About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Tuesday, February 14, 2012

அண்மையின் அருமை


''பாலசம்சாரம்    .நாமதான் பார்த்துக்கணும்''
மதுரைப் பாட்டி சொல்வதை அவளின்   பேரன்கள்
உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டார்கள்.

மொத்தம் ஐந்து  பிள்ளைகளும்  இரண்டு பெண்களும் கொண்ட குடும்பம்.
அதில் ஒரு மகன் திடீரென்று   மூளைக்காய்ச்சலில்
  இறக்க நேர்ந்த  நேரம்.
அவரது மனைவியும் மூன்று குழந்தைகளும் மதுரை வந்து சேர்ந்தபோது
பாட்டி சொன்ன வார்த்தைகள்.

பாட்டியின் பெண்ணும் இறந்தவரின் தாயுமான திருமலை
இந்தவிவகாரம் எப்படிச்  செல்லுமோ என்று
கவலையுடன் இருந்தார்.
எதிர்பாராத சங்கடம்.
மகன்கள் வேறு  வேறு  ஊரில் குடியிருக்கிறார்கள். தானும் கணவரும்
மட்டும்   நெல்லையில்   குடித்தனம்.

வரும் பென்ஷன் தங்களுக்கு மட்டும் போதும்
இதில் இன்னும் நான்கு  உயிர்களைக் காப்பாற்றுவது ,படிக்கவைப்பது  எல்லாமே  பிரச்சினையாக இருந்ததால்
தன் நாத்தனாரிடம்    கலந்தாலோசிக்க வந்திருந்தனர்.

அவர் மதுரையில் வக்கீல் புதுத் தெருவில்  வசதியான இடத்தில்வாழ்க்கைப் பட்டு,
செழுங்கிளைத் தாங்கும் நற்குணம் படைத்தவராகவும் இருந்தார்.

வயதான தம்பியைக் காட்டிலும் உறுதியான இதயம் படைத்தவர்.
தானும்   புதல்வர்களில் ஒருவரை ப் பறிகொடுத்திருந்ததால் ,தம்பியின் கலக்கத்தைப் புரிந்தவர்.

நீ  ஒண்ணும்  தாட்சண்யப் படாதே  நம்பி.
நான்  நம்  காந்தி கிராமத்தில்  உன் மருமகளுக்கு மேலே படிக்க
ஏற்பாடு  செய்கிறேன்.கைத்தொழில் ஏதாவது கற்றுக் கொள்ளட்டும்.அவளுக்கு நன்றாகத் தைக்கத் தெரியுமே.
அதைச் சரிவரக் கற்றுக் கொண்டால்
அதுவே பெரிய  உபகாரமாக இருக்கும்.
பெரிய  பையனை நீ  வைத்துக் கொள்.அவனுக்குப் படிப்புக்கு
நான்  மாதாமாதம் பணம் அனுப்புகிறேன்.
உன்னிடம் இருந்தால்தான் அவனுக்குப் பொறுப்பு வரும்.


பின்னால்  வரும் நாட்களில் தாயையும்  தங்கைகளையும்
பார்த்துக் கொள்வான். பாளையங்கோட்டைப் பள்ளியில் நமக்குத் தெரிந்தவர்தான் தலமை ஆசிரியர்.
நல்ல  ஒழுக்கம்,படிப்பு எல்லாம்   கற்றுக் கொள்வான்.

கால்வருட,அரைவருட  லீவுநாட்களில்  உன் மருமகளும்பேத்திகளும்
உன்னிடம் வந்து இருக்கட்டும்.
முழுவருடக் கோடைவிடுமுறை நாட்களில் அவள் தன் தாய் வீடான பெரிய குளத்தில்  போய் இருக்கட்டும்.


தம்பியின் மற்றப் புதல்வர்களையும் அவள் விட்டுவைக்கவில்லை.
நீங்கள்   நான்கு பேரும்   கடிதப் போக்குவரத்து  வைத்துக் கொள்ளவேண்டும். அந்தக் குழந்தைகள் தாங்கள் கைவிடப் பட்டுவிட்டோம் என்கிற நினைப்புத் துளியும் வரக் கூடாது.

அப்பா இல்லாவிட்டாலும் சித்தப்பாக்கள்   ,அத்தைகள் பார்த்துக் கொள்வார்கள்
என்ற நம்பிக்கை இருக்க  வேண்டும்.''  ஒரு பெருமூச்சோடு
அக்கா   எழுந்துகொண்டார்.
தம்பியும் .மனைவியும் அவள்   கால்களில்   விழுந்து மனப்பாரம் தீர அழுது தீர்த்தார்கள்.
தாய்தந்தையரைப் பின்பற்றி அவரது மகன்களும்  அவர்கள் மனைவிகளும்
நமஸ்கரித்தார்கள்.

