About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, November 01, 2012

நீலம் வந்து போன நாள்

செவ்வண்ணம் சேர்ந்த   அலை
புரியாத மொழியில் ஆடும் கடல்
கூரை  பறந்துவிட்ட வீடு
இன்னும் கலையாத மேகங்கள்
குதூகலம்
மேடு தட்டியதும்  ஏறிக்கொண்டதாம்
புயல் போதும் விளையாடிக் கொண்டிருந்தார்களாம் கண்ணனும்  நாகாவும்
அவசரமாகக் கரையை மோதும்  வேகம்
கரைக்கு வந்த கப்பல்
வித விதமான  அலைவடிவங்கள்
கடற்கரை சுறுசுறுப்புடன் இயங்குகிறது
காற்று அடிப்பதற்கு முன்னால்
எந்தக் காற்றிலும் நான் நிற்பேன் என்று சொன்ன மரம்

இன்று காலைக்   கடற்கரைக்குப் போகலாமா என்று  சிங்கத்திடம் கேட்டேன். நேற்று பூராவும் செய்திகளைக் கேட்டே  கிலி பிடித்துக் கிடந்தேன்.

வந்திருந்த மகன் வேற இரவு விமானத்தில் துபாய் போகவேண்டும்..
மதியமெல்லாம் நல்ல காற்று.
எதிர்த்தாற்போல் துளசி சில்க்ஸ் கட்டிட   தடுப்புகளெல்லாம் ஒன்றோடொன்று   மோதி  படபடா  என்கிற சத்தம்.
இவரோ நாளைக்குப் பால் வருமோ இல்லையோ நான்வாங்கி வருகிறேன் என்று நாலு மணிக்குக் கிளம்புகிறார்.
போனவர் மரங்கள் விழுந்து கிடக்கும் செய்தியையும் சொன்னார்.
இவர் கண்முன்னால் உதி கிளினிக் முன்னால் நின்றிருந்த மரம் ஆட்டோ மேல் விழுந்ததாம். உள்ளே இரண்டு பேர்  இருந்ததாகவும் சொன்னார்,. அப்புறம்  என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

தொலைக்காட்சி சானல் எல்லாம் இதே செய்திகள் தான். அதுவும் புதிய தலைமுறை கேட்க வேண்டாம்:(. இன்னும் 5 இன்னும் 4  இன்னும் 3 என்று திகில் மூட்டிக் கொண்டிருந்தது.  புயல் எல்லோருக்கும் டேக்கா   கொடுத்துவிட்டு மஹாபலிபுரத்துக்குப் போய்விட்டது.
அங்கும் யாரும் பயப்பதாகத் தெரியவில்லை.


பத்து நாட்களாக  உருவம் கொண்டு எல்லாமழையையும் கடலிலேயே கொட்டிவிட்டு மிச்ச மீதியைக் கடலூர்,தஞ்சாவூர்,விருத்தாசலம் என்று

பயமுறுத்திக் கடைசியில்   பங்களூருக்கு வேற போயிருக்காம்.

ஏற்கனவே டெங்கு கொசு ஆட்டம் போடுகிறது. இந்த மழைக்கப்புறம் என்ன   எல்லாம் வரப் போகிறதோ. எங்கள்  வீட்டு  ராணியின் இரு பேத்திகளுக்கும் டைஃபாய்ட்..தினமும்   க்ளூகோஸ் ஏற்றச் சொல்லி இருக்கிறாராம் வைத்தியர்.

இத்தனைகதைகளுக்கு நடுவில் கடல் அலைகளைப் பார்க்க  ஆசையிருந்தாலும் நேற்று வீசிய காற்றைப் பார்த்து,போக வேண்டாம் என்று தீர்மானித்தேன்.
இன்று காலையிலிருந்து  முதல் தீர்மானம் அலைகளைப் பார்ப்பதுதான். நாங்கள் மெரினா சென்ற நேரம் சகஜ நிலைமை இருந்தாலும்
நீல வண்ணம் கருநிற அலைகளாக கரையை வந்து மோதிக்  கொண்டிருந்ததது. ஆசை தீரும்   அளவு   படங்கள் எடுத்துக் கொண்டேன்.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த பசங்களிடம் பேச்சுக் கொடுத்தபோது  கேட்டேன் .நேற்று  வேறெங்கும் போகவில்லையா. இங்கயா இருந்தீர்கள் என்றதற்கு,அவர்கள் சிரிக்கிறார்கள்.

இதெல்லாம் நிசப் புயல் இல்லைன்னு முன்னியே தெரியும்மா. காத்துதான் ஆட்டம் போட்டது . நாங்க குடிசைக்குள்ள இருந்துட்டோம்.
அப்புறம் அதுவும் போயிருச்சில்ல. கப்பல் வேற வந்துட்டது. அதிலிருந்த எங்க பெரியவங்க எல்லாம் ரெண்டு மூணு பேரைக் காப்பாத்தினாங்க. அதோ எலிகாப்டர் இன்னும் சுத்துது பாருங்கன்னு  மேலே  கையைக் காண்பித்தார்கள்.

இவர்கள் பேச்சு நிஜமா ,சும்மாவா என்று தெரியாமல் படம் மட்டும் எடுத்துக் கொண்டேன். பேப்பர்ல போடுவீங்களாம்மா என்று கேட்டார்கள். இல்லப்பா கம்ப்யூட்டர்ல எழுதுவேன் என்றதும் ஃபேஸ்புக்காமா என்றார்களே பார்க்கணும். ஐய்யோ  இல்லப்பா. இது வேற என்றேன்.:)

எப்படியொ  இன்றாவது போய் படம் எடுத்தேனே என்ற திருப்தி. பேரன் பேத்திகளிடம் சொல்லலாம் இல்லையா:)எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

39 comments:

Geetha Sambasivam said...

அருமையான படங்கள் ரேவதி. பார்க்கப் பார்க்கப் பரவசம். ஊழிக்கூத்தைப் பார்க்க நாம இருப்போமோ இல்லையோ, இந்தக் கூத்தை ரசிச்சுப் பார்த்திருக்கலாம். எனக்கு நேத்திப் பூரா மனசு சென்னையிலேயே இருந்தது. நல்ல வேளையா மின்சாரம் போகலையா, நீலம், நிலம், நைலம், உள்ளே நுழைஞ்சதிலே இருந்து பார்த்தோம்ல. :))))

அத்தனை காற்றிலும் கடற்கரைக்குப் போயிருந்தீங்களா? ஆச்சரியமா இருக்கு. ஆனால் நிறையப் பேர் போலீஸ் எச்சரிக்கையையும் மீறிக் கடற்கரையிலே இருந்தாங்க.

அப்பாதுரை said...

அருமையான படங்கள்.
சென்னைப்புயல் பற்றி இங்கே CNNல் சொன்னதும் தான் பார்த்தேன். இந்தியா பற்றி எப்போதாவது தான் செய்தி சொல்வார்கள் - அதுவும் உள்ளூர் புயலையே மென்று முடியாத நேரம் - சென்னைப் புயல் பற்றிய செய்தி என்றால் நிச்சயமாக இது பெரிய புயலாக இருந்திருக்க வேண்டும்.

இதைப் படமெடுக்கும் துணிச்சல் உங்களுக்கு இருந்ததே!

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா கீதா. நேத்திக்குப் போகலை.
நல்ல ஆளைப் பாத்தீர்களே.:)
மழை பிடிக்கும் .இந்தக் காத்து என்னவோ ஒரு சத்தம் போட்டது. சிகாகோவில் இப்படித்தான், இதைவிட மோஓஓஓஓஓஓசம்.
இடி பயத்தில் போகவில்லை.
மின்சாரம் போய் எட்டு மணிவாக்கில் வந்தது.அது நீலம் தான். அண்டை நாட்டுக்காரங்க வச்சப் பேராமே:)
இன்று சுமார் பத்து மணிவாக்கில் பீச்சில் அரை மணி இருந்துவிட்டு வந்தேன். அப்போ எடுத்தப் படங்கள் இவை.

வல்லிசிம்ஹன் said...

துரை. ,எனக்கும் துணிச்சலுக்கும் ரொம்ப தூரம்:)

இன்று எடுத்த படங்கள் இவை. நேற்று எட்டடி ,பத்தடி உயரத்துக்கு அலைக்ள் வந்தததாம்.

அதை எடுத்திருந்தால் துணிச்சல்னு ஒத்துக்கலாம்.
கால் நனையாமல் அலைகளிலிருந்து பத்தடி தள்ளி நின்று எடுத்த படங்கள் இவை:)
மெரினாவில் காலை வேளையில் அலையோரம் போவது தோதுப்படாத விஷயம். அனைவரின் கழிப்பறையும் அதுதான்:(

ராமலக்ஷ்மி said...

நல்ல கவரேஜ் வல்லிம்மா. பாதிப்பு அதிக அளவில் இல்லை என்கிறார்கள்.

பெங்களூர் வானமே தெரியாமல் மூடிக் கிடக்கிறது, தொடர் தூறலுடன். நாளை வரை இப்படிதான் என்கிறது வானிலை அறிக்கை.

மாதேவி said...

நீலம்போனாலும் கறுப்பு மேகம் போகவில்லை. பிடித்துவிட்டீர்கள்.

இங்கும் நாட்டின் சில பகுதிகளில் சேதம்.

காற்று அடங்கிவிட்டது. மழை இன்றும் பொழிகின்றது.

Ramani said...

நேரடியாகப் பார்ப்பது போன்ற
புகைப்படங்கள்.
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி.
பங்களூருக்குப் போவதாகத்தான் செய்தி.எங்கள் ஊர்க் குளிராவது பரவாயில்லை. உங்கள் ஊரில் இன்னும் நிறையக் குளிருமே.
நீலவானம் இல்லாத நாட்கள் கொஞ்சம் போர்தான்:)

நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி.
நீல மேக வண்ணந்தானே கண்ணன்.
அதான் அந்தப் பெயரும் வைத்தால் மிகுந்த சேதம் வரவில்லை.
உங்கள் ஊரை நினைத்தும் கொஞ்சம் கவலையாக இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கு நன்றி ரமணன் ஜி.
இயற்கையின் அழகு அப்படியே காமிராவில் பிரதிபலிக்கிறது. வேறேன்ன சொல்வது.!
மனமும் நிறைகிறது.

வெங்கட் நாகராஜ் said...

புகைப்படங்கள் எல்லாம் நன்று. நேற்று போய் எடுக்க நினைத்ததே பெரிய விஷயம்! :)

ஸ்ரீராம். said...

நனைய நனையப் படங்கள் எடுத்துள்ளீர்களே... அட! கூரை பறந்த வீட்டை ஓடு பறந்த வீடு அல்லது கூடு என்று கூடச் சொல்லலாமோ! நீலாங்கரை அருகே வசித்த எங்களுக்குத் தெரிந்தவர்கள் அவ்வப்போது அலைபேசியில் அதைர்யத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் அலைபேசியில் சார்ஜ் குறையாமல் பார்த்துக் கொள்வதே பெரும்பாடாக இருந்தது. மதியம் 12 மணிக்குப் போன மின்சாரம் 12 இரவு மணிக்கு வந்து விட்டது!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல படங்கள்...

எடுப்பதற்கு எவ்வளவு சிரமப்பட்டு உள்ளீர்கள் என்று தெரிகிறது...

நன்றி அம்மா...

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் எல்லோரும் சொல்வதைப் பார்த்தால் எனக்கே ஆசை வருகிறது. புயல் வரும்னு சொன்ன நாலு மணிக்குப் போயிருக்கலாமோ என்று.
அத்தனை வீரம் இல்லையே.
மேலும் மரங்கள் விழும் செய்தி வந்தவண்ணம் இருந்தது.80 வருஷ மரம் ஒன்று ஆழ்வார்ப்பேட்டையில் விழுந்துவிட்டது. அதுவும் ஒரு ஆட்டோ மேல:(

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கு நன்றி தனபாலன்.
காற்று தான் கொஞ்சம் அலைக்கழித்தது. மற்றபடி சிரமம் ஒன்றும் இல்லை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம் , செய்திகள் கேட்கக் கேட்கப் பயம் அதிகரித்தது.அதுவும் நீலாங்கரை பக்கம் என்றால் எவ்வளவு பயப்பட்டு இருப்பார்கள். எங்கள் சம்பந்தியும் திருவல்லிக்கேணியில் தான் இருக்கிறார்கள்.
இங்க 2 மணிக்கே மின்சாரம் போய்விட்டது.எட்டு மணிக்குத்தான் வந்தது.

Geetha Sambasivam said...

நல்ல கதையா இருக்கே, புயல் காற்றினால் மின்சார விபத்து நேரிடக் கூடாதுனு மின்சாரத்தை வேணும்னே நிறுத்தினாங்க. அதுக்கே பனிரண்டுக்குப் போச்சு, இரண்டுக்குப் போச்சு ராத்திரிதான் வந்ததுன்னா என்ன அர்த்தமாம்? :)))))))) :P:P:P நாங்கல்லாம் என்ன சொல்றதாம்? :D அப்புறம் சென்னையிலே மழையே இல்லை; புயல் காற்றுத்தான்னு சொன்னாங்களே? அப்படியா? இப்போ எப்படி இருக்கு? ஓரளவு சரியாயிடுச்சா?

வல்லிசிம்ஹன் said...

தப்பு தப்பு. போட்டுக் கொண்டேன்:)
கம்ப்ளெயின் பண்ணலைப்பா. நமக்குத் தெரியாதா எதற்காக மின்வெட்டு என்று:)
காற்று அடித்துச் சிலசமயம் பெருத்த மழை.
நடந்தது அவ்வளவுதான்.மின்கம்பிகள் சில இடத்தில் அறுந்தன.பகவானே காப்பாத்து,,தான் பிரார்த்தனை. கீதா.

இராஜராஜேஸ்வரி said...

நீலம் புயலின் போது சென்னையில் தான் இருந்து காட்சிகளை சாட்சியாக பார்த்து கலங்கினேன்...

பால கணேஷ் said...

பேசுகின்றன அத்தனை புகைப்ப்டங்களும். காற்றின் முழு வீச்சையும் அனுபவித்தேன். சிங்கம் ஸார் பார்த்தது மாதிரி மரங்கள் முறிந்து விழுந்ததையும் நான் பார்த்தேன். இங்கே உங்களின் படங்களிலும் எழுத்திலும் புயலின் வேகம் அருமை.

Ranjani Narayanan said...

காற்றிலும் மழையிலும் எப்படிப் போய் படமெடுத்தீர்கள். வியப்பாக இருக்கிறது!

மழை அதிகமில்லை காற்றுதான் என்று என் அக்கா சோழிங்கநல்லூரிலிருந்து சொன்னாள்.

புகைப்படங்கள் மூலம் 'நீலம்' புயலை ரசித்தோம்.

நன்றி நாச்சியார்!

கோவை2தில்லி said...

படங்கள் எல்லாமே நன்றாக உள்ளன. அடுத்த நாள் என்றாலும் நீங்க போய் எடுத்தது பெரிய விஷயம் அம்மா. தைரியம் ஜாஸ்தி தான்....

