About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Sunday, February 05, 2012

முஹூர்த்தநாளும் முடிவாச்சா!!

குழந்தைகள்   அனுப்பிய பூங்கொத்து

இப்படியாகத்தானே ஐப்பசி மாதமும் வந்தது.தீபாவளி ஷாப்பிங் முடிக்க ஹாஜீமூசா கடை.

முதல் தடவையாகப் புடவை அதிலும் பட்டுப்புடவை போணி.

யானைக் கலர்னு அப்போது புதிதாக ஒரு ஏதோ ஒரு படத்தின் பேரோடு

வந்திருந்தது.

110ரூபாய்தான் விலை.அம்மா தீர்மானம் போட்டாச்சு.

அதுதான் பெண்பார்க்கிற அன்று உடுத்திக்கொள்ளவேண்டும்.சரி.

தீபாவளியும் வந்து போனது.

இந்தத் தடவை தம்பிகளோடு பட்டாசுக்குப் போட்டிபோடவில்லை.

சின்னவன் அடுத்த வருஷம் நீ இங்க வருவியான்னு கேட்க அப்போதுதான்

ஓஹோ இங்க இந்த இடத்தில் நம்ம நாட்கள் குறைவுதான்

என்றும் வெளிச்சமாகியது.
அக்டோபர் 31 ஆம் தேதி இரண்டு குடும்பத்துக்கும் உறவில்
இருந்த  குடும்பத்தில் ஒரு திருமணம்.
அத்தையிடமிருந்து  தொலைபேசி அழைப்பு.
  சிங்கம் புதுக்கோட்டையிலிருந்து
சென்னைக்கு வருவதாகவும், என்னையும் அழைத்துக் கொண்டு என் பெற்றோர்  அங்கே வந்தால்
 .அதில் எல்லோரும் சந்திப்பதாக ஏற்பாடு.

பலிஆடு முகம் எப்படி இருக்கும் என்று என்னைப் பார்த்தால் தெரிந்து இருக்கும்.

கூட்டத்தில் அனைவரும் என்னைப்பார்ப்பதாக உணர்வு.

ஒரு வட்டமாக நாற்காலிகளைப் போட்டு அத்தை வீட்டுக்காரர்களும்

எங்க வீட்டூக்காரர்களும் உட்கார்ந்தோம்.

பார்த்துக்கோடா அப்புறம் சரியாவே பார்க்கலைனு எல்லாம்

சொல்லக்கூடாது ,

புளித்துப்போன வசனம் தான
அன்னிக்கு அப்படித்தான் தோணவில்லை.

அடக்கம் ஒடுக்கம் எல்லாம் முன்னாடியே மண்டையில் தைத்துத்தான் பாட்டி அனுப்பி இருந்ததால் நான் தலையை நிமிர்த்தவில்லை.

ஒரு கனமான குரல் ''நிமிர்ந்து உட்கார்ந்து அவனைப் பார்க்கலாம்''

என்றது.

பிறகு தெரிந்தது அது என் மாமாவின் (வருங்கால மாமனார் )குரல் என்று.

சரி என்று நிமிர்ந்தால் நாலைந்து பேர்கள் ஒரே ஜாடையில்.

அதில் ஒருவருக்குக் காதோரம் நரைத்திருந்தது.

அட ராமா,அதுக்குள்ள நரைத்துவிட்டதா.

ஒருவேளை இப்படித்தான் இருக்குமோ என்று மீண்டும் குனிந்த தலை.

மாமா அப்போது பார்த்து ஒரு ஸ்கைப்ளூ சட்டை பின்னால் போய் நின்று இதுதான் என்பதுபோல் சைகை காட்டினார்.

திருப்பியும் நிமிர்ந்துவிட்டு சிரித்துக்கொண்டிருந்தவரைப் பார்த்துவிட்டு

சரி ஓக்கேதான் என்று நினைத்தபடி

அம்மாவைப் பார்த்தேன்.அப்பா அம்மா இருவரும் கைகூப்பாத குறையாக நிற்பதைப் பார்த்து ஒரு கணம் நான் கலங்கியது இன்னும் நினைவு இருக்கிறது.

அவர்களோடு கிளம்பி இரண்டு வண்டிகளில் மைலாப்பூரில் இருந்த பெரிய வீட்டுக்கும் வந்தோம்.
பழைய கதைகளில் வரும். பச்சை வர்ணம் பூசப்பட்ட  இரண்டு பெரிய gate க்குள் வண்டிகள் நுழைந்தன.
இரண்டு புறமும் பெரிய பெரிய மரங்கள்.நாகலிங்கப் பூ வாசனை மூக்கை நிரப்பியது.
நெல்லிமரங்கள் ,சஃப்போட்டா  மரங்கள், விளாம்பழ  மரங்கள்,
மல்லிக் கொடிகள் நடுவில் உட்கார  சிமெண்ட் பெஞ்சுகள்
எல்லாவற்றையும் தாண்டி பெரிய   முற்றத்தில் போய்  இறங்கினோம்.
பசுமாடுகளுக்கான தீவனங்கள் நிரம்பிய  மூட்டைகள்
கொண்ட பெரிய கொட்டகை ஒன்று இருந்தது. அதியும் தாண்டி
  பசுமாடுகள் கட்டி நிறுத்தப் பட்ட  தொழுவம்  தெரிந்தது.
மாடுகளைப் பார்க்கறியாமா என்றது மாமனார் குரல்.
நான் ஓ யெஸ் சொல்வதற்குள்,  வீட்டிற்குள்ளிருந்து ஓடிவந்த சிறிய நாத்தனார்,முகம் பூராவும் சந்தோஷத்தோடு
 என் கைகளைப் பிடித்துக் கொண்டு முதலில் உள்ள  வாங்கோ.ராகுகாலம் வந்துடும் என்றவாறு அழைத்துப் போனார்.

முதலில் பார்த்தது ரொம்பவும் வயசான  ஆஜிப்பாட்டியையும்,தாத்தாவையும் தான்.
கல்யாண ஹாலைத் தாண்டி உள்ளே  போனால் பெரிய ஊஞ்சலில் சின்ன மாமனார்.

'ம்ம் என்ன படிச்சிருக்க?என்று மேலயும் கீழயும் பார்த்தார்.எனக்கு அவருடைய ஆகிருதி,
கையில் வைத்திருந்த வெற்றிலைச் செல்லம்
எல்லாம் விநோதமாகத் தெரிந்தன.
ஊஞ்சலுக்கு அப்புறம் இரண்டாம் கட்டு தெரிந்தது.சமையல் செய்யும்  இடத்திலிருந்து நல்ல பஜ்ஜி வாசனைவந்தது.
அதோடு  இன்னுமொரு பெரியவர் வந்தார்.
''பாப்பா, இதுதான் சிம்முவுக்குப் பார்த்திருக்கிற பெண்''இது பாட்டி.

என்னது இவ்வளவு பெரியவர் பேர் பாப்பாவா'என்று எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
ஒரே குழப்பம்.
அதற்குள் மாடிக்குப் போய்விட்டார் சிங்கம்.
பாட்டியையும் தாத்தாவையும் இன்னும் கண்ணில் எதிர்ப் பட்டவர்களையும் அப்பா  நமஸ்காரம் செய்யச் சொன்னார்.
தானும் செய்தார்.(எத்தனை அன்புப்பா உனக்கு என் மேல்.)!!!
நாத்தனார் மாடிக்குப் போய் மாப்பிள்ளை சிங்கத்தை மீண்டும் கீழே அழைத்துவந்தார். இருவர் முகத்திலும் சிரிப்பு.
*****************************************************************************************************************************************
அம்மாவின் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டோம்

ஐந்து நிமிடங்களில் அங்கிருந்து போன் வந்துவிட்டது.

எங்களுக்கு சம்மதம்.உங்கள் அபிப்பிராயம் என்ன.

அப்பா வந்து என்னைக் கேட்டார்."அம்மா,உனக்குப் பிடித்திருந்தால் சரினு சொல்லு."

இல்லாட்டாப் பரவாயில்லை.

நாந்தான் நிறையப் படித்த அறிவாளி ஆச்சே.

பரவாயில்லைப்பா சரினு சொல்லிடலாம்.

அவ்வளவுதான் பலவிதமானப் பொருளாதாரத் தடைகள் வந்தபோதும்

முனைப்போடு அனைவரும் உழைத்துத் தை மாதத்தில்

எங்கள் திருமணமும் முடிந்தது.

படிக்கவில்லை.

அவரவர் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்கள். இல்லாவிட்டால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்க வைக்கப் படுகிறார்கள்.

கதையும் முடிந்தது கத்திரிக்காயும் காய்த்தது.

எல்லோரும் வாழ வேண்டும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa