Blog Archive

Monday, November 26, 2012

பச்சை மண்......பெறாத தாய்


 இந்த இளங்குருத்தை ஏந்தியிருக்கும் தாய்  அதைத் தத்தெடுத்தவள் என்று சொல்ல முடியுமா.
சில நாட்கள்  முன்னால் டிஸ்கவரியில் தத்தெடுக்கும் பெற்றோரின்
எதிர்பார்ப்புகள் அவர்களும் பெறும் சந்தோஷங்கள். குழந்தையின் வளர்ப்பு என்று நீண்ட   ஸீரீஸ் வந்தது.

நம் ஊரில்   ஸ்வீகாரம் போவது என்பது சர்வ சகஜம்.
இல்லாதவர்களுக்கு நிறைய  குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் நெருங்கிய உறவினர்கள் குழந்தை  பெற முடியாதவர்கள்

இவர்களிடமிருந்து முன் கூட்டியே சொல்லிவைத்துக்
 அன்று பிறந்த குழந்தையை  முறைப்படி சாஸ்திர சம்ப்ரதாயங்கள் செய்து
தத்து எடுத்துக் கொள்வார்கள்.

செட்டிநாட்டுப் பக்கம் இது வெகுவாக நடக்கும். எனக்குத் தெரிந்து
என் அம்மாவினொன்றுவிட்ட சகோதரன் தன் பெரியப்பா வீட்டுக்கு  தத்துப் புத்திரனாகப் போனார்.
ஆனால் ஐந்து வயதில் தன்சொந்தத்தாயைப் பிரிவது அவருக்கு மிகக் கஷ்டமாக இருந்திருக்கவேண்டும்.

இதெல்லாம் பழைய கதையாகிவிட்டது.

சமீப காலத்தில்(   !!!!  ) நடந்த  ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.
நாங்கள் திண்டுக்கல்லில் இருக்கையில்   பக்கத்து  வீட்டில்  மங்களம்  ,கிருஷ்ணமூர்த்தி என்று ஒரு தம்பதியர்.
இப்போது நினைத்தாலும் அந்த மாமியின் அழகு என்னைக் கட்டிப் போடுகிறது. அவர் ஏதோ   ஒரு கம்பெனியில் குமஸ்தாவாக 100 ரூபாய் சம்பாத்தியம் செய்துவந்தார்.
அவர்களுக்கு மூன்று குழந்தைகள்.

முத்து முத்தாக  ராஜாராமன்,சீதாராமன்,ஜில்லு என்கிற சாரதா.
எங்கள் வீட்டு முற்றமும் அவர்கள் வீட்டு முற்றமும் ஒன்றாக இருக்கும்.

முற்றத்தின் முடிவில்  மூங்கில் கதவில் நான் சாய்ந்து கொண்டு படித்த புத்தகங்கள்  நிறைய.
ஸ்வாரஸ்யமாக  பக்கத்துவீட்டில் நடக்கும் செல்லச் சண்டைகளை ரசித்துக் கொண்டே படிப்பேன்.

ஒரு நாள் மதியம்  அம்மா அப்பா இருவரும் மதுரைக்கு ஏதோ  திருமணத்துக்குப் போக வேண்டிய கட்டாயம்.
மங்களம் மாமியிடம்   போய் எங்கள் மூவரையும் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அம்மாவும் அப்பாவும்  எங்களுக்குச் சாப்பாடு எடுத்துவைத்துவிட்டுக் காலையிலேயே கிளம்பிவிட்டார்கள்.
ஞாயிற்றுக்கிழமை ஆதலால்    மூன்று நண்டு சிண்டுகளும் இங்கேயே டேரா போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவ்வப் பொழுது மாமியின் குரல்  ஏ பசங்களா சமத்தா இருங்கோ இல்லாட்டா  விசிறிக்காம்புதான் பேசும்'' என்று அதட்டுவாள்.

விசிறிக்காம்பு பேசும் 'என்று அழகு காட்டியது  ஜில்லு.(7 வயது)

எங்கள் மதிய சாப்பாடைச் சாப்பிடும் வேளை.
எப்போதும் போல் சாதம் நிறையவும் குழம்பு ரசம்,புடலங்காய்க் கறி என்று வைத்துவிட்டுப் போயிருந்தார் அம்மா.

அந்தக் குழந்தைகள் சமையலறைக்குள் வந்து எட்டிப் பார்த்தன.
பசிக்கிறதா  ராஜா. எங்களோட சாப்பிடறியா என்று தம்பி கேட்டான்.
எனக்குச் சுட்ட அப்பளம்தான் பிடிக்கும். கறியெல்லாம் உவ்வே
என்றான் பெரிய மனுஷன்.
அதற்குள் மாமியின் குரல்.

ராஜா,சீதா ,ஜில்லு எல்லோரும் இங்க வாங்கோ. அப்பா பக்கோடா வாங்கிண்டு வந்திருக்கார் என்றதும் பறந்தன குழந்தைகள்.
மாமி எங்களையும் அழைத்தார். புளி உப்புமா இருக்கு வந்து எடுத்துண்டு போறியா ஆண்டாள் என்று  கூப்பிட்டதும்,மனசு ஆசையில் அடித்துக் கொண்டாலும் அம்மா டிபனும் செய்திருக்கிறார். வேண்டாம் மாமி . தான்க்ஸ்.  னு  சொல்லிவிட்டேன்.:)


மீண்டும் குழந்தைகள் வந்தன.
சுரத்தே இல்லை அதுகள் முகத்தில்.
சரியாச் சாப்பிடலையோ என்று   டெல்லி அத்தை கொடுத்திருந்த    பிஸ்கட்டுகளிருந்து ஆளுக்கு இரண்டு கொடுத்தேன்.

அம்மா  அயறா'' இது  சின்னப் பையன்   சீதா.
ஸ்ஸ்ஸூ சும்மா இருடா.இது பெரிய மனுஷி ஜில்லு. ராஜராமன் வாயே திறக்கவில்லை.
என்னம்மா சமாசாரம் என்று ஜில்லுவிடம் நான் கேட்டதும், எங்காத்துக்கு இன்னோரு பாப்பா வரப் போறதாம்.
அம்மா  அதுக்காக அழறா  என்றாள்.

விஷயம் புரியாமல் நான் பாப்பா வந்தால் ஜாலிதானே .வாசனையாக் குளிக்கும் பௌடர் போட்டுக்கும். நான் கூடவந்து தூளி
ஆட்டிக் கொடுப்பேன்.'' ஏன் அழணும்?

தெரில நாளைக்கு  பெரியப்பா பெரியம்மா எல்லாரும் தஞ்சாவூரிலிருந்து வரா.
அங்க போனா  ஜாலி தெரியுமா. யாருமே கிடையாது.
ஊஞ்சல் எல்லாம் இருக்கும்.பெரியம்மா நிறைய பக்ஷணம் எல்லாம் செய்து கொடுப்பா.
ஆனா அம்மா ஏன் அழறான்னு தான் தெரியலை  என்று உதட்டைப் பிதுக்கியது
ஜில்லு.  
நாளை மீண்டும்  கடவுள் புண்ணியத்தில் பார்க்கலாமா.






எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

20 comments:

ஸ்ரீராம். said...

ஒருமாதிரி யூகிக்க முடிகிறது. சரிதானா என்று நீங்கள் தொடர்ந்ததும் தெரிந்து கொள்கிறேன்! :))

ADHI VENKAT said...

//முற்றத்தின் முடிவில் மூங்கில் கதவில் நான் சாய்ந்து கொண்டு படித்த புத்தகங்கள் நிறைய.
ஸ்வாரஸ்யமாக பக்கத்துவீட்டில் நடக்கும் செல்லச் சண்டைகளை ரசித்துக் கொண்டே படிப்பேன்.//

ரசித்தேன்...

//வாசனையாக் குளிக்கும் பௌடர் போட்டுக்கும். நான் கூடவந்து தூளி
ஆட்டிக் கொடுப்பேன்//

:))

என் சின்ன அத்தைக்கு பிறந்த மூன்றாவது குழந்தையை அவரது சின்ன மாமியாருக்கு இப்படித்தான் தத்து கொடுத்தார். எங்களுக்கு தெரியும் அவன் எங்கள் அத்தை மகனென்று ஆனால் அவனுக்கு பாவம் இதுவரை தெரியாது...:(

சாந்தி மாரியப்பன் said...

தேகத்தில் ஒரு பகுதியை இன்னொருத்தருக்குப் பிச்சுத்தரணும்ன்னா வலி இல்லாமலா இருக்கும் அந்தத்தாய்க்கு? அதான் அழுதிருப்பாரோ?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்.சரியாகத்தான் இருக்கும் ஸ்ரீராம்.
நிறைய இனிப்போடு.:)

வல்லிசிம்ஹன் said...

தெரியாமல் இருப்பதுதான் நல்லது.
கொடுத்த கையோடு அந்தக் குழந்தை அவர்களைச் சேர்ந்துவிடுகிறதே.

உறவினராகப் பாசம் காட்டலாம். சொந்தம் கொண்டாடக் கூடாது.
அந்தக் குழந்தை குழம்பிவிடும்.
நன்றி ஆதி .உடன் வருகை தந்ததற்கு.

வல்லிசிம்ஹன் said...

நாளை மீதியை எழுதுகிறேன் அப்பொழுது உங்களுக்குப் புரியும்.
சாரல் தாய்மையின் பரிதாபம் குழ்ந்தையைப் பிரிவதுதான்.
இந்தக் கதையில் ஆனந்தம் மட்டுமே:)

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படி ஆவலைத் தூண்டி, நிறுத்தி விட்டீர்களே... நல்லது நடந்திருந்தால் சரி...

அப்பாதுரை said...

உருக்கமாக இருக்கிறது. சில சமயம் தியாகங்களுக்கு அர்த்தமே வேறே. இது அப்படிப்பட்டது என்பது என் அனுபவம்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் துரை. ஏழ்மையும் பாசமும் போட்டியிடும் நேரம்.

வல்லிசிம்ஹன் said...

ஸாரி தனபாலன்.ரொம்ப நீண்டு விட்டது. அதனால் எழுதுவதும் தலைவலியாகி விட்டது.

சுருக்கி எழுதத் தெரியவில்லை மா.

ராமலக்ஷ்மி said...

அழகான நடையில் கொண்டு செல்கிறீர்கள். தொடருங்கள். என் ஊகமும் சரிதானா பார்க்கிறேன்.

sury siva said...


எங்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவரின் மகள்
தனது நாத்தனாருக்கு குழந்தை இல்லை என்பதால் தனது
முதல் பெண் குழந்தையை ஸ்வீகாரம் தந்தாள். நான் இன்னும் ஒன்றல்ல, இரண்டு பெண் குழந்தைகள்
பெற்றுக்கொள்கிறேன். இந்தக்குழந்தை உன்னுடையதே. நீதான் அவளுடைய தாய். அதை அவளும்
நம்பும்படியாக வாழ்ந்திரு என்று வாழ்த்தி ஸ்வீகாரம் தந்தாள்.

ஒரு 15 வருஷங்களுக்கு முன்னால்.
இது எனக்கும், என் தர்ம பத்னிக்கும் , அஃப் கோர்ஸ் , அந்த நண்பர் வீட்டினருக்கு மட்டுமே தெரியும்.

சமீபத்தில் என் நண்பர் தன் பேரனுக்கு உப நயன விழாவுக்கு எங்களை அழைத்திருந்தார்.
நண்பரின் மனைவியிடம், காதோடு காதாக, நீங்கள் ஸ்வீகாரம் கொடுத்த பேத்தி எப்படி இருக்கிறாள் என்று கேட்டேன்.
அவள் வந்திருக்கிறாள். அவளை நான் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.
ஆனால், அந்த விஷ்யத்தை மட்டும் அவளிடம் சொல்லவேண்டாம் என்று சொன்னாள் .
அதன் பிறகு, அந்தப்பெண்ணை எதேச்சையாக கூப்பிடுவது போல் அழைத்து எங்களை
அறிமுகப்படுத்தினார்.
அந்தப்பெண்
கொள்ளை அழகு . கோதை ஆக கண் முன்னே நின்றாள்.
சரஸ்வதி தேவியும் ஸ்ரீ லக்ஷ்மியும் ஒரே உருவாய் வந்தது போல் இருந்தாள்.

அந்தப்பெண்ணும் வளர்த்த அன்னை தந்தையைத் தான் அம்மா அப்பா என அழைத்தாள்.
அம்மாவை மாமி என்கிறாள்.

