Blog Archive

Saturday, November 24, 2012

பச்சை மண்...ஒரு தாயின் கதை

தாயும் சேயும்

 இரண்டு பதிவுகளுக்கு  முன் எழுதிய  கதை பி.வி.ஆரின் பச்சைமண்.

அதைப் பற்றி  என் தோழிகள் இருவர்   ஓய்வு பெற்ற பேராசியைகள்.
அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது
அவர்கள் கல்லூரியிலேயே நடந்த சம்பவங்களைக் குறிப்பிட்டார்கள்.

நீ என்னமோ கனவுலகத்துல இருக்க.மத்தியதர் மக்களிடம் இன்னும் இதுபோல நிகழ்வுகள்
உண்டு.
விவாகரத்துக்குப் பிறகு மணமுடித்த பெண்களுக்குக் குழந்தைகளும் பிறந்திருக்கின்றன.

 என்று விவரமாகச் சொல்லி முடித்தார்கள்.
என் பாயிண்ட் அது இல்லையே. அவள் ஏன் குழந்தையைக்
கணவனிடம் கொடுக்க வேண்டும்.

நீங்கள் என்னைவிட மெத்தப் படித்தவர்கள். யோசித்துச் சொல்லுங்கள்
என்று சொல்லிவிட்டுப் பிரிந்துவிட்டேன்.
இரண்டு மூன்று  நாட்கள் கழித்துச் சந்திரா தொலை பேசினாள்.
சுஜாவும் வந்திருக்கா.
அவளுடன் அவள் அத்தையும் வந்திருக்கிறார்  என்றாள்.
அத்தையா?
ஆமாம் தியாகம் பண்ண அத்தை என்ற பட்டத்தை வேற கொடுத்தாள்.
'truth is stranger than fiction''
இதுதான் நினைவுக்கு வந்தது   எனக்கு.
கதைக்காக என்னால் அம்பத்தூர் வரமுடியாது. கார்த்திகைக்குப் புடவை எடுக்கணும்.
எனக்கு இல்லை. உறவுகளுக்கு .பாந்தியன் ரோடுக்கு வருகிறீர்களா
என்று  கேட்டு வைத்தேன். அது ஒரு  சனிக்கிழமை.
வேலைத்தொந்தவுகளைக் கணவர்களிடம் ஒப்படைத்துவிட்டு மூவரும்

எழும்பூர் பாந்தியன் சாலைக்கு வந்தார்கள். துணி எடுக்கும் வேலை முடிந்து
அஜ்னபி''  கடைக்கு வந்தோம்.நல்ல தேநீர் அருந்திக் கொண்டே
அந்த அத்தையைப் பார்த்தேன். வயதான் அதை இல்லை. எங்கள் வயதுதான் இருப்பாள்.
மீனாக்ஷி  அத்தை. அப்பாவின் கடைசித் தங்கை.அறிமுகப் படுத்தினாள் சுஜா.

மீனாக்ஷி என்றே விளித்து அவளிடம் கதை பற்றிய விவரம் சொல்ல ஆரம்பிக்கும்
முன்னால் அவளே சொல்ல ஆரம்பித்தாள்.
எனக்கும் கல்லூரி முடித்ததும் திருமணம் நடந்து வடக்கே பிலாஸ்பூர் போய்விட்டேன்.

புரியாத மொழி. இருந்தாலும் வீட்டு வேலைகள் அக்கம்பக்க மாதாஜீக்கள்
துணையில் என் பொழுது தையல்,வையர் பாஸ்கெட் என்று கழிந்தது,.
ஒன்றில்லை இரண்டில்லை 11  வருடங்கள்.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை
தெற்கே வருவோம். எல்லோரும் சொல்லும் வைத்தியங்களைச் செய்வோம்.
பிரார்த்தனைகளை நிறைவேற்றுவோம்.

அப்படி ஒரு முறை வந்தபோதுதான் அவரையும் விந்துப் பரிசோதனைக்கு
 உட்படுத்தலாமேன்னு என் தந்தை சொன்னார்,.
எனக்கோ தயக்கம்.அவர்கள் தலைமுறையில்  குழந்தைகளுக்குப் பஞ்சமே   இல்ல அப்பா.
அவரை வருத்தப் பட வைக்க வேண்டாம் என்றேன்.

ஏம்மா நீ ஒவ்வொரு தடவையும் ஊசிபோட்டுக்கறதும் ,ரத்தமும் கொடுக்கும்
போதும் எனக்குச் சந்தோஷமாவா இருக்கு?
கேட்டுப்பார் அம்மா  என்றார்.சரிப்பா நாம் திருமுல்லைவாயில் வைஷ்ணவி தேவி
கோவிலுக்குப் போய் வந்து பிறகு அவரைக் கேட்கிறேன் என்றேன்.

கணவரின் அத்தையும் அவர் பெண்ணும் வந்திருந்தார்கள். என்னைத் திருமணம் முடிக்கும் முன்பே
அந்தப் பெண்ணை அவருக்கு மணம் முடிக்க அந்த அத்தைக்கு ஆசை.
படிப்பு குறைவாக இருந்ததால்  கணவரின் அம்மா வேண்டாம் என்று விட்டார்.
இப்பொழுதும் அந்தப் பெண் பார்க்க அழகாகவும்  27  வயதுக்குறிய வளப்பத்துடன்
 அத்தான் அத்தான் என்று சகஜமாக வளைய வந்தாள்.
கணவரின் முகத்தில் முதன் முறையாக மாற்றத்தைப் பார்த்தேன்.
கலக்கம் வந்தது. கோவில் போய்விட்டு அந்தத் தாயிடம்
முறையிட்டுவிட்டு வந்தோம்.
கணவரிடம் பரிசோதனை பற்றிச் சொன்னபோது அவர் அதை ஏற்கவில்லை.
மூர்க்கத்தனமாக  மறுத்தார். நாம் அடுத்த தடவை வரும்போது பார்த்துக் கொள்ளலாம்
என்று நாங்களும் வண்டி ஏறிவிட்டோம் பிலாஸ்பூருக்கு.
வழிமுழுவதும் தான் தவற விட்ட அத்தை பெண் பற்றிய பேச்சே.
அவள் இன்னும் தனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார்.
அவள் நினைவிலியே என்னுடன் இருந்ததாக எனக்குத் தோன்றியது.
அதன் விளைவோ என்னவோ  நானும் கருவுற்றேன்.
ஒரு விருப்போ வெறுப்போ இல்லாத நிலையில்

ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.அவரது அம்மாவும் அத்தை அவள் பெண்
எல்லோரும் வந்திருந்தார்கள் பிரசவத்துக்கு.
என் அம்மாவால் வரமுடியாத நிலை.அப்பாவுடன் இருக்கவேண்டியபடி ஆயிற்று.

குழந்தை பிறந்த  பத்துநாட்களில் அத்தை பெண்ணையும் இவரையும்
வேண்டாத நிலையில் பார்த்துவிட்டேன்.
வெறுப்பின் உச்ச கட்டம். அழும் குழந்தை. அதைச் சதாத் தன் மடியில் வைத்துக் கொஞ்சும் மாமியார்.
சமையலறையை ஆக்கிரமித்த அத்தை.
கண்ணைகட்டிக் காட்டில் விட்டது போல உணர்ந்தேன்

இரவே  அவர்கள் அனைவைரிடமும் என் முடிவைச் சொன்னேன்.
எழுதின  விடுதலைப் பத்திரத்தைக் கொடுத்தேன்.

நான் தியாகம் ஒன்றும் செய்யவில்லை. எனக்குச் சேர வேண்டிய ஜீவனாம்சம்
வந்து சேரவேண்டும்  என்ற தீர்மானத்தைச் சொல்லிவிட்டு  நடந்தேவந்து (மனத்தில் இருந்த ஆத்திரம் தீர வேண்டுமே)பிலாஸ்பூர் ரயில் நிலையத்தில் காத்திருந்து,இரண்டு வண்டி பிடித்துச்
சென்னை வந்து சேர்ந்தேன்.
இப்பொழுது   அந்தப் பணம் வருகிறது.
விட்ட படிப்பைத் தொடர்ந்து நான் நிம்மதியாகத் தா
ன் இருக்கிறேன்.
அப்பா தவறி விட்டார். அம்மா தன் முதிய வயதில் என்னை பற்றிய
கவலை கூட என்னவெல்லாமோ முயற்சித்தாள்.
எனக்குத் திருமண ஆசையும் வரவில்லை.
வேலை செய்வதே ஒரு டீச்சராக.
வருடா வருடம் புதுக் குழந்தைகளைப் பார்க்கிறேன்.
என் அன்பு முழுவதும் அவர்களை முன்னேற்றுவதில் செலவு செய்வதால்
குறை ஒன்றும் இல்லை என்று முடித்தாள் மீனாக்ஷி.

ஆழ்ந்த மௌனம் எங்களிடம்.
ஏய் சிரிங்கப்பா.. பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்கு  வாருங்கள்.
அப்பொழுது தெரியும் என் மகிழ்ச்சி  என அவள் சிரித்தாள். உண்மையிலியே
அவள் முகத்தில் வருத்தம் ஏதும் இல்லை.!

 அனைவருக்கும் தீபத்திரு நாள் வாழ்த்துகள்.


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

27 comments:

geetha santhanam said...

இந்தப் பதிவு படித்து ரொம்ப நேரம் மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தேன். உண்மையிலேயே அவர் புரட்சிப் பெண்தான். கணவர் மற்றும் அவர் குடும்பத்தின் செயல்கள் அவரை எந்தவிதத்தில் காயப்படுத்தியிருந்தால் அவர் அப்படி ஒரு முடிவு எடுத்திருப்பார்! ஆனாலும் அவர்களின் சுய நலத்தை எதிர்க்க குழந்தையையும் ஏன் விட்டு வந்தார்? அதைப்பற்றித்தான் மனதில் அசை பஒட்டுக் கொண்டிருக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

மீனாக்ஷி அவர்கள் சொன்னது மனதை கலங்க செய்தது...

தீபத் திருநாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா சந்தானம். வீநோதமாகத் தான் இருந்தது.
ஒரு தாயால் இப்படி நடந்து கொள்ள முடியுமா .மனசுல வருத்தம் வராதா என்றேல்லாம் யோசித்தேன்.
ஒருவேளை வருத்தம் இருந்து காண்பித்துக் கொள்ளவில்லையோ அதுவும் தெரியவில்லை.பிவிஆர் கதையையே ஜீரணிக்க முடியவில்லை. நிஜத்தில் நடந்த இந்தக் கதை இன்னும் அதிசயம்.
மிக நன்றி.படித்துப் பின்னூட்டமும் இட்டதற்கு.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தனபாலன். எல்லாவிதமான மனிதர்களையும் நாம் பார்க்கிறோம்.வருகைக்கு நன்றிமா,

துளசி கோபால் said...

குழந்தையை விட்டுவிட்டு வந்ததுதான் சரி.

அப்பத்தான் அந்தப்பெண்ணின் கணவர் குடும்பத்துக்கு குழந்தையை வளர்த்து ஆளாக்கும் கஷ்டம் புரியும்.

இல்லைன்னா அவருக்கென்ன.... புதுமாப்பிள்ளைதானே:(

வல்லிசிம்ஹன் said...

அவளைப் பொறுத்த வரையில் அவள் முடிவு சரிதான்.

இந்தப் பெண்குழந்தை ஒன்றுதான் அவர்களுக்காம். புது மாப்பிள்ளை புதுத் தந்தை ஆகவில்லையாம்.:)
துளசி.

ஸ்ரீராம். said...

குழந்தையை வளர்க்கும் கஷ்டம் அவர்களுக்குத் தெரிவதோடு, தனக்குப் பிறக்காத குழந்தையை இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் அந்த அத்தைப்பெண் எப்படிப் பார்ப்பாள்? அப்பாவான அவரால் அதைத் தாங்க முடியாதே! இது கணவனுக்கு அவர் கொடுத்த மனரீதியான தண்டனை. அந்த அத்தைப் பெண்ணுக்கும்! ரொம்பவே யோசிக்க வைத்த சம்பவம். சாதனை அரசி.

sury siva said...

கதை எனச் சொன்னாலும்
கண்கள் குளமாகின்றன.

வெண்ணிலவையும் வீசு தென்றலையும் எதிர் நோக்கும் வாழ்வொன்று
வென்னீரானது சரி. பின் வெறும் நீரானது தேவையோ ?
கதை கேட்டு பதைக்கிறது
நெஞ்சம்..

சுப்பு ரத்தினம்.

வல்லிசிம்ஹன் said...

பேரைத்தான் மாற்றி இருக்கிறேன் ஸ்ரீராம்.உண்மைவாழ்விலேயே தோழிக்கு அத்தைதான் இந்தப் பெண்.டெட்ராய்ட்டில் கான்சர் ரிசர்ச் எல்லாம் செய்துவிட்டு வந்து மெடிகல் காலேஜில் வேலை செய்து இப்பொழுது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளியில் வாலண்டரி ஆசிரியராக இருக்கிறாள்.நான் அவளைக் குழந்தையைப் பற்றிக் கேட்டபோது,கணவனின் மேல் வந்த வெறுப்புக் குழந்தையையும் பாதிக்கும்.என் மனம் வருத்தப் படவில்லை என்றாள்.

வல்லிசிம்ஹன் said...

கதையல்ல நிஜம் சுப்பு சார்.நாங்கள் ஒரு வருடமே ஒன்றாகப் படித்தவர்கள்.
என்னவெல்லாமோ கனவு.

அதே போலத்தான் சுஜாவின் மீனாக்ஷியும்.
அவள் மென்மைக் குணம் மாறக் காரணம் சூழ்நிலை.இவள் பெற்றக் குழந்தைக்கே 33 வயது இருக்கும்.கல்யாணமாகிக் குழந்தையும் இருக்கலாம். அவளாவது நன்றாக இருக்கட்டும்.
உங்களை வருத்தப் பட வைத்துவிட்டேனா. மன்னிக்கணும் சார்.

ADHI VENKAT said...

பல வருடங்களுக்கு முன்னாலேயே இப்படி ஒரு உறுதியான முடிவும். அதன் பின்னால் அவர்களின் தீர்க்கமான வாழ்க்கையும். ஆச்சரியப்படுத்துகிறது.

குழந்தையை விட்டு விட்டு வந்தது தான் கணவருக்கு அளித்த மனரீதியிலான தண்டனை. செண்டிமெண்ட் இல்லாமல் முடிவெடுத்து செயல்பட்ட அவர் தைரியசாலி தான்...

Anonymous said...

எத்தனை வருடம் வாழ்ந்தால் என்ன, ஒரு சொல்லோ இல்லை செயலோ அத்தனையையும் தகர்த்து விடுகிறது. அவர்களை பழி வாங்க அவள் தான் பெற்ற
குழந்தைக்கு நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றுதான் எனக்கு தோன்றியது. இருந்தாலும் மீனாக்ஷி அவர்கள் எடுத்த முடிவு அவர்களுக்கு நிம்மதியை கொடுத்திருக்கிறது என்றால் அவரை பொறுத்தவரை அவர் செய்தது மிகவும் நன்றுதான். மனதை மிகவும் பாதித்த கதை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி,
குழந்தை பிறந்த பொழுது மனநிலை எல்லோருக்கும் வரும் டிப்ரெஷன் இவளுக்கும் வந்திருக்க வேண்டும் . அதற்கு மேலாக உடல் நிலை பாதிப்பிற்கு ஆதரவாக வார்த்தையோ செய்கையோ யாரும் காட்டவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனை நாட்கள் குடித்தனம் செய்த கணவனின் துரோகம்,மனச் சலிப்பை ஏற்படுத்தி இருக்கவேண்டும். இதுதான் காரணம் என்று சொல்ல முடியாத ஒரு முடிவு.ஒரு துளிப்பாசமாவது அவள் மனதில் இருந்திராதா என்றே எனக்கு வியப்பு.ஆனால் அத்தனையையும் துணிச்சலாகத் தாண்டிவந்திருக்கிறாள். 35 வருடமாகத் தனிமைதான் அவளுக்குத் துணை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மீனாக்ஷி,
தகப்பன் செய்த தவற்றுக்குப் பிள்ளையைவிட்டுவிட்டு வந்துவிட்டாரோ என்றும் தோன்றியது.
அவள் தனக்கு எந்தவித உணர்ச்ச்யுமே இல்லைஎன்றூ தான் சொல்கிறாள்.
எனக்கு வேண்டியதை நான் தேர்ந்தெடுத்தேன்.கிளம்பி வந்தது கூடப் பரவாயில்லை. அதற்கப்புறமும் எத்தனை வார்த்தைகளை அவள் கேட்கவேண்டி வந்தது என்றும் தோழி சொன்னாள். அதனாலயே வெளிநாட்டுக்கும் சென்றுவிட்டாள்.
என்னைப் பொறுத்தவரைப் பாதி புரிகிறது. மீதி புரியவில்லை.