மகன் இறந்த போது இருந்த  மலைப்பு   கொஞ்சம்  அவர்களது மனத்திலிருந்து
அகன்றது.
******************************************************************************
51 வருடங்களுக்குப் பிறகு அந்தக் குடும்பத்தின்
நிறைய முன்னேற்றம் கண்டது. பெரியவர்கள் யாரும் இப்போது இல்லை. அடுத்த தலைமுறைக்கே ஷஷ்டி அப்த பூர்த்தி  நடந்துவிட்டது.

இந்தக் குடும்பத்துக்கும் எங்கள் சின்னப் பாட்டிக்கும் (ஆங்க்!அதே பாட்டிதான். என் கல்யணத்துக் கடிதம் கொடுத்தவர்:)   )
தோழமை பலவருடங்களாக உண்டு.
சமீபத்தில் ஒரு திருமணத்தில் மதுரையைச் சேர்ந்த சிலரைச் சந்தித்தேன்.

உறவினர்(அவளுக்கும் எனக்கும் ஒரே வயது) ஒருவளிடம் அந்தக் குடும்பத்தைப் பற்றிக் கேட்டேன்.
தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த   என் வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாவைக் காண்பித்தாள். யார் தெரிகிறதா?என்று கேள்வி.
நமக்கு நேற்றுப் பார்த்தவர்களையே மறந்து போகிறது.
''தெரியலையே என்றேன். நம்ம 'ஜில்லி''
உண்மையாவா என்று வாய் மூடாமல் பார்த்தேன்.
ஹேய்  ஜில்லியா..என்னைத் தெரிகிறதா,,,இது நான்.
இல்லையே. மதுரையை நான் மறந்தே நாளாகிறது. பழைய
உறவெல்லாம் விட்டுப் போச்சு என்று தோள் குலுக்கின பெண்ணை நான்
என்னுடன் வாடாமல்லி பறிக்கவும், மகிழம்பூ மாலை
தொடுக்கவும்
என் பின்னால் அலைந்த  சிறுமியோடு சம்பந்திப் படுத்திப் பார்க்க முடியவில்லை.
நான் விடுவதாக இல்லை.  உங்கள் பக்கத்து வீட்ல இருந்தோமே,
ஜானு,முகுந்தன்,கல்யாணி.?
உன்
குழந்தைகள் எங்கே  இருக்கிறார்கள்.

தங்கை அண்ணா    எப்படி இருக்கிறார்கள்.
அம்மா?
அம்மா காலமாகி ரொம்ப நாளாச்சு. எங்கள் திருமணங்கள் முடிந்ததும்
அவள் நிறைய நாட்கள் இருக்கவில்லை. நானும் 1972லியே காலிஃபோர்னியா
போய்விட்டேன்.
தங்கை  வேற்று மதத்தவரைத் திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியா
போய்விட்டாள்.
அண்ணா   தாத்தா வாங்கிக் கொடுத்தவேலையில் ரிடயராகி இப்போது நெல்லை பக்கத்தில் கிராமத்தில் இருக்கிறான். பெரிய குடும்பம்.
சௌத்  ரொம்ப ஹாட்டாக  இருக்கிறது அதனால் அடுத்த  ட்ரிப் ல தான்  பார்க்கணும்.
என் குழந்தைகள் என்னுடன் இந்திய   ட்ரிப்புக்கெல்லாம் வருவதில்லை.
இந்தக் கல்யாணமே மதுரைப் பாட்டிக்கு    ஒரு பேரன்'' எல் ஏ''ல  நல்ல பொஸிஷன்ல இருக்கானாம். அவன் மகனை என் பெண்ணுக்கு  வரன்  பார்க்கலாம்னு கேட்கத்தான் வந்தேன்.
அடுத்த நிமிடம்   அவளே போலத் தோற்றமளித்த இன்னோரு
பெண்ணைப் பார்க்க நகர்ந்துவிட்டாள்.

நானும் என் பழைய தோழியும்   சிரித்துவிட்டோம்.
நீ எங்கயும் சிங்கப்பூர் போலியா என்று நான் கேட்க , ஏன் நீதான் அமெரிக்கவாசின்னு கேள்விப்பட்டேன்'' என்று அவள் கலாய்க்க
அப்பாடி  சில விஷயங்கள் மாறுவதில்லை என்று நிம்மதியாக இருந்தது.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa