About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, May 16, 2014

ஒரு அம்மா,இன்னோரு அம்மா ,இன்னோரு அம்மா:) 1968

அன்புமனங்கள்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்,
அன்பு   அம்மாவுக்குப் பாப்பா
அநேக தண்டம்சமர்ப்பிவித்த விண்ணப்பம்.
இங்கெ எல்லோரும் க்ஷேம. அங்கும் அப்படியே  என்று நினைக்கிறேன்.

 பகவத்சங்கல்பத்தில்  ஆண்டாளுக்குப் பெண்  குழந்தை பிறந்திருக்கிறது.
அவள் மாமியாரும் உடன் இருப்பதால் எனக்கு மிகவும் சௌகரியமாக இருக்கிறது.
பெரியவன் தான் ஆண்டாளோடு ஒட்ட மாட்டேன் என்கிறேன்.
சவலையாகிவிட்டது இல்லையாம்மா.

பாவமா இருக்கு. கையில டெட்டி பொம்மையை வச்சிண்டு கண்ணு பூரா ஏக்கமா

மத்யானம் அவர் வரத்துக்குள்ள ஒரு குட்டி அமர்க்களம் பண்ணிடறான்.
சாப்பாடு   ஊட்டுவதற்குள்,
அவனோட அப்பா ஜீப் வர சத்தத்துக்குக் காத்திண்டு  இருக்கான்.
நானும் குழந்தைகளையும் ஆண்டாளையும் அழைத்துக் கொண்டு காரைக்குடிக்குக் கிளம்பணும்.
30 நாட்கள் ஆகட்டும்னு பார்க்கிறேன்.

ஆண்டாள் அப்பாவும் ரங்கனும்  ராமேஸ்வரத்திலிருந்து
எல்லாத்தையும் பார்சல் பண்ணி குட்ஸ் வண்டில போட்டு விட்டு,இன்னோரு ரயிலில் வருகிறார்கள்.
இவருக்கு தன் கை சமையல் ஒத்துக் கொள்ளவில்லை.
அந்தப் பிள்ளைக்கும் ஒண்ணும் செய்யத் தெரியாது.

மாப்பிள்ளை  காரிலியே  எங்களைச் சேலத்திலிருந்து  காரைக்குடிக்குக்
 கொண்டு விடுவதாக இருக்கிறார்.
அதற்குள் ஆண்டாளுக்குக் கவலை. திரும்பிப் போகும்போது  அவர் தனியாகப் போகணுமே.பாவம் மா  என்கிறாள்.
இந்தப் பொண்கள் தான் எவ்வளவு மாறிப் போயிடறார்கள்.!!


அம்மா உன்னிடம் காரைக்குடிக்கு வரச் சொல்லி அழைக்கத்தான் இந்தக் கடிதம்
 எழுதுகிறேன். நீ வந்தயானால் சின்னக் குழந்தையைக் குளிப்பாட்டக் கொள்ள
சவுகரியமா இருக்கும்.
நான் பத்திய சமையலையும் ,மத்த சமையலையும் பார்த்துப்பேன்.
காரைக்குடி எப்படிப்பட்ட இடம். சவுகரியம் எப்படி என்று தெரியவில்லை.
நீ வந்தால் எனக்குத் தைரியமாக இருக்கும்.
ஆண்டாளை இரண்டு மாதத்துக்கு மேல் இருக்கவேண்டாம்

சிம்மு சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவாராம்.
 என்று  அவள் மாமியார் சொல்லிவிட்டார்.
இந்தப் பொண்ணுக்கு உடம்பில சத்து போறாது.
இரண்டு குழந்தையை எப்படி சமாளிக்கும்.
என்ன செய்யலாம். அவா  சொன்ன நாம் கேட்கத்தானே வேணும்.

எல்லாம் பகவத் சங்கல்பம்.
மே 17  மத்யானம்  காரைக்குடியில் இருப்போம் என்று நினைக்கிறேன்.
அந்த நாளும் நன்றாகத்தான் இருக்கிறது.
நீ வரும் விஷயத்தை எழுது.
அம்பி,ராமசாமி,சீனி,கோபு எல்லோரையும் விசாரித்ததாகச் சொல்லவும்.
கோபுக்கு ஏதாவது புது ஜாதகம் வந்ததா.

உன்னிடம் நிறையப் பேசணும்மா.
அன்புடன்,
பாப்பா.


நாங்கள் காரைக்குடியில் இறங்கிய பிறகுதான் தெரியும், மே17 அவர்களது கல்யாணநாள் என்றும்,அன்று 25 வருடங்கள் பூர்த்தியாகிறது என்றும்.
அம்மா அப்பா   உங்கள் தியாகத்துக்கு எல்லாம்
நான் என்ன பதில் செய்ய முடியும்.

இன்னும் உன்னைப் பற்றி நிறைய எழுதணும்..

24 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவு அம்மா !

திண்டுக்கல் தனபாலன் said...
This comment has been removed by a blog administrator.
கணேஷ் said...

மனதைத் தொட்டது உங்களின் எழுத்து நடை. அருமை வல்லிம்மா! ‌சவலைக் குழந்தையின் ஏக்கம் என்பதைப் போக்குவது சற்று சிரமம்தான்!

Geetha Sambasivam said...

எங்களுக்கும்! :)))))))

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

இப்பொழுது நினைத்தாலும் அந்தக் குழந்தையின் ஏக்கம் என்னைச் சற்று கலங்க வைக்கும்.

எங்க அம்மா தன் அம்மாவிற்கு எழுதின கடிதம் தான் இந்தக் கடிதம்.எல்லா சூழ்நிலைக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை இருவருக்கும் இருந்தது.நாங்கள் சந்தோஷமாக இருக்க முடிந்தது.நன்றி கணேஷ்.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா கீதா.
மனம் நிறைந்த இனிய மணநாள் வாழ்த்துகள் அம்மா.
நீங்களும் மாமாவும் சௌக்கியமும் சந்தோஷமும் நிறைந்து நன்றாக இருக்கணும்.

அப்பாதுரை said...

எங்கிருந்து பிடிக்கிறீங்க? இதையெல்லாம் சேமிச்சு வச்சிருக்கீங்களா?! wow!

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை, நான் யார் வீட்டுக்குப் போனாலும்(பாட்டி) பாத்தியதை உள்ளவர்களிடம் கேட்டுவாங்கிப் படிப்பது பழைய கடிதங்களைத்தான். இட்ஸ் அ ரிகார்டட் ஹிஸ்டரி இல்லையா.
அதுபோல எங்க சீனிம்மாப் பாட்டியிடம் புரசவாக்கத்தில் கிடைத்த
கடிதம்.
இப்பொழுது மக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் ஃபோட்டோகாப்பி எடுத்து பைண்ட் பண்ணிவிடப் போகிறேன்.அப்போது தொலைபேசி இல்லையே. எல்லாம் கைக்கடிதாசிதான்.நன்றி துரை.

ஸ்ரீராம். said...

சேமிப்பில் இருந்த கடிதமா... அட... நல்லதொரு நினைவுத் தாலாட்டல்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். இதை எல்லாம் பார்க்கும்போது சிலசமயம் மனம் கனக்கும். பலசமயம் சந்தோஷப்படும்.
பாசம் சொட்டும்.உண்மையைத்தவிர வேறொன்றும் இருக்காது.நன்றி மா.

சசிகலா said...

மலரும் நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொண்டது நன்றாகவே உள்ளது .

அப்பாதுரை said...

பிரமாதமான ஐடியா.. பிள்ளைகளுக்குப் பரிசாகத் தரலாம். heritage தேவை என்று நினைக்கும் பொழுது நெஞ்சைத் தொடும் பரிசாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சசிகலா.

வருகைக்கும் வார்த்தைக்கும் மிகவும் நன்றி.

அமைதிச்சாரல் said...

நீங்க கொடுத்து வெச்சவங்க வல்லிம்மா.. இப்படியொரு பாசமழையில் நனையும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும்!!!!

கோமதி அரசு said...

அம்மாவின் கடிதம் எவ்வளவி யதார்த்தம்!

பகிர்வுக்கு நன்றாக இருக்கிறது.
காலத்தாலும் அழியாத பாசப் பிணைப்பு.

ஸ்ரீராம். said...

//அதற்குள் ஆண்டாளுக்குக் கவலை. திரும்பிப் போகும்போது அவர் தனியாகப் போகணுமே.பாவம் மா என்கிறாள்.
இந்தப் பொண்கள் தான் எவ்வளவு மாறிப் போயிடறார்கள்.!!//

:)))))))))))))

வல்லிசிம்ஹன் said...

வறணும்ஸ்ரீராம்.இருபது வயசுக்கான முதிர்ச்சி அந்த வார்த்தைகள். அப்புறமும் மாறவே இல்லை.

Geetha Sambasivam said...

அருமையான சேமிப்பு. எனக்கும் இம்மாதிரிக் கடித பொக்கிஷங்கள் பிடிக்கும். ஆனால் எனக்குப் பிறகு எங்க வீட்டிலே படிக்க ஆளே இல்லை! :( குழந்தைகளுக்குத் தமிழே படிக்க வராது.

ராமலக்ஷ்மி said...

நான்கு தலை முறைகளின் அன்புப் பிணைப்பைச் சொல்லும் கடிதம். அற்புதமான பகிர்வு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், நம் இல்லங்களில் பாசத்துக்குக் குறைவேது.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

கீதாமா அதற்காகவே எங்கள் இரண்டாவது பையனைத் தமிழ்படிக்கச் சொல்லிப் பழக்கி வருகிறேன். இங்கெயும் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்க வேண்டும்னு பெண் சொல்லி இருக்கிறாள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் எத்தனையோ விதங்களில் நான் கடவுளுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். அடுத்த வரிசையில் என் வலைப்பூ நட்புகள். ராமலக்ஷ்மி,கீதா,துளசி,ஸ்ரீராம்,சாரல்,வெங்கட்,தனபாலன் என்று நீண்டு கொண்டே போகிறதும்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சசிகலா. மிக மகிழ்ச்சி அம்மா.