ராமலக்ஷ்மி said...



/வருடா வருடம் புதுக் குழந்தைகளைப் பார்க்கிறேன்.
என் அன்பு முழுவதும் அவர்களை முன்னேற்றுவதில் செலவு செய்வதால்../

உன்னதமான தாய்.

pudugaithendral said...

என்ன சொல்வதுன்னே தெரியலை!


வல்லிசிம்ஹன் said...

எனக்குக் கூடத் தோன்றவில்லை ராமலக்ஷ்மி. நீங்கள் பாஸிடிவ் பாய்ண்ட் ஒன்றைச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
அவள் யாரிடமும் அனுதாபம் எதிர்பார்க்கவில்லை. மிகத் தெளிவாக இருக்கிறாள். என்னைவிட இரண்டு வயதுதான் மூத்தவள்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தென்றல்.நலமாப்பா. நானும் இன்னும்யோசித்துக் கோண்டிருக்கிறேன்.

மாதேவி said...

என்னதான் கணவன் மீது கோபமாக இருந்தாலும் பெற்ற குழந்தையை விட்டுப் பிரிவது மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும்.மிகவும் துணிச்சலான பெண்.

சரியான பாடம் புகட்டியுள்ளாள்.

sury siva said...

இந்த தாய் செய்தது எந்தக்கோணத்தில் பார்த்தாலும் சரி அல்ல என்று
எங்க வீட்டுக்கிழவி வாதாடுகிறாள்.

கணவன் செய்தது தவறெனினும் தான் பெற்ற சேயை விட்டு அகல ஒரு பெண்ணுக்கு
எப்படியும் இயலாது. அந்தக்குழந்தையை எடுத்துக்கொண்டு தான் வளர்ப்பது தான்
நடந்திருக்கவேண்டும் என்கிறாள். அது இல்லை என்றால், அந்தக்குழந்தையை எடுத்துச்செல்ல‌
அவள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கமாட்டாள் என்கிறாள் என் வூட்டுக்கிழவி.

வாழ்க்கையிலே இலக்கணம் ஒரு பக்கம் . இலக்கு இன்னொரு பக்கம்.
ஒரு சேய் தன் கையிலே தவளும்பொழுது, ஒரு தாய்க்குத் தன் துயரங்களெல்லாமே
மறந்துவிடும் என்பதும், அச்சேய் ஒரு நாள் தன் துயரினைத் துரத்திடுமென எதிர்பார்த்து
நிற்பதுதான் ஒரு பெண் உள்ளம். கிழவி கட்சியும் கரெக்ட் தான்.

கிட்டாதாயின் வெட்டென மற... இது என் கட்சி.

அது என்னவோ !! நேத்திக்கு, தூக்கம் கெட்டுப்போச்சு !!

சண்டை வலுத்துப்போச்சு. உங்க வீட்டுக்கு வர்றோம்.
சண்டையைத் தீர்த்து வையுங்க...
நியாயத்தை சொல்லுங்க...

சுப்பு தாத்தா.

வல்லிசிம்ஹன் said...

அம்மா சொல்கிறதுதான் சரி. எந்தத் தாய்ப் பிறந்த குழந்தையை விட்டுப் பிரிவாள்.
அநாதை இல்லத்தில் விடுபவர்கள் எத்தனையோ. தொட்டில் குழந்தைகள் எத்தனையோ. குப்பைத்தொட்டிக் குழந்தைகள் எத்தனையோ.

இவள் கதை அது அல்ல.
நான் அவள் செய்தது சரி என்றும் சொல்ல வரவில்லை.
குழந்தையை எடுத்து வந்திருந்தால் அவர்கள் தொடர்பு தொடரும் என்று பயந்திருக்கலாம். அதுதான் ஒரே வெட்டாகத் தன் தாய்மையை விட்டுக் கொடுத்தாள்.
அதற்குப் பின் பெற்ற வயிறு துடித்திருக்கலாம். வேறு குழந்தையைத் தத்து எடுத்திருக்கலாம். என்ன பாடு பட்டாளோ தெரியாது. அவ்வளவு பரிச்சயமும் அவளுடன் எனக்குக் கிடையாது.
சுப்பு சார். உலகத்தில் இது ஒரு சோகக் கதை மட்டும் இல்லை.எத்தனியோ சொல்லாத கதைகள் உண்டு.அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்:(

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் மாதேவி.
நடந்ததில் பாதிதானெ எனக்குத் தெரியும். அவள் எத்தனையோ வழிகளில் சமாளித்துக் கொண்டாலும் நவீன நளாயினியாக இருக்க முடியாது.

மனம் வெறுத்துச் செய்த செயல்.அதைதுணிச்சல் என்பதா. கையால் ஆகாமை என்பதா.:(

வெங்கட் நாகராஜ் said...

என்ன சொல்வதென்று புரியவில்லை. குழந்தையை விட்டுவிட்டது தவறா சரியா என்று முடிவு செய்ய நாம் யார். அவருக்கு சரி என்று பட்டதைச் செய்தது நல்லது....

சாந்தி மாரியப்பன் said...

என்ன சொல்றதுன்னே தெரியலை. தன் குழந்தையைப் பிரிந்த வேதனையை மறக்கத்தான் மற்ற குழந்தைகளைக் கவனிக்கிறதுல தன்னோட கவனத்தைத் திருப்பிக்கிட்டாரோ என்னவோ. ஆனால், கண்டிப்பாக நாளின் ஒரு நொடியாவது அந்தக்குழந்தையோட நினைவு வராம இருந்திருக்காது.

Geetha Sambasivam said...

மனம் ரொம்பவே காயப்பட்டுப் போயிருக்கு, அதான் இந்த முடிவு. என்றாலும் நல்ல முடிவே.

Geetha Sambasivam said...

குழந்தையை விட்டு விட்டு வந்தது அந்தத் தாய் வரையில் சரியே. எடுத்து வந்திருந்தாளானால், பின்னால் அவங்க தொடர்பு வரும். மனதை மாற்ற முயற்சிப்பார்கள். நீயும் இருந்துக்கோ, அவளும் இருக்கட்டும்னு சொல்லி இருப்பாங்க. இவ்வளவு காதல் அத்தை பெண் மேல் இருந்தால் அந்த மனிதன் ஏன் கல்யாணம் பண்ணிக் கொண்டார்? அவங்களுக்கு இந்தத் தண்டனை வேண்டியது தான்.

ஆனாலும் இவங்களுக்கு எப்போவானும் விட்டு விட்டு வந்த குழந்தை நினைவு வராமல் இருக்காது. அந்தக் குழந்தையிடம் இவங்களைப் பத்தி என்ன என்ன சொல்லி இருப்பாங்களோனு நினைச்சாலும் மனம் பதைக்கிறது. :(((

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா.
எப்பவுமே பெண்களை இழிவு செய்வதில் குடும்பத்தாரே முன் வந்துவிடுவார்கள். காலப் போக்கிலந்தக் குழந்தையை நன்றாக துர்போதனை செய்து மாற்றிவிட்டார்கள்.
அவள் விட்டு வந்ததும் ஒருவிதத்தில் நல்லதே,. முக்கால்வாசி சன்யாசியாகிவிட்டாள்.