திரும்பி வருகையில் என் மனைவியிடம் கேட்டேன். ஏதேனும் ஒரு நாளைக்கு இந்தப்பொண்ணுக்கு தன்
மாமிதான் உண்மையான அம்மா என்று தெரிந்தால் என்ன ஆகும் ?

அன்னிக்கு அந்த ரங்க நாயகி பார்த்துக்கொள்வாள், என்றாள், இவள்.

சுப்பு தாத்தா.





வல்லிசிம்ஹன் said...

ஊகிக்கக் கூடிய முடிவுதான். கொஞ்சம் விட்டுக் கொடுத்தல் கொஞ்சம் அநுதாபம் கொஞ்சம் சோகம். அதுதானே வாழ்க்கை.ராமலக்ஷ்மி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுப்பு சார். தன் முதல் குழந்தையைச் ஸ்வீகாரம் கொடுத்தாரா!! என்ன ஒரு தியாகம். நாத்தனார் மேல் அத்தனை பாசம்.இந்த அன்பும் பாசமும் நீடிக்கட்டும். அன்பு இருக்குமிடம் லக்ஷ்மியாக அவள் வளர்ந்துவிட்டாள்.
அதற்கப்புறம் அந்த மாமிக்குக் குழந்தைகள் பிறந்திருக்கும் என்று நினைக்கிறேன். வருகைக்கு வார்த்தைக்கும் நன்றி சார்.

அப்பாதுரை said...

சுப்பு சார் சொல்வது மிகவும் முக்கியமான விஷயமாகும். தத்து எடுத்தவர்களும் கொடுத்தவர்களும் இந்த விஷயத்தை மறைப்பது ஏனென்று தெரியவில்லை.

ராமலக்ஷ்மி said...

குழந்தைக்கு தெரிய வந்தால் பிரச்சனையாகுமோ என்பதால் இருக்கலாம். சின்ன வயதில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் கீதா என்றொரு தோழி. அம்மாவின் தங்கைக்குத் தந்து கொடுக்கப்பட்டு வளர்ந்தாள். 12 வயதில் பெரியம்மாதான் அம்மா எனத் தெரிந்ததும் பிடிவாதமாக அவர்களோடு (இரண்டு அக்காக்கள் உண்டு) மதுரைக்குச் சென்று விட்டாள். வளர்த்த அம்மா மன ரீதியாக உடல் ரீதியாகப் பாதிக்கப்பட சொந்த பந்தங்கள் பேசி அவளை இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வளர்த்த அப்பா அம்மாவிடம் சேர்த்தார்கள்.

குழந்தைகளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்ததுமே சொல்லி அவர்களைப் பக்குவப்படுத்துவதே சிறந்தது. இதனால் குழந்தைகளும் தெளிவாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

Geetha Sambasivam said...

ஒரு மாதிரி யூகம் செய்திருக்கேன். சஃரியானு பார்த்துக்கறேன். அருமையான சம்பவங்களாப் பார்த்துத் தேர்ந்தெடுக்கிறீங்க. :)))

வல்லிசிம்ஹன் said...

எங்கள் வீட்டிலும் இது நடந்திருக்கிறது ராமலக்ஷ்மி. அம்மாவின் பெரியம்மா பையனைத் தத்து கொடுத்தார்கள். ஆற்றின் இரு பக்கங்களிலும் வீடுகள். ஆற்றைக் கடந்துவந்து அம்மாவிடம் சண்டை போட்டுவிட்டு,சாப்பிட்டுவிட்டுப் போவாராம்.அந்தத் தாய்க்கு இருந்த ஒரு பெண்ணும் தவறி விட்டது. பாவம் என்ன பாடு பட்டாரொ.எனக்கு மிகவும் பிடித்த பெரிய பாட்டி.

வல்லிசிம்ஹன் said...

இங்கே பக்கத்தில் அப்படித்தான் பெண்ணைத் தத்தெடுத்தவர்கள் பத்துவயதில் சொல்லிவிட்டார்கள்.
நல்ல வேளையாக அந்தப் பெண் கோபம் எல்லாம் காட்டவில்லை. வளர்த்த அம்மாவிடம்தான் இன்னும் பாசம் மேல். துரை.

வல்லிசிம்ஹன் said...

கீதா யூகம் செய்தால் சரியாகத்தான் இருக்கும்:)