சுனாமிக்கு ஒரு வருடம் முன்பு கன்னியாகுமரி முதல்முறையாக சென்றேன். இப்போ என்னை கூப்பிட்டாலும் வரமாட்டேன் என்று சொல்லி விட்டேன்.....என்னோட தைரியத்தை பார்த்தீங்களா....:))

நானும் என் தம்பி மூலம் சென்னை நிலவரங்களை தெரிந்து கொண்டேன்.

அப்பாதுரை said...

படங்களை பெரிதாக்கினது இன்னும் சிறப்பா தெரியுது.

மெரினா இப்ப ரொம்ப சுத்தம்னு சொன்னாங்களே? கழிவறைன்னதும் ஞாபகம் வருது. சின்ன வயசுல ட்ரெயின்ல போறப்ப ஜன்னலோரம் உக்கார அடம் பிடிப்பேன் - காலை நேரம்னா தாராளமா விட்டுக் கொடுத்துடுவேன்.

அப்பாதுரை said...

ஊழிக்கூத்தைப் பாக்கணுமா?! கடைசியில சிவன் சிவாஜி மாதிரி டான்ஸ் ஆடினா என்ன செய்வீங்க?

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி, ஆமாம்
கலக்கமாகத்தான் இருந்தது. நம் நிலைமையைப் பற்றி இல்லை. இந்த மழையிலும் வேலை செய்யவேண்டிய, வண்டி இழுக்க வேண்டியவர்கள்,குளிரில் டீக்கடை வைத்து உற்சாகப் படுத்திய மனிதர் , அன்று பார்த்து வாங்கவேண்டிய மருந்தைக் கொண்டு வந்து கொடுத்தக் கடைப்பையன்.மனிதத்தின் அருமை வெளிப்படும் நேரங்கள் இவை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா .கணேஷ். நீங்களும் இந்த மழையில் அலைந்தீர்களா. அடப் பாவமே.
படங்களப் பாராட்டியதற்கு மிகவும் நன்றி. இன்னும் நல்ல படங்கள் எடுக்க ஒரு உற்சாகம் வருகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி, நீங்கள் பின்னூட்டம் இடும்போதெல்லாம் உங்களுக்கு என்னால் பின்னூட்டமிட முடியவில்லையே என்று சலிப்பாக இருக்கிறது. என் கூகிள் அக்கவுண்டை வேர்ட்ப்ரஸ் ஏற்க மறுக்கிறது. ஏனென்று தெரியவில்லை.
பாராட்டுக்கு மிகவும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி, பயப்படுவது எனக்கு மிகப் பழக்கமான ஒன்று.
ஆனால் கடல் ரொம்பப் பிடிக்கும் பார்க்க.!!
வானம் மட்டும் இருட்டட்டும் வீட்டைவிட்டு வெளியே பார்க்கக் கூட மாட்டேன்.:( இடி மின்னலுக்கு அவ்வளவு பயம் புரியாத புதிர்.இந்த மழை இடியின்றி மின்னலின்றிக் கடந்து போனது என்னைப் பொறுத்தவரையில் பெரிய விஷயம்.:)பயப்படுவது தப்பே இல்லை. அசட்டுத் தைரியம் தான் தவறு.

வல்லிசிம்ஹன் said...

ஜன்னலோரம் எல்லோருக்கும் பிடித்த ஒன்று இல்லையா துரை.அதுவும் இரவு நேரத்தில் புகைவிடும் சத்தமும்(அந்தக் காலத்தில்)ரயில் கூவும் சத்தமும்,
நம் பாடலுக்குத் தாளம் போடும் சக்கரங்களின் ஓசையும் அனுபவிக்க வேண்டிய ஒன்று.
அம்மா சொல்லிக் கொண்டே இருப்பார், கண்ணீல் கரிவிழும்,படுத்துக் கொள் என்று. யார் அதையெல்லாம் கேட்பது.:))நல்ல நினைவுகளைக் கொண்டுவந்ததற்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

கீதா,துரை சொன்ன மாதிரி கடல் கூத்தைப் பார்க்கலாம். ஆனால் திருவிளையாடல் சிவன் சிவாஜி நடனம் பார்க்க முடியுமா.:)
பதில் தேவை.நான் விறகு விக்கிற சீன் பார்ப்பேன்.நடனம் கொஞ்சம் டார்ச்சர்.

