்ணீர் சம்பந்தமா எந்த நோயும் வந்த நினைவே இல்லை எனக்கு.
இப்பத்தான் ஆக்ஃபாஃபீனாவும்,டீமும் முழங்குகிறது...

வல்லிசிம்ஹன் said...

அம்பி சாரிம்மா.. இது நிச்சயம் தொடரும் கதைதான். தொடரும் போட்டு விடுகிறேன்.
இரவு 9 ஆகிவிட்டது. பேரனுக்குக் கதை சொல்லணும்.கையைப் பிடித்துக் கொண்டுவிட்டான்.:)
எழுந்தே ஆக வேண்டிய நிலை!!!

திவாண்ணா said...

இப்பல்லாம் வீட்டு தண்ணி குழாயில தண்ணி வரதா சொன்னாலே நம்ம மாட்டாங்க!
:-))
இப்பல்லாம் மேல இருக்கிற தொட்டில தண்ணி கொட்டற அவசியமே இல்ல. கீஈஈஈஈழே இருக்கிற தொட்டிலேந்து மொண்டுக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

வாசுதேவன்,
1973 வரை நம்ம சென்னை வீட்டில கூட சமையலறையில் குழாய் இருந்தது.
அப்புறம் சம்ப் வந்தது.
தண்ணீர் வாராத சம்ப் காத்தாட இருந்தது.

இப்பத்தான் ஒரு ஐந்து வருஷமா தண்ணீர் நிரம்புகிறது.

கிணறு,போர்,சம்ப்.கேப்பானேன். மின்கட்டணம் ஏறுகிறது.:)

NewBee said...

வல்லிமா,

நலமா? :)

எழுத்து நடை அழகு....காட்சி கண்முன் விரிகிறது...அடுத்த பாகம்...காத்திருக்கிறேன் :))

வல்லிசிம்ஹன் said...

புது வண்டே.

நலமாப்பா.
நாங்கள் எல்லாரும் நலம்.
நன்றிம்மா.

குழந்தைகளுக்குச் சொல்லிவைக்க வேண்டும் என்றே எழுதுகிறேன்.
இந்தப் பேரன்களோடு பழகும்போது என பாட்டி நினைவு சகஜமாக வந்துவிடுகிறது:)

மெளலி (மதுரையம்பதி) said...

ரொம்ப நாட்களாக இப்பக்கம் வரவில்லை. அதற்கு மன்னியுங்கள் வல்லியம்மா..

மிகுந்த சுவையான செய்திகள்...உங்களது சீனியம்மா, எனது பாட்டி எக்ஞம்மாளை நினைவு படுத்துகிறார். சூப்பர்.

ஆமாம், இந்த பித்தளை தேங்காயை பார்த்திருக்கிறேன். வெள்ளி காபி பில்டர் பார்த்ததில்லை. இப்போது எங்கேனும் கிடைக்கிறதா?. :)

வல்லிசிம்ஹன் said...

மௌலி,
என்னம்மா இந்த மாதிரி சொல்லலாமா.

அவரவர் வேலைகளுக்கு நடுவில் வந்து படிக்கிறதே மதிக்கத்தக்கது.

யக்ஞம் பாட்டி, பேர் கேக்கவே நன்றாக இருக்கிறது.
இருக்கும்மா. சுக்ராவில போய்ப் பாருங்கோ:)

வல்லிசிம்ஹன் said...

துளசி போட்டுட்டேன்பா.

இராஜராஜேஸ்வரி said...

மணக்கும் மலரும் நினைவுகள்...!

ரிஷபன் said...

அந்த நாலரை மணிக்கு அவள் எழுந்திருக்கும் போதே, அவள் புடவையைப் பிடித்த வண்ணம் உட்கார்ந்து இருந்தது நினைவிருக்கிறது.

அந்த நாள் ஞாபகங்கள் கவிதைதான்
அப்போ கூட அந்த அளவு யோசித்திருப்பேனோ என்னவோ இப்ப யோசிச்சா அழகு கூடுது நினைவுகளுக்கு

ஸ்ரீராம். said...

என்ன ஒரே மலரும் நினைவுகள்...! சுவாரஸ்யமாய் இருக்கிறது.

மாதேவி said...

இனிமையான அந்தநாட்கள் படிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.

கோமதி அரசு said...

இனிமையான மலரும் நினைவுகள்.