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, ரேவதி, சிவாஜியோட உருக்கமான நடிப்பைப் பார்த்துச் சிரிக்கிற ஒரே பேர்வழி நான். இதிலே நடனம் வேறேயா? சிரிக்கிறதுக்காகப் பார்த்து வைக்கலாம். :)))))விறகு விக்கிற சீனும் கொஞ்சம் ஓவரான நடிப்பு. :))))

வல்லிசிம்ஹன் said...

அதுவா கதை. அப்ப நீங்க ஊழிக் கூத்தெல்லாம் பார்க்கலாம்.:)

மோகன்ஜி said...

அழகாய் படம் பிடித்திருக்கிறீர்கள். என் குழந்தைப் பருவமுதல் பல புயல்களை எங்கள் கடலூரில் பார்த்திருக்கிறேன். ஊரெல்லாம் வெள்ளக் காடாகி அந்த நீரில் திரிந்தபடி சென்ற நாட்கள். இயற்கையின் சீற்றத்தில் பரிதவிப்பதென்னவோ இல்லாதவர்கள் தான்.. நீங்கள் முடித்தபடி அனைவரும் நலமாக இருக்க இறையருள் வேண்டுவோம்

Matangi Mawley said...

Really good pictures! And I am feeling so jealous that you got to go out there and take those pictures. I am forbidden from going out- for the time being! Pictures have beautifully captured Chennai's windy mood!

துளசி கோபால் said...

படங்கள் எல்லாமே அருமையா இருக்கு!!!

// இல்லப்பா கம்ப்யூட்டர்ல எழுதுவேன் என்றதும் ஃபேஸ்புக்காமா என்றார்களே பார்க்கணும். //

கண்ணனும் நாகாவும் சொன்னதை நினைச்சு நினைச்சு நானும் கோபாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கோம்:-)))

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி. எனக்கு ஒரே ஷாக். :)
பசங்க ரொம்ப சுட்டி.
கண்ணா இங்க நான் போட்டொ எடுக்கணும் உங்களை எடுக்கலாமான்னு
கேட்டதுக்கு உடனே வந்து நின்று கொண்டார்கள். படம் எடுதுவிட்டு, உன் பேரென்ன ராஜானு கேட்டால் நீங்கதாம் முதலிலியே சொல்லிட்டீங்களே. நான் முழித்தேன். என் பேர் கண்ணன் மா என்று சிரிக்கிறது அந்தப் பிள்ளை:)

துளசி கோபால் said...

நல்ல ஸ்மார்ட் பசங்கப்பா. முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது. நல்லபடி படிச்சு முன்னுக்கு வந்தால் இன்னும் மகிழ்ச்சிதான்.

Ranjani Narayanan said...

அன்புள்ள வல்லி,
உங்களுக்காகவே ப்ளாக்ஸ்பாட்டிலும் ஆரம்பித்து இருக்கிறேன். வேறு வேறு இடுகைகள் போட நேரம் இல்லை. அதனால் அங்கே போடுவதையே இங்கும் போடுகிறேன்.

இணைப்பு கொடுக்கிறேன். அங்கே போய் படித்து விட்டு இங்கே உங்கள் கருத்துரைகளை எழுதுங்கள்.

இனி முழு பதிவையும் இங்கேயே போடுகிறேன்.

உங்கள் அன்புக்கு நன்றி!

Ranjani Narayanan said...

இணைப்பை கொடுக்க மறந்து விட்டேன்.

இதோ:
http://thiruvarangaththilirunthu.blogspot.in/2012/11/16-2000.html
அன்புடன்,
ரஞ்ஜனி